திங்கள், 20 ஜூன், 2022

பாரதூரம்

இலங்கை பாலு மகேந்திரா நூலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை

                                                            

                                                                                                                                                                                                                                          

 
                                        

                                                    


                                                                          பாரதூரம்

-    - நெய்வேலி பாரதிக்குமார்.

ந்த நெடுஞ்சாலை அனல்காற்றில் கொதித்துக் குமுறிக்கொண்டிருந்தது. கானல் வரிகள் சாலையின் குறுக்கே வெறி கொண்ட மிருகம் போல அலைந்து கொண்டிருந்தன. லாரியின் கேபின், இன்ஜினின் சூட்டை விழுங்கி இரும்பாலையின் உலை ஒன்று உமிழ்வது போல வெப்பக்காற்றை இறைத்துக்கொண்டிருந்தது. கோபால் சூடு தாங்காமல் சட்டையைக் கழற்றி பின்பக்க சீட்டில் உதறிவிட்டு ஸ்டீயரிங்கை எரிச்சலோடு பிடித்திருந்தார். சட்டைப்பையில் கடைக்குட்டி அன்பழகன் கொடுத்த சீட்டு பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்.

“நியூட்ரல் அடிச்சிருக்கீயாண்ணே”பெருமாள் பீடியை ஒரு இழுப்பு இழுத்தபடி கேட்டான்.

“அடிக்கிற வெயில்ல பாடி பஞ்சராவுது எப்பிடிடா இந்த சூட்டுல பீடி குடிக்கிறே?”

“பாண்டியன் மெஸ் வரட்டும் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டே வயிறு கர்புர்ன்னு சத்தம் போடுது. ராத்திரி வேற சாப்பிடலை. என்ன பண்ணச் சொல்றே? அதான் புகையைத் தின்னுட்டு வர்றேன்.. இது எந்த எடம் அண்ணே ?”

“தாவணகரே.. கர்நாடகா“

“பாண்டியன் மெஸ் எப்பண்ணே வரும்?”

“பதினோரு மணிக்கெல்லாம் வந்துடும்”

“அங்க வெளிய தொறவு போயிக்கலாமாண்ணே?”

“எல்லாம் காத்தோட்டமாத்தான் இருக்கும் உன் இஷ்டம்தான் எங்க வேணா போயிக்கலாம்”

“பளபளன்னு தாரை ஊத்தி ரோட்டை போட்டுருக்கானுங்க வெளிய போறதுக்கு ஒரு டாய்லட்  கூட சுத்தமா இல்லை. என்னா ஊருண்ணே இது?”

“இதுக்கே இப்படி அலுத்துக்கறே..இங்கவாச்சும் தண்ணித் தொட்டி இருக்கும். உடம்பை களுவிக்கலாம். குளிச்சிக்கலாம், அஹமத் நகர் எல்லாம் போனா வண்ணமா ஒரு கடை கண்ணி இருக்காது. எங்கனாச்சும் ஒரு டீக்கடை இருக்கும் நிறுத்திட்டு ஒரு டீ குடிக்க முடியாது. பின்னாடி இருக்குற சரக்கை அள்ளிட்டு போயிடுவானுங்க. வெட்ட வெளியா இருக்கேன்னு ஓரங்கட்டி யூரின்  போவ முடியாது. ஆளைக் காலி பண்ணிட்டு லாரியையே தூக்கிட்டுப் போயிடுவானுங்க.”

“அது எங்கண்ணா இருக்கு?”

“மகாராஷ்டிராவுல“ எதிரே வந்த லாரி தமிழ்நாட்டு ரிஜிஸ்டரேஷன் என்பதைப் பார்த்ததும் ஒரு உற்சாக ஒலிப்பானை அடித்தார் கோபால். பதிலுக்கு அந்த வண்டி ஓட்டுநரும் அவரது வாகனத்தின் ஒலிப்பானை  அடித்து புன்னகையையும் கையையும் காண்பித்துவிட்டுப் போனார்.

சிறிது தூரம் சென்றதும் சாலையின் குறுக்கே திடீரென மறித்த ஜீப், நிறுத்தும்படி சைகைக் காட்டியதும் கோபால் அவசரமாக பிரேக் அடித்தார்.

“யாருண்ணே அது ஆர்.டி.ஒ.வா“

“எந்த கருமாந்திரமோ.. கவர்ன்மென்ட் ஜீப் யாருன்னு கண்டோம்? காசை அழுவனும்” அலுத்துக் கொண்டே கேபினின் உச்சி ரகசிய அறையிலிருந்து டாக்குமென்ட் வைத்திருந்த கவரை எடுத்தார்.

ஜீப்பில் இருந்து இறங்கியவர்கள் கன்னட மொழியில் கோபாலிடம் வந்து ‘காச் மூச்’ என்று கத்தினார்கள். பத்திரமாக வைத்திருந்த டாக்குமென்ட் கவரை கோபால் நீட்டினார். அதை வாங்கி அப்படியே அவர் முகத்தில் வீசினான் ஒரு திமிர் பிடித்த ஆள். கொப்பளித்து வந்த கோபத்தை தொண்டைக்குள் மென்று விழுங்கிவிட்டு அமைதியாக ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினார் கோபால். அதை வாங்காமல் எகிறி எகிறிக் கத்தி பெருமாளை கீழே இறங்கச் சொன்னான் ஒருவன்.

கன்னட மொழியில் நிதானமாக “என்ன வேணும்?” என்று கேட்டார் கோபால்.

“ஓ..கன்னடம் தெரியுமா? தெரிஞ்சுகிட்டே ஊமையன் மாதிரி ஏண்டா உக்காந்திருக்கே இறங்குடா கீழே” என்று பதிலுக்கு கன்னடத்திலேயே கத்தினான்

ஒன்றும் பேசாமல் இறங்கினார் கோபால்.

“சரக்கை எடுத்துக் காமி என்ன வச்சிருக்கே?”

“மருந்து அயிட்டம் சார் “

“பிரிச்சுக் காமிடா”

 “இல்லை சார். பிரிச்சா அவ்வளவு சீக்கிரத்துல கட்டமுடியாது. இந்தாங்க” ஒரு இருநூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து நீட்டினார்.

“இப்பதான் நோட்டு முளைச்சு வருதா? எந்த ஊருடா போறீங்க?”

“இந்தூர் சார். மத்தியப் பிரதேசம்.”

“ம்ம்.. அப்ப கையில கனமாத்தானே வச்சிருப்பே. கொஞ்சம் கொஞ்சமா பிச்சை போடறே. ஐநூறு ரூவாய் நோட்டு ஒண்ணைக் குடுரா”

“இல்லை சார் ஓனர் கொஞ்சமாத்தான் குடுத்தாரு. ஹோஸ்பேட் போனதும் அங்க ஒருத்தர்கிட்ட வாங்கிக்க சொன்னாரு. இப்ப கையில இதுக்கு மேல இல்லை”

“சரி குடுத்துத்தொலை.” வாங்கிக்கொண்டு பாக்கெட்டில் வைத்தபடி “போங்க அடுத்த முறை வர்றப்ப சின்ன நோட்டெல்லாம் வாங்க மாட்டோம். கெளம்புங்கடா”

கோபால் நிதானமாக வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தார். அருகில் பெருமாள் வந்து அமர்ந்தான். சிறிது தூரம் சென்றதும்,”என்ன அண்ணே வண்டியில லோடு ஏத்தும்போது முந்திரி பாக்கெட்டுன்னு சொன்னே அப்புறம் அவனுங்க கேட்டப்ப மருந்து அயிட்டம் அப்படின்னு சொல்லிட்டே. இதுல பில்லை வேற காமிக்கறேன்னு சொல்றே?”

“முந்திரி அயிட்டம்னு சொன்னா பொட்டியைப் பிரிக்காமலே அப்படியே ஆளுக்கு ஒண்ணு எடுத்துட்டுப் போயிடுவானுங்க. அப்புறம் அந்த நஷ்டமும் நம்ம தலையில விடிஞ்சிடும்.. அதுக்கு முந்நூறு ரூபா போயித் தொலையுதுன்னு விட்டுடலாம்.”

“ஆனா அவனுங்க கிட்ட ஓனர் பணம் குடுக்கலைன்னு சொன்னே பாரு என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. நீதானே ஓனரு? எப்படிண்ணே சளைக்காம அள்ளி விடுறே?”

“இல்லன்னா மொத்தத்தையும் லாவிட்டுப் போயிடுவானுங்க. அந்தா..  பாண்டியன் மெஸ் வந்துடுச்சு பின்னால தொட்டி நிறைய தண்ணி இருக்கும். வெளிய தொறவு போயிட்டு வந்து குளிச்சிட்டு வா சாப்பிடலாம்”

லாரியை ஓரங்கட்டினார். கிட்டத்தட்ட பத்து லாரிகளுக்கு மேல் நின்றிருந்தன. எல்லாம் தமிழ்நாட்டு வண்டிகள். அந்த உணவகத்தில்தான் தமிழ்நாட்டு உணவு கிடைக்கும் என்பதோடு,  வெளிமாநிலச் சாலை நிலவரங்கள், வழிப்பறி அச்சங்கள், அரசு வாகனங்களில் நின்று கொண்டு அதிகாரத்தோடு காசு பிடுங்கும் கொள்ளைக் கூட்டம் பற்றிய விவரங்கள் யாவும் அங்குதான் பரிமாறப்படும்.

“அஹமது நகர் ரோடு எப்படிண்ணே இருக்கு?” செல்வத்திடம் கேட்டார் கோபால்.

“அது என்னிக்கு மாறிச்சு ராத்திரி பத்து மணிக்கு மேலே அந்த ரோட்டுல போனீங்கன்னா நம்ம உசிரு நம்மளது இல்லைன்னு நினைச்சுட்டுத்தான் போவனும். சரக்கு வெயிட்டுன்னா ராப்பயணம் வேணாம். திம்பூர்னியை தாண்டினிங்கன்னா கர்மாலாவுலே போட்டுக்கங்க.. அங்க கமலாதேவி கோயில் ஒண்ணு இருக்கு காலையில குளிச்சிட்டு சாமியைக்  கும்பிட்டுட்டு அப்புறமா கிளம்புங்க. மனசாட்சியே இல்லாத திருட்டுக் கூட்டம் அங்க சுத்திக்கிட்டு இருக்கு.” எச்சரித்தார் செல்வம்.

“என்ன பொழப்புண்ணே நம்முது“ சலித்துக்கொண்டு நகர்ந்தார் கோபால்.

தொட்டித் தண்ணீரில் ஆசைத்தீர குளித்துவிட்டு சாப்பாட்டை  ஒரு வெட்டு வெட்டிவிட்டு கையில் ஆளுக்கு நாலு பரோட்டாவையும் கட்டிக்கொண்டு இடையில் சமைப்பதற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் சிலவற்றையும் வாங்கிக் கொண்டு நிதானமாக ஒரு மணிக்கு கிளம்பினார்கள். எப்படியும் அஹமது நகர் ரோட்டை பத்து மணிக்கு முன்பாக அடைய முடியாது. என்பதால் மெல்ல ஓட்டிக்கொண்டுச் சென்றார் கோபால்.

ஹமது நகர் சாலையைக் கடப்பது என்பது தென்னிந்திய லாரி டிரைவர்களுக்கு குறிப்பாக தமிழகத்து ஓட்டுனர்களுக்கு விஷப்பை நிரம்பிய கருநாகத்தை கையில் பிடித்துச் செல்வது போல..... எவ்வித சட்டத் திட்டங்களுக்கும் அஞ்சாத கூட்டம் ஒன்று லாரிகளை மடக்கி அதிலுள்ள பொருட்களையும், லாரி ஓட்டுனர்கள் வைத்திருக்கும் பணத்தை, எதுவும் கிடைக்கவில்லை என்றால் ஸ்டெப்னியையாவது  களவாடுவதற்கென்றே நடமாடிக் கொண்டிருக்கும்.. பகல்பொழுது மட்டுமே அந்தக் குறிப்பிட்ட சாலையை ஓரளவு அச்சமின்றி கடக்க முடியும். இரவு நெருங்கினாலே ஐந்தாறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றாக வேண்டும். சில சமயம் காவல்துறை வாகனங்கள் அவ்வழியே செல்லும் அவற்றை பின் தொடர்ந்தால் தப்பிக்கலாம்.

வயிறு முட்ட தின்ற  திருப்தியில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெருமாள். லாரி ஒட்டுகிறவன்தான் ஆனால் நேஷனல் பெர்மிட் ஓட்டியவனில்லை. புதிதாக வருவதற்கும், இப்படியான நெடுஞ்சாலைகளில் செல்லும்போது என்னென்ன பிரச்சினைகள் வரும் அதை எல்லாம் எப்படி சமாளிக்கலாம் என்று தெரிந்து கொள்வதற்காகவும் உடன் வந்திருக்கிறான். மகாராஷ்டிராவைத் தாண்டிச் செல்வதென்றாலே கோபால் தனியாக வரமாட்டார்.

பண்ருட்டியில் இருந்து இந்தூருக்கு முதல்தர முந்திரிப்பருப்புகளை ஏற்றிச்செல்ல எப்பொழுதாவதுதான் வாய்ப்புகள் கிடைக்கும். பேசின கூலியை பேரம் பேசாமல் தருவார்கள் என்பதால் தட்ட மனம் வராது. பெரியநாயகியம்மன் புண்ணியத்தில் வழியில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்றால் போகும் சவாரியில் ரெண்டாயிரமும் வரும் சவாரியில் ஐந்தாயிரமும் கிடைக்கும்.

திரும்பி வரும் சவாரிக்கு சரக்கு கிடைக்க இரண்டு மூன்று நாள் கூட ஆகலாம். இந்தூரில் அதற்கெனத் திரியும் ஏஜென்ட்டுகள் கையில் ஆயிரமோ ரெண்டாயிரமோ தந்தால் தமிழ்நாட்டுக்கு வரும் சரக்கைப் பிடித்துத் தருவார்கள்.

இடையில் டீசல் திருடர்கள், ஸ்பீட் பிரேக்கர்களில் ஏறி கயிறு தார்ப்பாய்களை அறுத்து சரக்கு திருடும் கும்பல், அரசு வாகனங்களில் வந்து குறுக்கே நின்று பிடுங்கும் அதிகாரிகள், விபத்து நடந்துவிட்டது போல செட்டப் செய்து பணம் பிடுங்கும் கூட்டம் இவற்றை எல்லாம் சமாளித்துவிட்டால் சொல்லிக்கொள்ளும் அளவு லாபம்  நிற்கும். ஆனால் அதற்கு ஒரு வாரம் தூக்கமில்லாமல் கொதிக்கும் இன்ஜினின் அருகே கண்ணயராமல் ஓட்ட வேண்டும். இடையில் டயர் வெடிக்காமல், ஏஜிபி பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும்.

லாரி புக்கிங் ஆபீசில் கூப்பிட்டால் செல்கிற நாள்கூலி  ஓட்டுநராக இருந்த வரை இந்த அளவுக்கு  மனக்கவலை இல்லை. உயிர்ப்பயம் மட்டுமே இருந்தது.. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. சரக்கும் பத்திரமாக போய்ச் சேரவேண்டும். லாரியையும் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..

அஹமது நகர் சாலையில் குறிப்பிட்ட ஆள் நடமாட்டம் மற்ற குறிப்பிட்ட பகுதியை ‘ரெட் ஸோன்‘ என்று சொல்லுவார்கள்.  கிட்டத்தட்ட 50 கி.மீ கடக்க வேண்டும். ஓட்டுநராக மட்டுமே இருந்த பொழுது இரவு பதினோரு மணிக்கு ஒரு முறை அதில் கோபால் சென்றிருக்கிறார். இரண்டு மூன்று லாரிகளாகத்தான் அன்றைக்கும் சென்றார்கள். சிவகாசியில் இருந்து பிரிண்டட்  பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மேலே கட்டி இருக்கும் தார்ப்பாய்களின் வாட்டத்தை வைத்தும்,  பொருட்களின் வாசனையைக் கொண்டும் அந்தக் கும்பல் லாரியில் இருப்பது விலை அதிகமான சரக்கா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு அந்த லாரிகளை குறிவைத்து துரத்துவார்கள். அன்றைக்கு தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை அப்படி மோப்பம் பிடித்துக்கொண்டு  வெறிப் பிடித்த மிருகம் போல ஜீப்பில் துரத்தினார்கள். அந்த டிரைவரும் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டினார்.

ஒரு கட்டத்தில் அந்த லாரியின் அருகே சென்று கையில் வைத்திருந்த குழாய் வழியாக மிளகாய்ப்பொடி கலந்த நீரை பீய்ச்சினார்கள். ஒரு கணத்தில் தடுமாறிய அந்த டிரைவர் வேகமாக பிரேக் அடிக்க. கிட்டதட்ட 20 டன்னுக்கு மேல் இருக்கும்  சரக்கின் பாரம் லாரியை வேறொரு பக்கம் இழுக்க கண்ணெதிரே அந்த லாரி பள்ளத்தை நோக்கிச் சென்று கவிழ்ந்தது. பின்னால் வந்த கோபால் லாரியை நிறுத்த முயல கூட வந்த ராமு அண்ணன் ‘நிறுத்திடாதே நிறுத்திடாதே அவனுங்க கவுழும்னு தெரிஞ்சுதான் அப்படி பண்ணினானுங்க ஒரே நேரத்துல ரெண்டு லாரி சரக்கும் அடிச்சிடுவானுங்க அடுத்த ஜங்க்ஷன்ல போலிஸ் வண்டி நின்னா அவனுக கிட்ட சொல்லுவோம். அந்த டிரைவருக்கு நேரம் நல்லா இருந்தா பொழைச்சுக்குவான்”

“என்னாண்ணே அப்படியேவா விட்டுட்டு போறது?”

“டே அவனுங்ககிட்ட பட்டாக்கத்தி, நாட்டு வெடி குண்டு எல்லாம் இருக்கும். நீ ஒரு ஜீப்பைத்தான் பார்த்தே.. அவனுங்க பின்னாடி நாலைஞ்சு வண்டிங்க கண்டிப்பா இருக்கும் .. வண்டி நிறைய  ஆளுங்க இருப்பாங்க . ரோந்து  போலிஸ் எங்க நிப்பாங்க எந்த இடத்துல வருவாங்க எல்லாம் அவனுங்களுக்குத தெரியும். துப்பு குடுக்க ஆள் இருக்கு. இப்படி லாரி கவுந்தா இன்னும் ரெண்டு கும்பல் வந்து ராத்திரி பூரா அங்கேயே மறைஞ்சு நிக்கும். கவுந்த லாரியை பாத்து யாராச்சும் நிப்பாட்டுவாங்க அந்த லாரியை மடக்கி அதுல உள்ள சரக்கை அடிச்சிடலாம்னு பாப்பானுங்க. இது வேற உலகம் கோபாலு இங்க கருணை இரக்கம் எதையும் எதிர்பார்க்க முடியாது.”

“அப்ப அந்த டிரைவர் ?”

“அடிபட்டு நெகா இல்லாம இருந்தான்னா பொழைக்க சான்ஸ் இருக்கு. நெகா இருந்து எழுந்து பார்த்துட்டான்னு வச்சிக்க அவனை அப்படியே அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு அப்புறம்தான் பொருளு பக்கம் போவானுங்க. இந்த மாதிரி நேரத்துல டிரைவர் செத்தப் பொணம் மாதிரி கெடக்க வேண்டியதுதான்”

அடுத்த ஜங்ஷனில் ஜீப்பை ஓரமாக நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்த போலீசிடம் இறங்கிச் சொன்னார் ராமு அண்ணன்.. அவர்கள் அலுப்போடு வண்டியைத் திருப்பினார்கள். அந்த சம்பவத்தைப் பார்த்ததிலிருந்து திம்பூர்னி வரும்போதே வண்டியை ஜாக்கிரதையாக இடம் பார்த்து ஓரங்கட்டி நிறுத்திவிடுவார் கோபால்.. 

 திம்பூர்னியைத் நெருங்கும்போதே மணி ஏழாகிவிட்டது.. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தொடர்ந்து ஓட்டினால் கர்மாலாவுக்கு பத்து மணிக்குள் போய்விடலாம். அதற்குமேல்  ரிஸ்க் எடுக்க முடியாது, வண்டியைத் தொடர்ந்து ஓட்டினார் கோபால் கர்மாலாவுக்கு ஒன்பது மணிக்கு வந்தனர். விடிந்தால் பல் துலக்கவும் முகம் கழுவவும் குழாயடி இருக்கும் இடமாகவும் பார்த்து லாரியை நிறுத்திவிட்டு லாரியை விட்டிறங்கி முகம் கால்கள் கழுவிவிட்டு பரோட்டா பொட்டலங்களைப் பிரித்து சாலையோரம் அமர்ந்து இருவரும் சாப்பிட்டனர். அவர்கள் அருகே கேன் டீ வாலா வந்து நின்றான்.

“சாய்.. சாய்.. “

“பான்ஞ் சாய்” என்று ஐந்து விரல்களைக் காட்டினார்.

அவன் சந்தேகத்துடன் ஐந்து பேப்பர் கப்புகளில் டீயை நிரப்பிக்கொடுத்தான்

“எதுக்குண்ணே?” என்று பேச முற்பட்ட பெருமாளைத் தடுத்த கோபால் கேபின் பக்கம் திரும்பி “டே.. பாபு எறங்கி வாங்கடா டீயை சாப்பிட்டுட்டு அப்புறம் தூங்கலாம்“ என்று சத்தமாக சொல்லிவிட்டு டீ வாலாவிடம் தூங்கறாங்க என்று சைகை செய்துவிட்டு டீயைக் குடித்தான். அவன் காசை வாங்கி பையில் போட்டுவிட்டுக் கிளம்பினான்.

“இங்க ஒருத்தனையும் நம்ப முடியாது. துப்பு பாக்க வந்தவனா கூட இருக்கலாம். லாரியில அஞ்சு பேர் இருக்காங்கன்னா லாரிப்பக்கம் வரமாட்டானுங்க. ரெண்டு பேர்னு தெரிஞ்சா அவ்வளவுதான் பொருள் நம்முது இல்லை.”

“என்னண்ணே நீங்க சொல்லச் சொல்ல.. பயமா இருக்கு.. என்னமோ திகில் படம் பாக்கற மாதிரியே இருக்கு.. ஊர்ப் பக்கம் இதை எல்லாம் நீங்க சொன்னதே இல்லை”

“இதை எல்லாம் சொன்னா அடுத்த தரம் சரக்கு எடுத்துட்டுப் போகணும்னா  பொண்டாட்டி புள்ளைங்க பயப்படுவாங்க. ரெஸ்ட் எடுக்கத்தான் இங்க நிறுத்தறோம் ஆனா நிம்மதியா தூங்க முடியாது.”

படுக்கலாம் என்று நினைத்தபொழுது அவர்கள் அருகே ஒரு லாரி வந்து நின்றது. ஏழுமலை அதிலிருந்து இறங்கி “ஏண்ணே சேதி தெரியாதா?”

“என்னப்பா எங்கப்போறே? இப்படி திடீர்னு வந்து நிக்கறே?”

“அதை ஏண்ணே கேக்குறே? போபாலுக்கு சரக்கு ஏத்தி இருக்கேன். என்னமோ கொரானாவாம் சீனாவிலேர்ந்து அந்த நோய் வந்திருக்காம். நாளைக்கு ஒரு நாள்  பஸ் லாரி எதுவும் ஓடக்கூடாதாம்”

“என்னப்பா இப்படி குண்டைத் தூக்கிப் போடுறே? நான் இந்தூர் போவணும்..”

“யோசிக்க நேரமில்லே.. வாங்க கிளம்புவோம்.. நமக்கு முன்னாடி ரெண்டு மூணு லாரி போயிருக்கு.. அஹமதுநகர் ரோடு முனையில நின்னா.. அஞ்சாறு லாரியா சேர்ந்து போயிடலாம். 80- லமிதிச்சம்னா விடியும்போது மத்தியப்பிரதேசம் உள்ளே போயிடலாம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் ‘பந்த்’தாம்... அப்புறம் நீட்டிச்சாலும் நீட்டிக்கலாமாம். எப்படியாச்சும் இறக்க வேண்டிய இடத்துக்குப் போயி ‘லோடை’ இறக்கிட்டா. அடுத்த நாள் திரும்பிடலாம்ணே. ராத்திரி முடிஞ்சிடும்னு சொல்றாங்க”

     “சரி கெளம்பு அங்காள பரமேஸ்வரி காப்பாத்துவா.” எழுந்தார் கோபால். உடன் வேறு வழியில்லாமல் பெருமாளும் ஏற வண்டியை ஸ்டார்ட் செய்தார். வண்டி மின்னலைப்போலக் கிளம்பி ஏழுமலை வண்டியை பின்தொடர்ந்தது. கண்முன்னே லாரி கவிழ்ந்த அன்றைய இரவு ஒரு திரைப்படக்காட்சி போல ஓடிக்கொண்டிருந்தது.

     அஹமதுநகர் சாலை முனையில் வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தது தெம்பானது.

“தண்ணி கிண்ணி குடிச்சிடாதே நடுவுல நிறுத்த முடியாது. பறக்கணும் அப்பத்தான் உயிரோட ஊருக்குப் போகலாம்“ என்றபடி ஆக்சிலேட்டரை மிதித்தார். எதிரே வரும் வெளிச்சப்புள்ளிகளும், சைடு வாங்கும் ஹாரன் சப்தமும் ஒரு முறை வயிற்றுக்குள் புகுந்து குடலை உலுக்கி எலும்புகளை சில்லிட வைத்து பின் விலகியது. எப்படியும் இரவு ஹால்ட்தானே என்று பகல் முழுக்க  நிறுத்தாமல் ஓட்டியதில் தொடை எல்லாம்  எரிந்தது. ஆனாலும் அதைப்பற்றி இப்பொழுது கவலைப்பட நேரமில்லை.

காற்றைக் கிழித்துக்கொண்டு வேகம் சென்றதால் கண்களின் வழியே கண்ணீர்ப் பெருகி ஒழுகியது. தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடி ஓட்டினார் கோபால். கிளம்பும் சமயம் அன்பு கேட்டிருந்த கால்குலேட்டர் மாடல் நம்பர் மறந்து போகாமல் இருக்க எழுதிக் கொடுத்த சீட்டு பாக்கெட்டில் பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கடி தன்னிச்சையாகப் பார்த்துக்கொண்டார். மறுபடி அவன்கிட்ட அது என்ன நம்பர் என்று கேட்கமுடியாது கோவக்காரன்.

‘என்ன சால்னாவோ எழவோ’ சாப்பிடும்போதே காரமாகத்தான் இருந்தது. பெருமாளை தண்ணிக் குடிக்காதே என்று சொன்னாரே தவிர இப்பொழுது கோபாலுக்கு வயிறு கலக்குவது போல இருந்தது. நிறுத்தினால் உயிருக்கு உத்திரவாதமில்லை. கைவசமிருந்த ஒரு ‘பன்’னை எடுத்து சாப்பிட்டார். கொஞ்சம் கலக்குவதைக் குறைக்கும். பல்லைக்கடித்துக்கொண்டு விரட்டினார். பெருமாளை அழைத்து கண் அயர்வது போல தோணுகிற சமயம் முகத்தில் தண்ணீரை அடிக்கச் சொன்னார்.

“நா வேணும்னா ஓட்டட்டுமா அண்ணே?”

“ரூட்டு புதுசா இருக்கு அதுவுமில்லாம இது கொஞ்சம் வெவகாரமான இடம் நானே பாத்துக்கறேன். பகல்ல மாத்திக்கலாம்” முன்னும் பின்னுமாக வந்த லாரிகள் பேரணி போல ஒன்றை மற்றொன்று நழுவ விடாமல் தொடர்ந்து வந்ததால் அஹமது நகர் சாலையை நினைத்த நேரத்துக்கு முன்பாகவே கடக்க முடிந்தது.

‘ஜாம்லி’ சுங்கச் சாலை வரி செலுத்தும் இடத்துக்கு உள்ளே  நுழையும்போது விடிந்துவிட்டது. எல்லைச் சாவடியில் லாரி எடையைப் பார்த்தபொழுது 256  கிலோ எடை அதிகமாக இருப்பதாகச் சொல்லி ஓரம்கட்டிவிட்டார்கள். ‘என்னடா இது சோதனை’ என்று சோர்ந்து போனார். கோபால். குறிப்பிட்ட எடையைத் தாண்டி இருந்தால் செக் போஸ்ட்டை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒவ்வொரு ரூல். கர்நாடகா எல்லையில் எடை எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் மத்தியப் பிரதேச எல்லைக்குள் நுழைந்தால் வாகன் எடையும் ஒரு முக்கியப் பிரச்சினை. இரவு நேரத்தில் அவசர அவசரமாக ஏற்றினால் இப்படித்தாந ஆகும். வழக்கமா போற லோடுதான்னு முந்திரி கம்பெனிக்காரன் சொன்னதை நம்பி வந்தாச்சு.  . .

டெல்லியில் இருந்து ரெகுலராக வரும் சுசீந்திரன் கோபாலைப் பார்த்து ஒரு வணக்கத்தைப் போட்டான். அவனிடம் விஷயத்தைச் சொன்னபொழுது “விடுங்கண்ணே.. கேரியர் பாய்ஸ் இருக்கானுங்க“ என்று எங்கேயோ போய் ஒரு சிறுவனை அழைத்து வந்தான்.

தூக்கக் கலக்கத்தில் கண்ணை நிமிண்டிக்கொண்டு வந்தவனுக்கு அன்பு வயதுதான் இருக்கும்.

256 கிலோதானே? உங்க டூல்ஸை குடுங்க ஸ்டெப்னியை கழட்டிடலாம்.. ஜாக்கி, அப்புறம் எக்ஸ்ட்ரா தார்ப்பாய் இருந்தா எடுங்க செக் போஸ்ட்டைத் தாண்டி எடுத்துட்டு வந்து தந்துடுவான் கிலோவுக்கு ஒரு ரூபாய் குடுத்துடுங்க“ என்று சொல்லிய சுசீந்திரன் கிடுகிடுவென ஸ்டெப்னியைக் கழட்ட ஆரம்பித்தான். ஜாக்கி, டூல்ஸ்களை  எடுத்துக்கொண்டு அந்தச் சிறுவன் டயரை உருட்டிக்கொண்டு ஓடியபோது பாவமாக இருந்தது. அவன் டயரை உருட்டியபடி சுங்க அதிகாரிகளை கடந்துதான் சென்றான். அவர்கள் அதை பார்த்தும் பார்க்காதது மாதிரி தங்கள் இயல்பான பணியில் மும்முரமாக இருந்தனர்.

“சுசி என்னப்பா அவனுங்க கண்ணு முன்னாடிதான் உருட்டிகிட்டு போறான் கண்டுக்காம இருக்கானுங்க. மறுபடி நாம அந்தப்பக்கம் போயி நாம ஏத்துவோம்னு தெரியாதா?”

“அண்ணே எடை மிஷின்ல வர்ற கம்ப்யூட்டர் சீட்டுலே அதிக லோடு இருக்க கூடாது அவ்வளவுதான். அதுக்குத்தான் தனியா நம்மகிட்ட வண்டிக்கு நூறு ரூபா வாங்கிடறானுங்கல்லே.. அந்த பையனை மட்டும் சும்மா விட்டுருவானுங்கன்னு நெனச்சே? லோடை எண்ணிக்குவானுங்க.. ஒரு நடைக்கு அம்பது ரூபா வாங்கிடுவானுங்களாம்.. அந்தப் பய சொன்னான்”

“அடப்பாவிங்களா? படிக்கிற வயசுல இப்படி டயர் உருட்டுறான் அப்புறம் நம்மளை மாதிரி எங்கனாச்சும் ஸ்டீரிங் பிடிச்சு வண்டி ஓட்ட வேண்டியதுதான்.. நாலு எழுத்து படிச்சிருந்தா;; தோ ,, இப்படி ரகம் ரகமா யோசிச்சு திருடலாம்” என்று கோபால் சொல்ல வெடித்து சிரித்தான் சுசீந்திரன்.

  எல்லாம் முடிந்து கிளம்பினார்கள். ஏழுமலைக்கு எல்லா ரோடும் அத்துப்படி. அவன் ஊருக்குள் புகுந்து விரட்ட அவனைத் துரத்துவது போல கோபாலும் அழுத்தினார்.

ந்தூருக்குள் ஒருவழியாக நுழைந்துவிட்டார்கள். சுயஊரடங்கு என்பதால் அத்தனைக் கெடுபிடி இல்லை. ஏழுமலைதான்  இன்னும் இருநூறு கிலோமீட்டர் போக வேண்டும் எப்படியோ போய்விடுவான். போய்த்தான் ஆகவேண்டும்.

சவ்கானைப் பிடித்து அவன் ஆட்களை ரகசியமாக வரச்சொல்லி லோடை இறக்குவதற்கு மதியம் இரண்டாகிவிட்டது. ஃபோனில் ஏஜென்ட் சிக்கந்தரிடம்  தமிழ்நாட்டுக்கு ஏதும் லோடு இருக்கா என்று கேட்டப்பொழுது ‘ஒரு நாள் வெயிட் பண்ணுகிற மாதிரி இருக்கும்’ என்று சொல்லிவிட்டான். சவ்கானின் கிடங்குக்கு  அருகே வண்டியைப் போட்டுவிட்டு மண்ணெண்ணெய் அடுப்பை இறக்கி சமைக்கத் தொடங்கினார்கள்.

அடுத்த நாள் கடைகள் திறந்திருந்தன. சிக்கந்தரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு கால்குலேட்டரையும்  அன்புக்குப்  பிடித்த சாக்லேட் கொஞ்சமும் பிஸ்கட்டும் செல்போனில் அவனிடம் கேட்டு இன்னும் சில வாயில் பெயர் நுழையாத தின்பண்டங்களையும்   வாங்கி அவற்றை  ஒரு பாலீத்தின் பையில் சுருட்டி பத்திரமாக வைத்துக்கொண்டார் கோபால். மார்ச் 30 அன்புக்கு பிறந்தநாள். இன்னிக்கு தேதி 23தானே.. அதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று காத்திருந்தார்கள். அன்றைக்கும் லோடு கிடைக்கவில்லை.

24ஆம் தேதி மாலை வரை லோடு எதுவும் உறுதியாகாததால் ஒடிந்து போனார் கோபால். ரிட்டன் லோடுதான் லாபப்பணம் போகிற வழியில் ஏதாவது லோடு கிடைக்கும் என்று மனசைத் தேற்றிக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்கள். மத்தியப் பிரதேச எல்லையான கல்காட் வந்தபொழுது அந்த இடிச்செய்தி டிரைவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.. கொரானா வேகமாக பரவுதாம். ஏப்ரல் 14 வரை ஊரடங்காம். பஸ் லாரி எதுவும் ஓடக்கூடாதாம். டீக்கடை இல்லை, ஓட்டல் கிடையாதாம். என்றெல்லாம் கேட்ட பொழுது கோபாலுக்கு தலைச்சுற்றியது. கோமுவிடம் ஒரு வாரத்துக்கு  சமாளிக்கிற அளவுக்குத்தான் பணம் கொடுத்துவிட்டு வந்திருந்தார் கோபால் .ஃபோனை போட்டு அவளிடம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளுடைய அண்ணன்  வீட்டுக்கு போகச் சொன்னபோது ‘கோ’வென அழுதாள்.

“ஏற்கனவே அண்ணிக்காரி மூஞ்சியில மொத்துவா.. ஒவ்வொரு வேளை சோத்துக்கும் மொகரையைக்  காட்டுவா.. இதுல இருவது நாளைக்கா? வேணாம் மாமா அதுக்கு பட்டினி  கெடந்து சாவலாம்”என்று மறுத்துவிட்டாள்.

வண்டி இன்சூரன்ஸ் வேறு ஏப்ரல் இரண்டாம் தேதியோடு முடிகிறது.. வழியெல்லாம் நிற்கும் ஜீப்புகளை நினைத்தால், நின்று போன வயிற்றுவலி மறுபடியும் விஸ்வரூபம் எடுப்பது போலத் தோன்றியது. ஜாம்லி சுங்க வரி அலுவலகம் சிறிது தூரம்தான் அதற்கு முன்பான சர்வீஸ் சாலையில் வண்டியை நிறுத்தியது நல்லதாக போயிற்று. லாரி நிறுத்தவும் உறங்கவும் இடம் கிடைத்தது  

வரும்பொழுது ஜாம்லியில் எடையைக் குறைக்க எல்லைத் தாண்டி டயரை உருட்டி வந்து தந்த அன்பு வயதேயான அதே  சிறுவன் தலைச்சுமையாய் ஏதோ ஒரு பையை சுமந்து கொண்டு இல்லாத பைக்கை ஓட்டுவது போல பாவனையுடன் ‘டூர்’ என்ற சப்தத்துடன்  வந்து அதே சர்வீஸ் சாலையில் எதிர் பக்கம்  நின்றான். பாவம் லாரிகள் வந்தால்தானே அவனுக்கும் வேலை. ஒரு வகையில் அவன் விடுதலை ஆனான் என்று நினைத்துக் கொண்டார் கோபால். அவனுடைய பாஷை கோபாலுக்குத் தெரியாது அவனை சைகையால் அழைத்து பையில் இருந்த சாக்லேட்டுகளையும் தின்பண்டங்களையும்  அவனிடம் கொடுத்தபொழுது அவன் கண்களில் ஆச்சர்யம் கலந்த பிரகாசம். ஆனாலும் தயக்கமாக நின்றான்.

“உன்னாலதான் அன்னிக்கு இந்தூர் போயி லோடு எறக்க முடிஞ்சுது. இந்தா வச்சிக்க” என்று அவன் கையில் எல்லாவற்றையும் திணித்தார். என்ன சொல்கிறார் என்று புரியவில்லை ஆனாலும் முகம்மலர வாங்கிக்கொண்டு இன்னும் வேகமாக தன்னுடைய ‘பாவனை’ வண்டியை ஓட்டிக்கொண்டுச் சென்றான். .

பாவம் பெருமாளுக்கு ஊரடங்கு செய்தி இன்னும் தெரியாது. இந்தூரில் தூங்க ஆரம்பித்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. சர்வீஸ் ரோடு பாதுகாப்பான இடம். வண்டியில் லோடும் இல்லை. ஆனாலும் கோபாலுக்கு தூக்கம் வரவில்லை. இன்னும் இருபது நாளா? வயிறு பகீர் என்றது  கையில் கொஞ்சம் மளிகைப் பொருளும் பணமும் இருந்தது அன்புவின் பிறந்த நாளுக்கு போக முடியாது. அவன் ஆசையாக கேட்ட கால்குலேட்டரும் அவனுக்கு போய்ச் சேராது . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லாத பொட்டல் காடு அந்த புற வழிச்சாலை. 

ஒரு நாள் வீட்டில் இருந்தால் பிழைப்பு  போய்விடுமென்று  லாரி ஷெட்டில் அண்ணாந்து படுத்து கழித்த நிமிடங்கள் நினைவுக்கு வந்தன, நின்று கொண்டிருந்த லாரியின் ரியர் வியூ மிர்ரரில் தூரத்தில் தெரிந்த ஒற்றை நட்சத்திரம் பக்கத்தில் இருப்பது போலவே தோற்றத்தைத் தந்தது. வண்டியில் இருக்கும் வரை சாலை மட்டுமே தெரியும். வழியில்  இருக்கும் ஊர் மக்கள் ஆடு, மாடு, எதுவும் தெரியாது. சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். காரை பெயர்ந்த ஒன்றிரண்டு கட்டடங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. மக்கள் யாவரும் திடீரென தங்களை தாங்களே பூட்டிக்கொண்டு சிறைபட்டிருந்தனர் பண்ருட்டி எந்தப்பக்கம் இருக்கிறது என்று தோராயமாக கண்களுக்கு கீழே கைகளை வைத்துப் பார்த்தார். அந்தப் பொட்டல் வெளியில் தொடுவானம் மட்டுமே எதிரில் இவரைப்போலவே வறண்டு காணப்பட்டது. கோபால் கண்களில் இருந்து அவரையறியாமல் கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது... .   ..

 . “. . .


1 கருத்து:

  1. தீநுண்மி எத்தனை பேரின் வாழ்வை உலுக்கி விட்டது..... கதை சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...