கனவில் ததும்பும் நதி
-நெய்வேலி பாரதிக்குமார்
ஜார்கண்ட்
மாநிலத்தின் ராஞ்சிக்கு 15 கி.மீ. தொலைவில் ஸ்வர்ணரேகா என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மேற்குவங்கம்
வழியாக ஒடிசாவுக்குச் சென்று பின் கடலில் கலக்கிறது. ஜார்க்கண்டின் சில பகுதிகளில்
மட்டும் அதன் மணற்பகுதியில் தங்கத்துகள் கலந்து கிடப்பதால் அங்குள்ள பழங்குடி
மக்கள், நாள் முழுவதும் மணலை சலித்து, மில்லி கிராம் அளவுக்கு தங்கத்தை
எடுத்து விற்று தங்கள் வயிற்றுப்பாட்டைத் தீர்க்கின்றனராம். இந்தச் செய்தியை அறிய
நேரிட்டால் பலரின் கனவில் ஓடும் நதியாக ஸ்வர்ணரேகா இருக்கலாம்.
ஆனால் கலை,
இலக்கியரசனை உள்ளவர்களின் கனவில் ஏதேனும் ஒரு வரியோ,
அரிய சொல்லோ. ஒரு ஓவியத்தின் கோடுகளோ, வண்ணமோ அல்லது சிற்பங்களின் பாவங்களோதான்
அதிகம் வரக்கூடும். அதற்காக இலக்கியவாதி பணத்தின் மீது பற்றற்றவன் என்பதல்ல
பொருள். அவன் தலையெழுத்து அவனது கனவுகளில் அவையே வந்து தீரும்.
ஸ்வர்ணரேகா என்கிற பெயரைக்
கேள்விப்பட்டதும், ரித்விக் கதக்கின் சுபர்ணரேகா என்கிற பெங்காலித் திரைப்படம்தான்
நினைவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினைக் காலக்கட்டத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்ட
கதைக்கரு. ஸ்வர்ணரேகா நதிக்கரையில்தான் அந்தக் கதைத் தொடங்குகிறது. ரித்விக் கதக்
இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர். சத்யஜித் ரேவுக்கு இணையாகக் கருதப்பட
வேண்டியவர். சுபர்ணரேகா ஆசியப் பத்திரிகையின் பட்டியல் ஒன்றின்படி எல்லா
காலத்துக்குமான சிறந்த திரைப்படங்களின் வரிசையில் 11 வது இடத்தைப் பிடித்தது.
அவரது மேக தக்க தாரா இந்தியத் திரைப்படங்களில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று.
சுபர்ணரேகா ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் தற்பொழுது
இணையத்தில் யூ ட்யூப் வழியாகக் காணக்கிடைக்கிறது. இணையம் என்பது தேடித்தேடிக்
கண்டடைபவர்களுக்கான பொக்கிஷங்களைத் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. இணையம்
என்பது ஒட்டுமொத்தமாக மோசமானதல்ல அது தனக்குள் சிறந்தவற்றுக்கும், மிகச்சிறந்தவற்றுக்கும், மோசமானவற்றுக்கும் மிக
மோசமானவற்றுக்கும் தாராளமாக இடமளித்திருக்கிறது. நாம்தான் நமக்கான ஆரோக்கியமான கனி
எவை என்பதை அறிந்து பறிக்கவேண்டும்.
சமீபத்தில் ஒரு இலக்கிய நிகழ்வில் ஒரு பேச்சாளரிடம்
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை அளித்து அதிலுள்ள கதைகள்
குறித்துப் பேசச்சொல்லி இருந்தார்கள். அவர் அந்தத் தொகுப்பை ஓரமாக வைத்துவிட்டு,
தான் சிறு வயதில் படித்த ரஷ்யச் சிறுகதைப் பற்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில்
கலந்துகொண்டவர் போல அபிநயங்களுடன் பேசினார். பிறகு கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் என்று அவரது பேச்சு இலக்கில்லாமல் அங்கும் இங்குமாகப் பாய்ந்தது. சிறந்தச்
சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் கொண்டு வந்த பசுமாட்டை,
பனைமரத்தில் கட்டிவிட்டு ஒருவழியாக ஓய்ந்தார். அண்மைக்காலங்களில் சில பேச்சாளர்கள்
தங்களுக்குத் தரப்பட்ட நூல்களைப் படிக்காமல் மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த
ஆலாபனைகளில் பஜனைப் பாடுவது அதிகமாகிவிட்டது. இதனால் சமகால இலக்கியங்கள் பற்றி,
படைப்பாளிகள் பற்றிய விரிவான விவாதக்களம் உருவாகாமல் வெறுமையாகிவிட்டது.
குழுக்கள்
சார்ந்த படைப்பாளிகள், ஊர்ப்பாசத்தில்
முன்னிறுத்தப்படும் படைப்பாளிகள் தவிர பிற படைப்பாளிகள் இருள்வெளியில் எந்த
வெளிச்சமுமின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத்
தொகுப்பு ஒன்றில் அதன் முன்னுரையை எழுதிய ஒருவர் அதிலுள்ள கதைகளைப்
பற்றியோ, எழுத்தாளர்கள் பற்றியோ ஒரு வரி கூட கூறாமல் சாமர்த்தியமாக ந்ழுவிச்
சென்றதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பெயர்களைக் குறிப்பிட்டால் ஆயபயன்
என்ன என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்துவிட்டே உச்சரிக்கிறார்கள். தனக்கு உதவாத
பெயர்களைக் குறிப்பிட சிலர் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே சிலருக்கு மட்டும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொங்கிப்
பெருகும் புகழ் வெளிச்சமும், விருதுகளும் கிடைக்கின்றன.
கடலூர் மாவட்டத்தைப்
பொருத்தவரை படைப்புலகில் இரண்டு செல்விகள்
மிக முக்கியமானவர்கள். அதிலொருவர் தமிழ்ச்செல்வி அவர்கள். கீதாரி, மாணிக்கம்,
அளம், கற்றாழை என தனது பல்வேறு படைப்புகளால் பரவலாக அறியப்பட்டவர். இவர்
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்றாலும் விருத்தாச்சலத்தில்
வாழ்ந்துகொண்டிருப்பவர்.
இன்னொருவர் கலைச்செல்வி
நெய்வேலியில் பிறந்து வளர்ந்து தற்சமயம் திருச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பவர். காந்தியச்
சிந்தனைகள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட கலைச்செல்வியின் நாவல் ஹரிலால் த/பெ.மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி மிக முக்கியமானது. அவரது நாவல்கள் காத்திரமானவை. அற்றைத்திங்கள்,
சக்கை, புனிதம், தேய்புரி பழங்கயிறு ஆகியவற்றுடன் ஆலகாலம் என்னும் நாவல் வித்தியாசமான கூறுமுறையால்
வாசிப்பவரை தன்னுள் இழுத்துக்கொள்கிறது.
காலத்தை ஒரு துளியில்
அழிக்கும் விஷம் ஆலகாலம் என்பார்கள். காலம் என்பது எப்பொழுதும் மாறிக்கொண்டே
இருப்பது. தனக்குள் ஆச்சர்யங்களையும் எதிர்பாரா விசித்திரங்களையும்
புதைத்துக்கொண்டிருப்பது. ஆனால் நிலையில்லாதது என்பதை ஊடுஇழையாகக்கொண்டு
எழுதப்பட்ட நாவல் ஆலகாலம். நாவல் ஐந்து
காலகட்டங்களில் நடப்பதாக ஐந்து உள்பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாகம்
முடியும் இடத்தில் அடுத்தப் பாகம் தொடங்குவதற்கான இணைப்புப் புள்ளியை லாவகமாக தன்
எழுத்தின் வழியே மெல்லியச் சங்கிலியாக உருவாக்குகிறார் கலைச்செல்வி. .
முதல் பாகத்தில் மனதில்
வாழும் காதலனுக்காக கசிந்துருகும் பாணர் குலத்து
குழலி மற்றும் அவளது சகோதரன் அறிவுடைநம்பி இருவரும் மதுரைக் காஞ்சியைப்
படைத்த மாங்குடி மருதனாரைச் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. மருதனாரின்
பாடல்களையும் இசைக் கோர்த்து பாடும் பாணர் குடி. ஆகையால் இருவருக்குமான பிணைப்பு
இறுகுகிறது. ஆனால் அண்ணனும் தங்கையும் யாரைத் தேடிச் செல்கிறார்களோ அந்த மன்னன்
போரில் கொல்லப்பட்டிருப்பான் என்பதை மருதனார் வழி அறிந்து துயருற்று அவர்களின்
மனம் இசையில் கலந்து ததும்பும் இடத்தில் அப்பாகம் நிறைவுறுகிறது.
அடுத்தப் பாகத்தில் காஞ்சியை
அடுத்த மணிமங்கலத்தில் இருந்து நண்பனின் திருமணத்துக்காக சோழ மண்டலத்தில் பழையாறை
வரை சென்றுவிட்டு திரும்பும் போது காஞ்சி போரினால் சிதைவுற்று வழியெங்கும்
பிணங்கள் கிடக்கின்றன. சிர்பியாகிய அவன் வடித்தச் சிற்பங்கள் அவனை நோக்கித்
திரும்பி நிற்கின்றன. அவன் மீண்டும் வாடா திசை நோக்கிச் செல்வதோடு அப்பாகம்
நிறைவுறுகிறது.
மிக முக்கியமான மூன்றாம்
பாகத்தில் ஈசனுடன் பராந்தகச் சோழன் மரணம் குறித்தும் நிலையாமைக் குறித்தும்
உரையாடுகிறார். தனக்குள் இருக்கும் அசைவின்மையைக் காலத்தாலும் தொட இயலாது
என்றுணரும் இடத்தில் நிறைவுறுகிறது.
நாடகக் கம்பெனியில்
விடப்பட்ட சுப்பையா காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்று அங்கு காந்தியுடன் வாழும்
சந்தர்ப்பத்தில் எப்படி அவர் மரணத்துயரால் ஆட்படாத மனநிலையை அடைந்திருக்கிறார்
என்பதை தரிசித்து தெளிவு பெறுகிறார். ஐந்தாவது பாகம் சம காலத்தில் நிகழ்வதாக
படைக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்த மொழிநடை அர்த்தமுள்ள உரையாடல் ஆகியவற்றால் வாசிப்பவர்களின்
சிந்தனைப் போக்கை கலைத்து விளையாடுகிறது ஆலகாலம் நாவல். யாவரும் பதிப்பக வெளியீடு.
லார்க் பாஸ்கரன் மிகச் சிறந்த வடிமைப்பாளராகவே அதிகம்
அறியப்பட்டாலும் அவரது கவிதைகள் உண்மையை நோக்கிய ஆக்ரோஷத்தின் குரலாக இருக்கின்றன.
பொதுவாக தற்கால நவீனக் கவிதையுலகம் நேரடியான உணர்வுகளின் பதிவுகளை தவிர்க்கவே
விரும்புகிறது. இருண்மையின் வழியே மனதைத் தொடுவதையே அதிகம் முயற்சிக்கிறது.
வானம்பாடி கவிதைகளை பொய்மைக் கலந்த கோஷங்கள் என்று நிராகரிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் இருப்பதால் அவர்களின் பாடுபொருள்களையும் முடிந்தவரை விலக்கியே
வைக்கிறார்கள். ஆனால் லார்க் பாஸ்கரன் அப்படியான பாடுபொருள்களை
நவீனக் கவிதை மொழியில் தனக்குள் குமுறும் கொந்தளிப்புகளோடு முன்
வைக்கிறார்.
பசி என்னும் தலைப்பிலான
அவரது கவிதை (இப்படியானத் தலைப்புகளை, சமகாலக் கவிஞர்கள் விரும்புவதே இல்லை) பசித்தவனின் எஞ்சிய சொத்தாகச் சுற்றும் அறிவை
இப்படிப் பேசுகிறது.
வாயில் நுரை தள்ள
கதறும் அறிவின் சுமை
கிட்டத்தட்ட நொறுக்கப்பட்ட
இதயத்தின் சுவரில்
கொஞ்சம் ஆக்சிஜனைச்
சரிசெய்தபடி
சுற்றி வருகிறது...
………..
நீட்டிய கால்களில்
ரசமட்டம் பார்த்தபடி
புதைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
பொய்களின் மேல்
கட்டப்பட்டக்
கேள்வியை...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>