திங்கள், 24 நவம்பர், 2025

கனவில் ததும்பும் நதி, 2

 



கனவில் ததும்பும் நதி – 2

 நெய்வேலி பாரதிக்குமார்

               ப்ரல் 23 உலகப் புத்தக தினத்தையொட்டி உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள், அதிகத் தள்ளுபடியுடன் புத்தக விற்பனையை பல்வேறு புத்தக நிறுவனங்கள் நடத்துகின்றன. கடந்த சில வருடங்களாக வெவ்வேறு புத்தக நிறுவனங்கள் இணைந்து சென்னை எழும்பூர் பெரியார் மாளிகையில் (தினதந்தி அலுவலகம் அருகில்) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் நூல்களை விற்கின்றன. நான் அதில் அரிய நூல்கள் சிலவற்றை வாங்கி இருக்கிறேன். இந்த வருடமும் அறிவிக்கப்படலாம்.

      உலகப்புத்தக தினத்தில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய எழுத்தாளர்கள் ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், ழீன் டொமினிக் பாபி ஆகியோர் ஏப்ரல் 23 இல் பிறந்தவர்கள் (ஒரு சிலர் ஷேக்ஸ்பியர் இறந்த தினம் மட்டுமே ஏப்ரல் 23 என்கிறார்கள்) இந்த வரிசையில்  ரே பிராட்பரியையும் இணைக்கலாம். ரே பிராட்பரி அந்த நாளில் பிறந்தவருமில்லை இறந்தவருமில்லை என்றாலும் அவரது ஃபாரன்ஹீட் 451 நாவல் மிக முக்கியமான ஒன்று. அது புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி பேசுகின்ற நாவல்

      ரே பிராட்பரி ஒரு அறிவியல் புனை கதை எழுத்தாளர். நம் சுஜாதாவுக்கு இவரும் ஐசக் அசிமோவும்தான் விருப்பமான எழுத்தாளர்கள். அமெரிக்காவில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரே பிராட்பரி பார்வைக் குறைபாடு காரணமாக இராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்தவர். 12 வயது முதலே எழுதத் தொடங்கி பத்திரிகைகளில் தொடர் சிறுகதைகள் (Chain of Stories) என்னும் முறைமையில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதத் தொடங்கி பின்னர் முழு நேர எழுத்தாளராக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவரது சிறுகதைகளுக்கு கிடைக்கும் அதீதமான வரவேற்பைப் பார்த்து பதிப்[பாளர்கள் அச்சிறுகதைகளை நீட்டித்து அதே வரிசையில் தொடர்ந்து எழுதுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். அதே போல அவரது சிறுகதைகள் பின்னர் விரித்து எழுதப்பட்டு நாவலாகி இருக்கின்றன. ஃப்ரான்ஹீட் 451 நாவல் தி ஃபயர் என்கிற தலைப்பில் சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்ட நாவல்.

      ரே பிராட்பரி ஒரு கற்பனையான தேசத்தை அதில் படைத்திருப்பார். மக்களுக்கு எதிரான சட்டங்களும் நடவடிக்கைகளும் கொண்ட கற்பனை தேசம் அது அவ்வாறு உருவாக்குவதை (dystopia) டிஸ்டோபியா என்கிறார்கள். உடோபியாவுக்கு நேர் எதிர் சமூகம். நல்ல அம்சங்களும், சட்டத் திட்டங்களும் கொண்ட உலகத்தைக் கற்பனையில் உருவாக்கினால் அதனை உடோபியா (utopia )என்பார்கள்.

ரே பிராட்பரியின் கற்பனை தேசத்தில் புத்தகங்கள் வாசிப்பது வீண் வேலை நேரத்தை வீணடிப்பது. ஆகவே புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அப்படி அரசாங்கத்துக்குத் தெரியாமல் புத்தகங்கள் வைத்திருந்தால் அவை எரிக்கப்படும். புத்தகங்கள் வைத்திருந்தவருக்கு கடுமையான தண்டனையும் உண்டு. புத்தகங்களை எரிப்பதற்கு என்றே அரசாங்க நிறுவனம் ஒன்று உண்டு. அங்கு உள்ள புகார் பெட்டிகளில் புத்தகங்கள் வைத்திருப்பவர் பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்குள்ள குழு சென்று அந்தப் புத்தகங்களை எரித்துவிடும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாண்டேக் என்பவனுக்கு அரசாங்கத்தின் இந்தச் செயல்பாடு மிகப் பிடித்தமானது. அவனுக்கும் புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதவாக்கரைகள் என்கிற எண்ணம் உண்டு.

அந்த தேசத்துக்கு ஆசிரியர் பணிக்காக புதிதாக வரும் ஒரு ஆசிரியை மாண்டேக்கை எதேச்சையாக சந்திக்கிறாள். அரசின் இந்தச் சட்டம் மக்களின் அறிவு நலனுக்கு எதிரானது என்று தெரிவிக்கிறாள். அதை மறுக்கும் மாண்டேக்கிடம் “நீங்கள் இதுவரை புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறாள். இல்லை என்று தலையாட்டுகிறான். ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அது பயனற்றது என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்க மாண்டேக் யோசிக்கிறான். அடுத்த முறை புத்தகங்களை எரிக்கும் பணிக்குச் செல்லும்போது தீயில் எரிபடாத புத்தகம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து ரகசியமாக வாசிக்கின்றான். அது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “The life History of Copperfield” என்னும் கற்பனை சுயசரிதைப் புத்தகம். அந்தப் புத்தகம் மெல்ல மெல்ல உள்ளிழுக்கிறது.

மாண்டேக் அதன்பிறகு புத்தங்களை எரிக்கச் செல்லும்போது வேண்டுமென்றே சில புத்தகங்களை எரியவிடாமல் செய்து அவற்றை ரகசியமாக வீட்டுக்கு எடுத்துவந்து படிக்க ஆரம்பிக்கின்றான். ஒரு கட்டத்தில் அவனால் புத்தகம் வாசிக்காமல் இருக்கவே முடியவில்லை. தொலைக்காட்சிப் பிரியையான அவளது மனைவி கோபத்தில் அவனைப் பற்றி புகார் பெட்டிக்குத் தகவல் அனுப்புகிறாள். அவன் அரசின் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகத் தப்பி ஓடுகின்றான். அவனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த ஆசிரியை அரசுக்குத் தெரியாத ரகசியத் தீவு ஒன்றை அறிமுகம் செய்கிறாள். அங்கு உள்ள அனைவரும் நாள் முழுவதும் புத்தகம் வாசிக்கிறார்கள். அரசாங்கம் கண்டுபிடித்தால் புத்தகம் எரிக்கப்படும் என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக வாசித்து அதை மனதில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். யாரெல்லாம் அப்படி ஒரு முழு புத்தகத்தை மனனமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் பெயரையே சூட்டிவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள் இங்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தால் ஒரு சிலரை நாம் திருக்குறள் என அழைக்கலாம். ஒன்றிருவரை நாம் சிலப்பதிகாரம் என்றழைக்கலாம் எத்தனை அற்புதமாக இருக்கும்? மாண்டேக் அந்தத் தீவில் தனக்கான புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பிக்கின்றான். இந்த நாவலைத் தமிழில் வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஃபாரன்ஹீட் 451 அதே பெயரில் திரைப்படமாக ஃபிரான்காயிஸ் ட்ரூஃபெட் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மிக அற்புதமான இந்தத் திரைப்படம் பற்றி விரிவான விமர்சனத்தை சௌந்திர சுகன் இதழில் எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரை பின்னர் விழித்திரையில் நிற்கும் பிரமொழித்திரைப்படங்கள் என்னும் என்னுடைய நூலில் இடம்பெற்றுள்ளது. புத்தகங்களின் மகத்துவம் பற்றி எடுக்கப்பட்ட மிக முக்கியமான படங்கள் என  ஃபாரன்ஹீட் 451 மற்றும் The Diving Bell and Butterfly  ஆகியவற்றைக் குறிப்பிடுவேன். தேடிக் கண்டடையுங்கள்..

முகநூலை வெற்று அரட்டை என்றும் சுயத்தம்பட்ட ஊடகம் என்றும் கடுமையாக விமர்சிப்பவர்கள் உண்டு. நவீன இலக்கியவாதிகள் பலர் அது கவுரவக் குறைச்சலானக் களம் ஆகவே முகநூல் குழுக்களுடன் அன்னந்தண்ணி ஆகாரம் எல்லாம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் ரகசியமாக விடாமல் வாசிக்கிறார்கள். இல்லையென்றால் முகநூல் போராளிகள் என்னைக் கண்டபடி வசை பாடுகிறார்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை எவரும் அவர்களிடம் கேட்பதில்லை. இப்பொழுது விமர்சனங்களுக்கும், பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் வசை என்று பெயர் சூட்டிவிட்டார்கள். அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால் “என் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் செய்த சூழ்ச்சி” என்கிற நிரந்தர வசனம் போலாகிவிட்டது இந்த வசை என்கிற சொல்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முகநூல் என்பது இன்று பரவலான மக்கள் தொடர்புக்கானத் தளமாக இயங்குகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கவனிக்கின்ற, ஓரளவு வாசிக்கின்ற எழுத்துவடிவிலான சமூக ஊடகமாக முகநூல் மட்டுமே இருக்கின்றது. தன் தாயின் மீதோ, தந்தையின் மீதோ எந்தப் பதிவுக்கும் கமென்ட் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து மிகுந்த கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்கள் கூட நிச்சயம் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களை அடுத்த முறை சந்திக்கும் போது கண்டுபிடித்துவிட முடிகிறது. இளையதலைமுறை இன்ஸ்டா, ரீல்களில் மூழ்கித் திளைத்திருக்க பூமர் என்று ஒதுக்கப்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரணடைய சரியான தளம் முகநூல்தான்.

முகநூலை மிக ஆக்கப்பூர்வமாக, படைப்பூக்கத்துடன் பதிவிடுபவர்கள் முகநூல் பக்கங்களை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார்கள். அதில் குறிப்பாக Karikalan R, Geethapriyan Vasudevan, Magudeswaran, அறிவழகன் கைவல்யம், பொ. வேல்சாமி என்று பலரைக் குறிப்பிடலாம். இதில் கரிகாலனின் பணி அற்புதமானது மிகவும் வியக்கவைப்பது. அவரது பதிவுகள் திரைப்படம், கவிதைகள், சமகால நிகழ்வுகள், வரலாற்றுச் செய்திகள் என பல்வேறு தளங்களில் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. ஒரு கவிஞராக மட்டுமே அதிகம் அறியப்பட்ட அவரின் நுட்பமான, தீர்க்கமானப் பார்வை முகநூல் வழியாகத்தான் அதிகம் வெளிப்படுகிறது. குறிப்பாக அவரது பெரியாரின் இரங்கல் உரை பதிவு எத்தனை தத்துவார்த்தமானது என்ன ஒரு அழகான Narration . அதில் எத்தனை விஷயங்களை ஒரு கடுகுக்குள் கடலை நிரப்புவது போல நிறைக்கிறார். மரணம் என்பது ஒளியை அணைப்பது போல அல்ல விடியல் வந்தால் விளக்கை அணைப்பது போல என்கிற தாகூரின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார். நாகம்மை இறந்தபொழுது “இனி வீட்டுக்குப் போகவேண்டும் என்கிற அவசியமில்லை” என்கிற பெரியாரின் கூற்று அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை நமக்குள் விதைக்கிறது. பெரியாரின் இரங்கல் உரையை eulogy poetry தன்மையைக்  கொண்டிருக்கிறது என்று அதனை வகைமைப்படுத்துவது எத்தனைப் புரிதலைத் தருகிறது? .

            கரிகாலனின் பார்வை வேறொரு கோணத்தில் இயங்குவது.  இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் பரிசு பெற்ற படங்களைக் குறிப்பிடுவது என்பது எல்லோரும் செய்யக்கூடியதுதான் என்றாலும் கரிகாலன் மொத்தமுள்ள 24 ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளை பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்? அவரது ஒவ்வொரு பதிவுமே தொகுக்கப்பட வேண்டியவைதான். அரிதாக அவரது கவிதைகளைப் பதிவிடுவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்தக் கவிதை புன்னகைக்க வைப்பது. கவிதையில் நகைச்சுவை மிக அரிது கரிகாலன் எதையும் சாத்தியப்படுத்துவார்.  

பாவம்

~

ஏழு பாவங்களுள்

ஒன்று பொறாமை

விவிலியம் கூறுகிறது

அழகாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

அறிவாளியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

கனவானாக

சீமாட்டியாக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

பகைவரை மன்னித்து

பொறாமைப்படுத்தாதீர்

இரக்கமுடையவராக இருந்து

பொறாமைப்படுத்தாதீர்

ரொம்ப நல்லவராக இருந்து பொறாமைப்படுத்தாதீர்

'பொறாமைக்கு தூண்டுவது

எட்டாவது பாவம்!'

என்கிறது, கரிகாலன்

எழுதிக் கொண்டிருக்கிற

புதிய விவிலியம

 

                                                                                    (இன்னும் ததும்பும்)

 

 

 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

கனவில் ததும்பும் நதி 8

  கனவில் ததும்பும் நதி 8             நெய்வேலி பாரதிக்குமார்   இ ந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று...