செவ்வாய், 21 ஜூன், 2022

 

 

 

 

 

 

 

 

 

 

 துளிரில் ஒளிரும் நிழல்

      

 

நெய்வேலி பாரதிக்குமார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கார்த்திகைத் திருநாள்

 

எல்லோரிடமும் மினுக்கிக் கொண்டிருக்கிறது

ஏதேனும் ஒரு ஒளி

 

துழாவிக்கொண்டிருக்கும் பூனையைப்போல

ஒளிர்கின்றன சில விழிகள்

 

புன்னகையினூடே சிலர்

சிந்திவிட்டுச் செல்கின்றனர் துளி ஒளியை

சொற்களில் சிலர் பதுக்கிவைத்திருக்கின்றனர்

அவ்வப்போது ஒளியேற்றும் பொறியை

 

மின் விளக்குகள் அணைந்து

திடுமென இருள் போர்த்தும்போது

தேடி ஏற்றுகிறோம்

அவரவர்களுக்கான ஒளியை..

 

ஏதேனும் ஒரு வெளிச்சம் வந்த பிறகு

ஊதி அனுப்பிவிடுகிறோம் ஒளியை..

வேண்டாத விருந்தாளியை

கதவிழுத்துச் சாத்தி துரத்துவதைப்போல

 

நன்றியற்ற உலகில்

அவமானப்பட்டு அலைகிறது ஒளி...

மந்தகாசப் புன்னகையோடு

கதவருகே காத்திருந்த இருட்டு

கவியத்தொடங்குகிறது மெல்ல..

 

பரபரப்புடன் வேட்டை துவங்குகிறது

முட்டிமோதித் தட்டுத்தடுமாறி

மீண்டும் தேடுகிறோம் ஒளியை

ஏற்ற விழையும் விரல்களில்

 

எந்த விகல்பமும் இல்லாமல்

ஒரு குழந்தையைப்போல குதித்தாடுகிறது ஒளி

 

ஒளிகளுக்கான ஒரு தினத்தில்

மண்டியிடுகிறோம் பரிகாரமாய்

ஒளியும் ஆசிர்வதிக்கிறது துளி வருத்தமின்றி..

 

 

 

 

 புகைவண்டி இருக்கைகள்

 

தன்னுள் ஏறாத மரங்களையும்

எதிர்திசையிலிருந்து இழுத்தபடி

எல்லா வயதினரையும்

ஏற்றிக் கொண்டு ஓடுகிறது புகைவண்டி.

 

முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில்

எவருக்குமே ஒதுக்கப்படுவதில்லை

இன்னின்ன இருக்கைகள் இன்னாருக்கென்று....

என்றாலும் அமைந்துவிடுகின்றன அவரவருக்கானவை

 

ஐஸ்க்ரீமையோ லாலிபாப்பையோ

சுவைத்தபடி இருக்கும் குழந்தைகளுக்கு

ஜன்னலோரம்...

பேப்பர் படிக்கும் அப்பாவுக்கு

எப்பொழுதும் ஒற்றை இருக்கை

 

அரைக்கால்சட்டை தம்பிகளுக்கு

லக்கேஜ் ஒன்லி'யில் படுக்கை

நடைபாதைகளில் ஊர்திரும்பும் கூடைக்காரர்கள்...

இறங்கும்வழிக் கதவோரம்

 

சோகம் ததும்பும் புகைஞர்களுக்கு...

அரங்குகளிலோ, அவைகளிலோ

 

ஒருவராலும் விரும்பப்படாத இரும்பு இருக்கைகள்

எப்படியோ பிடித்துப் போய்விடுகின்றன

இரயில் பெட்டிகளில் மட்டும்.

 

ஒருபோதும் பயணித்ததில்லை

இறுதிவரை இருக்கை மாறாமல்

 

கடைசி இரயில்நிலையத்தில்

எல்லோரையும் இறக்கி விட்டு, பிரிய மனமின்றி

பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்

புகைவண்டிகளின் இருக்கைகளில்

நிரம்பியிருக்கின்றன எல்லா வயது' இதயங்களும்...

 

 

 

மீனின் கண்ணீர்

 

ஒவ்வொரு ஆர்ப்பரிப்பிலும்

கரையைத் தொட்டுவிட்டு

கடலுக்குள் திரும்பியது குட்டி மீன்

 

ஒவ்வொரு துள்ளலின் அதிர்ச்சியிலும்

கடல்நீர் நடுங்குகிறது என

அலையைப்பார்த்து  புளகாங்கித்தது குட்டி

 

இரத்தத்தை உறிஞ்சும்

அக்கரை'யிடம் கவனமாயிரு

எச்சரித்தது தாய் மீன்

 

அறுக்கப்பட்ட வலையிடமிருந்து

தப்பித்த தன் சாகசத்தை எண்ணி எண்ணி

மந்தகாசமாய் சிரித்தது குட்டி மீன்

 

அவ்வழியே வந்த ஆற்றுமீன் ஒன்று

ஆனாலும் உப்பு சற்றுக் கூடுதல்'

என்று குறைபட்டுக்கொண்டது

சொந்த ஊரிலேயே இருந்திருக்கலாம்'

என்றும் அங்கலாய்த்துக்கொண்டது

 

 

ஒருநாள் கடலின் கருணையினால்

கடல்போல் நீலநிறம் ஆகலாம்' என

ஆற்று மீனுக்கு ஆறுதல் சொன்னது குட்டிமீன்

எல்லைகள் கடந்தும்

 இரண்டும் நீந்திக் களித்தன

 

அக்கரை'யில் மீன்பிடிப்பதற்கென்று

எவரும் கடலுக்கு வருவதில்லை

ஆள்பிடித்துச் சென்று அகப்பட்டதை எல்லாம்

அபகரித்துக்கொண்டார்கள்

 

அக்கறையற்ற சமூகம்

அவர்கள் ஷேமமாக' இருப்பதாக

கூச்சமின்றிக் குரலெழுப்பியது

 

துவக்குகளின் தாக்குதலில்

வலையெடுத்துச் சென்றவர்களின்

உதிரம் கரைந்து கடலில் கலந்தது

 

நிராதரவாய் கரையில் நின்று

தேம்பியவர்களின் கண்ணீர்

கடலை நிரப்பியது....

இன்னும் உக்கிரமாய்  கரித்தது கடல்நீர்

 

 

எதிரில் எவரும் இல்லாத போர்க்களத்தில்

சுற்றித்திரியும் பூச்சிகளை சேதாரமாக்கி

குருதியில் தோய்ந்த ஆயுதங்களை  அனுதினமும்

கடலில்  கழுவிவிட்டுப்போனார்கள் அவர்கள்...

 

மெல்ல மெல்ல நிறம் மாறி

மீன்கள்

சிவப்பாகின...

 

அக்கிரமக்காரர்களின்  மூச்சுக்காற்று உஷ்ணத்தில்

கொந்தளித்தது கடல்

 

கடல்நீர் நடுங்குவதாக இப்பொழுதெல்லாம்

தாய் மீனும் நம்பத்துவங்கியது

 

வலையில் சிக்கி உயிர்விடுவது எக்காலம்'

என்று துயரத்தில் அழுத மீனின்

கண்ணீர்த் துளிகளும் சேகரமானது கடலில்...

 

 

 

 

 

உயிர்மைக்கோடு

 

கசக்கிக் கிழித்தெறிந்தேன்

காகிதங்களை

ஒருமுறையும் கைகூடவேயில்லை

ஓவியத்திற்கான

ஒரு உயிர்மைக்கோடு...

குழந்தை எளிதாக வரைந்துவிடுகிறது

குடித்த ஒருமடக்கு பாலில்

உதட்டின் மீது...

 

 

வேரிலிருந்த உயிர்

 

அந்த சாலையை

கடந்து செல்லும்போதெல்லாம்

சினேகமாகவும், பரிவோடும்

சிரித்தது தும்பைப்பூ...

உரமிடவில்லை, நீரூற்றவுமில்லை

என்று நான் வியந்த போது

யாரோ சொன்னார்கள்

அது என் தந்தையை புதைத்த இடத்தில் முளைத்ததென்று...


உயரே விழுதல்

 

சுவரின் ஓரத்தில் நின்றபடி

ஒவ்வொருநாள் இரவிலும்

எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்த

சிறுவனை இப்பொழுதெல்லாம் பார்க்கிறேன்

சினேகமான புன்னைகையுடன்..

 

 உயரம் தாண்டுதலுக்கான பயிற்சியா'

எனக் கேட்கிறேன் ஒருநாள்

இல்லை' என தலையசைக்கிறான் மெல்ல

 

உயரமாவதற்கான யுக்தியா?'

அதற்கும்இல்லை' என்கிறான்

 

சுவரைத்தாண்டுவதற்கான முயற்சியா?'

இல்லவே இல்லை' என்கிறான்

 

உயரே  பார்த்தபடி ஓயாமல்

எம்பிக்கொண்டிருக்கும் அவனிடம்

பதிலைப் பெறாமல் போவதில்லை

என்கிற உறுதியுடன் நிற்கின்றேன்

 

 

ஒருகணம் தாமதித்து

நிலவுக்குள் குதிக்கப்போகிறேன்'

என்றான் அவன்..

 

பொங்கிவரும் சிரிப்பை அடக்கமுடியாமல்

நடக்கிற காரியமா?' என்றேன்

இல்லை குதிக்கிற காரியம்' 

என்கிறான் சளைக்காமல்

 

விழுந்துவிடப்போகிறாய்' எச்சரிக்கிறேன் அவனை..

 

அதனாலென்ன  நட்சத்திரங்களுக்கிடையேதானே

விழுவேன்' என்றான் உறுதியாக..

 

கொஞ்சம் உயரமாகத்தான் தெரிந்தான் அவன்..

 

 

 

 

 

கேட்கப்படாத கேள்வி

 

அத்தனை கூட்டத்திலும்

அசையாமல் அமர்ந்தபடி அந்த கேள்வி

என்னையே வெறித்துக் கொண்டிருந்தது

 

எத்தனை முயன்றும் அந்த கேள்வியின்

உறுத்தலை தவிர்க்கவே முடியவில்லை

 

பறையின் ஒலியையும் மீறி என் செவிகளை

அறைந்துகொண்டே இருந்தது..

 

வாசமும் அல்லாத துர்நாற்றமும் இல்லாத

மரணமணம் வீசிக்கொண்டிருந்தது

சாவு வீடுகள்தோறும் சாமந்தி

 

இளவயது மரணம் நிகழ்ந்த துக்க வீட்டில்

அதிர்ச்சியின் பேரலைகள் மோதும்

முகங்களில் பூதாகரமாய்

பெருத்திருந்த விழிகளின் வழியே

அந்த கேள்வி

என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது..

 

 

 

முதுமையின் தள்ளாமையோடு

நடக்கவும், நகரவும் இயலாத

என் கையாலாகாத்தனத்தின் மீது

அந்த கேள்வி

பரவிப் படர்ந்து அமுக்கியது

 

இதுவெல்லாம் இழுத்துக்கொண்டிருக்கையில்

சின்ன வயசு உயிருக்கு

அப்படி என்ன அவசரம்?'

 

மரணத்தின் வலியைவிட

மௌனத்தில் ஒலிக்கும்

அந்த கேள்வி

கேட்கப்படாமலேயே

பழுக்க, பழுக்க

இரும்பைப் பாய்ச்சியது

நவதுவாரங்களிலும்..

 

நீங்களெல்லாம்

நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

நான்

இறந்து போனவனின்  இழப்பிற்காக

அழுது கொண்டிருக்கிறேன் என்று...

 

 

 

அறை ஒதுக்கீடு

 

சொந்தவீடு கட்டப்படும்போது உணரலாம்

ஈர நசநசப்பிலும்

சொரசொர செங்கல்களிலும்

சொர்க்கத்தை.

 

பாதி எழும்பிய கட்டடத்தில்

அவரவர் தேர்வு செய்வர்

அவரவர் அறைகளை

 

காற்றோட்டமான  ஜன்னல் உள்ள அறை

எப்பொழுதும் மதுக்குட்டியின்

நேயர் விருப்பம்

 

கணினி இருக்குமிடமே

சிபிக்கு அயோத்தி

 

இருப்பதிலேயே சின்ன அறை

பாட்டியின் பூஜைக்காக

 

 

பேப்பர்களோடு வாசம்செய்யும்

தாத்தாவிற்கு வரவேற்பறை

 

அலுவலகக் கோப்புகளோடு

மல்லுகட்ட எனக்கொரு தனியறை

 

ஏகமனதோடு முடிந்த பிறகுஅம்மாவுக்கு...?'

என்ற கேள்வியைத் தொடுப்பேன் குழந்தைகளிடம்.

 

சமாளிப்பான செருமலோடு

கண்கள் கலங்க புன்னகையைத் தேடி

உதடுகளில் மாட்ட முயற்சித்து

தோற்பாள் மனைவி...

 

எல்லோருக்கும் வீடுகள் மாறும்

அவரவர்க்கு ஏற்ற அறைகள் அமையும்

அவளுக்கு மட்டும்  மாறுவதே இல்லை

சமையலறை'.

 

 

 

 

 

மழை

 

அடர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து

அதிகாலைப் பனியைத்

தவறவிட்டவர்களுக்காக

முதிர்பனியாய் தன்னை

நகலெடுத்துக்கொண்டிருக்கிறது மழை

 

நீங்கள் வீடு திரும்பும்போது

இலைவழியே பன்னீரைத் தூவியபடி

ஒரு வரவேற்பாளனைப்போல

பூ இதழ்களில் அலங்கார

 விளக்கேற்றியபடி காத்திருக்கிறது மழை

 

அழைத்துச் செல்ல யாருமில்லாமல்

படுக்கையில் கிடக்கும்

முதிர்பருவத்தினருக்கு

ஜன்னல் வழியே  சாரல் வார்த்தைகளால்

ஆறுதல் சொல்கிறது மழை

 

எல்லா வெப்பத்தாலும்

சூடேறிப் போயிருக்கும் உங்களை

பாதம் வழியே தணிக்க வாசலருகே

ஆங்காங்கே கிடக்கின்றன  மழைத்திட்டுக்கள்

 

உங்கள் தோட்டத்து ரோஜாவை

வெய்யில் விரல்கள் பறித்துவிடாமல்

சுற்றிநடும் மழைக்கம்பிகளை

நன்றியுடன் ரசியுங்கள்..

 

பள்ளிவிட்டு தனியே வரும்பொழுது

தோளோடு அணைத்தபடி

உடன்வரும் மழைத்தோழனை

வீட்டின் வாசல் வந்ததும்

அப்படியே விட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்

நட்பின் இலக்கணம் அல்ல அது..

 

மழைப்பரிவாரங்களின்

ஆரவாரமான ஆர்ப்பரிப்பு

சமயங்களில் வலிப்பதுபோலத் தோன்றும்

 

வசைபாடாதீர்கள்

அது பூமிவிழிப்பிற்கான

எழுப்புதலாக இருக்கலாம்

ஒரு தாயின் உசுப்பலைப் போல..

 

உப்புக்கரிக்காத மழைக்கண்ணீரை

நாவிலேந்துங்கள்.....

வானிலிருந்து இடறிவிழுந்த

மழைக்குழந்தைகளை

முடிந்தால் மடியிலேந்துங்கள்...

 

பூமி விரிப்பில்

மழைத்தூரிகைகள்

வரைந்து முடித்த ஓவியங்களில்

சோம்பேறிச் சூரியன்

தாமதமாய் வந்து

வர்ணம் கலப்பதுபோல

வாளாவிருந்துவிட்டு பின் வருந்தாதீர்கள்

 

மிகச்சரியாக

மழையின் எந்த சொட்டு

உங்களைச் சிலிர்க்கவைத்திருக்கும்

என்று இனம் பிரித்துவிடமுடியாது

எல்லாச் சொட்டுக்களையும்

நிதானமாகச் சேகரியுங்கள்

 

ஏனெனில்

மழலைப்பருவமும்,

உங்கள் உயிரை ஊடுருவிச் சென்ற

மழைத்துளியும்

இழந்தால் மறுபடியும் கிடைப்பதில்லை..



பெயர்- சொல்

 

பெயரில் என்ன இருக்கிறது

என்று சொன்னாலும்

இன்னொருவரின் பெயர்

 நன்றாக இருக்கும்போது

அதிருப்தி எழுகிறது

நம் மீது சுமத்தப்பட்ட பெயர் மீது...

 

வளர்ப்பு மிருகங்களுக்கும், ஆறுகளுக்கும்,

புரட்டியெடுக்கும் புயல்களுக்கும் கூட

சூட்டிவிடுகிறோம் அழகழகான பெயர்களை...

 

மரணம் நிகழ்ந்த வீடுகளில் எல்லோரது உதடுகளும் நல்ல மனிதர் பாவம்...'

என்று முணுமுணுக்கும்போது ..அந்த நிமிடம்

செவிகள் மட்டும் உயிர்த்திருக்க

செத்துப்போக  ஆசைப்படுவது போல...

 

பெயர்களை மறப்பவர்கள்

நினைவைச் சுண்ட நெற்றி சுருக்கி

சே... நல்ல பேருப்பா...' என்று

புலம்புகையில்  தோன்றுகிறது

எல்லோரும் மறக்கட்டும் என் பெயரை...'



துளிரில் ஒளிரும் நிழல்

 

பிறக்கின்ற எவரும்

தனித்து விடப்படுவதில்லை

தொடர்கிறது

அவரவர் நிழல்

 

வெள்ளை முயலுக்குத் தனியே

கருநிற காக்கைக்குத் தனியே என்று

பேதம் பார்ப்பதில்லை நிழல்

 

ஒவ்வொருவரையும்

ஒவ்வொரு நாளும்

ஒரு சில அடிகளேனும்

உயர்த்துகிறது நிழல்

 

பள்ளியில் புதிதாய் எழுதப்பழகிய

குழந்தையின் கிறுக்கலைப்போல்

சுவரின் மீது

காண்பனவற்றை எல்லாம்

பிரதியெடுக்கிறது நிழல்

 

குழந்தைபோல் நிழலை பாவிக்கின்ற

பொம்மலாட்டக்காரர்களின்

விரல்களில் துள்ளியபடி

சொல்கிறது ஆயிரம் கதைகளை..

 

வெயிலைச் சுமந்து, வெயிலைக் குடித்து

வெயிலில் பரவிக் கிடக்கும்

நிழலுக்குள் புதைந்திருக்கும்

கதையை ஒருவரும் கேட்டதே இல்லை

 

நிழலை மொழிபெயர்க்க முடிந்தால்

கிடைக்கலாம் உன்னதமான இலக்கியங்கள்

ஒவ்வொரு மொழியிலும்

 

ஒழுங்காய் பின் தொடர்கிறதா என

ஒருவரும் கவனிப்பதில்லை

கொதிக்கும் சுடுமணலில்

புரண்டு நகரும் நிழலை

எவரும் பொருட்படுத்துவதே இல்லை..

 

நெரிசல் மிக்க சாலைகளைக் கடக்கும்போது

அடிபடுகிறதா என்று எவரும்

அக்கறை கொள்வதுமில்லை

அடர்ந்த இருளில் கலந்து  மறையும் நிழலை

தேடித் தவிப்பதுமில்லை

 

 

மழையின் துளிகள் நனைக்கின்றபொழுது

துடைத்திடும் கரங்கள் இல்லவே இல்லை

 

சக்தியை எல்லாம் திரட்டி

உதறினாலும்

கைவிடுவதில்லை நிழல்

 

படிக்கட்டுப் பயணத்திலும் கூட

மூச்சிறைக்க இணையாக

துரத்திக்கொண்டு வருகிறது நிழல்

 

சிறுபிராயத்தில்

நிழலைப் பிடிக்கும் விளையாட்டில்

வென்றதேயில்லை ஒருவரும்..

 

தனிமையோடு வாழும்

படைப்பாளி ஒவ்வொரு நாளும்

உரையாடிக்கொண்டிருக்கிறான் நிழல்களோடு..

 

கணங்களை காட்சியாக்கும்

ஒரு புகைப்படக் கலைஞன்

கவிதையாக்கி விடுகிறான்

துளிரில் ஒளிரும் துளி நிழலை...

 

 

சுற்றமும் சூழலும்

 

பார்க்கும்தோறும்

வாங்க வாங்க' என்றேன்

முகமெல்லாம் பல்லாய்...

 

நகமளவு உதவிக்கு

நானூறு முறை

நன்றி சொன்னேன்

 

அன்றாட சிறுசெயலுக்கும்

அடடா... அடடா...' என்று ஆர்ப்பரித்தேன்

கண்ணசைத்தால்

கைகட்டி முன்னே நின்றேன்

 

ஆனாலும்

கிட்டே வர சாக்கு தேடி

விலகி நின்றது

 உறவு'

 

வெறுத்து  ஒரே ஒரு முறைசீ' என்றேன்

காலத்துக்கும் வரமாட்டேன்'

என்று முறைத்துக் கொண்டுச் சென்றது

சுற்றம்'.



கள்வனுக்காக காத்திருக்கிறேன்

 

கள்வனுக்காக காத்திருக்கிறேன்

பூட்டுகளுக்கான

கொத்துச் சாவியைத்

தேடிக்கொண்டிருக்க வேண்டாம்

கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன்

 

அம்மாவாசை இரவுக்காக

காத்திருக்கவும் வேண்டாம்

சுட்டெரிக்கும் உச்சி வெயில் கூட

சாதகமானதுதான்..

ஆயுதங்களை தீட்டிக்கொண்டிருக்கும்

அவசியமும் இல்லை

நிராயுதபாணியாகவே வருவது உத்தமம்..

 

சுவரேறிக் குதிக்கும்

வித்தை எதுவும் தேவைப்படாது

கண்ணி வெடி இருக்குமோ

என்ற அச்சமும் தேவையில்லை

காவல்துறையிடம் புகார் தரும்

உத்தேசம் எதுவுமில்லையென

உத்தரவாதம் தருகிறேன்

 

வீட்டிற்கு வருவோர் போவோரிடம்

ஜாடைமாடையாக குறிப்புகள் தருகிறேன்

எல்லா அறைகளையும்

துருவித்துருவி

பார்ப்பவர்கள் கூட

பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கும்

அந்த அறையின் நிலைப்படியிலேயே

நின்றுவிடுகிறார்கள்

 

பேசுவதற்கு ஏதுமற்றவர்களும்

என் பொக்கிஷங்களைப் பற்றி

பேச்செடுத்தால் மௌனிக்கிறார்கள்

 

எடுத்துப்போகிறவர்களுக்கு ஏதுவாக

என் புத்தக அறையை திறந்து வைத்திருக்கிறேன்

விலைமதிப்பற்ற வரிகளைத் திருடிச்செல்லும்

அந்த கள்வனுக்காக

இன்னமும் காத்திருக்கிறேன்..

 

 

 

 

ஒரு சொல்

 

தூரிகையின் தீண்டலில்

துளிர்த்த ஓவியத்தை பார்த்து,

பின்னிருந்து முளைத்த

பிரமாதம்' என்ற சொல்

என்னை

விஸ்வரூபமாக்கி

என் அறையெங்கும்

வியாபிக்கச் செய்தது

 

கை தூக்கலில்

எழுந்து நின்ற சைக்கிள்காரன்

நீர் தளும்ப சொன்னநன்றி'

நனைத்தது இதயத்தை

 

என்னையா பிடித்திருக்கிறது?!'

என்ற கேள்விக்கு

சிக்கனமாய் வந்தம்'

போகிற வருகிறவர்களிடம்

காரணமின்றி

புன்னகைக்க வைத்தது

 

எதிரியின் கைபிடித்து

கண்ணீர் மல்க

உருக வைத்தது

மன்னிச்சுடுப்பா' என்ற சொல்

 

வினோதமான அர்த்தங்களை

தெரிய வைத்தது

புரட்டிய அகராதியில்

புதிதாய் அறிமுகமான

மற்றொரு சொல்

 

என்ன செய்தும்

என்னை விடாமல்

கட்டிப்புரண்டு

கடித்துக் குதறி

எரிய எரிய

ரணகளமாக்கியது

என்றோ

என்மீது

எறிந்த

உருப்படவே மாட்டே'

என்ற கல்

 

மெளனம்

 

எல்லோருக்குள்ளும் இருக்கிறது

பூட்டப்பட்டஇரகசியப் பேழை...

பாடப்படாத ராகத்தை

ஒளித்து வைத்திருக்கும் காற்றைப் போல...

 

எதிர்படும் ஒவ்வொருவரும்

கள்ளச் சாவியுடனோ... சுத்தியலுடனோ...

புன்னகையின் மெல்லிய திரை

போதுமானதாய் இருப்பதில்லை

கண்ணீரின் கந்தகத் துளிகளுக்குள்

கொதித்துக் கிடக்கின்றன அனல் சொற்கள்...

 

மறுப்பையும், வெறுப்பையும் மெளனம்

வாசித்துக் கொண்டிருக்க  ஒருதலைப் பட்சமாக

 தீர்ப்பெழுதப் படுகிறது ஆரவாரமாய்...

 

மெளனம் சம்மதம் என்ற பொய்யை மெளனமாய் சகித்துக் கொண்டிருக்கிறது மெளனம்.....

உரையாடல்களின் மயானத்தில்

சொற்கள்  எரிந்து கொண்டிருக்க

உயிர்ப்புடன் உலவுகிறது மெளனம்.


உடன்'கட்டை'

 

இறந்தவர்களின் மனைவிகள்

காப்பாற்றப்பட்டனர்

சட்டத்தின் உதவியோடு

 

ஆனாலும்சதி' தொடர்கிறது...

ஒவ்வொரு பிணம் எரியும் போதும்

எரிகிறது உடன்  கட்டை'...

 

ஒவ்வொரு பிணம் விழும்போதும்

நடுங்குகிறது மரம்....

 

எவனுக்கோ காற்றுப் பிடுங்கப்பட

விறகாகிறது மயானத்தில்

உறவேதுமற்ற ஏதோ ஒரு மரம்...

 

தான் உதிர்த்த மலர்களின் மீதே

வீழ்ந்துக் கிடந்தது வெட்டுண்ட மரம்..

 

வீழ்ந்த மரம் பற்றிய

கண்ணீர் கவிதைகளை எழுதுகிறோம்

மரக்கூழில் உயிர்த்த காகிதங்களில்..



கண்ணுக்குத் தெரியாத காற்று

 

இயங்கும் வரை எவரும் பொருட்படுத்துவதில்லை

உள்ளோடும் மின்சாரத்தை

நின்ற பிறகுதான் நினைத்துப் பார்க்கிறோம்

 

உரசிப் பற்றிக் கொள்ளும் வரை

பத்திரமாய் தான் வைத்திருக்கிறோம்

தீக்குச்சிகளை

பள்ளிப் பருவம் வரை

எதிர்ப்படும் ஆசிரியரை வணங்குவது போல்.

 

உயரப் பறக்கும் தருணங்களுக்கு

இடையில் முளைக்கும்

சிறகுகள் மட்டுமே காரணமென்று

பறவை நினைப்பது போல்

நம் ஒவ்வொரு அசைவுக்கும்

நான்' மட்டுமே காரணமென்று

இறுமாந்திருக்கிறோம்.

 

எல்லாவற்றையும் இயக்கியபடி

நம்முள் நகரும் காற்று

நம் கண்ணுக்குத் தெரிவதேயில்லை.

 

வர்ணம் தீட்டினால்

கூழாங்கல்லுக்கும் கூட இடமளிப்போம்

வரவேற்பறையில்

உயர்த்திவிட்ட ஏணியை வைப்பதோ

கொல்லைப்புற சுவரோரம்

 

ஆனாலும்

அடுத்தவர் ஏற வாகாய்

சாய்ந்திருக்கிறது ஏணி-

வகுப்பறையில்

கரும்பலகையோரம்

காத்திருக்கும் ஆசிரியர்போல்.

 

 

               

 தீர்ப்பு எழுதும் குற்றவாளிகள்

                                                                               

கருணையையும்

கறாரான தீர்ப்புகளையும்

தண்ணீர்க் குழாய் போல

பயன்படுத்துகிறோம்

 

வாய்த் தகராறில் கொன்றவனை

நம்மால் மன்னிக்கவே முடியாது

விசாரணையின்றி தூக்கிலிடலாம்

 

அறிமுகமில்லாத ஒருவனை

காரணமின்றி தாக்கிய மன நோயாளியை

அடித்தே அனுப்பிவிடுவோம் பரலோகத்துக்கு..

 

களவுக்காக வந்தவன்

கையில் கிடைத்தால்

கட்டி வைத்தே கொன்றுவிடலாம்

ஊர்கூடி செய்யவேண்டும் அதை..

 

மரணதண்டனையை எப்படி நிறுத்துவது

இப்படியான கொடூரர்களை பற்றி

அறியும்போதெல்லாம்.....?

என்று அறம் பாடுகிறது அறிவு

 

     பச்சிளம் பாலகர்கள் மீதும்

           ஒரு பாவமும் அறியாத பிரஜைகள் மீதும்

கொத்து க்குண்டுகளை பிரயோகிப்பவர்களை,

 

யுத்தம் என்றால் பெண்களை சிதைப்பவர்களை,

                தெருவையே மயானமாக்கி

                குவியல் குவியல்களாக

                குழிகளில் தள்ளுபவர்களை

                பார்க்கும்போது

                ஏதோ ஒன்று நம் நாக்கையும்

                விரல்களையும் துண்டாடுகிறது..

 

                போராளிகள் தோன்றிய மண்ணில்

அப்பாவிகள்

பிறப்பதும், இருப்பதும் குற்றமே

                மரணத்தைத்தான்

அதற்கு பரிசாகத் தரமுடியும்

 

                கும்பலாக எதையும் செய்யலாம்

                அங்கீகரிக்கப்பட்ட கும்பலாக

                அது இருக்கவேண்டும்

 

நம் கருணைக்குழாய்களிலிருந்து

இரக்கம் சொட்டுவதே இல்லை

               

தேசமே மயானமானபிறகு

நம் அலசல்கள் யாவும்

போராடியவர்கள்

எங்கெல்லாம் தவறினார்கள்

என்று புலனாய்வு செய்கின்றன..

 

கறாரான கருத்தாளர்கள்

தீர்ப்பு எழுதுவதற்கு முன்பே

தங்கள் பேனா முனையை ஒடித்துவிட்டு

மௌனமாகிவிடுகிறார்கள்

               

நீங்கள் ஒரு கொலை செய்தால்

எங்களால் மன்னிக்கவே முடியாது

ஒரு தேசத்தையே கொன்று குவித்தால்

எங்கள் தர்க்கங்களாலும்

தந்திரங்களாலும்

உங்களை புத்தனாக்குவோம்

சரித்திரத்தின் பக்கங்களில்

நீங்கள் சரிந்துவிடாமல் இருக்க

ஒரு சமாதானப் பரிசையும் தருவோம்..

 

துண்டாடல்

                                                               

ஒரு சுரண்டலில்

சேமித்து வைத்திருந்த

அப்பாவின் கையொப்ப மை..

 

நேற்று பீய்ச்சிய

வாசனை திரவியத்தின் சுகந்தம்,

 

செல்ல மகளுடன் சேர்ந்து

கொக்கிடம் இறைஞ்சி பெற்ற பூ...

 

சில தினங்களுக்கு முன்

வாக்களித்த பின்

வைத்த அடையாளம்..

 

அப்படியே

உன் விரல் தொடலில்

மிச்சமிருந்த சிலிர்ப்பு..

               

என யாவற்றையுமே மனமின்றி

துண்டாட வேண்டியிருக்கிறது

ஒவ்வொரு நக வெட்டலின்போதும்..

 

 

                               

பரிமா() றுதல்

                                                                               

ஆவி பறந்த தட்டில்

இன்னொன்று விழாதா?

என்று ஆவலோடு நோக்குகையில்

கறாராய் வந்தது சொம்புநீர்

கை கழுவுவதற்காக...

 

ஒவ்வொரு முறை சாலையை

கடக்கும்போதும் மிரட்டியது.,

இனிப்பகங்களை அடுத்து அமைந்த

இரத்தப் பரிசோதனை நிலையங்கள்....

 

ஆசுவாசமாய் அருந்தமுடியவில்லை

என்னுடல் வெய்யிலைக்

குடிக்கும் ஒரு குளிர்பானத்தை...

 

தெரிந்தவர் அறிந்தவர் விருந்துகளில்

இனிப்புகளை பரிமாறுகிறவர்கள்

கவனமாக தாண்டிச்செல்கிறார்கள்

உங்களுக்குத்தான் ஒத்துக்காதே

என்ற பரிதாபக்குரலுடன்...

 

               

மதுபானக் கடையில் நிற்பதுபோல்

மறைந்து மறைந்து

 நிற்கவேண்டியிருக்கிறது

டிகிரி காபிக் கடையில்...

 

பேத்தியின் வருகைக்காக காத்திருக்கிறேன்

கடைசியாக கற்றுத்தந்த

காக்காய் கடி' மிட்டாய்

பரிமாறும் விளையாட்டை

அவள் மறவாதிருக்கவேண்டும்...

 

 

தேய்ந்துப் போன குரலின் ஒலி

 

தொலைந்து போன செவிகளை

மீட்டுத்தரும்படிக்

கெஞ்சியது

சிதறிய குப்பையில்

இடறிய ஒலிநாடாச் சுருளிலிருந்து

தீனமாயொரு குரல்.

 

 

 

 

 

 

வெயில்

 

போற்றுவதாலும், தொழுவதாலும்

சிலாகிப்பதாலும்

சிலீரிட்டுக் கடந்தன

மழையும், பனியும்...

 

நட்சத்திர ஜமாவோடு

நடைபழகி நகர்ந்த நிலா...

சில நிமிட பார்வை நகர்த்தலுக்கு

செல்லமாய் சிணுங்கித் தேய்கிறது

 

யாருமற்ற வெளியில்

கவனிக்கப் படாத குழந்தையின்

சிறு விசும்பல் போல

கசிகிறது கதிரவன்

அதிகாலையில்...

 

தனிமையின் சூடு உக்கிரமானது

வீதியில் விழுந்து புரண்டு

துணையற்றுச் சரிந்த வெயில்

பாதங்களோடு பகிர்கிறது

தன் வெம்மையை

 

புலரவைத்தும் மலர வைத்தும்

ஏக்கத்துடன் எதிர்நிற்கிறது சூரியன்

நின்று நிதானித்து நிமிர்ந்து

நிஜத்தை தரிசித்துப் பழக்கமில்லாத நாம்

குனிந்து பூக்களில் துழாவுகிறோம் அழகை...

 

புறக்கணிக்கப் பட்டவர்களின் குரலாய்

எப்பொழுதும் சுளீரென முழங்குகிறது சூரியன்

வெயிலின் மொழி புரியாமல் சபிக்கிறோம்

 

வலிக்க அடித்துவிட்டு

மனம்பொறாமல்

பதார்த்தங்களோடு சமரசத்துக்கு வரும்

தாயைப் போல

இலைகளை உதிர்க்கிறது கோடை

 

என்றாலும்

குழந்தைகள் இரசிக்கின்றன கோடையை

சிறைபட்டவர்களுக்குத் தானே

விடுதலையின் வேட்கை புரியும்!

சிறு பாதங்களின் குறுகுறுப்பில்

தணிந்து மறைகிறது சூரியன் மாலையில்

பகலில் செய்த குறும்புகளை

எண்ணி வெட்கி சிவந்தபடி....

வாசிப்பில் வன்புணர்ச்சி

 

படிக்கக் கிடைத்தவற்றில்

பதிந்து போன படைப்புகளை

கையோடு யாரிடமாவது

பகிரத் துடிக்கிறது மனசு...

 

அவ்வப்போது

அகப்படுகிற அழகேசனிடம்

ஒரு தேநீர் பொழுதில்

கொட்டிவிடுவேன் அத்தனையையும்...

 

மிடுக்கான மேலதிகாரியைப் போல்

சிறந்தனவற்றை மட்டும்

வடிகட்டித் தரச் சொல்லுவான்...

 

புத்தகங்களை திருப்பித் தரும்பொழுது

கிடைத்துவிடும் பதிலாய்

ஒற்றைவரி விமர்சனங்கள்.

 

குமரேசனின் கவிதைகளில்

பொதுவுடமைச் சிந்தனைகள்

சற்று தூக்கல்

 

 

வசந்தபுரம் வசீகரனுக்கு

வார்த்தைகள் வகையாக

வசப்பட்டு விடுகின்றன

 

வேங்கை வேந்தன் வரிகளில்

தமிழுணர்வு தகிக்கிறது

 

கமலேஷ் சித்தார்த்த ஷர்மாவின் கவிதை

தலையும் புரியலை

காலும் புரியலை

 

ஏழுமலையின் கவிதைகளில்

யதார்த்தமான கிராமிய வாசம்

 

என்றெல்லாம் படைப்புகளை

எடைபோட்டு... எடை போட்டு சிலாகிப்பவன்

எழிலரசியின் கவிதைகளை வாசித்ததும்

அவளுக்கு தனங்கள் பெருசோ?”

என்றான் எச்சிலொழுக.

 

 

                               

 

 

 ருசி

                                                                               

ஆற்று மணலில் வீடுகட்டி

போட்டிப்போட்டு கலைக்கும்போது

ஒட்டியிருந்த  மண் ருசியை

வயது முதிர்ந்ததும்

கல்வியும், பதவியும் தடுக்கின்றன

 

 நீர்விட்டுப் பிசைந்து, பிடித்த ரூபத்தில்

உருட்டிச் செதுக்கி தேற்றிய உருவத்தை

தாழ்வாரமெங்கும் பதித்ததுண்டு

விரல்களில் மிச்சமிருந்த மண்துகள்கள்

எந்த உப உணவுமின்றி உள்ளே சென்றுவிடும்..

 

வளர்ந்தபின் மண்ணோடு இருந்த

தொடர்புகள் யாவும் அறுந்து போயின

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்ட

குடும்பத்தை புறக்கணிப்பது போல

கால்களில் மிதிபடுவதோடு சரி..

 

விவசாயம் லாபகரமானது இல்லை

என்று போதிக்கப்பட்டதால்

தோட்டம் சீர் செய்யக்கூட

தொடுவதில்லை உபகரணங்களை..

 

                பளிங்குத்தரைகளை

                பெயர்க்க முயற்சிப்பதில்லை

                பெருச்சாளிகள்...

               

                மழைவந்தால்

                இறுக்க மூடிக்கொண்டு

                தொலைக்காட்சிகளோடு

                சங்கமித்துவிடுகிறோம்

 

                மண்வாசனை மடிந்துபோய்விடுகிறது

                குளிர்சாதன அறைக்குள் வராமலேயே....

 

                எத்தனைக் கழுவினாலும்

                சாமர்த்தியமாக தப்பிய

                ஒரு நாவற்பழம்

                நாவினில் சேர்த்துவிடுகிறது

                மண்ணின் ருசியையும்

                நழுவிப்போன பால்யத்தையும்...

 

 

 

 

 

         கடக்க முடியாத ஆதங்கம்

                                                               

 

துதிப்போருக்கு வல்வினை போம்

துன்பம் போம்' என்றொலிக்கும் போது

முணுமுணுத்தபடி பின்தொடரும்

உதடுகளை கடித்துக்கொள்ளும்போதும்...

 

தேவக்குமாரனின் பிறப்பிற்காக

இரவெல்லாம் வீதியெங்கும் பாடிக்கொண்டே

நேசிப்பின் அடையாளமாக

நெஞ்சில் சிலுவையிட்டு

ஆசீர்வதிக்கும் போதும்..

 

வெள்ளி கோர்த்த துளசி மணியுடன்

உலாத்தும் கன்னிச்சாமிகளை காணும்போதும்...

 

வரிசையாக மண்டியிட்டு தொழுவதற்காக

குனிந்திருக்கும் அழகை காணும்போதும்

 

காவடிச்சிந்து உச்சம்பெற்று

கட்டுக்கடங்காமல் ஆடும் கால்களை

கவனித்து களிக்கும்போதும்..

 

                குறுகுறுக்கும் முகத்தோடு

                தியானிக்கும் புத்தத் துறவிகளை

                பார்க்கும்போதும்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மதத்தில் இருந்தால்தான் என்ன

                குடியா மூழ்கிப்போய்விடுகிறது?”

என்ற ஆதங்கத்தை

கடக்க முடியவில்லை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.பிரிதலும்.... சேர்தலும்....

                                                               

காற்று கரைத்திருக்குமோ

இலையின் பச்சையை...?

சேலை உருவப்பட்ட பாஞ்சாலியாய் படபடத்தது தரையில் கிடந்த சருகு....

 

எந்த இடத்தில்  மறைந்திருக்கும்

என் அதிகாலை மலர்ச்சி?

என்ற இடையறாத துக்கத்தோடு

வாடி வதங்கிக் கிடந்தது மல்லி...

 

எங்குச் சென்று ஒளிந்திருக்கும்

காலையில் கேட்ட ஆலயமணியொலி?

               

எந்த நொடியில் கரிந்திருக்கும்

வானிலிருந்து விழுந்த எரிநட்சத்திரம்?

 

என்ன சொல்லி பிரிந்திருக்கும்

மேகத்திலிருந்து நழுவி வந்த அந்தத் துளி?

 

ஏதோ ஒரு ஜீவனின்

காத்திருத்தலை நிறைவு செய்ய

எதனிடமிருந்தாவதுஏதேனும் ஒன்று

விலகி வரத்தான் வேண்டியிருக்கிறது...


விமர்சனம்

                                                               

ஒரு தேசத்தையும் மற்றொரு தேசத்தையும்

தன் இரு கைகளால்

பிணைத்துக் கொண்டிருந்தது கடல்..

 

எல்லா கழிவுகளையும் சுமந்துகொண்டு தளும்பியது...

அவ்வப்போது சீண்டியபடி திமிறியது காற்று..

 

ஒவ்வொரு முறையும் ஊடலோடு

வெளியேறுவது போல் போக்குக் காட்டிவிட்டு

உள்ளே ஓடி கடலின் மடியில்

ஒளிந்துகொண்டது அலை...

 

கலன்களையும், கட்டுமரங்களையும்

நகர்த்திக்கொண்டிருந்தது நீர்..

 

நிலத்தைவிட நீண்டுகிடந்தாலும்

மையத்தில் அமைதியே ஆழ்ந்துகிடந்தது..

 

மிகச்சுலபமாக தன் காலணியை

வீசிக்கொண்டிருந்தான் ஒருவன்

தானே திரும்பிவரும் என்பதறிந்தும் கூட...

 

அறிவுஜீவி என்றொரு அடையாளம்

 

பரவலாக அறியப்பட்ட

எல்லா விஷயங்களுக்கும்

எதிர்கருத்து தடவிய

நாவோடு திரியவேண்டும்

 

இயன்றால்

ஹிட்லரும், இடிஅமீனும்

பூமியின் பாரத்தைக் குறைக்க

அவதரித்தவர்கள்

என நிறுவ வேண்டும்

 

பிணைக் கைதிகள்

கழுத்தறுபட்டால்

எந்த மதம் எந்த இனம்

என்பதாய்ந்து பொங்கவேண்டும்

 

எதிர் கருத்துக்கள் கொண்டவர்கள்

எல்லோரும்

ஏதேனும் ஒரு அமைப்பிடம்

பணம் பெற்றுத்தான்

மூச்சு விடுகிறார்கள் என்று கூசாமல்

ஒரு கட்டுரை புனைய வேண்டும்

 

எல்லா போராட்டங்களுக்கும் பின்னே

சாதகமான அரசியலுக்கு மட்டும்

சாமரம் வீசவேண்டும்

 

பரிதவிக்கும் அபயக்குரலில்

தமிழ் வாடை வீசினால்

பரிசீலனைக்கு இடமின்றி

நிராகரிக்கவேண்டும்

 

ஈரம் சுரண்டப்பட்ட

இதயத்தோடு

ஒவ்வொரு கொள்கையையும்

செதுக்கினால்

எளிதாக கிடைத்துவிடும்

அறிவுஜீவி' என்றொரு

அடையாளம்..!

 

 

 பாடசாலை

 

அந்த மைதானத்தின் மண் துகள்களில்

கலந்து, கரைந்துவிட்டிருந்தது

எங்கள் இளம்பிராயம்..

 

வளாகத்தில் பெருத்திருந்த

மரங்களின் உடம்பில்  குச்சித் தூரிகைகள்

வரைந்த மகத்தான ஓவியமாய்

எங்கள் பெயர்கள்.

 

சிராய்ப்புகளின் மீது எச்சில் மருந்து தடவி

திரும்பத் திரும்ப பாடிச் சென்ற

கபடிப்பாட்டுப் போல

இனிக்கவேயில்லை வேறு எந்தப் பாடலும்...

 

சட்டை மடித்து காக்காய் கடிகடித்து

பகிர்ந்த நெல்லிக்காய் போல்

சுவைக்கவில்லை எந்தக் கனியும்...

 

தடித்த மஞ்சள் சட்டையுடனும்

புடைத்த நீலவர்ண கால்சராயுடனும்

நகர்ந்து சென்ற

சிறுவயது புகைவண்டி போல்

வாய்க்கவேயில்லையொரு

உவப்பான பயணம்...

 

சூரியன் வருவது யாராலே

என்று எங்கேனும் குரல் ஒலித்தால்

சட்டென்று பனிக்கின்றன கண்கள்

எல்லோருக்காகவும் எல்லோரும்

பிரார்த்தித்த அந்த பேதமற்ற பொழுதுகள்...

 

எங்களின் எல்லா வெற்றிகளிலும்

சேர்ந்தே வருகிறது

ஏதோவொரு ஆசிரியரின் விரல்...

 

எங்கள் எல்லா அறங்களிலும்

உரக்கக் கேட்கிறது

ஏதோவொரு ஆசிரியரின் குரல்...

 

எங்கள் எல்லா அறிதல்களிலும்

உணர முடிகிறது

ஏதோவொரு ஆசிரியரின் அக்கறை...

 

நெகிழ்வான தருணங்களில் எல்லாம்

கண்ணீருடன் அசைபோடுகிறோம்

சந்தோஷங்களை மட்டும் சுமந்து திரிந்த

இளம்பிராயத்தை .....


எதிர்ச்சொல்

 

இலக்கணத்தை கற்பித்தல்

வாழ்வியல் சட்டப்படி

தரப்பட்ட தண்டனையாகிவிடுகிறது

 

மகனின்

புரியவில்லை' என்கிற சொல்

வினையாற்றுகிறது என்னுள்

 

எதிர்ச்சொல் எதுவென்கிற

எளிமையான பாடத்திட்டத்தை

கையிலெடுத்துக்கொண்டு

கற்பிக்கிறேன் சௌகர்யமாக..

 

நீதி'க்கு எதிர்ச்சொல்அநீதி'

நியாய'த்துக்கு எதிர்ச்சொல்அநியாயம்'

சுத்தத்'துக்கு எதிர்ச்சொல்அசுத்தம்'

என்று உற்சாகமாய் பிள்ளை

பதிலளித்துக்கொண்டிருக்கிறது

 

எதிர்ச்சொல் விளையாட்டு

எல்லாவற்றையும்விட பிடித்துப்போய்விடுகிறது அவனுக்கு

கல்யாணப்பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள்

என எல்லாவற்றிலும்

எதிர்ச்சொல்லை

ஒரு துப்பறிவாளன் போலக்

கண்டடைகிறான்..

 

தினசரியை புரட்டிக்கொண்டிருக்கிற

அதிகாலையில்

கதி'யற்றவர்களுக்கான சொல்தான்

அகதி'யா எனக் கேட்கிறான் திடுமென..

 

யதார்த்தத்தின் இலக்கணம்

அப்படித்தான் சொல்கிறது....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.             தந்தைமை மனசு.

 

திங்கள் கிழமை

தமிழ் இரண்டாம் தாள்

 

செவ்வாய் மதிய இடைவேளை

போதுமானது

ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு

 

டிஃபரண்ட்ஷியேஷனும்

இண்டக்ரேஷனும்

பற்றி இழுக்கின்றன கால்களை

 

வெள்ளிக்கிழமைக்கு

வேண்டும் விடுமுறை

வேதியியல் பாடத்துக்கு

 

உயிரியல் பாடத்துக்கு

தயாராக வேண்டும்

உறங்குகிற மகள் எழுவதற்குள்...

 

அலுவலகம் கிளம்பும்

அவசரத்திலும்அரற்றிற்று

என்  தந்தைமை மனசு.

 

தொலைந்து போதல்

 

என்றோ  முற்றத்தில்

தொலைந்து போன காதணி

பெருக்கிக் கூட்டிய மூலையில்

ஒருநாள் கிடைத்தது...

 

ஒவ்வொரு நாளும்

தொலைந்து தொலைந்து

மறுபடி கிடைத்தது

ஏதேனுமொரு சாவி

 

சான்றிதழைத் தேடிக்

குடைந்ததில் கிடைத்தது

எப்பொழுதோ தொலைத்த

பால்ய கால டைரி

 

எவரோ தொலைத்த

ஒற்றை நாணயம்

காலடியில் தட்டுப்பட்டு மின்னியது

 

எங்கு தேடியும்  கிடைக்கவேயில்லை

அலட்சியமாய்

சோம்பித் தொலைத்தநேற்று'.

 

 

தேர்ச்சி

 

கணிதத்தோடு போராடுகையில்

வருகிறதொரு குரல்...

ஒரு குடம் தண்ணி பிடிச்சு  உள்ளே வையேன்'

அறிவியலோடு உரையாடுகையில்

அடுப்படியில் கூட நிக்காம

எப்படி நீ குப்பை கொட்டப் போறே?'

வரலாற்றைப் புரட்டும்போது

புரட்டியெடுக்கிறது  மாதாந்திர வலி...

இருப்பினும் ஒவ்வொரு வருடமும்

தலைப்புச் செய்திகளில் தவறாமல்

இந்த வருடமும் மாணவிகளின்

தேர்ச்சி சதம் அதிகம்'!

 

 

கறை

 

சரியென்று சொல்கிற

சகல நியாயங்கள் மீதும்

கறை....

வெட்டிய ஆட்டிலிருந்து

சொட்டிய ரத்தம்.

 

 

சுங்கச்'சாவடி

 

விளை நிலங்களை தரிசுகளாக்கி

ஊர்களை புறக்கணித்துவிட்டு

வயல்களின் மீது பாய்ந்தோடின

புறவழிச்சாலைகள்....

பயிர்களையும், மேயும் உயிர்களையும் சாவடித்துவிட்டு.. நடு, நடுவே சுங்கச்'சாவடிகள்'

 

 

 

அறம்

 

தேர்வு அறையில்

அமைச்சர் ஆள் மாற்றினார்

ஆசிரியர் தாள் மாற்றினார்

பாஸ் ஆகியது பணம்

பெயில் ஆகியது அறம்

 

 

 

 

 

 

பெருந்தன்மை

 

கத்தரிக்காய்காரனிடம் கத்திப்பேசி

குறைத்த ஒரு ரூபாயையும்...

 

பூக்காரியிடம் பேரம் பேசி

பெற்ற ஒரு ரூபாயையும்...

 

பழைய பேப்பர்க்காரனின் எடைத்தராசை

கறாராய் கண்காணித்து

கறந்த ஐந்து ரூபாயையும்

 

கைக்குழந்தையோடு

கொளுத்தும் வெய்யிலில்

துரத்திவந்த பிச்சைக்காரியிடமிருந்து

லாவகமாய் தப்பித்து

சேமித்த ஒரு ரூபாயையும்

 

அரைவயிற்றை நிரப்பி

அலங்கார அட்டைக்குள்

அக்கிரமமாய் வைக்கப்பட்ட

அநியாய பில்லின் மேல்

வைத்துவிடுகிறோம்

அன்பளிப்பாய்...

 

விடுமுறை

 

விடிய, விடிய மேட்ச் பார்த்துவிட்டு

தூங்குபவனை எழுப்பினால்,

கையிலிருக்கிறதுகேஷுவல் லீவ்'

என்றபடி புரள்கிறான்...

தலைவலிக்கிற மாதிரி இருக்கு.......'

துணை செய்கிறது மெடிக்கல் லீவு...

.ஏர்ன் லீவ்' மிச்சமிருக்கு என்றபடி

கூட்டாளிகளோடுடூர்' போகிறவனை

கையசைத்து அனுப்பிவிட்டு

விடுப்பில்லா அடுப்படியில்

புகைகிறது பெண்மை.

 

 

 

ஈரக்காற்று

                                                               

உடனிருக்கும் பொழுதுகளில்

முத்தமிட எத்தனிக்கையில்

போலியான ஊடலோடு நழுவிச்செல்கிறாய்...

 

பிரிந்த பிறகு  தழுவிச்செல்லும் ஈரக்காற்றில்

உணர்கிறேன்உன் கண்ணீரையும், முத்தங்களையும்...

தேடல்

 

ஓளிந்துக்கொண்டிருக்கிற எலியை

துரத்த இடுக்களில் எத்தனிக்கையில்

கிடைத்துவிடுகிறது

சென்றவருடம் தவறி விழுந்து 

அலைக்கழித்த

ஒற்றைத் திருகாணி..

 

தொலைந்துபோன புத்தகத்தைத்

தேடும்போது,  தட்டுப்படுகிறது

மறக்கவே முடியாத ஒரு புகைப்படம்..

 

எதற்காகவோ துழாவும்போது

கையில் சிக்குகிறது

என்றோ வைத்த நூறு ரூபாய்...

 

வருகின்ற விருந்தாளிக்காக

வீட்டை உதறும்போதுநெகிழவைத்தது

நிறைவேறாத காதலின் சின்னம் ஒன்று..

 

யாரிடமிருந்தாவது சீவி செதுக்கி

செலுத்தப்பட்ட  விஷம் தோய்த்த சொல் ஒன்று

இதயத்தைக் குத்திக் கிளறும்போது

கண்ணீரோடு தெறித்துவிழுகிறது

கவிதை ஒன்று...

 

ஒவ்வொருமுறைக் கேட்கும்பொழுதும்

கூசாமல் சொல்லிவருகிறேன்

நான்தான் எழுதினேன்' என்று,

நீங்கள்தான் தோண்டினீர்கள்

என்பதை வெளியில் சொல்லாமல்..

 

 

               

                               

 

 

 

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒளி தூங்கும் திரி

 

மரம் பிளந்து சடசடவென

கிளைகள் தெறித்துவிழுவது போல

காகிதத்துகள்கள் விழுகின்றன

ஒவ்வொரு முறை வெடிக்கும்போதும்..

 

ஊரின் ஒரு ஓரம் இருந்த மயானம்  நீண்டு பரவி

தெருக்களில் புகுந்து கிடப்பதுபோல்

கனன்று தெறிக்கும்பொறி'களோடு திரிகள்

தீயின் வம்சம் அவ்வப்போது

துவம்சம் செய்தும் தீராத நாவோடு

திவசத்திருநாள்

 

அழகழகான அலங்காரங்களோடு

சரசரக்கும் ஆடைகளோடு

அங்கும் இங்குமாக குழந்தைகள்..

 

ஏனோ நினைவுக்கு வருகிறது

வெடிமருந்தைத் அப்பியபடி

திரிகளைத் திணிக்கும் விரல்கள்...

எப்பொழுது ஏற்றப்போகிறோம்

அவர்களின் வாழ்வுக்கான

ஒளி தூங்கும் திரியை..

அறியாமை

 

மேடையிலிருந்து இறங்கியதும்

கைகுலுக்கி பிரமித்தனர்

எப்படி இத்தனை தகவல்கள்

உங்களிடம்...' என்று........

 

கட்டுரையை வாசித்ததும்

கேட்கிறார்கள்

எப்படி தெரிந்து கொண்டீர்கள்

எல்லாவற்றையும் என்று

 

புன்னகையுடன் விலகுகிறேன்

எனக்குத்தானே தெரியும்...

எனக்கு எதுவும் தெரியா'தென்று!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாறோடு சேரும் பூ

 

நாறோடு

சேர்ந்தபின்தான்

இறைவன் தோள்களிலோ

கூந்தலிலோ மணக்கும்...

செடியில் தனித்தனியே

கிடக்கும் பூக்கள்

 

 

வலி

 

                காத்திருத்தலும் பிரிதலும்

                விட்டுச் செல்கிற

                மௌனப் பிரளயம்

 

 

 

 

சாக்பீஸ்

ஒவ்வொரு பிரசவத்திலும்

உதிர்த்திடும் உயிரை...

துளித் துளியாய் கரும்பலகையில்

 

 

ஒற்றை நாணயம்'.

 

 

பேருந்தில் தட்டுப்படாமல்

சாவுகிராக்கி' ஆக்கியது என்னை...

 

இல்லையென்றால் பரவாயில்லை'

பெருந்தன்மையாளனாக்கியது

துணிக்கடையில்

 

சிறு குழந்தையாக்கியது

சில்லரையில்லா பெட்டிக்கடையில்

சாக்லேட்'டாய்

 

புண்ணியவானாக்கியது

பிச்சைக்காரனால் மதியப் பொழுதில்

 

எங்கே என்று தேடியபோது

பிணத்தின் நெற்றியில்

படுத்தபடி அரற்றியது

எனக்கொன்றும் தெரியாது'  என்றபடி

ஒற்றை நாணயம்'.

 

 

 

சந்தைப் படுத்துதல்

 

ஒரு மணி நேரம்

கண்ணைக் கட்டிக்கொண்டு

பின்னால் நடப்பவனை

கைத்தட்டி கௌரவிக்கிறீர்கள்

 

ஒரு பார்வையற்றவன்

வாழ்க்கை முழுக்க

நாலா திசையிலும்

அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான்

 

தவளை போல தாண்டிக் குதித்து

வெள்ளைக் கோட்டை கடப்பவனுக்கு

தாராளமாய் ஒரு தங்கப்பதக்கம்

தருகிறீர்கள்..

 

கால் இரண்டும் சூம்பிப்போனவன்

காலம் முழுவதும்

தவ்விக்கொண்டுதான் இருக்கின்றான்..

 

மூன்று நாட்கள்

எதுவும் பேசாமல்

கார்ப்பரேட் சாமியாரின் முகத்தைப்

பார்த்துக்கொண்டிருக்க

தொகை கட்டிப் பயணித்து

சிறைபட்டுக்கொள்கிறீர்கள்

 

ஒரு வாய்பேசாத ஊமை

ஆயுள் முழுவதும்

அப்படித்தான் இருக்கின்றான்

 

ஒரு பந்தலின் கீழ்

ஒலிப்பெருக்கிக் கட்டி

பகல் மட்டும் பட்டினி கிடந்து

ஒரு நாள் அடையாள

உண்ணாவிரதம் என்கிறீர்கள்

 

தேசத்தில் பாதிபேர்

வருடத்தில் பாதி நாள்

அவ்வாறே வாழ்கிறார்கள்..

 

நீளம் தாண்டுபவர்களை

சாக்கடைகளை தாண்டியபடியும்,

 

நீச்சல் வீரர்களை

ஆற்றைக் கடந்தபடியும்,

 

பளுதூக்குபவர்களை

சந்தைகள் தோறும்

சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்..

 

அனுதினமும்  அப்படியே இருப்பவர்கள்

ஆச்சர்யத்துக்குரியவர்கள் இல்லை

என்றோ ஒருநாள்

விளம்பர வெளிச்சத்தில்

வெளிப்படுபவர்களை

சாகசக்காரர்கள் என்கிறீர்கள்...

 

ஏனென்று கேட்டால்

எல்லாம்மார்க்கெட்டிங்'

என்கிறது

நவீன சாமர்த்தியம்..

 

 

 

 

 

 

 

 

 

தனிமையின் மொழி

 

புறக்கணிக்கப்பட்டவர்களாய்

இருப்பதில்

சௌகர்யங்கள் பல உண்டு..

 

பகிரவும், ஆலோசிக்கவும்

தகுதியற்றவர் பட்டியலில்

நீங்கள் இடம் பிடித்தால்

சாதகங்கள் நிறைய உண்டு..

உங்கள் மூளையின் மடிப்புகள்

கொதித்து தழும்புகளாகாது..

 

வசீகரமற்ற முகம் அமையப்பெற்றால்

இன்னும் விசேஷம்

விலாசம் கேட்டு வருபவர்கள் கூட

அனாவசியமாக உங்களைச் சீண்டுவதில்லை

காதல் பார்வைகளை மொழி பெயர்த்து

கலங்கித் திரியவேண்டியதில்லை

 

நகைச்சுவைத் துணுக்குகளுக்காக

பின்மண்டையை

பிறாண்டிக்கொண்டிருக்கத்

தேவையில்லை

மனிதர்கள் கூடும் இடம் யாவும்

உங்கள் இருப்பே நகைச்சுவைதான்...

 

ஒவ்வொருவராகத் தேடிச்சென்று

தனித்தனியே விடை பெறத்தேவையில்லை

ஏனெனில்

உங்களைத் தவிர

உங்களை யாரும் தேடப்போவதில்லை...

 

வெள்ளந்தியாக சொற்களை

தாராளமாக பிரயோகித்தால்

பரிசாக

கை நிறைய தனிமை கிடைக்கும்

 

நீங்கள் கவனிக்கப்படாமலேயே இருப்பீர்கள்

ஒரு சாகசத்தை நிகழ்த்தும் வரை..

 

மரத்தில் மறைந்திருக்கும்

இலையின் நிழல்போல

கிளையிலும் விழலாம்..

இலையிலும் விழலாம்..

மண்ணிலும் விழலாம்..

அல்லது

சேமித்துவைத்த தனிமையிலமர்ந்து

நீங்கள் ஒரு கவிதையும் புனையலாம்.. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                               

               

 

               

 

 

               

               

               

               

                                                                                                               

               

 

 

 

               

               

               

               

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

               

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...