திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ரேமுண்டோ கிளேசியர்

கலகக்கார கலைஞர்கள் -8

            

               சிறுகுழந்தைகள் கூட்டம் மிகுந்த சூழல்களில் தொலைந்து போவதும், பின்னர் பதற்றத்துடன் கண்டுபிடிக்கப்படுவதும் அனேகமாக எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்கிற சம்பவம்தான். தொலைந்து போனவர்கள் திரும்பவே இல்லை என்றால் அந்த துயரத்தை யாரால் தாங்கிக் கொள்ளமுடியும்? அதுவும் நல்ல வாலிபமான வயதில், ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கின்ற பொறுப்பில், சமூகத்தின் சொத்தாக விளங்கும் கலைஞனாகவோ, இலக்கியவாதியாகவோ இருந்துவிட்டால் எப்படியான இழப்பாக இருக்கும்?
               தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 1976 க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படியாக தொலைந்து போனவர்களின் எண்ணிக்கை 30000 க்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். மேற்கண்ட காலகட்டத்தில் அர்ஜெண்டினாவை ஆண்டுவந்த இராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து வந்த சிந்தனையாளர்கள், இடதுசாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலரும் இதில் அடங்குவர். ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் ரேமுண்டோ கிளேசியரும் அதில் ஒருவர்.

வியாழன், 21 ஜூலை, 2016

பெயரில் என்ன இருக்கிறது?!

பண்டைய ரோமானியர்களின்
பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்
வெளியீடு: முகிலன் பதிப்பகம்
                              அடையாறு, சென்னை-20
பேசிட:      96002 44444, 044-24410248
மின்னஞ்சல்: marudurar@yahoo.com
பக்கங்கள்: 136
விலை: ரூ.80/-

      பெயரே இல்லாமல் மனித சமூகம் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் என்னவாக ஆகியிருக்கும்? மனிதர்கள் என்கிற இனமே இல்லாமல் போயிருக்கும்.. நமக்கென்று ஒரு வரலாறு உருவாகியிருக்காது.. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற ஒன்று நிகழ்ந்திருக்காது.. ஏனெனில் மனிதர்கள் என்கிற உயிரினத்துக்கே பெயர் சூட்டும் வழக்கம் இல்லாவிடில்.. நாம் எங்கே இயந்திரங்கள், உபகரணங்கள், வேதியல் தனிமங்கள், உயிரியல் உன்னதங்கள் ஆகியவற்றை வேறுபடுத்தி   பெயரிட்டிருப்போம்..? ஆக பெயர் என்பது வெறுமனே அடையாளம் மட்டுமல்ல.. அது கண்டுணர்தலின் துவக்கம். பெயரிடுதலின் வரலாற்றை ஆய்வதென்பது ஒரு சுவாரசியமான தேடல்.. அத்தகைய சுகமான அவசியமான தேடலை தனது ‘பண்டைய ரோமானியர்களின் பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்’ நூலின் மூலம் நம்மையும் அழைத்துக்கொண்டு செய்திருக்கின்றார் மருதூர் அரங்கராசன் அவர்கள்...

      பெயர்கள் குறித்த அதிதீவிரமான சிந்தனை எனக்குள் உண்டு. உலகக் கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் போது இத்தாலிய அணியின் வீரர்களின் பெயர்கள் மனதுக்கு சற்று ரம்யமாக, நெருக்கமாக இருப்பதை பல நேரம் உணர்ந்திருக்கிறேன்  
     
                  பெயர்-சொல்

பெயரில் என்ன இருக்கிறது
என்று சொன்னாலும்
இன்னொருவரின் பெயர்
                  நன்றாக இருக்கும்போது
அதிருப்தி எழுகிறது
நம் மீது சுமத்தப்பட்ட பெயர் மீது......

     ............பெயர்களை மறப்பவர்கள்
     நினைவைச் சுண்ட நெற்றி சுருக்கி
          ‘சே... நல்ல பேருப்பா...' என்று
     புலம்புகையில்  தோன்றுகிறது
         ‘எல்லோரும் மறக்கட்டும் என் பெயரை...'

 -கல்கியில் பிரசுரமான என்னுடைய கவிதை வரிகள், அந்த எண்ணங்களின் வெளிப்பாடே.. எனவே கூடுதலான அதீத ஆர்வம் இந்த நூலை பார்த்தவுடனே எனக்குள் கிளர்ந்தது. இயல்பிலேயே வரலாற்றை அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு இந்த நூல் அரிதாகக்  கிடைத்த பரிசு..
      தலைப்பில் பண்டைய ரோமானிய .. என்று ஒரு புள்ளியில் குவிக்கும் தன்மை இருந்தாலும் நூலாசிரியர், உலகம் தோன்றியதிலிருந்து துவங்கி, சைகை மொழி, எழுத்து, பெயரிடுவதற்கான அவசியம் என ஒழுங்கான வரிசையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தனித்த பெயர்களை உருவாக்கும் முன் எப்படி ஒவ்வொருவரும்  அடையாளப் படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதை தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவை உணர்வில் அனுமானமாய் சொல்லியிருப்பது அழகு...
      ஒரு தமிழ் உணர்வாளர் வரவு செலவு கணக்கை எழுதினால் அதிலும் பீறிட்டெழும் மொழி உணர்வை எப்படியாகிலும் நுழைத்திட முயலுவாரோ அது போல இன்றைய கனிமொழிகளின் குழந்தைகளுக்கு இடப்படும் வடமொழிப் பெயர்கள் குறித்த ஆதங்கத்தை தனக்கே உரிய அறச்சீற்றத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
      அதே சமயம் அவருள் உலவும் தமிழறிஞர், வரலாற்றுச் செய்திகளை தரும்போதும் சர்க்கரைப் பொங்கலின் நடுவே தட்டுப்படும் முந்திரியைப்போல  கூடவே தமிழிலக்கியங்களை தருவது அத்தனை சுகமான சுவை. இறையனார் அகப்பொருளின் உரை எப்படி வழிவழியாக பரிமாறப்பட்டது என்பதைச் சொல்லும் இடம் அதற்கான உதாரணம்.
      ரோம் என்னும் பெயர் எப்படி வந்திருக்கும் என்பதற்கான அவரது அலசல் பல புதிய விஷயங்களை நமக்கு தந்தபடியே செல்கிறது. இதுநாள் வரை ரோமுலஸ் புராணக்கதையை மட்டும்தான் அதற்கான காரணம் என நான் நம்பியிருந்தேன். எனது ‘பழம் பெருமை பேசுவோம்’ ( விகடன் வெளியீடு ) நூலில் அந்த முழுக் கதையும் அத்திப்பழம் பற்றியக் கட்டுரையில் உள்ளது. (ரோம் சாம்ராஜ்யத்தை  ஆண்டுவந்த நியுமிட்டர் என்ற அரசனின் மகள் ரியோ சில்வியா. நியுமிட்டரின் சகோதரன் அமோலியஸ் தந்திரமாக நியுமிட்டரைக்கொன்று ஆட்சியை பிடித்துவிடுகிறான். கொடுங்கோலனான அமோலியஸ் தனக்கு எதிராக அரசக்குடும்பத்தின் எந்த ஆண் வாரிசும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.
      அந்த சமயத்தில் ரியோ சில்வியா தான் வணங்கும் மார்ஸ் என்னும் தெய்வத்தை வணங்கி கன்னியாக இருக்கும் போதே கருத்தரிக்கிறாள். ரொமுலாஸ் மற்றும் ரெமுஸ் என இரண்டு ஆண் மகன்களை பெற்றெடுக்கிறாள். அமுலியாஸ் அந்த குழந்தைகள் இருவரையும் கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறான். ஆனால் எப்படியோ அவனது கண்களுக்குப்படாமல், தனது குழந்தைகளை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்கவிடுகிறாள். அந்த பேழை மெல்ல ஒரு கரையில் ஒதுங்குகிறது. கிட்டத்தட்ட நம்ம மகாபாரதக் கதை மாதிரியான கதை) இது புராணம் சார்ந்தது ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பொருத்தப்பாடுகள் உள்ள சரித்திரச் சான்றுகள், கிரேக்க மொழியில் அர்த்தம் நிறைந்த அந்த சொல்லின் மகத்துவம் என பல்வேறு புதிய செய்திகளை மின்னல் வெட்டு போல அடுக்கிக்கொண்டே போகிறார்.
      பெயர் பதிவுகளை செய்த சீசர் அகஸ்டஸ் பற்றி நாம் அட! என வியந்து கொண்டிருக்கும்போதே ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் பதிவை செய்த மார்க்கஸ் ஔரெலியஸ் பற்றிய செய்தியை அடுத்த வரிகளில் தந்து திகைப்படைய செய்கிறார். செய்திகளை அள்ளித்தருவதில் அவர் எந்த ஒளிவு மறைவு தந்திரத்தையும் செய்வதே இல்லை. மடைதிறந்த வெள்ளம் போல் அது பாய்ந்து கொண்டே இருக்கிறது.
      ரோமானியரின் பெயர் சூட்டு விழா பலிச்சடங்கு ஆகியவற்றை குறிப்பிடும்போது தமிழ்க் கலாச்சாரத்துக்கும் அவர்களுக்குமான பல ஒற்றுமைகளை, பிரித்து பிரித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்வாங்க முடிகிறது. பெயரிடுதலின் பல வேறுபாடுகளை அழகாக நமக்கு எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார். குறிப்பாக ரோமானிய ஆண்பால் பெண்பால் பெயர் வித்தியாசங்களை இனி நாம் எளிதாக அடையாளம் காண இயலும் விதத்தில் சுலபமாக பதிவு செய்திருக்கின்றார். பலியிடப்படும் மிருகத்தின் தியாகத்தை மறக்காத நன்றி உணர்வுடன் தம் குழந்தைகளுக்கு பன்றி என்று பொருள்படும் பெயர்களை சூட்டும் ரோமானியர்களின் பண்பு வியப்புக்குரியது. நாம் தின்றுவிட்டு அதனை வசவு சொல்லாக அல்லவா பயன்படுத்துகிறோம்? ரோமானியப் பெயர்களின் தொகுப்புப் பட்டியலை இணைத்திருப்பது சிறப்பு..
      ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு இனத்திலும் புழங்கி வரும் இப்படியான பெயர்கள் பற்றிய ஆய்வும் அறிதலும் அவசியமான ஒன்று. இன்னும் பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் பேச்சை முடித்துவிடும் சாமர்த்தியமும் பழக்கமும் உள்ள மருதூரார், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்ககூடாதா என்று எண்ணும் சமயத்தில் நூலை முடித்துவிட்டார்.. இது மருங்கூர் கண்ணன் சொன்னது போல அவரது எழுத்துப்பணியில் புதியதொரு பயணம்..உண்மையில் அவர் பெயர் சொல்லும் புத்தகம் ..
                  
            


ஞாயிறு, 3 ஜூலை, 2016

இந்திய ஆவணப்பட உலகின் அடையாளம் - ஆனந்த் பட்வர்த்தன்

கலகக்கார கலைஞர்கள்-7
                             

                              இந்திய ஆவணப்பட உலகின் அடையாளம்
                                                            ஆனந்த் பட்வர்த்தன்
              
               , பார்வையாளர் அரங்குகளோ இல்லாத சூழலில் அம்மாதிரியான முயற்சிகள் தற்கொலைக்கு ஒப்பானதாகவே கருதப்பட்டன.  இன்றைய அறிவியல் வளர்ச்சி யுகத்தில் சிடி, டிவிடிக்கள் மற்றும் கையாளுவதற்கும் வாங்குவதற்கும் உரிய எளிய ரக கேமராக்கள் வந்த பிறகு குறும்படங்களின் வருகை அபரிமிதமாக இருக்கின்றது. குறும்படங்களை மக்களிடம் சேர்ப்பதற்கான ஊடகங்களும் இன்று பெருகி வருகின்றன. ஆனால் ஆவணப்படங்களின் நிலை இன்றைக்கும் அத்தனை ஆரவாரமானதாக இல்லை.
ஃபிலிம் கேமராக்களின் ஆதிக்கம் இருந்த வரை மாற்று சினிமாக்கள் குறித்த முயற்சிகள் குறைவாகவே இருந்தன. எவ்வித லாபம் ஈட்டும் வணிகரீதியான சாத்தியக்கூறுகளோ
               குறும்படங்கள் எடுப்பவர்களில் பெரும்பாலோர் தங்களது திரையுலக பிரவேசத்துக்கான விசிட்டிங் கார்டுகளாக அவற்றை கருதுவதால், அந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் வித்தியாசமான நவீன முயற்சிகள் சமகாலத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான அங்கீகாரத்தை ஓரளவுக்காவது அவர்கள் பெற்றுவிடுகின்றனர். ஆவணப்படங்கள் எடுப்பது ஒரு தன்னார்வத் தொண்டு போன்றதுதான். பொருளாதார ரீதியான ஒத்துழைப்போ கலாப்பூர்வமான வரவேற்பையோ ஆவணப்பட இயக்குனர்கள் எதிர்பார்த்து இயங்க முடியாது. இந்த சூழலில் ஒரு வரலாற்றை பதிவு செய்வது, ஒரு நிகழ்வை பதிவு செய்வதென்பதே மிகப்பெரிய சவாலாக இன்றைக்கும் இருக்கின்ற வேளையில், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை அதிகாரத்தின் எதிர்தளத்தில் நின்றுகொண்டு ஆவணப் படங்களை தருவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. இந்தியாவின் ஆனந்த் பட்வர்த்தனை அப்படியான துணிச்சல் மிக்க கலைஞராக நாம் அடையாளம் காணலாம்.
               மகராஷ்டிராவில் 1950 ஆம் வருடம் பிறந்த ஆனந்த் பட்வர்த்தன் 1970 ஆம் வருடம் மும்பை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை முடித்தார். அதற்குப்பிறகு அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புகழ்பெற்ற பிராண்டெஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை படிக்க 1972-ஆம் ஆண்டு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அமெரிக்காவின் முதல் யூத நீதிபதியான லூயிஸ் பிராண்டெஸ் உருவாக்கிய அந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவின் பிரபலமான பலர் படித்திருக்கிறார்கள். ஆனந்த் பட்வர்த்தன் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் வியட்னாம் மீதான அமெரிக்க யுத்தத்தை  எதிர்த்து அமெரிக்காவிலேயே இயக்கங்கள் தோன்றி மிகப்பெரிய போராட்டங்கள் நிகழ்ந்த நேரம். இயல்பிலேயே சமூகப் பிரச்சினைகள் மீது ஆர்வம் கொண்ட பட்வர்த்தன் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்டார். போரின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான உயிரிழப்புக்கள், அப்பாவி மக்கள் அநாதரவாக அலைக்கழிக்கப்பட்ட துயரம், பணியின் நிமித்தமாக இராணுவ வீரர்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்படவேண்டிய அவலம் ஆகியன குறித்த பரந்துபட்ட பார்வை அவருக்கு அங்கேதான் கிடைத்தது.
               அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும் அடித்தட்டு மக்கள் சமூகத்துக்காக  எதையேனும் செய்யவேண்டும் என்கிற பேராவல் அவரை முன்னகர்த்திக்கொண்டே இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்களுக்காக எழுத்தறிவூட்டும் இயக்கங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
               அதே சமயம் இந்தியாவெங்கும் பரவிக்கிடந்த ஊழலை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாரயணன் நடத்திய அறப்போராட்டங்கள் மீது அவரது கவனம் திரும்பியது. பீகாரில் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளில் அவர் ஈடுபடத்துவங்கினார். அந்த போரட்டங்களின் போது நடந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க தன் நண்பரிடமிருந்து ஒரு கேமராவை வாங்கினார். அதனையே ஒளிப்பதிவாக செய்தால் என்ன என்ற எண்ணம் அவருள் ஓடியது.
                அவர் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்றோ, தொடர்ந்து அந்தத் துறையில் இயங்கவேண்டும் என்றோ திட்டமிட்டு அதனை செய்யவில்லை. உண்மையில் அன்றைக்கு இருந்த சூழலில் ஒரு கேமாரவை வைத்துக்கொண்டு அசாதரணமான நிகழ்வுகளை படம் பிடிப்பதும் அத்தனை எளிதான காரியமும் இல்லை. பதுங்கி, பதுங்கி ஒரு ஆயுதப் போராட்டக்காரனைப் போல செயல்படவேண்டிய நெருக்கடிதான் நிலவியது. இருப்பினும் வரலாற்று ரீதியாக  அதனை பதிவு செய்வது அவசியம் என அவர் கருதினார். அப்படியாக அவர் தனது நண்பர் பிரதீப் கிருஷ்ணன் உதவியோடு எடுத்த ஒளிப்படத்துண்டுகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய waves of revolution தான் அவரது முதல் ஆவணப்படம். கிராந்தி கா தரங்கெயின் என்ற தலைப்பிடப்பட்டு வெவ்வேறு லேப்களில் 30 நிமிடங்கள் ஓடக்கூடியதாக ரகசியமாக படத்தொகுப்பு செய்யப்பட்டது.
               உருவாக்குவதற்கே இத்தனை சிரமப்பட்ட சூழலில் அதனை திரையிட எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்த படத்தை காண வேண்டும் என்பதற்காக பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்டு பின்னர அயல்நாடுகளுக்கு சென்றபிறகு மீண்டும் ஒன்று சேர்த்து அதற்குப்பிறகு திரையிட்டார்கள்.
               அதற்குப்பின் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது சிறையில் வைக்கப்பட்ட அப்பாவி மக்கள் சந்தித்த துயர நிலைகள் குறித்து zameer ke bandi ( prisoners of conscience)  என்ற ஆவணப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் எடுத்தார். 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த படம் எடுக்கப்பட்டாலும்   1978 ஆம் ஆண்டுதான்  இப்படம் வெளிவரும் சூழல் வாய்த்தது. இந்த படத்தில்தான் அவருக்கு முதல் சர்வதேச விருது கிடைத்தது. 1982-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேசபட விழாவில் டைன் விருது வழங்கப்பட்டது.
               தனது ஆவணப்பட முயற்சிகளுக்கு வலுவான தொழில்நுட்ப கல்வி வேண்டும் என்பதற்காக கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற சேர்ந்தார். 1980 ஆம் வருடம் ஏப்ரல் 16இல் கனடாவில் அகதிகளாக வசித்த ஆசியாவைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப்பெற வேண்டி மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னணி குறித்து பதிவு செய்து  A time to Rise  என்கிற ஆவணப்படத்தை எடுத்தார். இந்த படத்துக்கும் டைன் விருது மற்றும் ஜெர்மனியில் உள்ள லிப்சிக் நகரில் நடைபெற்ற ஆவணப்பட விழாவில் வெள்ளி புறா விருதும் வழங்கப்பட்டன.
               சர்வதேச அளவில் அவரது படங்கள் விருது பெற்றாலும் அவரது ஹமாரா ஷாஹர் ( Bombay our city)  என்கிற ஆவணப்படம்தான் அவரை இந்தியாவெங்கும் பரவலாக அறியச்செய்தது. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படம் மும்பையை அழகுப் படுத்தும் நோக்கில் மும்பையின் பாதி மக்கள் தொகையாக விளங்கிய நடைபாதை வாசிகளை அப்புறப்படுத்தும் அதிரடித் திட்டத்தின் விளைவாக அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியான துயரத்தை பதிவு செய்தது. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
               இந்த படத்திலிருந்துதான் அவரது சட்டப் போராட்டம் துவங்கியது. தேசிய ஒளிபரப்பில் தனது ஹமாரா ஷாகர் படத்தை திரையிட அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. வேடிக்கை என்னவென்றால் ஹாங்காங் மற்றும் ஸ்வீடனில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிட இந்த படம் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டிருந்தது. எனவே அவர் நீதி மன்றத்தை நாடினார். மும்பை உயர்நீதிமன்றம் ஒளிபரப்ப உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்றார்கள். அங்கும் பட்வர்த்தனுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் தீர்ப்புப்படி தூர்தர்ஷனில் நான்கு வருட போராட்டத்துக்குப் பின் ஒளிபரப்பானது.
               அதற்குப்பிறகு அவர் எடுத்த In memory of Friends பஞ்சாப்பில் நடந்த மதம் சார்ந்த உள்நாட்டுக் கலவரங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தையும் ஒளிபரப்ப நீதிமன்றம் வரை சென்று அங்கு பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே 1996 இல் ஒளிபரப்பானது.
               அயோத்தி பிரச்சினையின் போது நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டு அவர் எடுத்த கடவுளின் பெயரால் ( Ram ke Naam)' என்ற படத்தினால் பல எதிர்ப்புகளை அவர் தாங்க வேண்டியிருந்தது. அதனை திரையிட பல இடங்களில் தடைகள் ஏற்பட்டன. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் பொது அரங்கில் திரையிட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து கேரள சிந்தனையாளர்கள் போராடினார்கள். இந்த போராட்டத்தின்போது அவரது கடவுளின் பெயரால் என்கிற தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தின் மையக்கருத்தினை அடிப்படையாகக்கொண்டு ராமச்சந்திரன் மாகேரி என்பவர் ஒரு வீதி நாடகமாக நடித்துக் காண்பித்தார்.
               

               சிறந்த புலனாய்வு ஆவணப்படம் என்கிற தேசிய விருதினை இந்த படம் பெற்றிருந்தாலும் தேசிய தொலைக்காட்சியில் திரையிட மீண்டும் நீதிமன்றம் சென்றுதான் பட்வர்த்தன் ஆணை பெற வேண்டியிருந்தது. பின்னர் இதே ஆவணப்படம் மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஒரு வாரத்துக்கு திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
               ஆணாதிக்க சமூகத்தில் சடங்குகள் பெயரால் பெண்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய அவரது பிதா, புத்ர தர்மயுத்தம் மிக முக்கியமான ஆவணப்படம்.
               பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்வுக்குப்பிறகு ஆசிய பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம், போர் அச்சுறுத்தல் ஆகியவற்றின் விவாதத்துக்குரிய விஷயங்களைப் பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்திய அவரது போரும் அமைதியும் ( War and peace')  படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் பெற அவர் அனுப்பிய போது 21 முக்கிய காட்சிகளை நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அதற்கும் நீதிமன்றம் வரை சென்று எந்த காட்சியையும் நீக்காமல் சான்றிதழ் பெற்றார்.
               போராட்டம் என்பது அவரது வாழ்வில் இணைந்தே பயணிக்கக்கூடியதாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் வந்த அவரது Jai bhim comrade'  அவரது தலைச்சிறந்த ஆவணப்படமாகக் கருதப்படுகிறது. 1997 ஆம் வருடம் மும்பையில் இருந்த அம்பேத்கரின் சிலையை யாரோ சில விஷமிகள் அவமரியாதை செய்ததை கண்டித்து தலித் மக்கள் ஒன்றுகூடி போராடியபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் மரணமடைந்தனர். அந்த செய்தியை கேட்டு மனம் வெதும்பிய மராத்தி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினத்தில் இருந்து சுமார் 14 ஆண்டுகாலம் நடந்த நிகழ்வுகளையொட்டி பதிவு செய்து  காட்சிகளை தொகுத்து   இந்த படத்தை மிகச் சிரமத்துடன் பட்வர்த்தன் உருவாக்கினார்.
               இவைத் தவிர நர்மதா அணைத்திட்ட விளைவுகள் குறித்த A Narmada  diary என்ற ஆவணப்படத்தையும், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பற்றி பேசும்  Fishing in the sea of greed  என்ற படத்தையும் ( இதில் கன்னியாகுமரி கட்டுமர மீனவர்களைப் பற்றியும் அவர்களது அன்றாட துன்பியல் வாழ்க்கைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
               இவரது Ribbons for Peace  என்கிற 5 நிமிட இசை ஒளிப்படத்தில் புகழ்பெற்ற இந்தி நடிகர்கள் நசுரூதின் ஷா, அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இவரது பல கட்டுரைகள் பல்வேறு ஆங்கில இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
               இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்விட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச படவிழாக்களில் வழங்கப்பட்ட  விருதுகளை பலமுறை பெற்றிருக்கும் ஆனந்த் பட்வர்த்தனுக்கு சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 
               ஆனந்த பட்வர்த்தனின் நேர்காணலை  தமிழகத்தைச் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் R.V. ரமணி   ஹமாரா இந்துஸ்தான்' என்கிற ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார். R.V. ரமணி ஏற்கனவே பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நேர்காணலை ஆவணப்படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

               தொடர்ந்து எவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் இன்றி, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை எவ்வித சமரசங்களும் இன்றி, பலவித இன்னல்களை சந்தித்து, அவற்றை திரையிட மனம் தளராத போராட்டங்களுக்கு இடையிலும் உருவாக்கி வரும் ஆனந்த் பட்வர்த்தன் இந்திய ஆவணப்பட உலகின் அசைக்க முடியாத அடையாளம்
                               நன்றி ; நிழல் காலாண்டு இதழ் 


வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இன்றைய சிந்தனை-1 ( 18-09-2015)


அப்பா...

வலிக்கும்போது ஒலிக்கின்ற குரல்
‘அம்மா' என்றழைத்தாலும்
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
அழைப்பதென்னவோ
‘அப்பா' என்றுதான்..


தன்னையே தைத்துக்கொண்டு
தந்திடுவதால்
‘தந்தை' என்றானதோ?


உயிரில் உளி விழுந்தாலும்
வலியைத் தாங்கிக்கொண்டு
விழியில் தூசி விழுந்ததுபோல்
துடைத்துக்கொண்டு செல்லும் ஆத்மா ‘அப்பா'


தனக்குப் பிடித்த அத்தனையையும்
‘வயிறு சரியில்லை' என்ற ஒரு பொய்யால்
குழந்தைகள் பக்கம்
அடுக்கிடும் பாசமலை ‘அப்பா'


ஒரு ரூபாயை சேமிக்க
ஒன்பது கி.மீ. தான் நடந்தாலும்
நூறடிகூட பிள்ளையை நடக்கவிடாமல்
நூறு ரூபாயை நீட்டும் வள்ளல் ‘அப்பா'


பள்ளி வாசலில் துள்ளி வரும்
பிள்ளை முகம் பார்த்து
பசியை மறக்கும் பச்சை உள்ளம் ‘அப்பா'


வேர்வை துளிகளில் குளித்தபடி
சட்டைப்பை சேமிப்பை அள்ளி
பிள்ளைக்கு வாசனைத் திரவியம்
வாங்கித் தரும் மணமுள்ள மனம் ‘அப்பா'


தன்னையும் தாண்டி உயரே தெரிய
தன் தோளில் ஏற்றி
தழும்பேறி நிற்கும் தலைச்சிறந்த தத்துவம் ‘அப்பா'


கஷாயம் சாப்பிட்டால்
காய்ச்சல் கரைந்துபோகுமென
குறிப்புகள் சொல்லிவிட்டு
குழந்தையின் முகக்குறிப்புகள் சோர்ந்திருந்தால்
மருத்துவமனை வாசலில்
நிமிடங்களை விழுங்கும் மகத்துவம் ‘அப்பா'

அலட்சியப்பார்வை கூட அவமானமென்று

அணுக்கள் முழுக்க தன்மானம் நிரப்பி
வாழ்வைக் கடந்து
அத்தனையும்
பள்ளி வாசலிலோ, கல்லூரி வாசலிலோ
மிதிக்கப்படும்போதும்
கண்ணீர் மல்க பிள்ளைக்காக
கெஞ்சி நிற்கும் கடவுள்'அப்பா'


மொழியின் உயிர்ச்சொல் ‘அம்மா' என்றால்
மொழியின் மெய்சொல் ‘அப்பா'
உயிரும், மெய்யும் உடனிருக்கையில்
உயிர்த்திருக்கிறது ‘ நம் வாழ்வு'

சனி, 8 ஆகஸ்ட், 2015

செகண்ட்ஸ்


                                                                                               
                மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ கயிற்றால் கட்டி இழுப்பது போல் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு கோட்டை நெருங்கி விழுந்தான். பிரபஞ்சத்தின் காற்று முழுக்க அவன் உடலுக்குள் புகுந்து ஒரே நேரத்தில் வெளியேறியது போல வெப்பமாய் மூச்சு விட்டான். உடல் இரும்புப் பட்டறையின் உலை போலக் கொதித்தது. தெப்பலாக நனைந்திருந்தான். சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு பக்ரூவை உற்றுப் பார்த்தான்.
                பக்ரூ முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி    “10.58” என்றான்.
  முகுந்தன் கைகளை தரையில் ஓங்கிக் குத்திஷிட்' என்று சொல்லிவிட்டு எச்சிலைக் கூட்டித் துப்பினான். பக்ரூவைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். சாதாரணமாகவே பக்ரூவைப் பார்க்க அவனுக்குப் பிடிக்காது. ஒடுங்கிப் போன  முகம், சவரம் செய்யப் படாமல் முட்புதர் போல ஒழுங்கற்ற தாடி, குறுகுறுவென ஊடுருவும் கண்கள், உதட்டின் ஓரத்தில் தழும்பு என்று எவரும் எளிதாக கண்டவுடன் வெறுத்துவிடும் முகம் பக்ரூவுக்கு.
                ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஏற்பாடு செய்திருந்த கோச் பக்ரூ. அவன் வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனோடு சொச்ச நாட்களில் எப்படிக் குப்பை கொட்டுவது என்பதை நினைத்தால் ஆயாசமாக இருந்தது முகுந்தனுக்கு.
                எழுந்து சென்று வண்டியின் மீது உலர்த்தியிருந்த டர்க்கி டவலை எடுத்து உடல் முழுக்க துடைத்துக் கொண்டான். “பெர்ணாண்டஸ், லாஸ்ட் மீட்ல 10.30 நோஎரிச்சலுடன் சொன்னான் முகுந்தன்.
                “பக்ரூ, மொதல்ல இந்த செகண்ட்ஸ் , செகண்ட்ஸ்ன்னு சொல்றத நிறுத்து. டோண்ட் வாண்ட்    வேர்ட்  ரிப்பீட்
                “ கே... ஆனா உன்னோட வாழ்க்கைசெகண்ட்ஸ்' கூடத்தான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்செகண்ட்ஸ்' இல்லாம நீ நகரவே முடியாது.  ‘செகண்ட்ஸ்' நின்னு போனா சகலமும் ஸ்டாப். இன்ஃபேக்ட் நாமசெகண்ட்ஸ்' கிட்டேயிருந்து தப்பிக்கவே முடியாது.”
                அப்படியே பக்ரூவின் முகத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட ஓங்கிக் குத்த வேண்டும் போலிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். பக்ரூவின் உடலிலிருந்து வெளியேறிய துர்நாற்றம்  வயிற்றைக்  குமட்டியது.
                “பக்ரூ, உன்னை இங்கிருந்து இப்போது துரத்தாம காப்பாற்றுவதும் இந்தசெகண்ட்ஸ்'தான்.”
                “அதெப்படி?”
                “நான் எப்பவாச்சும் தண்ணியடிப்பேன். அப்ப யார் மேலயும் கோபம் வராது எனக்கு. அந்த சமயம் பார்த்து கேளு, சொல்றேன்.”
                காருக்குள் ஏறியமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து பக்ரூவை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் அவனை அப்படியே விட்டுவிட்டு கிளம்பினான்.
                பக்ருதின், ஒருகணம் திகைத்து பின் எதுவும் நடக்காதது போல் தன் அறைக்கு நடந்து சென்றான்.
                பக்ருதின் அறைக்குள் நுழைந்து  பாத்ரூமுக்குள் ஆசுவாசமாகக் குளிக்கத் துவங்கினான்.  இந்தக் கோச், ரெஃப்ரி, அம்பயர் எல்லாம் என்ன வாழ்க்கை...! என்று ஒரு சில நேரம் சலிக்கத் தான் செய்தது. நாள் முழுக்க மைதானத்தில் நின்றாலும் வியர்வையும், எரிச்சலும், அவமானமும், சில சமயம் சாபமும்தான் மிச்சம். காலம் முழுக்க எவனையாவது உந்தி உந்தி தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். அவன் இலக்கைக் கடக்கும் போதெல்லாம் சலனமின்றி எவரும் கவனிப்பாருமின்றி அப்படியே நிற்க வேண்டும். இதோ முகுந்தன், வண்டியைக் கிளப்பிக் கொண்டு, இவனை அம்போ என்று விட்டுச் செல்வதைப் போல் வெற்றி பெற்றதும் விட்டுச் சென்று விடுவார்கள். கேமராக்கள் அவர்களை மட்டும் துரத்தும். உடம்பெங்கும் துடைத்துக் கொண்டு கைலிக்குள் நுழைந்தான். செல்போன் ஒலித்தது. முகுந்தன்...
                “பக்ரூ, என்ன பண்றே?”
                “இனிமேதான் சாப்பிடப் போறேன். அகோரப் பசி.”
                “அப்படியே என் ரூமுக்கு வா. ஃபுல் பாட்டில் ரெமி மார்ட்டின் இருக்கு. ஷேர் பண்ணிக்கலாம்.”
                “வேண்டாம். எனக்குப் பழக்கமில்லே.”
                “தோடா... நான் மட்டும்  மொடாக் குடியனா? எப்பவாச்சும் தான். வா.”
                “இல்ல, எனக்கு வேண்டாம், நான் தொடறதில்லே முகுந்தன்...”
                “ஓகே. ஆனா, நான் யார் கிட்டேயாவது பேசியாகணும். எங்கூட சாப்பிட்டுக்கலாம். வரமுடியுமா?”
                ஒருகணம் யோசித்த பக்ரூதின், “ஓகே, வரேன்என்று கிளம்பினான்.
                தனக்காகத் தருவிக்கப்பட்ட பரோட்டாவைப் பிய்த்துப் போட்டபடி, முகுந்தனிடம்எனக்கு என்.வி. வேண்டாம் முகுந்தன், நிறுத்திட்டேன். நீயே சாப்பிட்டுக்க.”
                “என்னப்பா, நீயெல்லாம் சைவமாயிட்டா இந்த ஆடெல்லாம் என்ன பண்றது. சும்மா புழுக்கை  போட்டு  ஊரையே  நாறடிச்சிடுமே.”
                “நம்மளைவிடவா?”
                ஒருகணம் திகைத்த முகுந்தன் குபீரென சிரித்தான்.
                “குட் பாயிண்ட். மார்னிங் வாக் அமைதியா இருக்கேன்னு ஒதுக்குப் புறமா போக முடியல. எங்க பார்த்தாலும் நாஸ்தி பண்றாங்க. இப்பல்லாம் மெயின் ரோட்ல போறது தான் சேஃப்.” ஒரு கிளாஸில் ஊற்றி விட்டு, பாட்டிலை மூடி திரும்ப எத்தனித்தான். முழங்கை  பட்டு டம்ளர்  உருண்டது. உள்ளிருந்த ரெமி மார்ட்டின் கீழே சிதறிப் பரவியது.
                “... ஷிட்.”
                பழைய துணி தேடித் துடைத்து வெளியே போட்டான்.
                மறுபடி கிளாஸை எடுத்து நிரப்பினான்.
வறுத்த முந்திரித் துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டான். “நைஸ். பக்ரூ, சின்ன வயசிலேயிருந்து எனக்கொரு ராசி உண்டு, எதுவுமே எனக்கு ரெண்டுதான்.”
                “உன் லக்கி நம்பரா?”
                “நோ, நோ... என் லக்கி நம்பர் ரெண்டு இல்ல. பட், எதுவும் எனக்கு ரெண்டாவதா வர்றது தான் செட் ஆவும். சின்ன வயசில கியர் வச்ச சைக்கிள் ஓட்ட ஆசை. வாங்கிக் கொடுத்த அன்னைக்கே அதைத் தொலைச்சிட்டேன். அப்பறம் நான் நினைச்ச மாடலை வாங்கித் தரலை. ஒரு சாதா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் அப்பா. அதுவும் ஓல்ட் ஒன். எங்கிட்ட ரொம்ப நாள் இருந்துச்சு. பட், எனக்கு அது பிடிக்கவேயில்ல. ஏன் தெரியுமா? என்ன இருந்தாலும் அதுசெகண்ட்ஸ்'” என்றபடி அடுத்த லார்ஜ்ஜை காலி செய்தான்.
                “ரன்னிங்ல இன்னைக்கு ஸ்டேட் லெவலுக்கு வந்திருக்கேன். அதென்னமோ தெரியல... இப்பவும் நான் செகண்டுதான். ஃபெர்னாண்டஸ் தான் எல்லாப் போட்டியிலும் முதல்ல வந்துடறான். 10.30நறநறவென்று காராசேவைக் கடித்தான்.
                “அதொண்ணும் பெரிய விஷயமில்லை முகுந்தன்... எல்லாம் நம்ம கையில இருக்கு.”
                கடிகாரத்தை சுட்டிக்காட்டியபடி பக்ரூதின் சொன்னான். முகுந்தன் அவனை முறைத்தான்.

                “சாரி, நம்ம கால்ல இருக்கு... ஓகே வா?”
                “நானும் ரெண்டொரு தடவை ஃபர்ஸ்ட் வந்திருக்கேன். பட், அதெல்லாம் ரெக்கார்ட்ஸ் எதுவுமில்லாத டம்மி ரேஸ். இன்ஃபேக்ட், இப்ப இருக்காளே என் லவ்வர், அவ கூட ரெண்டாவது தான். ஸ்கூல் லைஃப்ல ஒருத்திய சின்சியரா லவ் பண்ணினேன். அவளும்தான். ரெண்டு பேருக்கும் சண்டை முத்தி ஒருத்தருக்கொருத்தர் இப்ப பேசிக்கறது கூட இல்ல. ஏன் இப்பிடி என்னை இந்தரெண்டாவது' தொரத்துதுன்னு தெரியல.”
                “அதெல்லாம், நம்ம மன பிரம்மை. தோக்கறப்பதான் எல்லா செண்டிமெண்டையும் ஆராயறோம். எப்பவும் வெற்றிக்குக் காரணம் --------
                “இப்பக் கூட பாரு, மொத கிளாஸ் கீழ ஊத்திகிச்சு. ரெண்டாவது கிளாஸ் உள்ள போயிடுச்சி.”
                “நாம கொஞ்சம் கவனமா இல்லாட்டி எல்லாமே ஊத்திக்கும்.”
                “டேய், தண்ணியடிச்சது நானு,  தத்துவம் நீ சொல்றியா... மேட்ச் ஆகலையே.”
                “ப்ராப்ளம் என்னன்னா மொத கிளாஸ் ஊத்திடுச்சேன்னு கவலைப் படற.. ஆனா மொதல் லெக் பீஸை கடிச்சி சாப்பிட்டுகிட்டிருக்கே. அது கீழே விழலைன்னு சந்தோஷப்பட்டிருக்கியா? வாயில்லாத  ஏதோ  ஒண்ணு மேல பழி போடறது தான் நம்ம பழக்கமாயிடுச்சே.”
                “ரொம்ப பேசறே நீ... ரொம்ப பேசறே.”
                மறுபடி ஒரு கிளாஸ் எடுத்து ஊற்றும் போதுபக்ரூ உன்னை பேர் சொல்லிக் கூப்பிடறேன்னு உனக்கு வருத்தமா? ரொம்ப பயந்து நடுங்கறாமாதிரி நடிக்கறது எனக்குப் பிடிக்காது.”
                “என் பேரை சொல்லனும் நீ. ஓடி ஜெயிச்சப்பறம். அதுக்காக எவ்வளோ அவமானத்தையும் தாங்கிக்குவேன்.”
                “பக்ரூ, இன்னிக்கு நீ செம மூட்ல இருக்க போலிருக்கே. ஆக்ச்சுவலா உன்னை எனக்கு பிடிக்கலை பக்ரூ. எனக்கிருக்கிற செல்வாக்குக்கு உன்னைத் திருப்பி அனுப்பியிருப்பேன். பட், அதுவும்செகண்டா'ன்னு யோசிச்சேன். அதுலதான் நீ தப்பிச்சுட்டே.”
                விளையாட்டில் அரசியல் கட்சிகள் நுழைந்தபிறகு அரசியல்வாதிகள் தானே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பக்ரூதின் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. இவனும் அனுப்பி விட்டால் அப்புறம் வீட்டிலேயே உட்கார்ந்துகளி'தின்ன வேண்டியது தான்.
                “பக்ரூ, உனக்கு கோபமில்லையே?”
                “கோச்சிக்காம இருக்கறதால தான் என்னைக்கோச்'ன்னு கூப்பிடாம பக்ரூன்னு கூப்பிடறயோ...”
                முகுந்தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். “யோவ், முடியல. பேசாம உன்னை பகடி பக்ரூன்னு கூப்பிடலாமா?”
                பக்ரூதின் மெல்ல எழுந்து கை கழுவிய பிறகு கைகால்களைத் துடைத்துக் கொண்டு, “அப்ப நான் கிளம்பட்டுமா?”
                “என்செகண்ட்ஸ்' புராணத்த இன்னும் நான் முடிக்கலையே, உட்காரு. வீட்ல கூட நான் ரெண்டாவது பையன். முதல் குழந்தை அபார்ஷனாகி செத்துடுச்சு. அதுமட்டுமா, என்ன படிச்சாலும் என்னோட க்ளாஸ்ல என்னால விச்சுவை முந்த முடியாது. அவன் தான் எப்பவும் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ வரைக்கும் என் கிளாஸை விட்டு அவன் மாறவேயில்ல. ஃப்ரைடு சிக்கன் ஃபைனா இருக்கு... ஒரேயொரு துண்டு...”
                “நோ.”
                “பிடிவாதக்காரன்யா  நீ. ஓகே. அப்பறம், கிரெளண்டிலியும் என் அதிர்ஷ்டம், எப்படி நுரை தள்ள ஓடினாலும்செகண்ட்' தான். அதுவும் மூணு செகண்ட்ல சில சமயம் மிஸ் பண்ணியிருக்கேன். அதனால தான் இந்த செகண்ட்ஸ் மேல எனக்கு அப்படியொரு கோவம். பக்ரூ நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணு. நாளைக்கு ஸ்டாப் வாட்சை ஆன் பண்ணிட்டு என் கூடவே ட்ராக்ல ஓடி வா.”
                “நானா... எனக்கு ஓடற வயசில்லை இப்போ.”
                “என்னைவிட நாலே நாலு வயசு தான் உனக்குக் கூட. இதுவொரு பெரிய வயசா?”
                “ஓடறதுல ஒரு நிமிஷத்துல, ஒரு நொடி வித்தியாசத்துல ஒரு ப்ளேஸ் போயிடுது. அப்படிப் பார்த்தா, நாலு வருஷம்ங்கறது எவ்வளவு வித்தியாசம்?! கோச்சுன்னு முடிவாயிடுச்சின்னா அப்பறம் ட்ராக்கில நிக்கக் கூடாது.”
                “பரவாயில்ல. நீ காம்படீஷனா வேணாம். கம்பெனியா ஓடி வா.”
                “குதிரை ரேஸ்ல போடுவாங்கல்ல, நிச்சய வெற்றின்னு. அதுமாதிரி ஏங்கூட ஓடினா நிச்சயம் நீ ஜெயிச்சுடுவே தான். ஆனா, உன்னுடைய எய்ம் ஃபர்ஸ்ட் இல்ல.. 10.30. மைண்ட் இட்.”
                “உலகம் முழுக்க ஜெயிக்கறவனெல்லாம், இலக்கைக் குறி வெச்சு ஓடறதனாலே இல்ல... ஏதோ ஒண்ணு அவனை துரத்திகிட்டு இருக்கும். இதுக்கு முன்ன கிடைச்ச தோல்வி, உருப்படவே மாட்டேன்னு எவனாவது விட்ட சாபம், ஏதாவது ஒரு பெண்ணோட அலட்சியம் இப்படி ஏதாவது ஒண்ணு  துரத்துறதால தான் அவன் ஜெயிக்கிறான்.”
                பக்ரூ தயங்கினான்.
                “தயங்காதே பக்ரூ. உன் பேரை நாளைக்கு நான் சொல்லனும்ல.”
                “நான் ஒனக்கு சமமான போட்டியாள் இல்ல முகுந்தன். என் கூட ஓடறது உனக்கு சுவாரஸ்யமா இருக்காது.”
                “அப்ப ஃபெர்ணாண்டஸ்ஸை ஏற்பாடு பண்றயா?”
                பக்ரூதின் ஒரு கணம் திகைத்து அவனைப் பார்த்தான்.
                “முடியாதுல்ல, நீதான் வரனும். வேற வழியே இல்ல.”
                கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்துக் கொண்டே, “எனக்கு தூக்கம் வருது பக்ரூ, நீ இங்க தூங்கறயா?”
                “இல்ல, கிளம்பறேன்.”பக்ரூ வெளியே போக கதவருகே சென்றான்.
                “பக்ரூ, மறந்துடாதே, நாளைக்கு நீ வரே, ட்ராக்ல என் கூட ஓடறே.”மெல்லத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான் பக்ருதீன்.
டுத்த நாள் மைதானத்தில் வழக்கத்தை விட உற்சாகமாகக் குதித்துக் கொண்டிருந்தான் முகுந்தன். எப்பொழுதும் லேட்டாக வருவது அவன் குணம். ஆனால் இன்று முந்திக் கொண்டு வந்து விட்டான்.
                “குட்மார்னிங் பக்ரூ, இன்னிக்கு எவ்வளவு சீக்கிரம் வந்துட்டேன் பார். இதுவே நல்ல முன்னேற்றம் இல்ல... ஆர் யூ ரெடி?”
                “ஓகே.”
                “ஆமா, இன்னிக்கும் என்ன ஃபுல் ட்ராக் பேண்ட்ல வந்திருக்கே. என்னை மாதிரி ஆஃப் ட்ரெளசர் போடு
                “பரவாயில்ல இருக்கட்டும்.”
                “அப்பறம் தோத்துட்டா இத ஒரு காரணமா சொல்லக் கூடாது
                “நிச்சயம் தோக்கத் தான் போறேன். காரணம் நேத்தே சொல்லிட்டேன். புதுசா காரணம் கண்டுபிடிக்க அவசியமில்ல. இதான் எனக்கு வசதி.”
                “ஓகே. “ உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கினான் முகுந்தன்.
                இருவரும் ட்ராக்கில் நின்றார்கள். மைதானத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு பக்ரூ ஸ்டாப் வாட்சை ஆன் செய்தான். இருவரும் ஓட ஆரம்பித்தார்கள்.
                முகுந்தன் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல மிக வேகமாக ஓட்டத்தைத் துவக்கினான். பக்ரூதினால் அவனது வேகத்தில் பாதியைத் தான் தொடமுடிந்தது. இருந்தாலும் தளராமல் திணறத் திணற வேகத்தைக் கூட்டினான். இருவருக்குமான இடைவெளி குறைந்தது. முகுந்தன் அலட்சியமாக ஓடுவதை ஒதுக்கி விட்டு இப்பொழுது மிக எச்சரிக்கையாக வேகத்தைக் கூட்டினான். முகுந்தன் இறுதிக் கோட்டைத் தொடும்போது 10.42-ல் ஸ்டாப் வாட்சின் முள் நின்றது. ஆனால், அவனுக்கும் சற்று முன் பக்ரூதின் ஒரு காலை முன் வைத்து விழுந்த போது 10.40 ல் முடித்தான். கோட்டைத் தாண்டி தரையில் சாய்ந்து மெதுவாக அமர்ந்தான் பக்ரூ. முழங்கால் பக்கம் ரத்தம் கசிந்து பேண்டை நனைத்து வெளியே தெரியும் படி பரவியது. அதைக் கவனித்த முகுந்தன், “ஐயய்யோ, என்ன இது பக்ரூ, ரத்தம்!” என்று பதறினான்.
                பக்ரூ அதை உற்றுப் பார்த்து விட்டு, “ஒண்ணுமில்ல அது அடிக்கடி வரதுதான்என்றான்.
                “முதல்ல, பேண்ட்டைக் கழற்று பக்ரூ. என்னன்னு பார்க்கலாம்முகுந்தன் படபடத்தான்.
                “வேண்டாம் முகுந்தன், வழக்கமா வரதுதான். இப்ப தானா நின்னுடும்.”
                “அட, பேண்ட்டைக் கழட்டுய்யாஎன்று வலுக்கட்டாயமாக பக்ரூவின் பேண்டை சரசரவென இழுக்க முயற்சித்தான்.
                “ஓகே ஓகே, நானே கழட்டறேன்பேண்டை மடக்கி மெதுவாக கழற்றிய போது அவனது செயற்கைக் காலில் முழங்கால் இணையுமிடத்தில் பதிந்து அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
                “ மை காட். என்னது இது?”
                “ஒண்ணுமில்ல முகுந்தன். நீயெல்லாம் பேண்ட்டை மட்டும் தான் கழட்டுவே. நான் காலையே கழட்டலாம்
                “இதோடவா  ஓடின
                “ஒரு ஆக்ஸிடண்ட்ல கால் போச்சு. அதுக்கப்பறம் ஓடறதை நிறுத்திட்டேன். ஆனா எனக்கு ரன்னிங்கைத் தவிர வேறொண்ணும் தெரியாது. ரத்னசபாபதி மாஸ்டர் தான் என்னைகோச்'சாக்க ஹெல்ப் பண்ணினார். என்னோட ஃபேமிலிக்கு மூணு வேளை சோறு போடறது இந்த கோச் வேலை. அதிகம் பேருக்கு எனக்கு கால் போனது தெரியாது.”
                “நீ சொல்றது நெஜமா?”
                “நீயும் துரத்திட்டா இப்ப இருக்கற நிலையில என்னை யாரும்கோச்'சா வைச்சிக்க மாட்டாங்க. காலில்லேன்னா  கத்துக்குடுக்க  முடியாதுன்னு  நெறைய பேர் நம்பறாங்க.”
                ஒருகணம் யோசித்த முகுந்தன், “என் கிட்ட நேத்தே சொல்லியிருந்தேன்னா இன்னிக்கு ஓடக் கூப்பிட்டிருக்கவே மாட்டேன். என்ன ஒரு முட்டாள் நீ? நான் அவ்வளவு இரக்கமில்லாதவனில்லே பக்ரூ.”
                “நேத்தி நீ சொன்னா கேட்டிருப்பே. ஆனா உணர்ந்திருக்க மாட்டே. இப்பவும் நீ வேணாம்னு அனுப்ப உனக்கு சகல உரிமையும், செல்வாக்குமிருக்கு.”
                “என்ன மனுஷன்யா நீ. இத வைச்சிக்கிட்டா 10.40 வை க்ராஸ் பண்ணின... இப்பவும் நா செகண்ட் தான்.”
                “ஆனா, என்னிக்குமே எனக்கு ரெண்டு சாத்தியமே இல்ல முகுந்தன்.” செயற்கைக் காலைத் தூக்கிக் காண்பித்த பக்ரூ, எப்பவுமே என்னோட  நிறைவேறாத கனவு ரெண்டு தான். ‘ஏன்'னா நான் எப்பவும்ஒன்றரை' தான்.” மறுபடி மாட்டினான்.
                “யூ ஆர் கிரேட் பக்ரூ... சாரி, யூ ஆர் கிரேட் சார்.”
                                                                                 நன்றி :  சங்கு  இலக்கிய இதழ்