கனவில் ததும்பும் நதி 8
நெய்வேலி பாரதிக்குமார்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக்
கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.
Catches
win matches என்பார்கள்
செமி ஃபைனலில் ஆஸ்திரேலியா
அணியின் அலிசா ஹீலி இந்திய அணியின் ஜெமிமா
ரோட்ரிக்ஸ் இன் கேட்சை கோட்டைவிட்டபோது ஜெமிமாவின் ஸ்கோர் 82. அதன் பிறகு ஜெமிமா
127ஐ தொட்டதுதான் இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தது. இறுதி ஆட்டத்தில் சிறப்பாக
ஆடிக்கொண்டிருந்த லாரா வோல்ட்வார்ட் அவுட் ஆக்கிய அமன்ஜோத் பிடித்த அபாரமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது
மகளிர் அணிக்கு வாழ்த்துகள்...
இந்த உலகக் கோப்பையை
நியாயமாக மிதாலிராஜ்-க்குத்தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். பெண்கள்
கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று புகழப்படும் மிதாலி ராஜ் ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளில் 7800 ரன்களுக்கு மேல் குவித்தவர். இரண்டு முறை உலகக் கோப்பை
போட்டிகளில் இறுதிச் சுற்று வரை தலைமைத் தாங்கி அழைத்துச் சென்றவர். இன்றைக்கு
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பெரிய கவனம் கிடைப்பதற்கு மிதாலியின்
பங்களிப்பு மிக முக்கியமானது
ஒருநாள் கிரிக்கெட்
போட்டியில் மிக அதிக ரன் குவித்தவர் என்கிற பெருமையை பல வருடங்கள் தன் வசம்
வைத்திருந்த (214) மிதாலி, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்
ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் ரன்களைக் கடந்த ஒரே இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை.
கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார்.
இருபது வருடங்கள் கிரிக்கெட் விளையாடி தனது நாற்பதாவது வயதில்தான் ஓய்வை
அறிவித்தார்
மகளிர் கிரிக்கெட் அணிக்கு
நிதி ஒதுக்க உரக்க குரல் கொடுத்தவர். அர்ஜுனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா என பல
விருதுகள் குவித்தவர். அவரது கிரிக்கெட் வாழ்க்கைக் கதை இந்தியில் சபாஷ்
மித்து என்கிற பெயரில் வெளியாகி இருக்கிறது..
டாப்சிதான்
மிதாலிராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறுவயது மிதாலியாக இனாயத் வர்மா
நடித்திருக்கிறார். இரண்டு பேருமே ஒரு நல்ல கிரிக்கெட் பயிற்சியாளரிடம் முறையாகப்
பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் விளையாட்டு பற்றி நன்கு
அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
மிதாலிராஜ்-ன்
பூர்வீகம் தமிழ்நாடுதான். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். அவரது தந்தை
துரைராஜ் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் என்பதால் அடிக்கடி பணி மாறுதல்
இருக்கும். அதன் காரணமாக மிதாலிராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்.
வளர்ந்தது எல்லாம் செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத். தாயார் பெயர் லீலாராஜ்
மிதாலிக்கு பயிற்சி
அளித்தவர் சம்பத். அவருடைய நேர்த்தியான, கடுமையான பயிற்சிதான் மிதாலியின்
உயரத்துக்கும் வெற்றிகளுக்கும் முதன்மையான காரணம். மிதாலி உலகக்கோப்பை
போட்டிகளுக்காக இங்கிலாந்தில் ஆடிக்கொண்டிருக்கும்போது சம்பத் ஒரு சாலைவிபத்தில்
இறந்தது மீளமுடியாத துயரத்தை மிதாலிக்குத் தந்தது.
மிதாலி இந்திய அணியில் சேர்ந்து சில தடைகளை எதிர்கொள்ளும்போது அவருக்கு ஆதரவாக
இருந்தவர் சாந்தா ரங்கசாமி. இந்திய பெண்கள்
கிரிக்கெட்டில் முதல் சதமடித்த பெருமைக்குரிய சாந்தா ரங்கசாமி சென்னையைச்
சேர்ந்தவர். இந்த ஆண்டு (2025) உலகக்கோப்பை
பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்ற போது அரங்கில் இருந்து
அணியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
சாந்தா ரங்கசாமி மற்றும் நூதன் கவாஸ்கர் (கவாஸ்கரின் இளைய
சகோதரி) ஆகியோர் முதன்முதலில் இந்திய அணிக்காக ஆடியபோது ஸ்பான்சர்கள் எனப்படும்
கொடையாளர்கள் கிடையாது. மொத்தமே நான்கு மட்டைகள்., நான்கு கால் தடுப்புகள்தான்.
ஆகையால் முதலில் களத்தில் இறங்குபவர் மட்டை மற்றும் கால் தடுப்புகளை நான்காம்
ஆட்டக்காரர் அணிய வேண்டும். அப்படியாக சுழற்சி முறையில் பயன்படுத்திக்
கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் இருந்து இன்றைய மகளிர் கிரிக்கெட் அணி வெகுவாக
வளர்ந்துவிட்டது. இன்று மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஹாட்
ஸ்டாரில் ஐந்து கோடி பார்வையாளர்களுக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். உலகக்
கோப்பையும் கிடைத்துவிட்டது. இனி புது வேகமெடுத்து பறக்கும். இந்திய மகளிர்
அணியினர் முதன்முறையாக பெற்ற இந்த உலகக்கோப்பையை மிதாலியின் கைகளில் தந்து
அவருக்குப் பெருமை சேர்த்தது பாராட்டுக்குரியது. இனிவரும் தலைமுறைக்கு மிதாலி ஒரு
உத்வேகமான முன்னுதாரணம் என்றால் அது மிகையில்லை.
கிரிக்கெட் போன்ற கோடிக்
கணக்கில் பணம் புழங்கும் விளையாட்டுத் துறையிலேயே பெண்கள் அணிக்கு இத்தனை
வருடங்கள் போராடி ஒரு உயரத்தை அடைய வேண்டி இருக்கிறது. எனில் மற்ற விளையாட்டுகளில்
எத்தனை பெரும் போராட்டங்களை சந்தித்து சாதனை இலக்குகளை அடைந்திருப்பார்கள் என்பதை
நினைத்துப் பார்க்கையில் கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகா சாதித்தது இமாலயச்
சாதனைதான்.
சபாஷ் மித்து திரைப்படம்
ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது தமிழிலும் உள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய
திரைப்படம். இயக்கம் ஸ்ரீஜித் முகர்ஜி.
நிஜமும் நிழலும்....
அண்மையில் நந்தா பெரியசாமி
இயக்கிய திருமாணிக்கம் திரைப்படத்தைக் காண நேரிட்டது. குமுளியில் லாட்டரி சீட்டு
விற்கும் மாணிக்கத்தின் கடைக்கு வரும் பெரியவர் தான் வாங்க விரும்பியச்
சீட்டுகளைத் தேர்வு செய்தபின், தன்னிடம் உள்ள ஐநூறு ரூபாய் தொலைந்து போனதை அறிந்து
எடுத்துவைத்த லாட்டரி சீட்டுகளைத் திரும்பவும் கடைக்காரர் மாணிக்கத்திடமே
தந்துவிட்டு தன் ஊரான இடுக்கிக்குச் செல்ல திரும்புகிறார். மாணிக்கம் அவரிடம் இந்த
சீட்டுகள் உங்களுடையதுதான். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் அடுத்த முறை
குமுளிக்கு வரும் போது பணம் தாருங்கள் என்று சொல்கிறார். அவ்வளவுதான் இந்த வாக்கு
மட்டுமே சாட்சி. உண்மையில் அந்தப் பெரியவர் அந்த சீட்டுகளை மறந்தும் போகிறார்,
அப்படி எடுத்துவைக்கப்பட்ட சீட்டில் ஒன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு
விழுகிறது. மாணிக்கம் நினைத்தால் தன்னிடம் விற்காமல் எஞ்சிய சீட்டுகளில்
ஒன்றுக்குத்தான் பரிசு விழுந்ததாகச் சொல்லி அந்தப் பணத்தை
எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தன்னுடைய வாக்குதான்
மாபெரும் சாட்சி என்று அந்த சீட்டை பல்வேறு தடைகள், சூழ்ச்சிகள் தாண்டி அந்த
சீட்டைப் பெரியவரிடம் கொண்டு சேர்க்கிறார் மாணிக்கம். ஒருவரிச் செய்தியை அழகானத்
திரைக்கதை மூலம் நிறைவானத் திரைப்படமாகத் தந்திருக்கிறார் நந்தா பெரியசாமி. அறம்
சார்ந்த எண்ணங்களை, அறம் சார்ந்த மனிதர்களை உருவாக்குவதுதான் கலை இலக்கியங்களின்
மகத்தானப் பணி. அதை சமூகப் பொறுப்புணர்வுடன் செய்திருக்கிறார் நந்தா. இந்தப்
படத்தைப் பார்க்கிற பலருக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும் ‘இதெல்லாம்
சினிமாவுலதான் நடக்கும்.. நிஜத்துல நடக்குமா” என்பதுதான் அது... ஆனால் நிஜத்தில்
நடந்த இரண்டு சம்பவங்கள் மனித சமுதாயத்தின் மீது மீது பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.
கேரளத்தில் உள்ள மலபாரில் ஹரிதா என்றொரு பெண் மூன்று ஆண்டுகளுக்கு
முன்பு துணி துவைக்கும் வேளையில், தனது ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க வளையலை கழட்டி வைத்த
போது ஒரு காகம் அதனை தூக்கிக் கொண்டு பறந்தது. காக்கா தூக்கிச் சென்ற நகையை தேடியும்
கண்டுபிடிக்க இயலவில்லை. தங்கம் தொலைந்துவிட்டதாக நினைத்து அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.
(காகம் கூட பேராசையில் வடை திருடுவதிலிருந்து
அடுத்தக்கட்டமாகத் தங்கத்தைத் திருடுவதுதான் காலம் கெட்டுப்போச்சு என்கிற
கூற்றுக்கு ஆதாரமோ?)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கலங்கோடு என்னும் வேறொரு ஊரில் தென்னை ஏறும் தொழிலாளியான
அன்வர் சதாத். வீட்டில் மாம்பழம் பறிக்க ஏறியபோது, மாமரத்தின் மேலே
காகத்தின் கூட்டிலிருந்து தங்க நகை கீழே விழ, கீழே மாங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த அன்வர் சதாத் மகள் அதை எடுத்து தந்தையிடம்
கொடுக்க, அன்வர் சதாத், திருக்கலங்கோடு பொது நூலகத்திற்குச்
சென்று தகவல் தெரிவித்து, அதன் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தியதை அறிந்து, நகை
உரிமையாளர் ஹரிதா வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி
தங்க வளையலை பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன ஒன்றரை
பவுன் நகையை யாரும் உரிமை கொண்டாட வராத நிலையில், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் அதன்
உரிமையாளரிடம் ஒப்படைத்த மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத் அறம் என்ற சொல்லுக்கு ஒரு வாழும் உதாரணம்.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமாலினி. இவர் தனது மகளுடன்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த
அக்டோபர் 26 ஆம் தேதி, சென்றுள்ளார். கோயிலில் இருந்து செல்வமாலினி வீட்டுக்கு புறப்பட்டுச்
சென்றபோது, மதுரை வக்கீல் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை
ஒன்று கிடந்துள்ளது. இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்தபோது சாக்குமூட்டையில்
ரூ.500 பணக்கட்டு இருப்பது போல
தெரிந்தது.
பின்னர் சாக்குமூட்டையை பிரித்துப்பார்த்தபோது
500 ரூபாய் கட்டுகள் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இருந்துள்ளது. பின்னர்
செல்வமாலினி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று
ஒப்படைத்துள்ளார். சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு
சம்பவங்களிலும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நேர்மைத் தவறாமல் ஒப்படைத்த
இருவருமே பொருளாதார ரீதியாக மிகவும்
பின்தங்கியவர்கள். செல்வமாலினி வீட்டு வேலை செய்பவர். அன்வர் சதாத் தென்னை
மரத்தொழிலாளி. எல்லாம் வாய்க்கப்பெற்றவர்கள் பணத்தின் மீது ஆசை கொள்ளாமல்
நேர்மையாக நடப்பதைக் காட்டிலும், பணத்தேவை உள்ள எளிய மனிதர்கள் அறத்தின் பாதையில்
தங்களை செலுத்துவது எத்தனை உயர்வானது..
வாசிப்பின் வாசல்
எழுத்தாளர், கவிஞர் கட்டுரையாளர் என்று மட்டுமே என்னால்
அறியப்பட்ட அன்பிற்கினிய நண்பர் இரத்தின.புகழேந்தி மிகச்சிறந்த மிதியுந்து வீரர் என்பதை அவரது
பசுமைப் பயணம் என்கிற நூல் வழியாகத்தான் அறிந்தேன்.
பிலோ இருதயநாத் என்றொரு
மானுடவியலாளர் இருந்தார். தென்னகப் பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களை
ஆவணப்படுத்தியப் பெருமை அவருக்கு உண்டு.. அதுவும் மலைகள் காடுகள் என பல கடினமானப்
பாதைகள் அனைத்தையும் தனது மிதிவண்டியில் ஒற்றை ஆளாகப் பயணித்து தகவல்களை
சேகரித்தவர். அரசோ அமைப்போ எதனுடைய உதவியுமின்றி தன்னுடைய சொந்தச் செலவில்
உழைப்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்தப் பணியைச் செய்தவர். அவரைப் பற்றி என்னுடைய
பாதை தந்த பயணிகள் நூலில் எழுதி இருக்கிறேன்.
பலசமயம் சென்னைப்
புறவழிச்சாலையில் செல்லும்போது தனித்துவமான ஆடை, தலைக்கவசம் அணிந்து பலர்
மிதிவண்டிகளை ஓட்டிச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பந்தயம் போலத்
தெரியாது. சக நண்பர்களுடன் ஒரு மகிழ்வான பயணம் போலத் தோன்றும். ஒரு வகையில் அது
உண்மைதான் என்பதை புகழேந்தி அவர்களின் பசுமைப் பயணம் நூலை
வாசிக்கையில் உணர்ந்தேன்.
புகழேந்தி
இந்த நூலைத் தந்து பல நாட்களாகிவிட்டன. முயன்றால் ஒரு மணி நேரத்துக்குள்
வாசித்துவிடலாம். அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றி நாட்குறிப்புகள் போல மிகச் சுருக்கமான
கட்டுரைகள் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் தரும் தகவல்கள், அனுபவங்கள் என் அவரது
ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றி.. னை
அவை பற்றி தேட வைத்துவிட்டன. குறிப்பாக அவரது மூன்றாவது கட்டுரையில் BRM மற்றும் SR என்று குறிப்பிடுகிறார். எப்படியாவது SR ஆக வேண்டும் என்று தன் ஆசையை சொல்லிவிட்டு அப்படி என்றால் என்ன என்று அறியும் ஆசையைத் தூண்டிவிட்டு அவர் தன்
மிதிவண்டியில் ஏறி பறந்துவிட்டார். நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
தேடத்தொடங்கினேன்.
BREVETS DE RANDONNEUR
MONDIAUX (BRM) என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட
நேரக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாகக் கடந்து, குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் முடிக்கப்பட
வேண்டிய நிலையான தூரங்களின் சவாரிகள் ஆகும். உலகளவில் BRMகள் Audax Club Parisien (ACP) என்கிற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
BRM-ன் விதி என்பது வரையறுக்கப்பட்ட தூரத்தை, வரையறுக்கப்பட்ட
நேரத்துக்குள் தீர்மானிக்கப்பட்ட சாலை வழியாக சென்றடைவது. உதாரணமாக 200 கி.மீ தூரத்தை 13.5 மணி நேரத்துக்குள் சென்றடைவது. யாருடனும் போட்டி இல்லை. தனக்குத்தானே
போட்டியாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சூப்பர் ரேண்டன்னூர்
(SR) என்பது ஒரு காலண்டர்
வருடத்திற்குள் தொடர்ச்சியான BRMகளை முடிக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ACP வழங்கும் ஒரு பட்டமாகும். இந்தத் தொடரில் நான்கு சுருக்கமான தூரங்கள்
உள்ளன: 200 கிமீ, 300 கிமீ, 400 கிமீ 600 கிமீ, மற்றும் 1000 கி.மீ முறையே 13.5, 20, 27 40 மற்றும் 70 மணிநேர வரையறுக்கப்பட்ட நேர அளவுகளுடன். சென்று முடிக்க வேண்டும்.
ஆனால் கால்ண்டர் வருடம் என்பது ஜனவரியில் தொடங்குவது இல்லை.
நவம்பர் 1 தொடங்கி அடுத்த அக்டோபருக்குள் இந்த இலக்குகளை முடித்தால் ACP அமைப்பின் சான்றிதழ் மற்றும் பதக்கம்
கிடைக்கும். இதில் என்ன கொடுமை என்னவென்றால் ACP இணையதளத்தில் பதிவுக் கட்டணம், பயணச்செலவு, இடையில்
மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கான தொகையையும் சேர்த்து. பங்கேற்பாளர் தன் சொந்த
செலவில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்தப் பயணங்களை AIR (ALL INDIA RANDONNEUR) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அவ்வளவுதான்.. பணமும்
தரமாட்டார்கள். பொறுப்பேற்கவும் மாட்டார்கள். இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்தப் பயண
அமைப்புகள். தற்சமயம் பிரான்சில் உள்ள ACP அமைப்பால் உலகம் முழுக்க உள்ள அமைப்புகளை அங்கீகரிக்கின்றது.
நான் எப்படியும் ஆகிவிடுவேன் என்று புகழேந்தி சபதமெடுத்ததன் விளைவு நான் அங்கே
எல்லாம் சென்று திரும்ப அடுத்த அத்தியாயத்துக்கு வரவேண்டி இருக்கிறது.
அடுத்ததாக விருத்தாசலத்தைச்
சுற்றி பல்வேறு வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று அவைப் பற்றியச் செய்திகளைப்
பகிர்கிறார். முகாச பரூர் அருகிலுள்ள பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ
சமாதி, பரூர் கச்சிராயர் வசித்த அரண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்கள், சுந்தர பாண்டியனின்
கல்வெட்டு, வீரமாமுனிவர் தேம்பாவணி
எழுதியதாகக் கருதப்படும் கோணான்குப்பம் பெரியநாயகியம்மன்
ஆலயம் இப்படியாக அவரது மிதிவண்டிப்பயணம் பல ஆச்சர்யத் தகவல்களை சுருக்கமாகத்
தருகின்றது.
பின்னர் தான் பார்த்த சோலோ
என்கிற ஆங்கிலக் குறும்படம் பற்றி எழுதி இருக்கிறார். மலையேறும் குழு எப்படி பாறை
இடுக்கில் இருந்து ஒரு தேரையைக் காப்பாற்றி மலை உச்சிக்கு எடுத்துச்செல்கிறார்கள்
என்னும் கதையாம். இனி அந்தப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும்.
எனக்கு வேறொரு ஆவணப்படம்
நினைவுக்கு வந்தது 1232 KM என்றொரு படம். பீஹாரில்
இருந்து தில்லிக்கு தினக்கூலிக்காகச் சென்று கொரானா காலத்தில் கைவிடப்பட்டு பசி
பட்டினியுடன் சைக்கிளிலேயே தில்லியில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு
ஏழு நாட்கள் பயணித்து, பீஹாரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு கொடுமைகளை
அனுபவித்தவர்களுடன் ஒரு இயக்குனர் பயணித்து படப்பதிவு செய்திருந்தார். அதுவே அந்த
ஆவணப்படம். ஹாட்ஸ்டாரில் உள்ளது. தற்போது பீகார் தேர்தலையொட்டி திடீர் சாம்பார்
திடீர் ரசம் போல திடீர் BIHAR LOVERS தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்கள். முகநூலில் பீகார்
தெருக்களில் பாலும் தெளிதேனும், பெருக்கெடுத்து தெருவில் ஓடுவதாக கூச்சமில்லாமல்
எழுதுகிறார்கள். அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். வெளியே
சொல்லமாட்டார்கள். கையது கொண்டு மெய்யது போர்த்தி கம்மென இருப்பார்கள்.
சிறுகதை எழுத்தாளர் இல்லையா
தன் மகன் விரும்பிய மிதிவண்டியை தான் வாங்கிக் கொடுக்க இயலாமல் போனதையும், ஆனால்
வேலையில் சேர்ந்தபின் மகன் இளவேனில் தன்
ஊதியத்தில் இருந்து தான் விருப்பபட்ட மிதிவண்டியை வாங்கித் தந்த அனுபவத்தையும்
நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார். மிதிவண்டி பற்றிய அவரது கவிதையும்
இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகத்தான அனுபவம் தேதிவாரியாக
புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். நேர்த்தியான வடிவமைப்பு. பயணிகள் மற்றும்
பயண இலக்கியங்கள் பற்றிய பல்லவிகுமாரின் அழகான முன்னுரை.
இரத்தின புகழேந்தியுடன் அர்த்தப்பூர்வமான
மிதிவண்டிப் பயணங்களை நாமும் அனுபவித்தது
போன்ற உணர்வு புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்
தோழர் புகழேந்தி. . .







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>