ஞாயிறு, 30 டிசம்பர், 2012

என் ஊர்... ஒரு ‘குட்டி இந்தியா' !
எந்த தேசத்துக்குச் சென்றாலும் அங்கே ஏதேனும் ஒரு மூலையில் யாராவது ஒரு தமிழன் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதுபோல, தமிழகத்தின் எந்த கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு ஒரு நெய்வேலி மாணவனையோ, மாணவியையோ நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம். 


செம்மண் புழுதியை உடம்பெங்கும் அப்பிக்கொண்டு, கால் சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் கோலிக்குண்டுகளை திணித்துக்கொண்டு திரிந்த இளமைப்பருவத்தை இப்பொழுதும் அசைபோட்டபடி அலைகிறது மனது.


நான் படித்த மந்தாரக்குப்பம் என்.எல்.சி மேல்நிலைப்பள்ளியின் மிக விஸ்தாரமான மைதானத்தில் பின்னாளில் பிரபலமாவதற்கு வேண்டிய அத்தனை தகுதிகளும் கொண்ட அநேக மாணவர்கள், மாணவிகள் விளையாடிக் களித்திருக்கிறார்கள். அவர்களின் முழங்கால் சிராய்ப்பில் சிந்திய குருதித் துளிகளும், வியர்வைச் சொட்டுகளும் கலந்த மண்துகள்களின் மீது நடக்கையில் இப்பொழுதும் நெருடுகிறது.. எங்கேனும் ஒரு அலுவலகத்தில் கோப்புகளின் தூசியை நுகர்ந்தபடி, இயந்திரங்களின் அழுக்குகளுக்கிடையில் போராடியபடி தொலைத்துவிட்ட வாழ்க்கையை அவர்கள் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..


இரவானால் என் பள்ளியின் அதே மைதானம் எல்லோராலும் கைவிடப்பட்டவர்களின் புகலிடமாக இருந்திருக்கிறது. வயோதிகம் காரணமாக ஒதுக்கப்பட்டவர்கள், காதலித்து தோற்றுப்போனவர்கள், நோயின் கடுமை காரணமாக நலிந்து போனவர்கள் என்று பல தரப்பினரின் அடைக்கலம் அந்த மைதானம்.. நாற்பது வயதாகியும் வேலை கிடைக்காமல் வீட்டாரால் வெறுக்கப்பட்ட ஒரு அற்புதமான பாடகரை அன்றைய காலகட்டத்தில் மைதானத்துக்கு இரவானால் வருபவர்கள் அறிவார்கள். எவர் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பெருங்குரலெடுத்து துயரமான பாடல்களை அவர் பாடிக்கொண்டே இருப்பார். சில சமயம் வரிகளின் அர்த்தத்தில் மூழ்கி உடைந்து கமறும் அவரது அழுகுரலில் புதைந்து போன  சோகங்களை எவர் அறிந்திருக்கக்கூடும்? மெலிதாக வீசிக்கொண்டிருக்கும் காற்றுதான் அவரது நேர்மையான நிரந்தர ரசிகன்.. காற்றில் கரைந்து காலாவதியாகிப்போன  குரல்களை மீட்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?


தெருவுக்குத் தெரு எல்லா விளையாட்டுகளையும், விளையாடிக் கொண்டிருக்கும் ‘ ஆல்ரவுண்டர்' பசங்களை நெய்வேலியில் சில வருடங்கள் முன்பு வரை கூட பார்த்தவர்கள் உண்டு. ஆடு தொடா இலைச் செடியின் முனை வளைந்த குச்சிகளை ஹாக்கி பேட் ஆக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவன், பிறிதொரு தினத்தில் கைபந்து அணியில் விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருப்பான். கபடியிலிருந்து பூப்பந்து வரை கொடி கட்டிப் பறந்த நெய்வேலி வீரர்கள் அனேகம்.. நான் கல்லூரியில் படித்த ( 80 களில்) காலத்தில் நெய்வேலியின் கால்பந்து அணி தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற அணிகளில் ஒன்று. அத்தனை பெரிய கால்பந்தை ஒரு சிறிய கிரிக்கெட் பந்து விழுங்கிவிட்டது.


உலகத்தின் ஏழு அதிசயங்கள் போல நெய்வேலிக்கென்று ஏழு அதிசயங்கள் உண்டு.


1. நீலச்சேலை அணிந்த இளம்பெண் ஒருத்தி, தன் கச்சிதமான உடலோடு வளைந்து நெளிந்து படுத்திருப்பது போல அழகான தார்ச்சாலைகளும், ஒழுங்கமைவுடன் கூடிய வீடுகளும்....


2. ஒரு குடும்பத்திற்கு தோரயமாக 350 என்ற கணக்கில் நகரெங்கும் நின்று மெளனமாகத் தலையாட்டிகொண்டிருக்கும் விதம் விதமான  மரங்கள்..


3. ஒரு ‘குட்டி இந்தியா' போல எல்லா மாநிலத்திலிருந்தும் எல்லா இனத்தவரும் வசித்தாலும் , இனத்துவேஷமோ, மொழித்துவேஷமோ இல்லை என்று பெருமிதத்தோடு வாழும் சகோதரத்துவம்...


4. சென்னையைப் போன்று இமாலய மக்கள் தொகையோ, மதுரையைப் போல அன்றாடம் வந்து போகும் ஜனத்திரளோ அற்ற மிகச்சிறிய நகராக இருந்தும் 15 வருடங்களாக நடை பெற்றுவரும் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி...


5. ஆசியாவின் மிகப்பெரிய ஐம்பொன் நடராஜர் சிலை


6. எகிப்தின் கிஸா பிரமிடுகளின் தூரக்காட்சி போல நெடிதுயர்ந்து நிற்கும் செம்மண் முகடுகள்


7. ஊசி வீதி துவங்கி, பக்கெட் வீல் வீதி வரை வேறெங்குமே காணமுடியாத விசித்திரமான பெயர்கள் தாங்கிய தெருக்கள்.திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் வரை புரொஜக்டர் ஆப்பரேட்டர் என்று ஒரு நபர் இருக்கிறார் என்பது நினைவுக்கு வராதவர்கள், திரையில் கரு நிழல் படரத்தொடங்கியதும், ஆப்பரேட்டர் அறை பக்கம் திரும்பி ‘என்னடா படம் ஓட்டறீங்க' என்று கூக்குரலிடுவது போல, தமிழகத்தில் எங்கு மின்வெட்டு இருந்தாலும் ‘ நெய்வேலியில் வேலை நிறுத்தமா?' என்று கேட்கிறார்கள்.தமிழகத்தின் பல பகுதிகள் பிரகாசமாக ஒளிர்வதற்கு காரணமாகவர்களாக நாங்கள் இருந்தாலும், அவ்வப்போது ஏற்படும் இருளுக்கு காரணமானவர்கள் இல்லை என்பது நம்ப முடியாத முரணாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. 


இலக்கியத்தை ஜனநாயகப்படுத்த விரும்பாதவர்களின் பொருமல் ஒன்றுண்டு.. நெய்வேலியின் மக்கள் தொகைக்கு இணையாக படைப்பாளிகளும், கலைஞர்களும் இருப்பதாக அவர்கள் கிண்டலடிப்பார்கள். இந்த மாயாஜாலம் நெய்வேலி நிர்வாகம் முன்னின்று நடத்தும் புத்தகக் கண்காட்சியால் நிகழ்ந்தது. ஒருவரிடமிருந்து ஆக்கப்பூர்வமான இன்னொருவரை ஜனிக்கச் செய்வது மன்னிக்க முடியாத குற்றமா என்ன?
இங்கே வசிக்கும் பெரும்பாலோருக்கு நெய்வேலி சொந்த ஊர் இல்லை. ஆனால் எல்லோருமே நெய்வேலிக்கு சொந்தமானவர்கள்தான். ஒரு உடற்கூறு நிபுணரைப்போல ஒரு நெய்வேலிக்காரரை பிரித்து மேய்ந்தால் கொஞ்சம் வெயில், கொஞ்சம் கரி, ஏதேனும் ஒரு புத்தகம், ஏதேனும் மரத்தின் இளந்தளிர், கொஞ்சம் செம்மண்.. என்று சரிசமமாய் கலந்த கலவையாக இருப்பார்.


இங்கே பணிபுரிபவர்கள் மிக அதிகமாக சம்பாதிப்பவர்கள் என்ற கருத்து பரவலாக உண்டு.. அதிகம் அறியாதது.. நிறைய கொடுப்பவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். எங்கு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும், எங்கு அநாதரவான குரல் கேட்டாலும், முதலில் கை கொடுப்பவர்கள் அனேகர் இங்குதான் இருக்கின்றனர்.


எனது புனைபெயருக்கு முன்னால் ‘நெய்வேலி' என போட்டுக்கொள்வதை பார்த்து, எனக்கு மிக நெருங்கிய கவிஞர் ஒருவர் “ நாங்கள் எல்லாம் உலகக் கவிஞர்கள்.. நீங்கள் உள்ளூர் கவிஞர்தானா?” என்று குறும்பாக கேட்பது உண்டு. புன்னகையோடு அந்த கேள்வியை எதிர் கொள்கிறேன். பத்திரிகைகளில் எனது படைப்புகள் பிரசுரமாகும்போதெல்லாம் , என்னையும் அறியாமல் ஒரு பார்வையற்றவர் பிரெயில் எழுத்துக்களை தடவி உணர்வது போல, ‘நெய்வேலி' என்ற என் ஊரின் பெயரை மெல்ல வருடுவதுண்டு.. கண்களிலிருந்து வெம்மையான நீர் கொப்பளிக்கிறது... நெய்வேலி நான் பிறந்த ஊர் அல்ல... என்னிலிருந்து என்னை பிறக்க வைத்த ஊர்...
                            - நன்றி : என் விகடன் இணைய இதழ் 


வியாழன், 20 டிசம்பர், 2012

உலகம் ஒருபோதும் அழியாது        பசு, எலி, பூனை, காளை நான்கும் ஓரிடத்தில் நின்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தன.
“மனிதர்களுக்கு நான் தான் பால் தருகிறேன். எனவே நான் தான் இங்கு மிக முக்கியமானவன். நான் இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும்” என்றது பசு.
   
       “நான் இல்லையென்றால் பசு தாய்மை அடையாது... மனிதர்களுக்கு பாலும் கிடைக்காது.. என்னை விட முக்கியமானவர் யார்?. ” என்றது காளை

        “நான் இல்லாவிட்டால் பூனைகள் என்ன சாப்பிடும்? மனிதர்கள் உணவைத் தானே திருடி சாப்பிடும்? எனவே நான் தான் இங்கு மிக முக்கியம். நான் மரணமுற்றால் இந்த  உலகமும் மரணம்” என்றது எலி.

“நான் மட்டும் இல்லையென்றால் மனிதர்களின் பசியாற்றும் பயிர்களை எலிகள் தின்று அழித்துவிடும் எனவே நான்தான் மிக மிக முக்கியம். நான் இல்லையெனில் சர்வமும் இல்லை” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டது பூனை.

          குறுக்கே நடந்து சென்ற மனிதன் “ ஆக என்னைச் சுற்றிதான் உங்கள் வாழ்வும், இயக்கமும்.. நான் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் தேவையே இல்லை. நான்தான் இந்த உலகமே” என்றான் கர்வத்துடன்..

          பல்லாயிரம் ஆண்டுகளாய் இவர்கள் யாரும் இல்லாமலேயே பூவுலகில் இயங்கிப் பழகிய சூரியனும், நிலாவும் எப்பொழுதும் போல ஒளியை வீசியபடி எதுவும் பேசாமல் கடந்தன இவர்களை..!

வெள்ளி, 23 நவம்பர், 2012


கலகக்கார கலைஞர்கள் - 1
                                     
       கலவர பூமியில் ஒரு பத்திரிகையாளனோ, புகைப்படக் கலைஞனோ பயணிப்பது என்பது பசி மிகுந்த சிங்கத்தின் குரல்வளைக்கு கீழே பயணிப்பது போல.. எப்போது வேண்டுமானாலும் அது விழுங்கிவிடும்...”


ம் இந்தியச் சூழலில்கலகம்' என்ற சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘புரட்சி' என்ற சொல் தவறாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான எந்த சூழலையும் குலைக்க நினைப்பவர்களைகலகக்காரர்கள்' என்றே அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையில் நிகழ் சமூகம் ஒட்டுமொத்தமாக அநீதியாக காணப்படும்போது அதனை அப்படியே புரட்டிப்போடுவதுபுரட்சி' என்றும், அசந்தர்ப்பமான சூழலில், அதன் கால நிலை கருதி எழும் எதிர் குரலைகலகம்' என்றும் புரிந்துகொள்வோம்.
            எங்கெல்லாம் மனசாட்சிக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் தங்களுக்கு ஏதுவான வழியில் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் அனைவரும் கலகக்காரர்களே.அந்த வகையில் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் எப்படியாகிலும் எதிர்குரலை பதிவு செய்தபடிதான் இருக்கிறார்கள்.
            திரைப்படத்துறை என்பது பெருமளவில் பணமும், புகழும் புரளும் இடம் என்பதால் அங்கே பலரும் தங்கள் உணர்வுகளை அழுத்திக்கொண்டு எல்லாவற்றோடும் இயைந்தே இருப்பார்கள். ஆனால் மெய்யான கலைஞர்கள் எல்லா கட்டுக்களையும் மீறி கலகக்காரர்களாக இயங்குவார்கள். அதன் காரணமாக தங்கள் உயிரை, வாழ்வை, உறுப்புகளை இழந்தவர்கள் அனேகம். அப்படியான கலைஞர்கள் சிலரை பற்றிய எளிய அறிமுகமே இத்தொடர்....

           


1.கிறிஸ்டியன் பவெடா


            2009-ஆம் ஆண்டு செப்டெம்பர் 2-ந்தேதி எல்சால்வடார் நாட்டின் தலைநகர் சான்சல்வடாரிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள டான்கேட்பேவிலிருந்து கிறிஸ்டியன் பவெடா தனியே காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது ஆவணப்படம்லா விடா லோகா'           அன்றுதான் டான்கேட்பேயில் திரையிடப்பட்டிருந்தது.
            ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல்கள் இன்னபிற அச்சுறுத்தல்கள் இருந்த சூழலில் அவர் அவ்வாறு தனியாக பயணித்திருக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்டியன் பவெடாவுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிட்டது. ‘லா விடா லோகா' ஆவணப்படத்தின் படப்பிடிப்பை  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் அவர் முடிக்கவேண்டியிருந்தது. ஆனால் படப்பிடிப்பு சமயங்களில் அவரது பயணத்திட்டம், படப்பிடிப்புத்தளங்கள் ஆகியன வேறு யாராலும்  யூகிக்க முடியாத அளவு ரகசியமாகவே இருந்தது. ஆனால் படம் வெளிவந்ததும் அவர் அசாத்திய துணிச்சலுடன் எல் சால்வடார் எங்கும் பயணிக்க தொடங்கிவிட்டார். ஆனால் எதிரிகள் அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
            டான்கேட்பேவிலிருந்து தனியே திரும்பிக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத சிலர் சூழ்ந்துகொண்டு சுட்டுக்கொன்றார்கள். தலையில் பலமுறை சுடப்பட்ட நிலையில் காரில் பிணமாகக்கிடந்தது சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆவணப்படம்லா விடா லோகா' எல் சால்வடாரில் கோலோச்சிக் கொண்டிருந்த  மரியா சல்வாருச்சா' என்ற குழுவினர் நடத்திய படுகொலைகள், பலாத்காரங்கள், ஆள் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் பற்றி வெளிச்சமிட்டுக்காட்டியதுதான் அவரது கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
            ‘மரியா சல்வாருச்சா' எனப்படும் M.S 13 என்ற குழு உண்மையில் எல் சல்வடாரில் துவக்கப்படவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 80-களில் துவங்கி அமெரிக்கவின் 37 மாநிலங்களில் கிளைத்த அபாயகரமான விடலைக்குழு. அது துவங்கப்பட்ட காரணத்தை பற்றி அறிந்து கொள்ள சில வருடங்கள் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்..
            எல் சால்வடார் நம் தமிழகத்தின் மக்கள் தொகை அளவே கொண்ட மிகச்சிறிய நாடு ( 2009 மக்கள் தொகை கணக்குப்படி  5 கோடியே 77 லட்சம் பேர்தான் )
            எல் சால்வடாரின் மக்களை பூர்வகுடி அமெரிக்கன்கள், ஐரோப்பிய குடியேறிகள் என இரண்டு பிரிவாக சுருக்கிவிடலாம். சால்வடாரின் இயற்கை வளங்கள், மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக அவ்வப்போது குமுறும் எரிமலைகள் காரணமாக இருந்தன. எனவே அடிப்படை வேலைவாய்ப்புகள், கல்வி, தொழிற்சாலைகள் இல்லாமை காரணமாக பெரும்பாலானோர் அமெரிக்காவை நோக்கி இடம் பெயரத்தொடங்கினர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது இடத்தில் சால்வடேரியன்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டினரிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்காக எனக்  கூறித்தான் மரியா சால்வருச்சா குழு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 13 வது தெருவில் துவங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழுவின் செயல்பாடுகளுக்காக தேவைப்படும் நிதியைத் திரட்ட வாகனத் திருட்டு, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல் , ஆயுதக்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடத்துவங்கினர். ஆனால் நாளடைவில் கேளிக்கைகள், மற்றவர்கள் பயந்து விலகிச் செல்வதில் கிடைக்கும் குரூர திருப்தி காரணமாக வேலையற்ற இளைஞர்கள் பலர் அதில் சேர்ந்து பல வன்முறைச்செயல்களில் ஈடுபட்டனர்.
            அமெரிக்கவில் துவங்கப்பட்ட இந்த குழு கனடா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, குவாதிமாலா, ஆஸ்திரேலியா என பரவத்தொடங்கினர். அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன அவர்களை தேடி அமெரிக்க அதிகாரிகள் வேட்டையாடத்தொடங்கினர். கைதானவர்களை  எல் சால்வடாருக்கு திருப்பியனுப்பினர். அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய அவர்கள் தங்கள் குற்றச்செயல்களை சொந்த நாட்டிலும் அரங்கேற்றினர்.
            தங்கள் முகத்திலும், கைகளிலும் டாட்டூஸ் எனப்படும் வினோத உருவங்களை பச்சைக்குத்திக்கொண்ட அவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை இரக்கமற்ற முறையில்  நடத்தினர். போதாதற்கு 90-களில் அதே லாஸ் ஏஞ்சல்ஸ்-சில் துவக்கப்பட்ட மாரா18 என்ற குழுவும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல வன்முறை வெறியாட்டங்களை சல்வடாரிலும் , அமெரிக்கவிலும் நிகழ்த்தினர். குறிப்பாக 13லிருந்து 20 வயது வரையிலான இளம்பிராயத்தினர்தான் அதிகம் இந்த குழுக்களில் சேரத் தொடங்கினர். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்களை அந்த குழுக்கள் ஈர்த்த காரணம்.. போதைமருந்துகள், எந்த வேலைக்கும் போகாமலேயே கையில் புரளும் பணம், கட்டுப்பாடுகளற்ற பாலியல் தொடர்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தவர்களை மிரட்டுவதில் கிடைக்கும் அளவற்ற ஆனந்தம் ஆகியவையே.. மற்றபடி இந்த குழுக்கள் வேறு எந்த உயர்ந்த லட்சியங்களையும் முன் வைக்கவில்லை..
            ஒருகட்டத்தில் மாதத்திற்கு 300 கொலைகள் வீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக தினம் 10 கொலைகள். பவெடா கொலையில் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் கொஞ்சமும் அச்சமின்றி இன்றைய 10 பேர் பட்டியலில் பவெடாவின் பெயரும் இருந்திருக்கிறது போலும் என்று சொன்னானாம்.. எனில் எல்சால்வடாரின் அன்றைய கொடூரமான சூழலை கற்பனை செய்து பார்க்கலாம்.. வேடிக்கை என்னவென்றால் எல் சால்வடார் என்றால் அவர்களது பாரம்பரிய மொழியில் 'பாதுகாப்பான தேசம்' என்று பொருளாம்..
            கிறிஸ்டியன் பவெடாவுக்கு இந்தச் சூழல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.. ஒட்டு மொத்தமாக ஒரு தலைமுறையே உழைக்கவோ, கல்வி கற்கவோ விரும்பாமல், காட்டுமிராண்டித்தனமாக அடுத்தவர்களை அடித்துப்பிடுங்கி, அச்சுறுத்தி வாழ்வது அந்த தேசத்தையே சீரழித்துவிடும் என்று உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் எல்சல்வடார் நாட்டை சேர்ந்தவர் இல்லை.
            1957 ஆம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அல்ஜீரியாவில் பிறந்தவர் பவெடா. ஒரு சிலர் அவர் பிறந்த வருடம் 1955 என்று சொல்கிறார்கள். பவெடாவின் தாய் வழி மற்றும் தந்தை வழி பாட்டனார்கள் இருவரும் அரசியலில் சித்தாந்த ரீதியாகவே வெவ்வேறான கருத்து உடையவர்கள். ஒருவர்அரசு' என்ற ஒன்றே தேவையற்றது மக்கள் கூட்டாட்சியாக இருக்கவேண்டும் என சொல்பவர், மற்றவர் தீவிர பொது உடைமைவாதி.. இருவருக்குமான கருத்து மோதல்களுக்கு இடையேதான் பவெடா வளர்ந்தார். இருவரின் வாதங்களில் ஈர்க்கப்பட்ட பவெடா இயல்பிலேயே சமூக அக்கறையுடன் இயங்கிவந்தார், அவரது குடும்பம் ஸ்பெயினிலிருந்து அல்ஜீரியாவுக்கு இடம் பெயர்ந்த பல குடும்பங்களில் ஒன்று. அல்ஜீரிய விடுதலைக்குப்பின் ஃபிரான்ஸில் குடியேறினர்.
            பவெடாவின் 19 ஆம் வயதில் புகைப்படங்கள் விற்பனையாளராக இருந்தார். அதன் பிறகு அந்த கலையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக புகைப்படக்காரனாக மாறினார். ஆனால் அவரது நாட்டம் வர்த்தக ரீதியான புகைப்படங்கள் எடுப்பதில் இல்லை. அப்போது லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்கள் மீது கவனம் குவிந்தது.
            ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட பவெடா இயல்பிலேயே துணிச்சலானவர். அவருடன் பல்வேறு யுத்தபூமிக்கு பிரயாணித்த நிக் பிரேஸர் என்ற மற்றொரு புகைப்படக்காரர்நான் பணியாற்றியதிலேயே பவெடா போல நெஞ்சுரம் மிக்க வேறொருவரை கண்டதில்லை. பல சமயங்களில் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்தும் எந்த சலனமுமின்றி அங்கே பயணிப்பார்  மக்களுக்கு நன்மைபயக்கும் செயலுக்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருக்குமெனில் அதற்காக 99 சதவிகிதம் உயிரை பணயம் வைக்கலாம் என்பார்என்று வியப்போடு குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் மேட்ச், டைம் போன்ற பத்திரிகைகளில் அவரது புகைப்படங்கள் வெளியாகி மிகப்பிரபலமாகி இருந்தார்.
            1980 களில் அவருக்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் நாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த களங்களில் அவரது ஆவண முயற்சி இருந்தது. போகப்போக யுத்தங்கள், கலவரங்களின் போது உண்மை நிலவரத்தை வெளிக்கொணரும் பணியை தனது கடமையாகக் கருதினார்.
            சிலி, மெக்ஸிகோ, குவாதிமாலா என்று பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அவர் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்ட போது மகிழ்வோடு அதை எதிர்கொண்டார். ஏனெனில் அவருக்கு எல்சல்வடார் நாட்டில் வசிக்க பெரும் ஆவல் இருந்தது. குடும்ப பந்தம் என்பது அதற்கு தடையாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. என்ன காரணத்தினாலோ எல்சல்வடார் அவருக்கு பிரியமான தேசமாக இருந்தது.
            அவருக்கு இருந்த பணப்பயன் மிகுந்த வேலைவாய்ப்புகள், புகழ் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு எல்சல்வடாரில் குடியேறினார். அங்கு நிகழ்ந்த குழுச்சண்டைகள், பாலியல் கொடுமைகள், இளவயது மரணங்கள், எதிர்காலம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் குழுக்களுக்கு அடிமையாக போதையின் பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறை என எல்லாம் அவரை கவலையில் ஆழ்த்தின.
            எல் சல்வடாரின் வன்முறைக்குழுக்களின் செயல்பாடுகளால் இளமையை தொலைத்த ஒரு தலைமுறை பற்றி வரும் தலைமுறைக்கு எச்சரிக்கை செய்யவேண்டும் என அவருக்கு தோன்றியது. இரும்புகோட்டையாக விளங்கிய இரண்டு குழுக்களிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எல்லோரும் சொல்ல அஞ்சினர். குழுவிலிருந்து வெளியேறியவர்கள் வாய்திறக்க பயந்தனர் வெளியேற்றப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. இந்த சூழலில் அவர்களைப்பற்றி வெளிப்படையாக ஒரு ஆவணப்படம் என்பது பெரும் சவாலாகவே இருந்தது.
            2005-ல் முயற்சிக்கத் துவங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் குழுக்களின் அச்சுறுத்தல்கள், பணப்பற்றாக்குறை, உடன் பணியாற்ற தயங்கிய தொழில்நுட்பக்காரர்கள், இயற்கை தடங்கல்கள், பேசப்பயந்த மக்கள் என எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் முறியடித்து 2008-ல் சான் செபஸ்டின் உலகத்திரைப்படவிழாவில் படம் வெளிவந்ததுஅந்தப்படம் அந்த குழுவினர் பற்றி வெளிவராத அதிர்ச்சியளிக்கும் அரியத்தகவல்களுடன் 90 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களுக்குத்தான் திருட்டு டி.வி.டி.கள் வரும். ஆனால் இந்த ஆவணப்படத்தின் திருட்டு டி.வி.டிகள் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் எங்கும் பரவின.
            படத்தை எடுத்த போதும் , படம் வெளிவந்தபிறகும் அவரது நண்பர்களும், அவரது எதிரிகளும் சொன்ன ஒரே விஷயம் அவர் எல்சல்வடாரிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதே.. ஒரு தரப்பு அன்பின் மிகுதியாலும் மற்றொன்று அச்சுறுத்தலாகவும் அந்த கோரிக்கையை வைத்தன.
            பவெடா நினைத்திருந்தால் இதை விட எளிதான சுகமான பிரபல்யம் 
வாய்ந்த வாழ்க்கை அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கு எல்சல்வடார் மீது இருந்த அக்கறை, அந்த சமூகத்தின்பால் கொண்டிருந்த கவலை, இளைய தலைமுறை மீது கொண்டிருந்த பரிவு அவரை அனாதை போல இறக்க வைத்தது
      ஆனால் அவர் மீது அன்புகொண்ட புகைப்பட மற்றும் திரை கலைஞர்கள் செப்டெம்பர் 2-ல் அவரது நினைவஞ்சலி கூட்டங்களில் அவரது பொறுப்பு மிக்க கலை உணர்வை போற்றுகின்றனர். அவரதுலா விடா லோகா' ஆவணப்படம் இன்றைக்கும் லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள திரைப்பட கல்லூரிகளில் தவறாது திரையிடப்படுகிறது. அவரது ஆவணப்படம் வெறும் பரபரப்பு கருதி உருவாக்கப்பட்ட படம் இல்லை . அது ஒரு சமூக எச்சரிக்கை பதிவு. அதற்காக தன் உயிரையே பணயம் வைத்த கிறிஸ்டியன் பவெடா ஒரு கலகக்காரரே..
                                                                 - நன்றி  : நிழல் ( மாற்று சினிமா இதழ் )