திங்கள், 20 ஜூன், 2022













 பறம்புச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட 924 சிறுகதைகளில் தேர்வு செய்யப்பட்ட சிறப்புப் பரிசுக்கானச் சிறுகதை 2022

 

வெறியாட்டு

     -நெய்வேலி பாரதிக்குமார்.

     ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற்றிலும் புதிதாக எடுத்து வரப்பட்ட போதைப்புல் கொண்டு இளம்வயது பிள்ளைகள் அடைப்பைக் கட்டி முடித்திருந்தனர். கூரையில் இருந்த பழைய போதைப்புல் மிகவும் மோசமாகி.. சிறு காற்றடித்தால் போதும்  விழுவதற்குத் தயாராக இருந்தது. வருஷம் இரண்டானதில் கோயில் சுற்றுச் சுவர் மண் இடிந்து விழுந்ததால் அந்த வேலையும் இந்த வருஷம் சேர்ந்து கொண்டது.

     ”ஆகக்கூடி ஐம்பத்தியாறு ஊர் சனமும் ஒப்புத்துக் கொண்டு  நம்ம பட்டியக்காடு பளிச்சியம்மனுக்கு ‘வெறியாட்டுத் திருவிழா நடத்துவதாக முடிவு செய்தபடி மூணு நாள் விழாவுல இன்னிக்கு காலையில எட்டு மணிக்கு  முதல் நாள் பூசைத் துவங்கும் அப்படின்னு தோப்படியான் சொல்படி அறிவிக்கின்றோம். திருவிழா வரி செலுத்தாத நம் குடி மக்கள் கோயில் செட்டுமை (பொருளாளர்) செம்பையன்கிட்ட கொடுத்து உறுதி செய்துக்கறது” என்று கொட்டு அடித்து கொம்பு ஊதி அறிவித்தான் ஊர் தண்டல்

சுத்துப்பட்டு கிராமங்களான பாய்ச்சலூர், கரடிப்பாறை, குறங்கணிப்பாறை,  கடைசிக்காடு, உப்புக்கண்டபாறை, நடனங்கால்வாய், பூதமலை, செம்பிரான்குளம் என எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் வண்டிக்கட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். கோயில் தோராடியார் (பூசாரி) பொன்னுசாமி கொஞ்சம் பதட்டமாகவே இருந்தார். தங்கள் இசைக்கருவிகளோடு ஆட்டக்கார கூட்டம் உற்சாகமாக தங்கள் கொட்டுக் கருவிகளை கொரண்டிக் கழிகளைக் கொண்டு உருவேற்றிக் கொண்டிருந்தனர்,

“என்ன தோராடியாரே.. எதுக்காண்டி இப்படி எழவு வூட்டுலே துஷ்டி கேக்க வந்தவன் மாதிரி மூஞ்சியை முட்டுக் கொடுத்து வச்சிருக்கீங்க?” நக்கலாகக் கேட்டான் ஊர் தண்டல்.  

“காட்டுக்குள்ளே தேன் எடுக்கப் போன முத்தனும் அவன் கூட்டாளிகளும் இன்னும் வந்து சேரலை.. வழக்கமா நாலஞ்சி நாள்லே வந்துடுவானுங்க.. பொதனோட பொதன் இன்னிக்கு எட்டு நாளாச்சு இன்னும் காணும்.. திருவிழான்னா ஊர் சனம் மொத்தமும் ஊருக்குள்ள இருக்கணும்.. எதும் அசம்பாவிதமா...”

“ஒண்ணும் ஆவாதுய்யா நீ வேற.. வெய்ய காலம் இல்லே.... அப்படி இப்படி களைப்புலே சாஞ்சிட்டு இருட்டற வரைக்கும் தேன் வேட்டை ஆடுவானுங்க.. ஏழுகரை நாடன் சாமி கூடத்தான் இருக்கும் பத்திரமா கூட்டிட்டு வந்துடும்.. கவலைப்படாம ஆக வேண்டியதைப்பாரு”

இசைக்கருவிகளின் ஒலி கேட்டதுமே வீட்டில் உள்ள பெண்டுகள், இளவட்டங்கள் கோயிலின் முன் திடலில் குவிய ஆரம்பித்தனர்.  

தோராடியார் பொதி குதிரைகளில் வந்திறங்கிய சாம்பிராணி, வாழைப்பழம், வத்தி, தெகப்பட்டி இலை, தேன், வள்ளிக்கிழங்கு, நூரான் கிழங்கு இறைச்சி என ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தார். கொட்டு அடிப்பவன் அவரிடம் வந்து பவ்யமாகக் குனிந்து நெற்றியைக் காட்டினான். வேங்கைப்பால் எடுத்து அவனது நெற்றியில் பூசிவிட்டார். அவ்வளவுதான் பாய்ச்சலூர் சுத்து வட்டாரமே கிழியும் அளவு இசையொலி அதிரத் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்த்து போல இளவட்ட பிள்ளைகள் கைகளைக் கோர்த்து ஆட ஆரம்பித்தனர்.

முத்தனும் அவனது மச்சான் காடனும் பாறை இடுக்கில் இருந்த பெரிய தேன் கூட்டை மிகச்சிரமப்பட்டு எடுக்க போராடிக்கொண்டு இருந்தனர்.

“திருவிளா தொடங்கற நாள் இன்னிக்கு.. சரியான நேரத்துக்கு போய்ச் சேரலைன்னா ஊர் முச்சூடும் நமக்கு காவ காக்கும். எடுத்தது போதும்னா நீ கேக்க மாட்டேங்கற” மூச்சை இறுகப்பிடித்தபடி கயிறை பலம் கொண்ட மட்டும் பிடித்திருந்தான். கயிற்றின் ஒரு முனை அவனது காலில் கட்டப்பட்டிருந்தது.

“தேனடையை பாரு மச்சான்.. சும்மா தள தளன்னு போன வருசம் பொன்னுருவி சந்தையிலே பார்த்தமே பானைக்காரி அவளை மாதிரியே இருக்கு.. வுட்டுட்டு வர முடியுமா. நீ கவுறை வுட்டுடாதே இறுக்கிப் பிடி மச்சான்” பாறையின் இறங்கு முகத்தில் பக்கவாட்டில் தொங்கியபடியே தேனடையை நெருங்கிக் கொண்டிருந்தான் முத்தன்.

“என்கிட்டவே பானைக்காரி பத்தி பொங்கறியா.. இரு தங்கச்சி கிட்ட சொல்றேன்”

“ஊருக்கு வந்த ஒடனே மணக்க மணக்க உடும்புக்கறி வச்சித் தரேன்னு சொல்லி இருக்கா உன் தங்கச்சி.. ஒளவு வேலைப் பாத்தே .. மவனே ஒரு துண்டு குடுக்காம அம்புட்டையும் தின்னுடுவேன்“

“வாய்ச்சவடாலுக்கு ஏதாச்சும் சொன்னா வயித்துலே மண்ணள்ளி போட்டுறாதே. மச்சான்.. உடும்புக்கறி சாப்புட்டு நாளாச்சு,, நாவூறுது..” கயிறு சட்டென ஒரு பிடி இறங்க “பாத்து ;;பாத்து“ என்று பதறினான் காடன்.

முத்தன் எந்த பதட்டமும் இல்லாமல் லாவகமாக தேனடையை நெருங்கினான். சத்தமில்லாமல் மெல்ல தேனடையை சிறு சிறு பகுதிகளாக நோகாமல் எடுத்து தன் முதுகில் இருந்த தோல் பையில் சேகரித்தான்.

தேனடையில் விரல் தொட்டு ஒரு துளி தேனெடுத்து உள்ளங்கையில் வைத்து நக்கிப் பார்த்த முத்தன் அதன் சுவையில் திளைத்து மேலே ஒரு முறை நிமிர்ந்து பார்த்து தலையை உற்சாகமாக ஆட்டி தன் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். எப்பவும் அவன் அனுமானம் தப்பாது. எப்படியும் ரெண்டு லிட்டர் தேறும் போலத் தோன்றியது. பாறைத்தேன் அடர்த்தியாகவும் இருக்கும் ருசியாகவும் இருக்கும். எந்த எதிர்ப்பும் காட்டாமல் தேனிக்கள் மெதுவாக வெளிவந்து பறந்தன.

காடனின் கூட்டாளிகள் குனிந்து பார்த்து தங்கள் மகிழ்ச்சியை முத்தனுக்கு கடத்தினர்.

“நாங்க வேணா கயிறு புடிச்சிக்கறோம் நீ செத்த அப்படி உக்காரு” என்று முருகன் கேட்டான்.

காடன் ஒப்புக் கொள்ளவில்லை ”தங்கச்சி உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா.. முத்தனுக்கு நகம் பேர்ந்தாலே மூணு நாளு சாப்புட மாட்டா” என்று மறுத்தான்.

தேனடைத் துண்டங்களைச் சேகரித்த பின் கயிறை மெல்ல ஆட்டினான் முத்தன். வேலை முடிந்ததை புரிந்து கொண்ட காடனும் கூட்டாளிகளும் கயிற்றை உற்சாகமாக மேலே இழுத்தனர்.

“வேட்டைடா ..வேட்டைடா மரண வேட்டை.” கொண்டாட்டமாக ஆடித் தீர்த்தனர்.

“செரி செரி.. ஊருக்கு நடையைக் கட்டு திருவிளாவுக்குப் போவனும்“ காடன் அவசரப்படுத்தினான்.

“சாமியைப் பாக்கணுமா.. பெண்டுவளை பாக்கணுமா?” என்று முத்தன் கேலியாகக் கேக்க கூட்டாளிக் கூட்டம் ஓ வென கத்தியது. கூடவே இன்னொரு ‘ஓ’ சத்தம் அலறலாகக் கேக்க சட்டென தங்கள் சப்தங்களை குறைத்துவிட்டு சப்தம் வந்த திசையை நோக்கி கூர்ந்து கவனித்தனர். மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்த சத்தம் கேக்க.. சத்தம் வந்தத் திசையை நோக்கி ஓடினார்கள்.  

மூச்சிறைக்க கோயிலுக்கு  ஓடிவந்த பளனியப்பன், பொன்னுசாமியின் காதில் மெல்ல ஏதோ சொன்னான். தலையாட்டி கேட்டுக்கொண்ட தோராடியார் பொன்னுசாமி “இது என்னடா இந்த நேரத்துலே வந்துருக்கானுக? எந்த ஊரு களவாணிப் பயலுக?”

“தெரியலைண்ணே.. முத்தன் கட்டிப்போட்டு வச்சிருக்கான். ஆளுகளைப் பாத்தா தெக்கத்தி பக்கம் மாதிரி இருக்கு”

“எங்க வச்சிருக்கான்?”

“பாண்டியன் ஓடைகிட்டே,,”

“சரி நீ போயி தோப்படையான் கிட்ட தகவல் சொல்லு.. பூசை ஆரம்பிக்கிற நேரம் அவரு இங்க வருவாரா? இல்லை பஞ்சாயத்துக்கு அங்கப் போவாரா? ஊர்த் தலைவரு இல்லாம எப்படி நடத்தறது பூசையை?” குழம்பியபடி புலம்பினார் தோராடியார். அதைக் கவனிக்கும் ஆர்வமில்லாமல் வந்தவன் விருட்டெனக் கிளம்பினான்

தண்டல் பக்கம் திரும்பிய தோராடியார் “நான் சொல்லலை.. என்னமோ தட்டுச்சு எனக்கு,,,களவாணி பசங்க ரெண்டு பேரு காட்டுக்குள்ள வந்துருக்கானுங்களாம்”

“திருவிளா நேரம்னாலே வரத்தான் செய்வானுங்க .. பிடிச்சாச்சு இல்லே? மரம் வெட்ட வந்திருப்பானுங்க  நம்ம ஊருலே திருடறதுக்கு என்ன இருக்கு? நாலைஞ்சு கோவணந்தான் இருக்கு.. அதையும் எலி கூட சண்டை போட்டுத்தான் புடுங்கனும்” சொல்லிவிட்டுச் சிரித்தான் தண்டல்,

டைக்கு அருகில் உள்ள மைதானம் போன்ற திறந்த வெளியில் இருவரை பின்பக்கம் கைகளை கட்டச் சொல்லி முழங்காலிட்டு உட்கார வைத்திருந்தனர். சுற்றிலும் கணிசமான கூட்டம் நின்றிருந்தது, 

“முத்தா.. இவனுக தேனு எடுக்க வந்தானுங்களா இல்லை மரம் வெட்ட வந்தானுங்களா?” கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

“மரம் வெட்டத்தான் வந்துருக்கானுங்க.. பழக்கப்பட்ட ஆளுக மாதிரிதான் தெரியுது”

“என்னா ஊருடா நீங்க?”

“செங்கந்தேரி” இருவரில் வயதானவர் சொன்னார்.

“அது எங்க இருக்கு மாப்பிள்ளைகளா?”

“களக்காடு  கிட்ட“

முத்தனும் கூட்டமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“களக்காடா..? அது எங்க?”

“அது... ஒரு டேம்.. கூட இருக்குமே.. நாயுருண்டான் பாறை அருவி கொட்டுமே அதுக்கு பக்கம்..” என்றான் பயந்தபடி உடனிருந்த இளையவன்.

அதற்குள்ளாக ஊர்த் தலைவர் தோப்படியான் அங்கு வந்து சேர்ந்தார். ஒட்டு மொத்த கூட்டமும் சட்டென அமைதியாகி அவருக்கு கும்பிடு போட்டது. உட்காருவதற்காக ஒரு மரத்துண்டை எடுத்து வந்து அவருக்காக மரநிழலில் போட்டான் கூட்டத்தில் ஒருவன். தோப்படியான் கிழக்கு பார்த்து குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அதன் பிறகு அமர்ந்தார். அவர்களையே ஒரு கணம் உற்றுப் பார்த்தார். பிறகு தொண்டையைச் செருமியபடி..

“காட்டு இலாக்கா காரவங்க ஒரு கெளையை வெட்டுனாக் கூட பிடிச்சிட்டுப் போயிடுவானுங்க அப்புறம் அடி உதை கோர்ட்டு கேசுன்னு அலையணும்.. எந்த ஊர்லேர்ந்து இங்க மரம் வெட்ட வந்தீங்க“

“சாமி.. நாங்க திருட வரலைங்க தெக்க களக்காடு பக்கம் எங்க ஊரு, தேனு எடுக்கறதுதான் எங்க தொலிலு.. எங்க ஊரு பக்கம் பொந்து தேன் கொறைஞ்சிடுச்சு,, நாங்களும் மூணு வருசத்துக்கு ஒருக்கா எடம் மாறிடுவோம்.. அப்படித்தான் இங்கயும் வந்தோம். இந்த வருசம் குறிஞ்சிப் பூ பூக்கும் குறிஞ்சித்தேன் எடுத்தா கூடுதலா காசு கெடைக்கும்னு சிறுமலைப் பக்கம் போவலாம்னு இவன்தான் சொன்னான். ஏலே எளும்பி குனியக்கால் போடு” என்று அதட்டினார் பெரியவர்.

உடனே வயதில் இளையவன் பதில் எதுவும் பேசாமல் எழுந்து முன்பக்கம் வளைந்து குனிந்து நின்று கொண்டான்,

“அது என்ன குனியக்கால்?”

“இது எங்க கூட்டத்துல கொடுக்கற தண்டனைங்க சாமி.  தண்டனை குடுத்தவரு எந்திரிக்கச் சொல்றவரைக்கும் எந்திரிக்க கூடாது. மணி கணக்கானாலும் நாள் கணக்கானாலும் குனிஞ்சிக்கிட்டேதான் இருக்கணும்.”

“தண்டனை, தண்டம் எல்லாம் நாங்க குடுக்கறதுதான் வளக்கம்.. தொரையை எந்திரிக்கச் சொல்லு பெருசு” கூட்டத்திலிருந்து ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.

“யாருடா அது? இங்க நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன் ஊர்த்தலைவன்னு.. ஒங்க இஷ்டத்துக்கு ஆளாளுக்கு உத்தரவு போடறதுன்னா நா பாட்டுக்கு போயிகிட்டே இருப்பேன்” என்று கோபமாகக் கத்தினார் தோப்படியான். கூட்டம் அமைதியாக நின்றது.

“இதைப்பாருங்க பெரியவரே .. யாரு கூப்புட்டாங்க யாரு வந்தாங்க அப்படிங்கறது பேச்சு இல்லே.. கூட்டாளியா வந்துட்டாலே பொறுப்பு ரெண்டு பேருக்கும்தான் எந்திரி தம்பி”

“உத்தரவுங்க...” என்று  குனிந்தவன் நிமிர்ந்தான்.

“முத்தா இவங்க தேன் எடுக்கறப்ப பாத்தியா,, இல்லை மரம் வெட்டுறப்ப பாத்தியா?”

“நாங்க பாறையிலே தேன் எடுத்துட்டு ஏறுனப்புறம் தொபீர்னு மரம் வுளுவுற சத்தம் கேட்டுச்சு ஓடிப் போயி பார்த்தா இவனுங்க ரெண்டு பேரும் அங்க பேயி முழி முழிச்சுகிட்டு நின்னானுங்க”

“உங்க பேரு என்ன பெரியவரே.. எந்தூரு?”

“களக்காடு பக்கம்,, எங்க கூட்டத்துல என்னை மூட்டுக்காணின்னு சொல்லுவாங்க தலைக்கட்டு மாதிரி....  இவன் மூதவன் எனக்குத் தொணை..”

“அப்ப இந்தப் பையன் உங்களுக்கு மச்சான் மொறையா?”

“இல்லிங்க.. நானு மோட்டில்லம்.. இவன் வளநாட்டில்லம்.. பங்காளி மொறைங்க”

“அப்படியா தேனெடுக்க மச்சானைத்தானே கூட்டி வருவோம். மச்சான் துணை  இருந்தா மலை கூட ஏறிடலாம்னு இங்க சொல்லுவோம். நீங்க என்னடான்னா பங்காளி கூட வர்றீங்க அதுவுமில்லாம நாங்க நாலைஞ்சு பேராத்தான் தேனெடுக்கப் போவோம் நீங்க சொல்றதுலதான் சந்தேகம் வருது”

“அய்யா நீங்க பாறையில மலையில கட்டடத்துலே இப்படி கடுசான இடத்துலே எல்லாம் எடுப்பீங்க.. நாங்க மரம் வீடுக இதுலதான் எடுப்போம்”

“அப்ப எதுக்கு மரம் வுளுந்திச்சு?”

“மர உச்சியிலதான் தேனடை இருந்துச்சு. அதுக்காவ ஏறினேன். கெளையில  நின்னுகிட்டு இருந்தப்ப என்னமோ கடிச்சிடுச்சு வலியில ஒடம்பு வலு அத்தனையும் கெளையிலே உக்காந்துடுச்சு.. கெளை தாங்காம முறிஞ்சு உளுந்துடுச்சு அதுல வேற காயம் பட்டுடுச்சு” மூதுவன் தன் முழங்கையை புரட்டிக் காண்பித்தான் சிராய்ப்பு காயங்கள் ரத்தக்கறையோட இருந்தன.

“இங்க பாருங்க பெரியவரே பளிச்சியம்மனைக் கும்புடற சனம் இங்க சுத்துப்பட்டு பத்து பன்னிரண்டு கிராமங்கள்லே இருக்காங்க. தப்புத் தண்டா பண்ண மாட்டோம். காட்டுலே தப்பு நடக்கவும் வுடமாட்டோம். உண்மையைச் சொல்லுங்க இங்க மரம் வெட்டுனா பளிச்சியம்மனுக்கு கோவம் வந்துடும் அதுவும் இன்னிக்கு ஊர்ல அம்மனுக்கு வெறியாட்டு விழா நடத்துறோம்.ஒப்புத்துக்கிட்டா தண்டம் இவ்வளவுன்னு சொல்லுவோம் கட்டிட்டு ஊரைப் பாக்க கெளம்பிடலாம். உண்மை தெரிஞ்சா நாங்க விட்டாலும் எங்க சாமி வுடாது”

“எங்க கருமாண்டியம்மன் மேல சத்தியமா நாங்க மரம் வெட்ட வரலீங்க. எங்க குலத்தொலிலே மரப்பொந்துலே தேன் எடுக்கறதுதான்”

“கருமாண்டி அம்மன் உங்க குல தெய்வமா?” என்று தாடையைத் தடவியபடிக் கேட்டார் தோப்படியான்.

“ஆமாங்க”

மிகுந்த யோசனைக்குப் பிறகு “இங்கப் பாருங்க பெரியவரே வெசாரணைன்னு வந்துட்டா மொறைப்படி எல்லாத்தையும் கேட்டுட்டு அப்புறம்தான் முடிவெடுப்போம்”

“அப்ப கம்பெனிக்கு திருட்டுத்தனமா தேன் எடுத்துத் தர வந்தீங்களான்னு கேளுங்க... தோப்படியான்” என்றான் முத்தன்.

அதுவும் நடக்கறதுதான். பழக்கமில்லாத ஆட்களை வைத்து தேன் எடுத்தால் அவர்களால் தரமான தேனைக் கண்டுபிடிக்கத் தெரியாது என்பதால் இப்படி மலை வாழ் மக்களை ஊர் மாற்றி அனுப்பி தேன் எடுக்க தனியார் கம்பெனிகள் அனுப்புவது உண்டு. வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு மலை மலையாக காடு காடாக தரமான தேனைத் தேடுவார்கள்,

“அதுவும் இல்லீங்க எங்களுக்காவத்தான் வந்தோம்“

“செரி.. உங்கக் கிட்ட இருக்கற பொருளை எல்லாம் அப்படி எடுத்து முன்னாடி நீங்களே வச்சிடுங்க நாங்க சோதனை போடமாட்டோம்”

எடுத்து வைத்தார்கள். கசங்கிய வேட்டி , துண்டு, சில மூலிகை இலைகள், சிறுகத்தி, மரப்பிசின், கொஞ்சம் பணமும் சில்லறைக் காசுகளும், அடகு சீட்டுகள், போன் நம்பர்கள் குறித்த சின்ன நோட்டு, வத்திப்பெட்டி அவ்வளவுதான் அவர்கள் பொக்கிஷம்..

வத்திப்பெட்டியைப் பார்த்த்தும் காடன் கத்தினான். “பாத்தீங்களா வத்திப்பெட்டி...., தேன் எடுக்க போவும்போது வத்திப்பெட்டி எல்லாம் எடுத்துப் போவக்கூடாதுன்னு நமக்கு கட்டுப்பாடு இருக்கு.. இதுலேர்ந்தே  தெரியலையா இவனுக காட்டு ஆளுகளே இல்லே..”

“அதெல்லாம் நம்ம கூட்டத்துலதான் செல்லுபடியாவும்.. காட்டுக்கு காடு.. நாட்டுக்கு நாடு சட்டம் சம்பிரதாயம் எல்லாம் மாறும்.. செத்த உக்காரு காடன்” கடுப்பாகச் சொன்னார் தோப்படியான்.

“வத்திப்பெட்டி காடு கொளுத்தவோ.. தேனீ கொளுத்தவோ இல்லீங்க அய்யா ..இருட்டுலே தடம் தெரியறதுக்குத்தான்..”

“அம்புட்டுத்தானா?”

‘ஆமானுங்க அய்யா“

அப்பொழுது யாரும் எதிர்பாராமல் வயதில் இளையவனாக இருந்த மூதவன் கண்கள் செருகி மயங்கி கீழே விழுந்தான். கூட்டம் பரபரப்பானது.

கூட்டத்தில் இருந்த சிலர் ஓடிப்போயி அவனைத் தூக்கி நிமிர்த்தி தலையை உலுக்கி கன்னங்களைத் தட்டிப் பார்த்தனர். கண் திறக்கவே இல்லை. ஓரளவு வைத்தியம் தெரிந்த சின்னான் அவனை மடியில் ஏந்தி நாடியைப் பார்த்தான்,

பிறகு தோப்படியானைப் பார்த்து “தோப்படியான்.... கடிச்ச பூச்சியோட நச்சு வேலை செய்யுது. நேரம் கடந்துடுச்சு மூச்சு எண்ணுனா எகிறுது.. டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிடலாம்..”

“நம்ம ஊரு வைத்தியன் மாரிமுத்துவை போயி யாராச்சும் கூட்டிட்டு வாங்க...“ என்று பதறினார் தோப்படியான்.

“அவரு எங்க இங்க இருக்காரு..  மவ வூட்டுக்கு போயிருக்காரு.. தாழைக்காடு அந்த ஊருக்கு போவனும்னா பத்து மைலுக்கு நடந்துதான் போவனும்.. போக்குவரத்து இல்லாத ஊரு..”

“இப்ப என்னடா செய்யறது.. டவுன் ஆசுவத்திரிக்கு போவனும்னா.. அங்க உள்ள டாக்டரு போலிசுக்கு போ .. கம்ப்ளெயிண்ட் குடுன்னு கத்துவானே விசாரணைக்குன்னு கூட்டிட்டு வந்து ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா ஆத்தா சும்மா வுடமாட்டாளே” என்று விசனமானார் தோப்படியான்

மூட்டுக்காணி இவர்கள் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் கொண்டு வந்திருந்த பச்சிலையை கல்லில் வைத்து இடித்துக் கொண்டிருந்தார்.

“ஒண்ணும் பதறாதீங்க எந்தக்கடியா இருந்தாலும் பத்து நிமிசத்துல பறக்கடிச்சிடலாம்” என்று நிதானமாக பச்சிலைச் சாற்றை கடிபட்ட இடத்தில் பிழிந்தார்.

“ஏன் பெருசு.. தேன் எடுக்க போறச்சே தின்னூத்து பச்சிலை அரைச்சு பூசிட்டு போவ மாட்டீங்களா? பாம்பு, பூரான் எதுவும் அண்டாது”

“எல்லாம் போறதுதான்.. ஊரை வுட்டு கெளம்பி நாளாச்சில்லே..இது கூடம் எங்க மலையில பறிச்சதுதான்”

“இது என்னா எலை?”

“மறியுணா மூலி. எந்தக்கடியா இருந்தாலும் முறிச்சுடும்”

“நம்ம வைத்தியரு மாரிமுத்து இருந்தா கையிலேயே ஆயிரத்தெட்டு மூலிகை வச்சிருப்பாரு..” என்றான் காடன் ஊர்ப்பெருமையை விட்டுக் கொடுக்காமல்..

“வெறியாட்டு நடக்க சொல்ல எக்குத்தப்பா ஏதாச்சும் ஆயிபோச்சுன்னா அப்புறம் அம்மனை சாந்தப்படுத்த முடியாது..” கவலை குறையாத முகத்தோடு தோப்படியான் சொன்னார்.

“ஒண்ணும் ஆவாது சாமி நீங்க ஏன் கவலைப் படறீங்க? அப்படியே ஆனாலும் ஒரு குத்தம், பஞ்சாயத்து, அப்படின்னு போலீசு உங்களை ஒரு கேள்வி கேக்காம எல்லா குத்தத்தையும் நான் தாங்கிக்கறேன்” என்றார் மூட்டுக்காணி

சில நிமிடங்களில் மூதவனுக்கு மூச்சு சீரானது. கண்கள் திறந்து “தண்ணி தண்ணி“ என்றான் கொண்டு வந்து கொடுத்தார்கள்

“நெகா வந்துடுச்சு இனிமே பயமில்லே..” சிரித்தார் மூட்டுக்காணி. தோப்படியானுக்கு உயிர் போய் உயிர் வந்த்து போல ஆனது.

கோயிலில் இருந்து தண்டல் வந்து தோப்படியானிடம் “கருவம்மா மேலே சாமி வந்து இறங்கிடுச்சு” என்றான்

“அப்பாடி ..இனுமே பளுது இல்லே.. ஆண் தெய்வம் வந்துச்சா இல்லை பெண் தெய்வமா?”

“ஆண் தெய்வந்தான்.. நல்லா மீசையை முறுக்கி கம்பீரமா தொடையைத்தட்டி தட்டி நடந்துச்சு கருவம்மா”

”தாயே உன் கருணையே கருணை” என்று வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார் தோப்படியான். பிறகு மூட்டுக்காணிப் பக்கம் திரும்பி ”அய்யா பெரியவங்களே.. உங்க ஒடம்புலே பச்சை குத்தி இருந்ததையும். காதுல கடுக்கன் போட்டுருந்ததையும் பாத்த மாத்துறத்துலேயே நீங்க களக்காடு பக்கம்னு புரிஞ்சிகிட்டேன்.. ஆனா ஊரு பஞ்சாயத்துன்னு வரும்போது என்னோட உத்தேசத்தை வச்சி முடிவு சொல்லக் கூடாது. அதான் வெசாரிக்கற மாதிரி ஆச்சு”

“அதான நடை மொற.. இதுக்கு ஏன் தடங்கறீங்க?”

“இல்லே.. ஏதும் பிரச்சினை ஆயிடும்னு பயந்தப்ப எதையும் மனசுலே வச்சிக்காம ஒங்க தலையிலே போட்டுக்குவேன்னு சொன்னீங்க பாருங்க.. இவ்வளவு நேரம் ஒங்களை குத்தவாளி மாதிரி நிக்க வச்சு வெசாரிச்சமேன்னு வெசனமா போச்சு.. வெறியாட்டு படையலப்போ குழல் ஊதி கொட்டு அடிச்சு தேவாதி தேவ கணங்களைத்தான் வரவைப்போம்..

யாரு மேலேயாவது சாமி வந்து எறங்கும்....வந்தது சாமின்னு பொங்கனதை தின்னுட்டு ஆட்டம் பாட்டம் போட்டுட்டு பொழப்பைப் பாப்போம்.. இன்னிக்கு எறங்கனது ஆண் தெய்வம்னு சொன்னதும் நீங்கதான் அச்சாரமா முன்ன வந்திருக்கீங்கன்னு தோணுச்சு,,மாரிமுத்து ஊர்லே இல்லைன்னதும் பாதி உசுரு போயிடுச்சு.. தெய்வம் மாதிரி நீங்க அந்த பையன் உசிரை காப்பாத்திட்டீங்க.. சாமி குத்தம்.. மனச்சங்கடம், பரம்பரைப் பாவம், ஊர் அவச்சொல்லு.. தீராப்பழி.. இப்படி  எல்லாம் சேர்ந்து வந்திருக்கும்....எல்லாத்துலேர்ந்தும் காப்பாத்திட்டீங்க “ கையெடுத்துக் கும்பிட்டார் தோப்படியான்..

“நியாயம் சொல்லுற இடத்துலே இருக்கற எல்லாருக்கும் உள்ள சங்கடந்தான் ஒங்களுக்கும்.. அய்யா நானும் எங்க ஊர்ல நியாயம் சொல்லுற எடத்துலேதான் இருக்கேன்.. எனக்குப் புரியுது அய்யா... ஒங்களுக்கு மட்டுமில்லே பழி, பாவம்.. அவச்சொல்லு  கூட வந்த எனக்கும்தான் வந்திருக்கும் நாம கும்புடற தெய்வம் படையலுக்காகவோ.. ஆட்டம் பாட்டத்துக்கோ வராதுங்க.. ஆனா இப்படி ஒரு இக்கட்டான நெலம வர்றப்போ கூட வந்து நிக்கும் அன்னிக்குத்தான் தெரியும் நாம ஒளுங்கா நியாயம் சொல்லி இருக்கோம்னு.. அரவம் தீண்டுனாக் கூட பொளைச்சுக்கலாம்.. அவச்சொல் தீண்டி பொளைக்க முடியாது சாமி..”

“உங்க பொருளை எல்லாம் எடுத்து வச்சப்ப பாத்தேன் .மரப்பிசின் கொஞ்சமா வச்சிருந்தீங்க அப்ப சாப்பிட்டு நாளாயிருக்கும். பசிச்சா கையிருப்பு இல்லைன்னா சமாளிக்கத்தானே நமக்கு மரப்பிசினு.. எப்படியோ சமாளிச்சு இருக்கீங்க.. அதான் மரப்பிசின் கொறைஞ்சிருக்கு.. எங்க மூணு நாள் திருவிளாவுக்கு நீங்கதான் விருந்தாளி.. யோவ்.. தண்டல்... இவுங்கள.. கோயிலுக்கு கூட்டிட்டுப் போயி மொதல்ல சாப்புட வையி” சொல்லிவிட்டு தோப்படியான் அங்கிருந்து நகர கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியது.

வானம் கருக்கிக்கொண்டு வந்தது. உள்ளங்கையை நெற்றியில் வைத்து வானத்தைப் பார்த்தார் தோப்படியான். வெறியாட்டு அன்னிக்கு ஒரு தூத்தலாவது போட்டுடும் அதுதான் வழக்கம்.. சித்திரை மாதம்தான் என்றாலும் மினுக்கென்று சில துளிகளை மெல்ல விசிறியது கருத்த வானம்..         

 

 . .

 

 

 

 

 

 

  

 

 

:

 

 

 

 

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...