சனி, 5 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 1

இளைய பாரதத்தினாய் வா வா வா
 எதிரிலா வலத்தினாய் வா வா வா

உன் தங்கை:


பிரியத்துக்குரிய அண்ணா,

எப்படியிருக்கிறாய்? சுகமற்றிருந்தாலும் பரவாயில்லை, இரு. இன்னும் பல வருடங்கள் இரு. வெளிநாட்டுக்குப் போனவர்கள் எல்லோரும் பார்சல் பார்சலாக அனுப்புவதுதான் இங்கு சம்பிரதாயம். உன்னால் அனுப்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை... நீயே பார்சலாக வந்துவிடாதே... பிரிப்பதற்கான துணிச்சல் எங்களுக்கு இல்லை...


பாரதியென்றால் உனக்கு கொள்ளைப் பிரியம். உனக்காக உல்லனில் பாரதி பின்னி வைத்திருக்கிறேன். கீழே உனக்குப் பிடித்த பாரதியின் வரிகளோடு... அடிக்கடி மழை வரும்தோறும் பாடுவோமே... அதே பாடல்!

     திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட-தீம்தரிகிட
     பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது-தாம் தரிகிட
     செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
     தெய்வீகக் காட்சியைக் கண்முன் கண்டோம்!
     கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

எனக்கு இப்போதெல்லாம் ஊர்வலங்களைப் பார்க்க வெறுப்பாக இருக்கிறது. நீ நம்ப மாட்டாய். ஆனால் உண்மை அதுதான். எந்த மேளச் சத்தமும் என்னைக் கவரவில்லை. நீ ஒப்புக்கொள்ள மாட்டாய். விழாக்கள் கசக்கின்றன எனக்கு. கல்யாணம் வேண்டாமென்று இப்பொழுதெல்லாம் நான் சொல்வதற்குக் காரணம் கூச்சமல்ல. உண்மையான விரக்தியில். உன்னை இழந்து ஒன்றைப் பெறுவதில் எனக்கு உடன்பாடில்லை.

திரும்பவும் வந்துவிடு அண்ணா. நம் கதைகளில் அடிக்கடி கேட்ட கால எந்திரம் நிஜத்தில் கண்டுபிடிக்கப்படும் காலம் ஒருநாள் வரலாம். பழையபடி நம் குழந்தைப் பருவத்திற்குப் போய் ஒளிந்து கொள்வோம். மறுபடி இந்தக் காலம் நம்மைக் கண்டுபிடிக்காத படிக்கு...

அம்மாவுக்குத் தெரியாது... நீ சிறைக்கம்பிகளுக்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாயென்று... நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, நாளை எண்ணியபடியே தானே நகர்கிறது... ஒவ்வொரு முறை காலண்டர் தாள்களை உற்சாகமாகக் கிழிக்கும் போதும் அதன் எஞ்சிய தாள்கள் படபடக்கின்றன. அப்பொழுதெல்லாம் புரியவில்லை... இப்போது உணர்கிறேன். அவை நம்முடைய தினங்கள் தானென்று...

நீ கவிதை மட்டும் தான் எழுதுவாய் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உனக்கு மென்மையாகப் பாடவும் தெரியுமென்று எனக்குத்தான் தெரியும்.

எப்பொழுதாவது வரும் சந்தோஷ நிமிடத்தில், ஏதாவது உனக்குப் பிடித்த உற்சாகமான வேலைகளுக்கிடையில், உன்னிடமிருந்து வரும் இனிமையான குரல் எனக்குப் பிடித்தமானது. ஒரு மாலை நேரத்துத் தென்றல் சரக்'கென்று உரசிவிட்டு மறுபடி வராதா என்று ஏங்க வைக்குமே... அது மாதிரி நான் உன் பாடல்களை ரசிப்பேன்.

சமயங்களில், உன் பாடல் ,உன் மனதின் மெளனத்தின் மொழிபெயர்ப்போ என்று கூட நினைப்பேன்.

     நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
     சொற்பனந் தானோ-பல தோற்ற மயக்கங்களோ?
     கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
     அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

உன் பயணத்துக்கான ஆயத்தத்தில் துணிகளை அடுக்கியபடி பாடிய உன் குரல் இங்குதான், இதே அறையில் தான் சன்னமாக கேட்டுக் கொண்டிருப்பது போலவே உணர்கிறேன்.

பாரதியாரைப் போல கம்பீரமாக வேடமணிய உனக்கு ஆசை. அடிக்கடி உன் ஆசையை என்னிடம் வெளிப்படுத்துவாய். இதென்ன குழந்தைத்தனம் என்று நான்கூட சிரிப்பதுண்டு. ஜனா ஒரு முறை கேமராவோடு வந்தபோது உனக்குள் அந்த ஆசை கொழுந்து விட்டதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பாவிடம் இருந்த அரதல் பழசான கோட்டையும், நீளமான துண்டையும் உனக்கு அணிவித்து புகைப்படமெடுத்தோம். அவ்வளவு மொத்தையாய் மீசையில்லையே என்று வருத்தப் பட்டுக் கொண்டு உன் மெலிதான மீசையை இருபக்கமும் முறுக்கியபடி கம்பீரமாக நடந்தது ஒரு குழந்தையின் குதூகலத்துக்குச் சமமானது அண்ணா.

குழந்தைகளெல்லாம் பெரியவர்கள் போல் தாவணியணிந்தும், முண்டாசு அணிந்தும் பாவனை காட்டுகையில் நமக்கும் வாய்ப்பு கிடைக்காதா குழந்தைகளாவதற்கு என்று தவிக்கிறோம் இல்லையா அண்ணா...?

     ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
     மானத்தி லேஅன்ன தானத்திலே
     கானத்தி லேஅமு தாக நிறைந்த
     கவிதையி லேஉயர் நாடு-இந்தப்
     பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
     பாரத நாடு.

என்று முன்னும் பின்னுமாக பாரதியின் கவிதைப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு நீ நடை போட்டது ஒவ்வொரு முறை பாரதியின் புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதும் என்னை அழுத்தி மூச்சடைக்க வைக்கிறது.

‘இந்தப் புத்தகங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன்' என்று இங்கிருந்து கிளம்பும் போது நீ வருந்தியதுதான் எங்களைப் பிரிவதற்கான துக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுமைகளைக் குறைக்க வேண்டிய நிர்பந்தத்தினால் உனது புத்தக அலமாரியில் கால்வாசியை மட்டும் உன்னால் எடுத்துச் செல்ல முடிந்தது.

இப்பொழுது உன்னைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது நீ எப்போதும் துரத்தப்பட்டவனாகவே இருந்திருக்கிறாய். சிறுவயதில் தொட்டதற்கெல்லாம் பயந்து நடுங்கும் சுபாவம் உனக்கு. துணைக்கு யாருமில்லையென்றால், இருட்டின் பிரதான வாசல்களில் நீ நுழையவே மாட்டாய்.

இருட்டின் முனைவரை வந்து பின் உன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு சிறுவயதில் எல்லோரும் ஓடி வந்துவிடுவார்கள். வீடதிரக் கதறியபடி, யாரோ உன்னைத் துரத்திக் கொண்டு வருவது போல் பாய்ந்தடித்து நீ ஓடி வருவதைப் பார்க்க எல்லோருக்கும் எத்தனை சந்தோஷம்...! இன்று உன்னைத் துரத்துவது மரணம் என்றான பின் கண்ணீர் வற்றுமளவு அழுகிறேன் அண்ணா. துணைக்கு ஒருவருமில்லாமல் இருட்டுக் குகைக்குள் உன்னைக் கைவிட்ட கடவுளைச் சபிக்கிறேன்.

ஒருமுறை எவனோ என் பின்னே சுற்றுவதை உன்னிடம் மட்டும் ரகசியமாகக் குமுறிக் குமுறிச் சொன்ன போது நீ பதட்டப்படவில்லை. ‘எடு அரிவாளை' என்று ஆர்பாட்டம் செய்யவில்லை. அவன் தோள் மீது கைபோட்டு ,ஒரு கூடப் பிறந்தவன் வழிதவறும்போது நெறிப்படுத்தும் மூத்தவன் போல் அவனுக்கு உபதேசித்தாய். பாக்கியலக்ஷ்மி கபேயில் டிபன் வாங்கித் தந்து, தட்டிக் கொடுத்து அனுப்பியபோது, நடுத்தெருவில் செருப்படி பட்டது போல் மிரண்டுபோனவன் அதன்பின் ஒருநாளும் என் பக்கம் திரும்பக் கூட இல்லை. உன்னால் யாரையும் மனம் நோகக் கடிந்துகொள்ள முடியாது. அடிபட்ட ரணத்தில் மருந்து வைத்துக் கட்டுவதைக் கூட கண்கொண்டு பார்க்க மாட்டாய். பின் எப்படி நீ கொலை செய்திருக்கமுடியும்?

அம்மாவிடம் ஆலோசிப்பதைவிட மிக அதிகமாக உன்னிடமே எதைப்பற்றியும் அலசியிருக்கிறேன். என் மாதாந்திர அவஸ்தைகள், படிப்பின் மீது கவனம் சிதறும் பதின்பருவப் பிரச்சினைகள், சேனல்கள் வழிச் செலுத்தப்படும் மனரீதியான வன்முறைகள், நிகழ்வுகளின் மீதான மனக் குமுறல்கள்... இப்படி எல்லாவற்றிலும் நீதான் எனக்கு மிக நெருக்கமான தோழமை.

உன் மீதான எனது பிரியத்துக்கு ஈடாக வேறொன்றையும் உதாரணமாக இந்த உலகில் என்னால் கூறமுடியாது அண்ணா. ஒரு பெண்ணுக்கு ஆண் துணை அத்தியாவசியம். துணையின்றி வாழ்வது மிகக் கடினம் என்றெல்லாம் கூறுவதை நான் ஏற்க மாட்டேன். அப்படி எதுவுமில்லாமலே வாழ்ந்துகாட்ட முடியுமென்று நிரூபிப்பேன். அப்படித்தான் ஒரு ஆண்துணை வேண்டுமென்றாலும் உன்னைவிட எனக்கு வேறுதுணை வேண்டியதில்லை. என்னுடைய துக்கங்களுக்கும், குழப்பங்களுக்கும் நீ தான் தீர்வு கண்டிருக்கிறாய். உன்னிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது. உன்னுடைய வெற்றிடத்தை வேறு யாரோ ஒருவன் கணவன் ஸ்தானத்தில் வந்து நிரப்பிவிட முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கல்யாணமென்பது ஒரு சம்பிரதாயம் என்பதைத் தவிர அதன் மீது எனக்கு வேறு எந்த விதமான உயர்ந்த அபிப்ராயமுமில்லை. எனது திருமணச் செலவிற்காகப் பணம் சேமிக்கும் பொருட்டு உன்னைச் சுருக்கிக் கொள்ளவும், நீயே உன்னைத் துன்புறுத்திக் கொள்ளவும் தேவையில்லை அண்ணா... நீ வந்துவிடு...

என் குரல் உனக்குக் கேட்கிறதா?

எந்தப் புழுக்கமான இருட்டான அறையில் ஒரு வாய்த் தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்கிறாயோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லிவிட முடியும். நீ குற்றவாளியில்லை. உன்னால் குற்றம் செய்திருக்கவும் முடியாது. உனக்காக வாதாட லகுவான சட்டங்களும், தோதான ஆட்களும் அங்கு இல்லை. இப்படியொரு கையறு நிலையில் இந்தப் பயணம் உன்னைச் சிக்கவைக்கும் என்று தெரிந்திருந்தால் உன்னை அனுப்பியே இருக்க மாட்டோம்.

இன்னமும் கூட நம்புகிறேன்... ஏதோ ஒரு தேவதை... ஏதோ ஒரு சக்தி... அவர்கள் மனதில் ஈரத்தைப் பரப்பி உன்னைக் காப்பாற்றி விடுமென்று...

பொழுது போகாத தருணத்தில் நாமிருவரும் மாறி மாறி, டேப் ரெக்கார்டரில் பதிந்து வைத்த நம் குரல்களை மறுபடி ஒலிக்கச் செய்கிறேன்.

     ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
     உதய ஞாயி றொப்பவே வா வா வா
     களையி ழந்த நாட்டிலே முன்போலே
     கலைசி றக்க வந்தனை வா வா வா

                                                                                                 

பிரியமுடன்,

உன் தங்கை யமுனா.

--------------------------------------------------------------------------------------------------------
(மார்ச் - 2011 - யுகமாயினி இதழில் ஐந்து அத்தியாயங்களும் பிரசுரம்)

மீதமுள்ள நான்கு அத்தியாயங்களை  தினசரி ஒன்றாக வரும் நாட்களில் பதிவேற்ற உள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...