கனவில் ததும்பும் நதி – 6
நெய்வேலி பாரதிக்குமார்
. ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக
தினம் என்று ஸ்பெயினில் உள்ள கேடோலோனியாவில் 1923 ஆம் ஆண்டு கூடிய
புத்தக விற்பனையாளர்கள் சங்கம்தான் முதன்முதலில் அறிவித்தது. நவீன இலக்கியத்தின்
முதல் அடையாளம் எனக் கருதப்படும் டான் குயிக்ஸோட் என்கிற நாவல் மூலம்
படைப்புலகம் அறிந்த ஸ்பானிஷ் மொழியின் மகத்தான படைப்பாளி செர்வாண்டிஸ் மறைந்தது 1616 ஆம் வருடம் ஏப்ரல் 23 என்பதால் அந்த
நாளைத் தேர்வு செய்தார்கள். ஆச்சர்யகரமாக பெருவின் ஆகச்சிறந்த எழுத்தாளர் இன்கா
கார்சிலாசோ டி வேகா இறந்ததும் அதே வருடம், அதே தினம்தான். பின்னர் யுனெஸ்கோ உலகப் புத்தக தினமாக அறிவித்ததற்கு
ஷேக்ஸ்பியர் மறைந்த நாளும் அதுவே என்பது கூடுதல் காரணமாயிற்று.. ஆனால் உலகால் அதிகம் கவனிக்கப்படாத பிரெஞ்சு
பத்திரிகையாளர் ழீன் டொமினிக் பாபி பிறந்ததும் (1952 ஆம் வருடம்) ஏப்ரல் 23 தான் . அவர் எழுதியது
ஒரே ஒரு புத்தகம்தான். ஆனால் அதை அவர் விரல்களால் எழுதவில்லை விழிகளால்...
இமைகளின் அசைவுகளால் எழுதினார்.
‘ழீன்டொமினிக்' Elle
என்னும் வணிக நோக்கிலான பத்திரிகையின்
ஆசிரியர். விளம்பரங்களுக்கான மாடல்களைப் படம்பிடித்து அவர்களைப் பற்றிய தகவல்களை
எழுதக்கூடியவர். செலின் என்கிற பெண்ணோடு புரிந்துணர்வு வாழ்க்கை வாழ்ந்தவர்.
பின்னர் அவரோடு கொண்ட பிணக்குக் காரணமாக தனியாகவே வாழ்ந்தார். ஆனாலும் செலின்
மூலம் தான் பெற்ற இரண்டு குழந்தைகளோடு வாரத்தின் இறுதி நாட்களை கவலையேதுமின்றி
கொண்டாடிக் கொண்டிருந்தவர்.
எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென 1995 ஆம் வருடம்
டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி
அவரது மூளையையும், முதுகெலும்பையும்
இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா' நிலைக்குத்
தள்ளப்படுகிறார். மூன்று வாரம் அதே நிலையிலிருந்து, பின்னர் கண்விழிக்கும் போது தலையிலிருந்து கால் வரை எந்த
உறுப்பும் இயங்காமல் போய்விடுகிறது. Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளாகிறார். இடது கண் விழியும்
இமையும் மட்டும் அசைகின்றன. காதுகள் கேட்கும்
சக்தியை இழக்கவில்லை.அவரது மூளை எல்லாவற்றையும் கவனிக்கிறது; உள்வாங்குகிறது. ஆனால் மூளையின் கட்டளைக்கு
உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்படிவதில்லை.
கிட்டத்தட்ட 20 நாட்களில் 27 கிலோ எடை
குறைந்து மெல்லிய கம்பி போல கட்டிலில் கிடக்கிறார். பிரான்சின் கடற்கரை நகரமான ‘பெரக் சூ மெர்'-ன் அதிநவீன மருத்துவமனையில் அவருக்காக மருத்துவக்
குழுவொன்று போராடிக் கொண்டிருக்கிறது.
பேச்சுப் பயிற்சிக்காக ‘ஸ்பீச் தெரபிஸ்ட்' இருவர் மிகுந்த முயற்சி எடுக்கின்றனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட
ஒரு வழிமுறையைக் கண்டடைகின்றனர். ‘ழீனி'டம் இயங்கும் ஒருகண்ணையும் அதன் இமைகளின்
அசைவுகளை வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்பது;
‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளிக்கின்றனர். இது ஓரளவு
பலனளிக்கிறது.
அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம்
பயன்படக் கூடிய சொற்களை ஒரு நெகிழிப் பலகையில் பொறித்து ஒவ்வொரு வார்த்தையாக ஒருவர்
வாசிப்பது; ழீன் மனதில் உள்ள
வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்குகின்றனர். ஆக,
அதுவரை கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்பதற்கு மட்டும் பதில் என்கிற
நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும்
நிலைக்கு முன்னேற்றமடைகிறார். முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசும்(!)
ழீன், அவரது பத்திரிகையில் விமர்சகராக பணியாற்றிய அவரது காதலி
பென் சாடோனின் ஆறுதலான அருகாமையினால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையடைந்து மனதை
உறுதியாக்கிக் கொள்கிறார்.
பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில்-ன்
சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமான ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்கிறார். மெண்ட்லில்
அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன்
ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும்
சம்மதிக்கச் செய்கிறார். புத்தகம் எழுதும் பணி துவங்குகிறது. மெண்ட்லில் ஒவ்வொரு
எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக
பத்தியாக, பக்கமாக புத்தகம்
உருவாகிறது. கிட்டதட்ட இரண்டு இலட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற
காலக்கணக்கில் மெண்ட்லில் மற்றும் ழீனின் நண்பர்கள் ஆகியோரின் பொறுமையான
ஒத்துழைப்பினால் ‘The
Diving Bell and the Butterfly' என்ற தலைப்பில் அந்த நூல் 1997 ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது
படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக்
கூடும். உலகப் புத்தக
தினமான ஏப்ரல் 23 அன்று பிறந்த ழீன் டொமினிக்கின் இந்த நூல்தான் எத்தனை மகத்தானது?
******** ******* **** *********
அண்மையில் நண்பர் பல்லவிகுமார் வழியாக அறிமுகமான பெரம்பலூர்
மோகன் தன்னுடைய முதல் நாவலான குருதிப்பாடு அறிமுக
விழாவில் அந்த நூல் குறித்து பேசமுடியுமா என்று கேட்டு நான் சம்மதித்தப் பிறகு
எனக்கு அந்த நூலை அனுப்பி வைத்தார். மோகனை நான் தமிழ்ப்பல்லவி இதழின் குறுநாவல்
போட்டி பரிசளிப்பு விழாவில் ஒருமுறை சந்தித்தேன். அது ஒரு கண நேர சந்திப்புதான்.
கூடுதலாக ஒரு பத்து நிமிடம் கூட உரையாடவில்லை. அவ்வளவுதான். அந்த குறுகிய கால சந்திப்பு
அவர் பற்றிய எந்த கணிப்பையும் உருவாக்கவில்லை. ஆகவே அந்த நாவல் குறித்த எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன்.
அந்த
நாவலுக்கு எழுத்தாளர் க. மூர்த்தி ஒரு அடர்த்தியான முன்னுரையை எழுதி இருந்தார்.
அந்த முன்னுரை வாசிகின்ற எவரையும் ஒரு கணம் நிமிர்ந்து அமர வைத்துவிடும் வலிமையோடு
இருந்தது. பல சமயம் ஒரு நூலின் அணிந்துரை அந்த நூலை வாசிக்க ஒரு மனத்தடையை
உருவாக்கிவிடும் அல்லது ஒரு திசைத் திருப்பலை நிகழ்த்திவிடும். மாறாக அந்த
அணிந்துரை ஒரு வித்தியாசமான வாசிப்புக்கு தயார்ப்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டிருந்தது.
மூர்த்தி அவர்களின் முதிர்ச்சியான எழுத்து மொழி ஒரு வகையில் மோகனின் நாவலுக்கு
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். அது மோகனுக்கு கூடுதல்
அழுத்தம்தான். ஆனால் மோகனின் எழுத்து, நாவலின் மையம், அவர் அதனை கையாண்டவிதம் ஆகியன அனாயாசமாக அந்த அழுத்தத்தைத்
தகர்த்து நாவலை மனதில் இருத்திவிட்டது.
தெய்வானைக்கு
வரிசையாக மூன்று பிள்ளைகள் பெண்குழந்தைகளாக பிறந்துவிட நான்காவதாக கர்ப்பமான
தெய்வானை ஆண் பிள்ளை வேண்டும் என்று எல்லா சாமிகளுக்கும் வேண்டிக்கொள்கிறாள்..
ஆனால் நான்காவதும் பெண்குழந்தைதான் என்றதும் விரக்தியில் இனி பெண் குழந்தையே
வேண்டாம் என்னும் விரக்தியில் நான்காவது பிள்ளைக்கு “போதும் பொண்ணு” என்று பெயர்
வைக்கிறாள். ஆனால் இயற்கையின் விதி எல்லாவற்றையும் விசித்திரமாக புரட்டிப் போடும்
என்பதற்கு இன்னொரு உதாரணமாக, உரிய காலத்தில் பூப்பெய்தாமல் பெண்ணாக பிறரால்
உணரப்படாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இப்படியான பெண்களின் மன வலிகளை, சமூகத்தின் புறக்கணிப்பை. அவமானங்களை எப்படி
எதிர்கொள்கிறாள் என்பதுதான் நாவலின் மையம்,
பெரம்பலூருக்கு
அருகில் உள்ள வெங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வியல் சூழல், அந்த மனித மனங்களின் இயல்புகள் ஆகியவற்றுடன் போதும்
பொண்ணுவின் வாழ்க்கைப்பாடுகளை அவர்களின் மொழியில் வலிமிகு வார்த்தைகளால் பதிவு
செய்திருக்கிறார் மோகன்.
உலகம்
முழுக்கு அதிகம் விரயமாவது குருதிதான். விபத்துகளில், வன்முறைக் களங்களில், யுத்தங்களில், மருத்துவ மனைகளில் அதிகம் இழக்கப்படுவது இரத்தம்தான். ஆனால்
அந்த குருதிக்கான எதிர்பார்ப்புடன் வாழ்வது எத்தனை முரண்துயர்? அப்படியான பெண்களின் மனதுக்குள் ஊடாடி அவர்களது வலியை
உணர்ந்தது போல மோகன் இந்த நாவலில் எழுதி இருக்கிறார். அவரது எழுத்து மொழி
கிராமத்து மக்களுடன் உரையாடுவது போல மிக யதார்த்தமானது. உவமைகளுடன் உருளும் ஒரு
நூத்துக்கிழவியின் நாவின் வழியே கேட்பது போல அத்தனை நெருக்கமானது.
பொம்பளையாடி
அவ வாழற வூட்டுல மறநாயைக் கட்டுன மாதிரி லோலோன்னுகிட்டு என்கிற ஒரு வரி எழுதி
இருப்பார். வீட்டுக்குள் உலாத்தும் எத்தனையோ விலங்குகள் இருக்கின்றன. பூனை, எலி, பெருச்சாளி.. இப்படி பல ஆனால் மரநாயை ஏன் உதாரணமாகச்
சொல்கிறார்? எல்லா விலங்களும் தனக்கு
எவ்வளவு பசியோ அது வரைதான் இரை தேடும் பசி அடங்கிவிட்டால் அத்தோடு அவை
அமைதிகொள்ளும். ஆனால் மரநாய்க்கு அந்த குணம் இல்லை. இரையைப் பார்க்கும்போதெல்லாம்
தின்றுவிட அலையும். வயிற்றில் இடமில்லை என்றால் இரத்தத்தை குடித்துவிடலாமா என்று
திரியும். கிராமத்து மக்களின் சொற்களுக்குப் பின்னே அவர்களின் அனுபவ முதிர்ச்சி
இருக்கும். இந்த நாவல் நெடுக மோகன் தன் எழுத்தில் பதிந்து இருப்பார். உவமைக்
கவிஞர் என்று சுரதாவைச் சொல்லுவோம். உவமை எழுத்தாளர் என்று மோகனை உறுதியாகச்
சொல்லலாம். மசையாட்டுல மணிகட்டுன மாதிரி, இலுப்ப மரப் பொந்துல சிக்குன கொராக்குட்டி மாதிரி என்று போகிற போக்கில் மசாலா
தூவுவது மாதிரி உப்பு உறைப்பாக அவரது சுவையான உவமைகள்.
வெங்கலத்தின்
தொன்மம் செல்லியம்மா தெய்வம் அது கோபித்துக்கொண்டு வந்து வெங்கலம் கிராமம்
ஏரிக்கரையில் அமர்ந்திருப்பதாக ஒரு வரி எழுதி இருப்பார். அவ்வளவுதான் வேறு
விவரங்கள் அங்கே இருக்காது. எங்கிருந்து கோபித்துக்கொண்டு வந்தாள் ஏன்
கோபித்துக்கொண்டு வந்தாள் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. தேடிப் பார்த்தால் ஒரு
சுவாரசியமான கதை கிடைத்தது.
மதுரையை
எரித்தபிறகு கண்ணகி தன கோபம் தணிந்து பெரம்பலூர் அருகே உள்ள சிறுகனூரில்
மதுரகாளியாக வந்து நிலைகொண்டு விட்டாளாம். பக்தர்களெல்லாம் மதுரகாளியின்
வசமாகிவிட்டனராம். தனக்கென்று ஒரு வழிபாடு, ஆலயம் வேண்டாமா என்று கோபித்துக்கொண்டு
வெங்கலம் கிராமத்து ஏரிக்கரையில் அமர்ந்துவிட்டாலாம் கண்ணகியின் தங்கை
செல்லியம்மா. செவி வழி செய்திதான். ஆனாலும் மோகனின் வரி என்னை அங்கு கொண்டுபோய்
சேர்த்தது. ஒரு நல்ல படைப்பு இப்படித்தான் வாசகனை மரநாய் போல அலையவிட்டுவிடும்.
(இன்னும்
ததும்பும்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>