திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி – 4

 



கனவில் ததும்பும் நதி
– 4

                                          -நெய்வேலி பாரதிக்குமார் 

அறிவார்ந்தோர் கரங்களில் மொழிகளின் தலையெழுத்து

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வடக்கு அந்தமானில் வசித்து வந்த 85வயது மூதாட்டி (Boa Sr) போவாசர் மரணமடைந்த போது பத்திரிகைகளின் செய்தி குறிப்புகளில் அவரது பெயர் இடம் பெற்றது. அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான அகா போ என்கிற மொழியை பேசி வந்த கடைசிப் பெண்மணி அவர்தான். அவர் மரணமடைந்த அன்று அவர் பேசி வந்த அகா போ மொழியும் அழிந்தது. அந்தமானில் பெரும்பான்மை மக்கள் அந்தமானிய இந்தி என்னும் மொழியைத்தான் பேசி வருகின்றனர்.. அந்த மொழிதான் அந்தமானில் பிற மனிதர்களுடன் உரையாட அவருக்கும் துணையாக இருந்தது. 1858 ஆண்டு வாக்கில் 200க்கும் மேற்பட்டோர் பேசி வந்த அகா போ மொழி பேசுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 1931 ஆம் அண்டு வாக்கில் வெறும் ஆறே ஆறு பேர் பேசுகின்ற மொழியாக அருகியது.  

கல்வி கற்கவும், பொருள்  ஈட்டவும்,  குழுக்களுக்கு இடையே நடந்த  சண்டையின் காரணமாக நிகழ்ந்த  இடப்பெயற்சியும் ,அம்மக்கள் பிற மொழிகள் பேசுவதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அகா போ மொழி அழிவதற்கு முதன்மையானக் காரணம் அதற்கு எழுத்து வடிவம் இல்லை என்பதுதான். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய மொழியியல் பேராசிரியர் அன்வித்தா அப்பி என்பவர் போவாசர் உடன் தங்கி அவரது குரலில் அவரது மொழியை பேச வைத்தும் பாட வைத்தும் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவுகள்தான் அகா போ மொழி இருந்ததற்கான சாட்சியமாக இருக்கப் போகிறது. பதமஸ்ரீ விருது பெற்ற அன்வித்தா அப்பி அழிந்து வரும் பழங்குடியினரின் மொழிகளைப் பற்றி ஆய்வு செய்து அவற்றைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் நீலகிரி மலைத்தொடர் பகுதிகளில் வசிக்கும் தோடர்கள் பேசிவரும் ஆல்வாஷ் மொழியும் கூட அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. தற்சமயம் 1500 பேர் மட்டும் பேசிவரும் ஆல்வாஷ் மொழிக்கும் எழுத்து வடிவம் இல்லை. தனது தந்தையார் காலத்திலேயே பஞ்சாப்பில் இருந்து நீலகிரி மலைத்தொடருக்கு பணிநிமித்தம் வந்து தங்கி இருக்கும் பல் மருத்துவர் தருண் சோப்ரா தோடர்களின் பண்பாடு, கலாச்சாரம், ஆல்வாஷ் மொழி ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்.

எழுத்து வடிவம் இல்லாத காரணத்தினால் அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் பற்றிய கவலையில் நாம் இருக்கும் அதே சமயம் எழுத்து வடிவம் உள்ள மொழிகளின் நிலை இன்றைக்கு என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். மகத்தான பேரிலக்கியங்கள், இலக்கண வலிமை கொண்ட தமிழ் மொழி எல்லா காலத்திலும் நிகழ்ந்த சூறாவளிகளையும், சுனாமிகளையும் தாங்கி தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு இருக்கிறது.

மூல மொழியை ஆங்கில எழுத்துக்களால் எழுதும் வழக்கம் அலைபேசிகளின் தொடக்கக் காலத்தில் தொற்றி இன்று முற்றிப்போய் ஒவ்வொரு மொழியையும் அரித்துத் தின்னத் தொடங்குகிற அபாயத்தை கண்கூடாகக் காண்கிறோம். தமிழ் என்று இல்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும் இதே அவல நிலை நிலவுவதை ஊடகங்களில் பதியப்படும் பின்னூட்டங்கள் வழியே அறியும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது முதலில் திரையிசைப் பாடல்களை இப்படி ஆங்கில எழுத்துகளால் குறிப்பிட்டு காணொளிகளாக பதிவிட்டவர்கள் இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களில் வசனங்களை இவ்வாறான முறையில் கேட்கிறார்கள் என்று கேள்விப்படும் பொழுது  பேரதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிற தரிசன வரிகளை மறந்து  தமிழ் எண்களை பயன்படுத்தாதன் காரணமாக, தமிழ் எண்களை வழக்கத்தில் இருந்து இழந்தோம் இப்பொழுது எழுத்துகளையும்  இழப்பது மொழியை முற்றிலும் இழப்பதற்கு சமம். எல்லா மொழியிலும் எல்லா இலக்கியங்களையும் படைத்துவிட முடியாது அதற்கான சொல்வளம் தேவை தமிழின் சொல்வளத்துக்கு நாம் பெற்றிருக்கும் காப்பியங்களும், எண்ணற்ற மகத்தான பேரிலக்கியங்களும் உதாரணம்.

அறிவியல் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளை எல்லாம் தாண்டி தமிழ் முன் நிற்பதற்குக் காரணம் தமிழின் சொல்வளம்தான் முதன்மையானக் காரணம். அதற்கு அடிப்படை தமிழின் வளமையான எழுத்துகளின் எண்ணிக்கை.. எழுத்தின் பயன்பாடு குறையும் போது ஒரு மொழியின் உயிர்நாடியான இலக்கியங்களின், ஆகச்சிறந்த படைப்புகளின் எண்ணிக்கையும் குறையும். கற்பனைத்திறனும் குறையும். எந்த அளவுக்கு கற்பனைத்திறனை மேம்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு படைக்கும் திறன் பெருகும் அறிவியல் துறையாக இருந்தாலும், அறிவு சார்ந்த எந்தத் துறையாக இருந்தாலும் படைப்பாற்றலுக்கு கற்பனைப் பயிற்சியே அடிப்படை. இரவல்மொழிகள் வழியாக கற்றலும், கற்பனை செய்தலும் புதியன நோக்கி செலுத்தாது.

எழுத்து அழிவது மொழியை மட்டுமல்ல , அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், அறிவு சார்ந்த திறன் ஆகியவற்றையும் சேர்த்தே அழிக்கும். ஆண்டுதோறும் செப்டெம்பர் 8 ஆம் தேதியை உலக எழுத்தறிவு தினமாக அனுசரிக்கிறார்கள். கல்லாதவர்கள் கல்வி கற்பது எத்தனை இன்றியமையாததோ  அத்தனைக்கு  முதன்மையானது கல்வி  கற்றவர்கள் அவரவர் தாய்மொழி எழுத்துகளையே எல்லா வகையிலும், எல்லா காலங்களிலும் பயன்படுத்துவது. உலக எழுத்தறிவு தின கவன ஈர்ப்பை படிக்காதவர்களுக்கு செலுத்துவதைவிட கல்வி அறிவு பெற்ற அறிவார்ந்தவர்களை நோக்கியே திருப்ப வேண்டும்.. அவர்கள்தான் இணையத்தில் தாய்மொழியை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அவர்களிடம் அவரவர் மொழியை அவரவர் தாய்மொழியில் எழுதும்படி அறிவுறுத்த வேண்டும்.

                                             ******** ******* **** *********

டைப்பாளிகள் எப்பொழுதுமே காலத்தின் பிரதிநிதிகள். நிகழ்காலத்தில் அனுபவிக்கும் பெருந்துயரின் ஒவ்வொரு துளியையும் அவர்கள் மட்டுமே தொடர்ந்து தங்கள் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எரிகற்கள் பற்றி ஆய்வு செய்த அறிவியியலாளர் ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் பூமியை நோக்கி விழுந்த எரிகற்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தார். வால்ட் விட்மன் என்கிற அமெரிக்க கவிஞர் எழுதிய எரிகற்களின் ஊர்வலம் என்கிற கவிதையை தற்செயலாக வாசித்தார். அந்தக் கவிதை எரிகல் விழுவது பற்றி மிக விரிவாக துல்லியமாக வர்ணித்திருந்தது. வால்ட்விட்மன் நிச்சயம் எரிகல் விழுவதைப் பார்த்திருக்க வேண்டும் என்பதையும். அந்தக் கவிதை வெளியான வருடம் 1860  என்பதையும்  உறுதிசெய்தார். அது அவரது ஆய்வுக்குப் பெரிதும் உதவியதாக தகவல் ஒன்று உண்டு.

தீ நுண்மி காலம் (கொரானா) என்பது எல்லோரையும் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக பூட்டி வைத்தது. படைப்பாளிகளுக்கு தனிமைதானே உற்ற துணை. ஆகவே பல படைப்பாளிகள் தங்களின் இலட்சியப் படைப்புகளை அந்தக் காலகட்டத்தில் எழுதிக் குவித்தனர். ஜெயமோகன் தினம் ஒரு கதை என நூறு நாட்களுக்கு நுறு கதைகள் எழுதி தனது தளத்தில் வெளியிட்டார். கதைசொல்லி இரவிச்சந்திரன் அரவிந்தன் உயிரச்சம் என்னும் தலைப்பில் தீ நுண்மி கால சிறுகதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தின் மனஉளைச்சல்கள், வாழ்வியல் போராட்டங்களை இரா. பூபாலன் தீ நுண்மிகளின் காலம் என்கிற தலைப்பில் கவிதைகளாக வடித்திருக்கிறார். பூபாலனின் கவிதை உலகம் மிக நுட்பமானது. வெவ்வேறு தளங்களுக்குப் பாயும் கூர்மை கொண்டது. அவரது வெவ்வேறு கவிதைத் தொகுப்புகள் அவரது வெவ்வேறு சமூகப் பார்வைகளை அளிக்கும் கவிதைகள் அடங்கியது. அவை பற்றி பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் நான் இந்தக் கவிதைத் தொகுப்பை முக்கியமாக கருதும் காரணம் சில நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யுத்தம், பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் மூலமாக பேரழிவுகளைச் சந்தித்து இருக்கிறார்கள். அப்படியான பேரிடர் காலங்களை இலக்கியங்கள் ஓரளவுக்கு பதிவு செய்திருக்கின்றன. நம் சம காலத்தில் நாம் சந்தித்த பேரிடர் தீ நுண்மி காலம்தான்.

பொதுவாக இம்மாதிரி காலங்களில் பதிவாகும் படைப்புகள் பெரும் துயர காவியங்களாக அல்லது அவநம்பிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கும். ஆனால் பூபாலனின் இந்தத் தொகுப்பில் பல நேர்மறைக் கவிதைகளை வாசிக்க முடிந்தது.

தீ நுண்மி காலத்தில் பரணில் இருந்து தூசித் தட்டி எடுக்கப்பட்ட தாயக் கட்டைகளைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது. அதில் கிராமங்களின் பச்சை நினைவுகளுக்குத் திரும்பிவிட்ட மகிழ்வைக் சொல்கிறது. அதிலும் அந்தக் கவிதையில் அதுநாள் வரை தனிமையில் அடைபட்டிருந்த அப்பத்தா தாயம் விளையாட்டில் ராணியாகிவிட்டார் என்று சொல்வது மிக அற்புதம்.

நான் பணிபுரியும் சுரங்கப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பது விடுமுறை தினம் இல்லை. மின்சாரத்துக்கு எது விடுமுறை? எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கிழமை வார விடுமுறையாக வரும். எனக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக அமைந்ததே இல்லை. பத்திரிகை வைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைதான் வைத்திருக்கிறோம் அதானே எல்லோருக்கும் வசதி என்பார்கள். ஆனால் எனக்கு அது வாய்த்ததே இல்லை. பூபாலனுக்கும் அந்தத் துயர் இருந்திருக்கும் போல.. கொரானா காலத்தில் அவருக்கு கிடைத்த ஞாயிறு பற்றி அழகாக எழுதி இருக்கிறார்.

எப்பொழுதும் இல்லாத

ஒரு ஞாயிற்றுக்கிழமை

இப்போது என்னிடம் இருக்கிறது

அதை நான் குளிப்பாட்டுகிறேன்

அழகூட்டுகிறேன் அதனோடு உரையாடுகிறேன்  என போகிறது அக்கவிதை.

 

இன்னொரு கவிதை மனம் நெகிழ வைப்பது. ஆனால் நேர்மறையானது. கொரானா காலத்தில் எல்லோருக்கும் சம்பள இழப்பு இருந்திருக்கும். அந்ததுயர் எதிர்பாராத சிக்கல்கள் கொண்டது

சம்பளம் இந்த மாதமும்

பாதிதான் என்று குறுஞ்செய்தி

வந்திருக்கிறது

நெகிழிப்புட்டியில்

நீர் நிரப்பி நட்டு வைத்த

பூச்செடி பூத்திருக்கிறது

மழையும் தூறத் தொடங்கி இருக்கிறது

என மகிழ்ச்சிக் கூச்சலிட்டு

வாசலுக்கு அழைக்கிறாள் மகள்....

எல்லா வாசல்களும் அடைபடுவதில்லை........  

என்று முடியும் அந்தக் கவிதை நவீன இலக்கியவாதிகளிடம் அரிதாக காணப்படும் நேர்மறைப் பார்வை கொண்டது. இம்மாதிரியான கவிதைகள் வாசிப்பவர்களை நம்பிக்கையின் சிறு இழையில் உயிர்ப்பிக்கச் செய்கிறது.

                                                (இன்னும் ததும்பும்)  

   

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

கனவில் ததும்பும் நதி 8

  கனவில் ததும்பும் நதி 8             நெய்வேலி பாரதிக்குமார்   இ ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று...