திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி – 7

 



கனவில் ததும்பும் நதி
– 7

                                        நெய்வேலி பாரதிக்குமார்

பொதுவாக சீக்கியர்கள் என்றால் அறிவில் குறைந்தவர்கள் என்கிற எண்ணம் எப்படியோ நமக்குள் விதைக்கப்பட்டுவிட்டது. இந்திய அளவில் மிக அதிகமாக பகிரப்படும் நகைச்சுவைத் துணுக்குகள், பெரும்பாலும் சீக்கியர்கள் அசட்டுத்தனமானவர்கள் என்கிற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அந்தத் துணுக்குகள் ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றன என்கிற கவலை இன்றி பரப்பப்பட்டவை. தென்னிந்தியர்கள் கருப்பர்கள்,, மதராசிகளுக்கு அலங்கரிக்கத் தெரியாது, தமிழர்களுக்கு உடை உடுத்தத் தெரியாது என்பது மாதிரியான கருத்துகளை கூச்சமில்லாமல் படித்தவர்கள் கூட்டம் தீர்ப்பு எழுதிக் கொண்டிருப்பதை ஊடகங்களில் காணும்போது அறச்சீற்றம் பொங்கி எழுகிறது.

தங்கள் சமூகத்தைத் தூக்கிப்பிடிக்க சற்று மிகையாக சொல்கிறவர்களைக் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் எவ்வித அறிவுசார் ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு சமூகத்தை, இனத்தை இழிவுபடுத்துகிறக் கூட்டத்தை சகித்துக்கொள்ளவே முடியாது. தமிழர்களுக்கு விருந்தோம்பல் பண்பு அதிகம் என்று பலர் சொல்கிறார்கள் என்றால் அதற்கு ஆதாரம் உண்டா என்று கேளுங்கள் தவறில்லை. ஆனால் அதற்காக தமிழர்களுக்குத்தான் விருந்தோம்பல் பண்பே கிடையாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதே போல் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்று ஒருவர் மேடையில் பிதற்றினார் அதுக்கும் நாலு மண்டுகள் கைத்தட்டுகின்றன.

ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக விமர்சிக்க உரிய தரவுகள் தர வேண்டும். போகிற போக்கில் விமர்சிப்பது அயோக்கியத்தனமானது. சீக்கியர்கள் அறிவு சார்ந்து இயங்குபவர்கள் இல்லை அதிகம் உடல் வலு சார்ந்து இயங்குகிறவர்கள் என்று நட்பு அளாவலில் ஒருவர் குறிப்பிட்டார் நான் அவரிடம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அதிக காப்புரிமை பெற்ற இந்தியர் யார் என்று தெரியுமா என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. அதைவிட மோசம் இந்தியர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்திருக்கிறார்களா என்ன? என்று கிண்டலாகக் கேட்க ஒரு சிறு கூட்டம் சிரித்தது.

எனக்கு கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம்  நடத்திய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாமில், நான்கு மணி நேர கடினமான பயிசிக்குப் பின் இரண்டே இரண்டு சப்பாத்திகள் மட்டுமே கபில்தேவுக்கு உணவாகத் தரப்பட்டன. வேகப்பந்து வீச்சாளரான கபிலுக்கு அவை போதுமானதாக இல்லை. ஆகவே இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலராக இருந்த கேகி தாராப்பூரிடம் “நான் வேகப்பந்து வீச்சாளர். என்னுடைய நான்கு மணி நேரப் பயிற்சிக்குப் பின் இரண்டு சப்பாத்திகள் போதுமானதில்லை” என்று கபில்தேவ் தெரிவித்தார். அதற்கு தாராப்பூர் “இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே இல்லையே.” என்று கிண்டலாகக் கூறினாராம். பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளராகத் தன்னை உயர்த்திக்கொண்ட கபில், ஒரு விழாவில் தாராப்பூரைச் சந்தித்தபோது இப்பொழுது நீங்கள் சொல்ல முடியுமா இந்தியாவில் வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை என்று? என கேட்டாராம்.

பொதுச் சமூகத்தில் நாம் முன் வைக்கும் கருத்துகளை மிகுந்த கவனத்துடன் அறிவுச் சமூகம் பகிர வேண்டும். இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்க காப்புரிமைகளை அதிகம் பெற்ற இந்தியர் குர்தேஜ் சாந்து சிங். அக்டோபர் 19, 2021 தேதிய நிலவரப்படி அவர் 1382 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்க காப்புரிமைகளைப் பெற்றவராக இருந்தார். உலக அளவில் அவருடைய இடம் 7. தாமஸ் ஆல்வா எடிசன் வைத்திருந்த அமெரிக்கக் காப்புரிமைகளின் எண்ணிக்கை 1093. எடிசனையும் தாண்டிய எண்ணிக்கையில் காப்புரிமை வைத்திருக்கும் குர்தேஜ் சாந்து 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் சர்ஜித் சாந்து மற்றும் குர்மித் சாந்து 1963 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்கள். குர்தேஜ் சாந்துவின் பள்ளிப் படிப்பு இந்தியாவில்தான். டெல்லி ஐ.ஐ.டி.யில் மின்னியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு 1985 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று தெற்கு கரோலினாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மின்னியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மைக்ரான் நிறுவனத்தில் இணைந்த அவர் தொடர்ச்சியான தன்னுடைய ஆய்வில் பல்வேறு மின்னணுப் பொருட்களைக் கண்டுபிடித்தார். மென்படலம் எனச் சொல்லப்படும் மைக்ரோ ஃபிலிம் பற்றிய ஆய்வுகள் அவரது நிறுவனம் சார்ந்த பல்வேறு புதிய மின்பொருட்களை உருவாக்க பெரிதும் துணையாக இருந்தது. தற்சமயம் அவர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். குர்தேஜ் -ன் சாதனை அளப்பரியது செமிகண்டக்டர் எனப்படும் குறைமின் கடத்திகள் கண்டுபிடிப்பில் குர்தேஜ்ன் இடம் மிக முக்கியமானது.  சீக்கியர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளைப் பரிமாறுவதற்கு முன் குர்தேஜ் சாந்து சிங் பற்றி அறிந்து கொள்வது சிறந்தது.

 

நிகழ்வும் நினைவுகளும்



ண்மையில் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு விழாவினை கம்பம் நகரில் கோலாகலமாக நடத்தி முடித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை, நாவல், கட்டுரை நூல்களுக்கான போட்டிகளை அறிவித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்கான பரிசளிக்கும் விழாவை ஆகஸ்ட் 15 ஆம் தேதி மிக விமரிசையாக நடத்துகிறார்கள். மேலும் சிறந்த சிற்றிதழ் மற்றும் பதிப்பகத்துக்கும், வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கும் பரிசளிக்கின்றனர். இந்த ஆண்டு 19 வது வருடம். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் பாரதன் அவர்களின் கடினமான முயற்சியில் இந்த விழா தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள் ஒரு அலங்கார ஊர்தியில் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு முன்பாக பாரதித் தமிழ்ப் பேரவை நிரவாகிகள், உறுப்பினர்கள், கொடையாளர்கள் நடந்து வர பூலித்தேவன் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் சிறார்கள் சிலம்பம், மான்கொம்பு, ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு ஆச்சர்யப்படுத்தும் கலைகளை செய்துகாட்டியபடி வர, மேல தாளம் முழங்க கிட்டத்தட்ட இரண்டு கி.மீ அளவுக்கு அந்த ஊர்வலம் கம்பம் நகரையே அதிர வைத்து விழா மண்டபத்தை அடைகிறது.

பரிசு பெறுகிற படைப்பாளிகளை மேடைக்கு அழைக்கும் போது கொற்றக்குடை பிடித்து பதாகை ஏந்தி கூடவே பாரதன் அவர்கள் படைப்பாளியின் பெயரை உரக்கச் சொல்லி வாழ்த்த கூட்டத்தினரும் வாழ்த்த படைப்பாளியின் பெயரும் புகழும் கம்பத்தில் கோடிக் கட்டி பறக்க விடப்படுகிறது. எல்லா வருடமும் பரிசு பெரும் படைப்பாளிகளுக்கு மட்டும் ஒற்றை நாற்காலி போடப்பட்டு அவர்க்கு பாரதி அணிவது போன்ற தலைப்பாகை அணிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் சான்றிதழும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மேடையில் அந்தத் தலைப்பாகையை பாரதி மற்றும் செல்லம்மாள் வேடமிட்ட இரு குழந்தைகள் அணிவித்தது சிலிர்ப்பான தருணம்.

தமிழ்நாட்டில் படைப்பாளிகள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டை வீசுபவர்கள் கம்பம் நகரில் பாரதித் தமிழ்ப் பேரவை நடத்தும் கோலாகலமான கொண்டாட்டத்தையும், மணப்பாறையில் சௌமா ராஜரத்தினம் அவர்களின் சௌமா இலக்கிய விருதுகள் விழாவையும் (கவிஞர் தமிழ் மணவாளனின் துணையுடன்) கவனிக்காதது போல திரும்பி நிற்கிறார்கள். படைப்பாளிகளை உச்சி முகர்ந்து கொண்டாடும் இவ்விரண்டு அமைப்புகள் பற்றி எந்தப் பெரிய இலக்கியவாதியும் பேசுவதே இல்லை.

இலக்கியத்தில் பாகுபாடு என்பது படைப்பாளிகள் ரீதியாக, படைப்புகள் ரீதியாக, விருதுகள் ரீதியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் பாகுபாடு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மாதிரி மூன்று அடுக்குகள் கொண்டது. பளபளப்பான சிற்றிதழ்களில் எழுதும் படைப்பாளிகள் அவர்கள் பெறும் விருதுகள் எலைட் ரைட்டர்ஸ் பிரிவு. , வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள் அவர்களுக்கான அங்கீகாரங்கள் “தரம் கம்மிங்க பட்டியலில் வரும் ஆகவே அந்த படைப்பாளிகள் குறித்து விமர்சனங்கள் கிண்டல்கள் மிக அதிகம் பொருளாதாரத்தில் நலிவடைந்த சிற்றிதழ்களில் எழுதும் இடைநிலைப் படைப்பாளிகள் இரண்டாம் நிலை. இவர்கள் மத்திமர் வகையினர் இவர்களைப்பற்றி மூச்சு விடுவதில்லை. அவர்களின் படைப்புகள், அவர்கள் வாங்கும் பரிசுகள் விருதுகள் பற்றியும் பேசுவதில்லை. உண்மையில் இடைநிலை எழுத்தாளர்கள் பலர் உன்னதமான இலக்கியங்களைப் படிக்கிறார்கள் ஆனால் அவை படிக்கப்படாமல், பேசப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன.

கம்பம் பாரதி தமிழ்ப் பேரவை தேர்வாளர் பாரதன் அவர்கள் அணைத்து நூல்களையும் வாசிக்கின்றார். அந்த நூல்கள் குறித்து அவற்றின் படைப்பாளிகளுடன் பேசுகிறார். பிறகு தரமான படைப்புகளைத் தேர்வு செய்கிறார். அவர்களைக் கொண்டாடுகிறார். இப்படி கொண்டாடுபவர்களையாவது எலைட் எழுத்தாளர்கள் கொண்டாடலாம். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை எவரும் கண்டுகொள்வதே இல்லை என்று எல்லா இடத்திலும் எலைட் எழுத்தாளர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். இடைநிலை எழுத்தாளர்கள் இப்படி எல்லாம் புலம்புவதில்லை. விருது கிடைத்தவர்களை வாழ்த்துகிறார்கள், ஏழை எழுத்தாளர்களையும் வாழ்த்துகிறார்கள், வணிக எழுத்தாளர்களையும் பாராட்டுகிறார்கள். இந்த மனநிலைதான் அவர்களை மிக இயல்பாக இயங்க வைக்கிறது. கம்பம் தமிழ்ப் பேரவை வழங்கிய சிறந்த சிற்றிதழுக்கான பரிசினை 2023 ஆம் ஆண்டு தமிழ்ப்பல்லவி இதழ் பெற்றது என்பது பெருமைக்குரியச் செய்தி. அதே ஆண்டில் நான் எழுதிய பாதை தந்த பயணிகள் நூலுக்கும் இந்த ஆண்டு ஹே ராம் என்றொரு திரைத்தவம் நூலுக்கும் கம்பம் தமிழ்ப் பேரவை விருதுகள் கிடைத்தன. கம்பம் தமிழ்ப் பேரவை அமைப்புக்கும் சௌமா கல்வி நிறுவனத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

வாசிப்பின் வாசல்



பொள்ளாச்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொலுசு இதழ் ஏற்பாடு செய்திருந்த சிறுகதைப் பயிலரங்கை நான் நடத்திய போது பல்வேறு ஆச்சர்யங்கள். முதலாவதாக அந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்வதற்கு முன்பாக ஆசிரியர் அறவொளி என்னை சந்தித்ததே இல்லை. என்னுடைய உரைகளையோ, நான் எடுக்கும் வகுப்பையோ அவர் கேட்டதுமில்லை. என் கதைகளைப் படித்துவிட்டு அந்த நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு என்னை முழுநாள் வகுப்பெடுக்க பணித்தார். அந்தப் பயிலரங்கு நடப்பதற்கான அரங்கு, மதிய உணவு, இரண்டு வேளை தேநீர், இவை தவிர சில ஜெராக்ஸ் பிரதிகள் இவற்றையும் உள்ளடக்கி நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் கட்டணம் என்று அறவொளி அறிவித்தபோது எனக்கே அச்சமாக இருந்தது. எத்தனை பேர் வருவார்கள் என்று.. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் 130 பேர் அதில் கலந்துகொள்ள பதிவு செய்தனர். பலருக்கு இடமில்லாத காரணத்தினால் மறுக்கப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அறவொளி கைவிட்டு பணம் செலவு செய்துதான் ஈடுகட்ட முடிந்தது. 12 வயது மாணவர்கள் முதல் 70 வயது முதியவர் வரை கலந்து கொண்டதில் என்னை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியவர் கனிமொழி என்கிற கனி.

கைக்குழந்தை மற்றும் கணவர் சகிதம் அவர் சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து பொள்ளாச்சி வந்து அந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டார். பெரும்பாலான நேரம் அவரது கணவர் பாலா குழந்தையைப் பார்த்துக்கொள்ள, கனி அன்றைய நிகழ்வின் எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் தன்னைச் செலுத்திக்கொண்டது வியப்பாக இருந்தது. இலக்கியத்தை மெய்யாக நேசிக்கும் உள்ளம்தான் அத்தனை அர்ப்பணிப்புக்கும் காரணம். அதன்பிறகு அவர் குடும்பத்தினருடன் தன் சொந்த ஊர்றன திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்துவிட்டார். ஆனால் அவருக்குள் இருந்த படைப்புத் தீ கொழுந்துவிட்டபடியே இருந்தது. சமீபத்தில் அவர் வெளியிட்ட பொழிலதிகாரம் கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

பொதுவாக குத்ம்பத்துக்கும் படைப்பாளிகளுக்குமான தூரம் மிக அதிகமானது. புற உலகைவிட வீடு மிக அதிகமாக படைப்பாளிகளை அலட்சியப்படுத்தி இருக்கிறது. படைப்பாளிகளும் குடும்பத்துடன் பல சமயம் ஒன்றிணைய முடியாமல் விலகி இருப்பார்கள். இந்தச் சூழலில் பெண் படைப்பாளிகள் பலரும் தங்கள்  குடும்பத்தை, உறவை கொண்டாடுபவர்களாக இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

கனிமொழியின் பொழிலதிகாரம் அவர் கருக்கொண்டது முதல் குழந்தை உருக்கொண்டு உடன் உறையும் காலம் வரையிலான உணர்வு கொந்தளிப்பின் மொழி வடிவம்தான் பொழிலதிகாரம். ஒரு கனிந்த தாயால்தான் தன தாய்மையை முழுமையாக உணரமுடியும். கனிமொழி மிக இளம் வயதிலேயே கனிந்த தாயாகிவிட்டார். அந்தத் தாயின் உணர்வுகளை வேறொருவர் அத்தனை அற்புதமாக ஒரு மொழியில் கொண்டு வந்துவிட முடியாது. வாசிக்கும் ஆண்கள் கூட பொறாமையுடன் தன் வயிற்றைத் தடவிப் பார்த்து  அந்தத் தாய்மை தனக்கு வாய்க்க வாய்ப்பில்லையே என வருந்தக்கூடும்.

தான் கர்ப்பவதி என்கிற உணர்வை முதன்முதலாக உணரும் தருணம் எத்தனை அற்புதமானது? வீட்டிலேயே சோதிக்கும் வசதி வந்தபிறகு எல்லா பெண்களுக்கும் பெரும் கனவு கர்ப்பத்தை உறுதி செய்யும் பிங்க் வண்ணம்தானே. தன முன்னுரையில் அதை விவரிக்கும் காட்சி அடடா எவ்வளவு உணர்வுப் பூர்வமானது?

தன மகன் பொழிலனின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.

                  எதையும் ஒருகை பார்த்துவிடுபவள் நான்

                    உன்னைக் கையில் தந்தபிறகு

                    ஒவ்வொரு நொடியும் நடுக்கம்

      எவ்வளவு அழகான சொல்லாடல்? தேர்ந்த கவிஞர் போல அனாயசமாக வந்த வரிகள் இவை.

      நீ பிறந்தபிறகு/ உனக்கு எத்தனையோ பெயர்கள் வைக்கலாம்/ ஆனால் நீ துடிக்க ஆரம்பித்த உடன்/ நாங்கள் இட்ட பெயர் காதல்   காதலின் உயிர்ப்பான அடையாளம்தானே குழந்தை..

      அவன் மென்விரல் நகங்களை வெட்ட/ ஒரு பூ செய்து கொடுங்களேன் என்கிற வரி எத்தனை அன்பானது. எத்தனை மென்மையானது

      கண்ணு பட்டுறப் போகுது/ கறுப்புப் போட்டு வைம்மா என்றார்கள்/ கறுப்புப் போட்டு வைத்தப் பிறகுதானே கண்ணுபடுகிறது உனக்கு ..என்கிற வரிகள் எத்தனை அழகு?

      சில இடங்களில் கனியின் சொல்லாடல் மிரள வைக்கிறது. ஒரு இடத்தில் மகனை ‘உயிரா” என்று விளித்திருப்பார். உச்சரிக்கும் போதே அன்பு பெருகுகிறது. புழுதி பதிப்பகத்தின் வடிவமைப்பு அபாரம். தளபதி சல்மானின் அட்டை மற்றும் வடிவமைப்பு கூடுதல் கவிதைகள்.  

      பல வரிகள் கவிதைகள் ஆகாமல் உணர்வு பெருக்குகளாகத் திரண்டு இருக்கின்றன. அன்பின் வரிகள் கவித்துவமானதுதானே. ஒரு தாய் தன் குழந்தைக்கு அளிக்கும் மகத்தான பரிசு தான் எழுதிய கவிதைகள்தானே. பொழிலன் வாழ்நாள் முழுக்க பெருமிதமாகக் கருதும் பொழிலதிகாரம் உணர்வுகளின் ஆவணம்.      

.          

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

கனவில் ததும்பும் நதி 8

  கனவில் ததும்பும் நதி 8             நெய்வேலி பாரதிக்குமார்   இ ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று...