ஞாயிறு, 6 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 2

உன் அப்பா

     என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க:
     பன்னிரு விழியால் பாலனைக் காக்க


எஸ்.டி.டீ. பூத்தில் கால் கடுக்க முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தபடி நின்றிருந்தேன். முன்பு போல் என்னால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. தள்ளாமை என்னைப் படுத்துகிறது. வாய் மட்டும் சஷ்டியை முணுமுணுத்தபடி...


எமன் பறிக்கும் பக்குவத்தில் நானும் உன் அம்மாவும் வீட்டில் விதியே எனக் கிடக்க இளம் பிஞ்சு உன்னைப் போகுமிடமெல்லாம் துரத்தும் விதியை என்ன சொல்வேன்...

இங்கேயே உனக்கேற்ற வேலையை உன்னால் தேடிப் பிடித்திருக்க முடியும். இந்த தேசத்தையும் எங்களையும் உதறித்தள்ளி விட்டு எங்கோ ஒரு இரக்கமற்ற தேசத்தில் உன் வாழ்க்கை முடியப் போகிறது.

உன்னைக் குற்றவாளி என்கிறார்கள். இன்னொரு உயிரைப் பறித்த கொலைகாரன் என்கிறார்கள். குடியேறிய தேசத்துக்கு எதிரானவனென்கிறார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை மகனே! உன் அம்மாவின் உயிரை மெல்ல மெல்ல உருக்கி வழிந்தோடும் கண்ணீர் கையாலாகாத என்னைச் சுடுகிறது.

சமயங்களில் ஐ.எஸ்.டி. லைன் கிடைப்பதில்லை. உன்னுடைய வக்கீலை தொடர்பு கொள்வது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. இருப்பதை விற்றும் வைத்தும் தானே உன்னை அனுப்பினோம். வெறுங்கையை வைத்துக்கொண்டு எப்படி என்னால் இத்தனை தொலைவு பறந்து வர முடியும்?

     மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
     காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

கயிற்றுக்கட்டிலில் வெறித்த கண்களுடன் எலும்பும் தோலுமாகக் கிடக்கும் உன் அம்மாவிற்கு ஒவ்வொரு வேளை சாப்பாட்டைத் தரவும் உன்னைப் பற்றி புதிது புதிதான தகவல்களை... பொய்யான நம்பிக்கைகளைத் தோய்த்து தர வேண்டியிருக்கிறது. உன் அம்மாவும் உன்னைப் போல் தான்... ஒவ்வொரு கவளத்துக்கும் ஒரு புதுக்கதை கேட்கிறாள்.

பார்க்க வருகிறவர்களெல்லாம் பிள்ளையாசைதான் இன்னும் அவளைப் பிடித்து வைத்திருப்பதாகக் கவலையுடன் சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லி அவளை ஏமாற்றுவது குற்ற உணர்ச்சியில் என்னை வாட்டுகிறது.

சின்ன வயதில் ரத்தம் தெறிக்கும் கதைகள் எதுவும் உன்னைக் கவர்ந்ததில்லை பார்த்தி... ‘புலி பாய்ஞ்சு வந்திச்சாம்' என்று இரண்டு கைகளை காதுகளுக்கருகில் பாதி குவித்தபடி கண்களை உருட்டி உருட்டி மிரட்டினால் போதும்... நீ பயந்து நடுங்குவாய்.

என் விரல் பிடித்துப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழியெல்லாம் உனக்குள் முளைக்கும் ஆயிரத்தெட்டு சந்தேகங்களுக்குச் சலிப்புடனும் சிலசமயம் உற்சாகத்துடனும் பதில்கள் சொன்ன அந்த மாலைப்பொழுதுகளை அவ்வப்போது கண்ணீருடன் நினைத்துக் கொள்வேன் பார்த்தி!

எங்கும் ஓடிவிடாமல் அன்றைக்குப் போல உன்னை இப்பொழுது என்னால் பிடித்து வைக்கமுடியவில்லை. அனாதரவான மனதுடன் ஒவ்வொரு பிடியையும் நழுவ விட்டு அதள பாதாளத்தில் விழுந்துவிடப் போகும் கடைசி நிமிடங்களைத் தொற்றியபடி எனது ஒவ்வொரு நொடியும் நகர்கின்றது.

     பழனிப் பதிவாழ் பாலகுமாரா!

     ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!

நீ கேட்டு வாங்கித் தரமுடியாமல் நான் மறுத்த பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடக்கையில் நினைத்துக் கொள்வேன். இதில் எந்தப் பொருள் உன்னை இத்தனை தூரம் என்னிடமிருந்து பிய்த்துச் சென்றதென்று...

ஏமாற்றம் உனக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்றானது போல் பல சமயங்கள் நேர்ந்ததுண்டு.

உன் பள்ளிப் பருவத்தில் சதா சர்வகாலமும் மதிப்பெண்களைத் துரத்திக் கொண்டிருந்தாய். எந்த பரிட்சையில் நீ எல்லோரையும் முந்தி முன்னே வருவாய் என்று எதிர்பார்த்திருந்தோமோ அதில் எழுதவே முடியாதபடிக்கு உனக்கு மூளைக் காய்ச்சல். உன்னை அதன் பிடியிலிருந்து மீட்கவே பெரும்பாடானது.

கல்லூரியில் உனக்கு விருப்பமான பாடப்பிரிவு எட்டாக்கனியானது. அதைப் பறித்துத் தரும் பணபலம் என்னிடமில்லை. இண்டர்வியூக்கள் உன்னைப் பொறுத்தவரை ஏமாற்றங்களின் நுழைவு வாயிலாகிப் போனது.

போன இடத்தில் கூட உனக்குத் தருவதாகச் சொல்லப்பட்ட வேலை வேறு; தரப்பட்ட வேலை வேறு...

உன் திருமணமாவது உன்னிஷ்டப்படி நடக்கட்டுமென்றுதான் நீ விரும்பிய பெண்ணையே நாங்களும் ஏற்றுக் கொண்டோம். அதுவும் கூட உனக்குக் கைகூடாமல் போவது என்ன கொடுமை! அந்தப் பெண்ணை நினைத்தால் ஒருபுறம் பாவமாக இருக்கிறது பார்த்தி...

சளைக்காமல் ஒரு போர் வீரனைப் போல் உனக்காகப் போராடுகிறாள். தனியாளாக எனக்கு இதையெல்லாம் செய்வதென்பது திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டது போலிருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அஸ்திரத்துடன் அவள் புறப்படும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது பார்த்தி... நீ கோட்டை விட்ட தேர்வுகளுக்காக கவலைப் படுவதைவிட, நீ சேமித்து வைத்த தேர்வு எத்தனை மேன்மையானது!!

சிறுவயது ஏமாற்றங்கள் பூதாகரமாகி வாலிப வயதில் லட்சியமாகி விடுவது தான் இல்லாதப்பட்டவர்களுக்கு இந்த நாட்டில் விதிக்கப்பட்டதாக இருப்பது துரதிருஷ்டமில்லையா பார்த்தி...

புதிதாக எதையும் சாதிக்க நினைக்காமல், புதிதாக எதையும் தோற்றுவிக்க முடியாமல் கேவலம் பகட்டான பதவிக்காகவும், ஒரு சொகுசான காருக்காகவும், விஸ்தாரமான வீட்டிற்காகவும் ,ஆபத்தில்லாத சுலபமான நிமிடங்களுக்காகவும் போராடுவதும், நிறைவடைவதுமாகக் கழிகிறது நம் வாழ்க்கை...

ஆனால் நீதான் அத்தனை தவறுகளுக்கும் பொறுப்பாளியென்று நான் நினைக்கவில்லை. சோறூட்டும் போதே குழந்தைகளுக்குப் பாரம்பரிய நம்பிக்கைகளையும் ஊட்டி விடுகிறோம். கஷ்டப்பட்டுப் படியென்கிறோம். வேலையைத் தேடு தேடு என்கிறோம். கடன்கள் பொறுப்புகளைச் சுமப்பது கடனென்கிறோம். எல்லாக் கற்பிதங்களுக்கும் ஏதேனும் நியாயங்களை வைத்து முட்டுக் கொடுக்கிறோம். வாழ்க்கையென்பது மிகக் கடுமையான இருட்டுக் குகை என்று அறிமுகப்படுத்துகிறோம்.

இஷ்டப்பட்டதைப் படியென்று சொல்வதில்லை. வேலையை உருவாக்கு என்று சொல்வதில்லை. கடமைகள் சுமைகளில்லை என்று சொல்வதில்லை. வாழ்க்கையென்பது அனுபவிப்பதற்கான இனிய பரிசென்று ஒருபோதும் போதிப்பதில்லை.

எழுந்து நிற்பதற்கு முன்பே பூமி நழுவிப் போய்விடுமோ என்று அஞ்சுகிறீர்கள். நடக்கத் துவங்குமுன்பே பாதைகள் முழுக்க முட்கள் நிறைந்து கிடப்பதாகக் கண்களில் அச்சம் மிதக்கிறது. எல்லாப் பொறுப்புகளையும் சுமைகளாக நினைத்து மிரள்கிறீர்கள். சந்தர்ப்பம் என்கிற கதவு திறக்கப்படும் போது பாய்ந்து தப்பியோடத் துடிக்கிறீர்கள்.

எல்லா மிரட்டல்களையும் ஒவ்வொரு அம்பாக அனுப்பிவிட்டு, ‘இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள்' என்ற பட்டத்தையும் இந்தச் சமூகம் அனுப்பி வைக்கிறது.

உன்னை அனுப்பியிருக்கக் கூடாது பார்த்தி... எதையும் அதிகாரத்துடன், ஆளுமையுடன், மறுத்துப் பழக்கமில்லாத எனக்கு, அன்று நீ கேட்டபோது மறுக்க முடியாமல் போயிற்று. உன் எதிர்கால வாழ்வில் தடைகளை ஏற்படுத்திவிடும் எதுவாகவும் இருக்க நான் விரும்பவில்லை. ஒருவேளை அன்று நான் கடுமையாக நடந்து உன்னைத் தடுத்திருக்கலாம். கைநழுவிப் போகும்போதுதான் எதனுடைய அருமையும் புரிகிறது.

கும்பல் கும்பல்களாக நடந்த கலவரச் சூழலில் ஏதுமறியாமல் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த உன் மீது அபாண்டமாக கொலைப்பழி சுமத்திச் சிறையிலடைத்திருக்கிறார்கள் என்று, உன் வக்கீல் போன முறை தொலைபேசியில் சொன்னார். அந்நிய தேசத்தவன் மீதான இனம் தெரியாத வெறுப்பின் காரணமாக, உனக்கெதிராகப் பொய் சாட்சிகள் உருவாகிவிட்டதாகவும் சொன்னார். எனக்குத் தெரியும் பார்த்தி... இன்னொரு உயிரை மனதளவாலும் துன்புறுத்தும் கீழ்மையான குணம் உனக்கில்லை என்று எனக்குத் தெரியும். நீயே முன் வந்து ‘நான் தான் கொலையாளி' என்று சொன்னாலும் நம்ப மாட்டேன். அதற்குப் பின்னால் நம் குடும்பத்தின் நலம் கருதித் தான் அப்படி சொல்லியிருப்பாயென்று தான் நினைப்பேன்.

பூத்தில் எனக்கு முன் பேசிகொண்டிருந்தவர் ஒரு வழியாக முடித்து வெளிவருகிறார்.மறுபடியும் உன் வக்கீலின் தொலைபேசியெண்ணை முயற்சிக்கிறேன். அத்தனை தடங்களும் உபயோகத்திலிருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட குரல் தகவல் தெரிவிக்கிறது. உன்னைக் காப்பாற்ற நினைத்துப் போடப்படும் தடங்களும் கூட தடைகள் நிரம்பி வழி கொடாமல் வதைக்கிறது.

மீண்டும் வெளியே வந்து நிற்கிறேன். சுற்று வட்டாரத்தில் அருகில் வேறு தொலைபேசி தொடர்பகங்கள் இல்லை.

தனக்காகத் தான் நீ கடல் கடந்து போனதாக உன் தங்கை ஒவ்வொரு நாளும் குமைந்து போகிறாள். அவளது திருமணம் உன் சக்திக்கு மீறிய சவாலாக... உன் கனவுகளை எரித்த நெருப்புக் கங்குகளாக உன்னை மிரட்டிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். நீ என்னவாக வேண்டும் என்று ஒருபோதும் நீ சொன்னதேயில்ல. நானும் உன்னை வற்புறுத்தியதேயில்லை.

     உன்பதம் பெறவே உன்னரு ளாக
     அன்புடன் இரக்ஷி: அன்னமுஞ் சொர்ணமும்

வேலை தேடுவதிலேயே கழிந்து விட்ட பெரும்பொழுதில் உன்னை உனக்குள் தேட மறந்து போனாய். இன்று நாங்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

அடிமை வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னும் அடிமைப் பழக்கம் இன்னும் நமக்கு மாறவில்லை. அடிமையாய் இருப்பதில் அத்தனை சுகம் நமக்கு. கணவனிடம் மனைவிக்கு... மாமியாரிடம் மருமகளுக்கு... அப்பாவிடம் மகனுக்கு... முதலாளியிடம் தொழிலாளிக்கு... தலைவனிடம் தொண்டனுக்கு... கலைஞனிடம் ரசிகனுக்கு... கடவுளிடம் மனிதனுக்கு...

நாயைப் போலவும், பசுவைப் போலவும் இருப்பதாக ஒப்பீடு செய்கையில் நமக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி...!

தேசம் விட்டு தேசம் வந்து நம்மை அடிமைப் படுத்தம் பழக்கம் ஒழிந்தது. ஆனாலும் நமக்கு அடிமையாகும் ஆசை குறையவில்லை. தேசதேசத்துக்கும் பறக்கிறோம் எஜமானர்களைத் தேடி...

வேலையென்பது நமது அகராதியில் நாம் செய்வது என்பதாயில்லை... யாரிடமாவது இரந்து பெறுவதாய் இருக்கிறது.

இனியாவது இந்த தேசத்தில் உன்னைப் போன்றவர்கள் வேலை தேடிக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை கொண்டவர்களாக, யாருக்கேனும் அடிமையாகத் துடிப்பவர்களாக அலையும் நிலை மாறட்டும்...

     எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
     எத்தனை யடியேன் எத்தனை செயினும்
     பெற்றவன் நீகுரு! பொறுப்ப துன்கடன்:

 (இன்னும் மூன்று...)

2 கருத்துகள்:

  1. ஆஹா..அருமை என்னருமை பாரதிக் குமார்! கந்த சஷ்டியும்..கதையும் பின்னிப் பிணைந்து....
    என்ன ஒரு அற்புதம்,சொற்சித்திரங்களால்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஐயா... தொடர்ந்த தங்கள் வாசிப்பு எனது உற்சாகம்!

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...