கதை :
ராய் பிராட்பரி |
ஃபிரான்காய்ஸ் ட்ரூஃபெட் |
பெர்னார்ட் ஹெர்மன் |
நிக்கோலஸ் ரோ |
எதிர்காலம் பற்றிய கற்பனை என்றால் எல்லோருமே ‘புதுவகையான' இயந்திரங்களைப் படைக்கும் முனைப்பில் இறங்கி விடுவர். தங்கள் மனதில் சிறகடிக்கும் அத்தனை நிறைவேறாத ஆசைகளையும், விபரீதங்களையும் நிறைவேற்றும் அதியற்புத இயந்திரங்களை, விலங்குகளைக் கற்பனையில் உருவாக்கித் தீர்த்துவிடுவர்.
ஆனால், மனித மனம் கால ஓட்டத்தில் எப்படி வக்கிரமடையும், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் மற்றவர்களைப் பாதிக்கும் என்பது பற்றிய கற்பனை வெகு அரிதே...
ராய் பிராட்பரி (Ray Pradbury)யின் கற்பனையில் உருவான ‘ஃபாரன்ஹீட் 451' இரண்டு வகையில் மிக முக்கியமான படம். ஒன்று எதிர்காலம் பற்றிய வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த படம். மற்றொன்று புத்தகங்களின் மகத்துவத்தை இதைவிட வேறு யாரும் இத்தனை அற்புதமாக காட்சி ஊடகங்கள் வழியே நிறுவிட முடியாதென்பது...
மனிதர்கள் இல்லாத் ஒரு உலகத்தில் கூட வாழ்ந்திட முடியும்... புத்தகங்கள் நம் கையிலிருந்தால்! ஆனால், புத்தகங்களே இல்லாத உலகை என்னால் கற்பனை செய்ய முடியாது.
ராய் பிராட்பரி இந்தக் கதையில் எதிர்காலத்தில் ஒரு நேரத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தில் புத்தகங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டதாக கற்பனை செய்திருக்கிறார். புத்தகங்கள் வைத்திருப்பதும், வாசிப்பதும் அங்கு மகா குற்றம். அங்கு, புத்தகங்களை மறைத்து வைத்திருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு கொளுத்துவது, அப்படி மறைத்து வைத்திருப்பவர்களை சிறையில் தள்ளுவது என்று கடுமையான தண்டனைகள். இதற்கென்றே ஒரு தனிப் படை. அந்தப் படைக்குப் பெயர்தான் ஃபாரன்ஹீட் 451. புத்தகங்களை எங்கு எப்படி மறைத்து வைத்திருப்பார்களென அவர்களுக்குப் பயிற்சி வேறு! புத்தகங்கள் வீண். அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடந்தால் போது என்பதுதான் அங்குள்ள அரசின் கொள்கைகள்.
இந்தப் படையில் ‘மாண்டேக்' என்றொரு சேவகன். அவருடைய தனிப்பட்ட கருத்தும் ‘புத்தகங்கள் தேவையற்றவை... அவற்றால் வீண் குழப்பங்களும் நேர விரயமும் தான்...' என்பதே.
மாண்டேக்கின் மனைவி ‘லிண்டா' ஒரு தொலைக்காட்சிப் பைத்தியம். எந்த நேரமும் தொலைக்காட்சித் தொடர்களில் நேரத்தைக் கழிக்கும் அவளுக்கு எப்படியாவது ஒரு தொடரில் நடித்திட வேண்டுமென்பது கனவு.
மாண்டேக்கின் குழுவினருக்கென்றே ஒரு புகார்ப்பெட்டி உண்டு. அதில் வரும் கடிதங்களைப் பார்த்து, புத்தகங்களை மறைத்து வைத்திருப்போரைக் கண்டுபிடித்து அவற்றை எரிக்கின்றனர்.
இந்தப் பிரதேசத்துக்கு மாற்றலாகி வரும் ஒரு ஆசிரியைக்கு இந்த நிகழ்வுகள் விசித்திரமாயிருக்கின்றன. ஒரு இரயில் பயணத்தில் எதேச்சையாக அவள் மாண்டேக்கை சந்திக்கிறாள். அப்பொழுது அவரிடம் ‘புத்தகங்களை ஏன் தடை செய்து அவற்றை எரிக்கிறீர்கள்' என்று கேட்கிறாள். அதற்கு மாண்டேக், ‘புத்தகங்களால் என்ன பயன்? அவை தேவையற்றவை. அதனால் அவற்றை எரிக்கிறோம்' என்கிறான்.
‘அதில் என்ன பயனென்கிறீர்களே... ஒரு புத்தகத்தையாவது நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?' எனக் கேட்கிறாள்.
இந்தக் கேள்வி மாண்டேக்கை மிகவும் சிந்திக்க வைக்கிறது. அடுத்த புத்தக எரிப்பு வைபவத்தின் போது, எரிபடாமல் தப்பிய ஒரு புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு எடுத்து வருகிறான். அது சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய The Life History of David Copperfied என்கிற புத்தகம்.
இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகத்தை வாசிக்கிறார். அந்தப் புத்தகம் மிகச் சுவாரஸ்யமாக இருக்கவே, தொடர்ந்து படித்து முடிக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு புத்தக எரிப்பின் போதும் வேண்டுமென்றே சில புத்தகங்களை நெருப்பிலிருந்து தப்ப வைத்து வீட்டிற்கு எடுத்துவந்து லிண்டாவுக்குக் கூடத் தெரியாமல் வாசிக்கிறார்.
குழந்தை பிறக்காத காரணத்தால் லிண்டாவுக்குத் தொலைக்காட்சித் தொடர்கள் தான் பிரதான நேரக் கடத்தலாக இருக்கிறது. மாண்டேக்குக்கு இரு பெரும் எரிச்சலை மூட்டுகிறது.
காரணம் எதுவும் சொல்லப்படாமல் ஆசிரியையின் பணி பறிக்கப்படுகிறது. மாண்டேக்கிடம் தன் துக்கத்தை ஆசிரியை பகிர்ந்து கொள்கிறள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் மாண்டேக் தான் இப்போதெல்லாம் புத்தகங்கள் படிப்பதாகக் கூறுகிறார்.
ஆசிரியையின் மாமா வீட்டில் புத்தகங்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்து 451 குழுவினர் அவர் வீட்டுக்குச் செல்கின்றனர். மாமா அப்போது வீட்டிலில்லை. ஆசிரியையின் அத்தை மட்டுமேயிருக்கிறார். புத்தகங்களில்லாமல் தன்னால் ஒருபோதும் வாழமுடியாது என்றும், புத்தகங்களை எரித்தால் தானும் அவற்றோடு எரிந்து போவேனென்றும் அவர் எச்சரிக்கிறார். அவரது கோரிக்கை மறுக்கப்படவே, எரியும் புத்தகங்களோடு அவரும் சேர்ந்து எரிந்து போகிறார்.
அவர்களுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் ஆசிரியைக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, அவள் சில புத்தகங்களோடு வீட்டிலிருந்து தப்பித்து வேறொரு இடம் செல்கிறாள்.
மாண்டேக்குக்கும் அவரது மனைவி லிண்டாவுக்கும் மனக்கசப்பு அதிகரிக்கிறது. தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து தன்னால் விடுபட முடியாதென்று உறுதிபடக் கூறுகிறாள்.
தப்பித்துப் போன ஆசிரியை, தன் மாமா எழுதிவைத்த உயிலுக்காக திரும்ப வந்து மாண்டேக்கின் உதவியோடு அதனைக் கண்டுபிடிக்கிறாள். அப்போது, மாண்டேக் அவளிடம் எங்கு மறைந்து வாழ்கிறாயெனக் கேட்கிறார்.
ஆசிரியை, அப்பிரதேசத்தின் எல்லையில் ஓடும் ஒரு நதியைக் கடந்து சென்றால் ஒரு வனமிருப்பதாகவும், அங்கு அவளைப் போன்றே புத்தகப் பிரியர்கள் சிலர் மறைந்து வாழ்வதாகவும் கூறுகிறாள்.
வீடு திரும்பும் மாண்டேக், வீட்டில் லிண்டாவின் தோழிகள் கூடி, தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி விவாதிப்பதைக் கண்டு எரிச்சலுறுகிறார். யாரிடமும் பேசாமல் அறைக்குத் திரும்புகிறார். லிண்டாவுக்குத் தன் தோழிகள் யாரையும் வரவேற்காமல், பேசாமல் அறைக்குள் சென்ற மாண்டேக் மீது கடும் கோபம் வருகிறது. அவரிடம் தன் வருத்தத்தைப் பகிர்கிறாள். அப்போது மாண்டேக் தான் மறைத்து வைத்துப் படிக்கும் புத்தகங்களை எடுத்து வந்து அவர்களிடம் படித்துக் காண்பிக்கிறார். புத்தகங்கள் தடை செய்யப்பட்ட ஊரில் அதற்கான குழுவிலிருக்கும் ஒருவரே புத்தகங்கள் வைத்திருப்பதும் அதனை வாசிப்பதும் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் வெளிறிய முகத்துடன் வெளியேறுகிறார்கள்.
இந்தச் சம்பவம் லிண்டாவின் மனதில் மாண்டேக் மீது வன்மத்தை ஏற்படுத்துகிறது. அவளே 451 குழுவுக்கு மாண்டேக் புத்தகங்களை மறைத்து வைத்திருப்பதாகப் புகார் மனு ஒன்று எழுதிப் போடுகிறாள். அவரை விட்டுப் பிரிந்தும் சென்றுவிடுகிறாள். புகார் மனுவைப் படித்த தலைவர் மாண்டேக் வீட்டுக்கு குழு மற்றும் கருவிகளோடு மாண்டேக்கையும் அழைத்து வருகிறார். மாண்டேக் வீட்டில் அவர் மறைத்து வைத்திருந்த புத்தகங்களை அவரே எடுத்து எரிக்கும்படி கட்டளை இடப்படுகிறது. புத்தகங்கள் எரிவது பொறுக்காமல் மாண்டேக், புத்தகங்களை எரிப்பதர்க்கு வைத்திருக்கும் Fire Gun -ஆல் அவர்களைத் தாக்கிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிவிடுகிறார். பிரதேசம் முழுக்க அவர் குற்றவாளியாக அறிவிக்கப் படுகிறார்.
ஒரு வழியாக ஆசிரியை குறிப்பிட்ட நதியைக் கடந்து வனத்திற்குச் செல்கிறார். அங்கு அவருக்காகக் காத்திருக்கும் புத்தகப் பிரியர்களின் தலைவர், அவரை வரவேற்கிறார்.
மாண்டேக் பற்றிய அறிவிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அவர் எப்படியும் தப்பித்து இங்கு வருவாரெனக் காத்திருப்பதாகவும் குழுவின் தலைவர் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் மாண்டேக் இறந்து விட்டதாக அரசு அறிவித்து, அதற்கான காட்சிப் படத்தை மாண்டேக் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவனை வைத்து உருவாக்கி, அதனைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாகவும் மாண்டேக்கிற்குக் காட்டுகிறார்.(ஆக, ஒரு எதேச்சாதிகார அரசு நினைத்தால், இருக்கிற ஒருவரை இறந்து விட்டதாகவும், இறந்த ஒருவரை இருப்பதாகவும் உருவகித்துவிட முடியும் என்பதை ராய் பல வருடங்களுக்கு முன்பே சிந்தித்திருக்கிறார்!)
தலைவர், மாண்டேக்கை வனத்திலிருக்கும் மற்றோரிடம் அறிமுகப்படுத்துகிறார். அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் ஒரு புத்தகத்தின் பெயரால் அறிமுகப்படுத்துவது மாண்டேக்குக்கு வியப்பாயிருக்கிறது. உதாரணமாக, “இவர் தான் பிளாட்டோவின் ‘Republic'... இவர் ‘Alice in the Wonder land (Louis Carrol)'... இவர் ‘Waiting for Godat(Samual Peccat)... என்பதாக!
இதற்கான காரணத்தை மாண்டேக் அவரிடம் கேட்கிறார். குறிப்பிட்ட புத்தகங்களை அந்த நபர்கள் ஒருவரி விடாமல் முழுதும் மனனம் செய்து அந்தப் புத்தகங்களாக மாறிவிட்டவர்கள் அவர்கள். எந்தப் புத்தகத்தை எவர் முழுதும் மனனம் செய்திருக்கிறார்களோ அதுவே அவர்களது பெயராக அங்கு அழைக்கப் படுகிறது என்ற விளக்கம் தரப்படுகிறது.
அங்கேயும் புத்தகங்கள் மனனம் செய்தபின் எரிக்கப்படுகிறது. ஏனெனில், அவை அரசின் கைகளில் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காக... மரணத்தை நெருங்கும் சமயத்தில், தான் படித்த புத்தகத்தை வாய்வழிக் கற்பித்தல் மூலம் அடுத்த தலைமுறைக் குழந்தைக்கு மனனம் செய்விக்கிறார் ஒரு முதியவர். இச்சூழல் மிகவும் பிடித்துப்போக மாண்டேக் அங்கேயே தங்கிவிட முடிவு செய்து தான் தப்பித்து வரும்போது எடுத்து வந்த புத்தகங்களைக் குழுத் தலைவரிடம் காண்பிக்கிறார். குழுவின் தலைவர் அப்புத்தகத்தை வாசிக்கும்படி அறிவுறுத்துகிறார். அந்த வனத்தில் ஏதேனுமொரு புத்தகத்தை மனனம் செய்தபடி எல்லோரு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியையும் ஒரு புத்தகத்தோடு அக் கூட்டத்திலிருக்கிறார். மாண்டேக் தான் எடுத்து வந்த புத்தகத்தை வாசித்தபடி அவர்களோடு நடக்கத் துவங்க, படம் நிறைவடைகிறது.
எத்தனை நவீனங்கள் வந்தாலும் புத்தகத்தை விரும்புகிறவர்கள் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டுதானிருக்கின்றனர். ஒருபோதும் புத்தகங்களை அழித்துவிட முடியாதென்பதைப் படம் வெகு அழகாக உணர்த்துகிறது.
Fahernheit 451 என்ற தலைப்பிற்கான காரணம், புத்தகங்கள் எரிவதற்குப் போதுமான வெப்பநிலையின் அளவு அது என்று படத்தில் மாண்டேக் ஒரு இடத்தில் சொல்வதாக ஒரு காட்சி வருகிறது. உண்மையில் காகிதங்கள் எரிவதற்கான வெப்பநிலை என்பது 450' C (860 Fahrenheit) ஆகும்.
புத்தகங்கள் இல்லாத உலகில் என்னால் வாழவே முடியாது என்று புத்தகங்களோடு எரிந்து போகும் ஆசிரியையின் அத்தை கதாபாத்திரத்தின் செயல் வெறும் அதீதக் கற்பனையல்ல... ஒரு அதியற்புதப் பாத்திரப் படைப்பு. ஏனெனில், என்னைப் போன்ற உங்களைப் போன்ற புத்தகப் பிரியர்கள் அந்தச் சூழலில் அது போல் தானே முடிவெடுத்திருப்போம்!
புத்தகப் பிரியர்கள் மறைந்து வசிக்கும் வனத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது, இவர்தான் John Bunyan எழுதிய Pilgrim Process என்று கூறிவிட்டு, ‘இவர் இந்தப் புத்தகத்தை முழுவதும் மனனம் செய்துவிட்டு, எரிக்க மனமின்றி கொஞ்சம் கொஞ்சமாக தின்று விழுங்கிவிட்டார்' என்று சொல்லும் போது அந்தக் கதாபாத்திரத்தை உயர்வாகவே மதிப்பிடத் தோன்றுகிறது. வித்தியாசமான கற்பனை.
மாண்டேக்காக நடித்த ஆஸ்கர் வெர்னர், லிண்டா மற்றும் ஆசிரியை ஆகிய இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜீலி, கிரிஸ்டி ஆகியோரின் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை எழுதி இயக்கிய ஃபிரான்சாய்ஸ் ட்ரூஃபெட்டின் அற்புதமான உருவாக்கத்தாலும் படம் மிளிர்கிறது.
ட்ரூ ஃபெட்டின் அழகான காட்சியமைப்புக்கு உதாரணம் ஒன்று... வனத்தில் மாண்டேக்குக்கு சில மனிதர்களை புத்தகங்களின் பெயரால் அறிமுகப்படுத்தும் போது ஒரு இரட்டையர்களைக் குழுவின் தலைவர் காண்பிப்பார். இருவருமே தங்களது பெயரை John Austin எழுதிய Pride and Prejudice என்று கூறுவர். இருவருமே ஒரே புத்தகத்தைத் தான் மனனம் செய்தீர்களா என்று மாண்டேக் கேட்பார். அவர்கள் ‘இல்லை... இவர் வால்யூம் 1, நான் வால்யூம் 2' என்று கூறுவர்!
புத்தகங்களை மனனம் செய்ய வேண்டுமென்பதல்ல கதாசிரியரின் நோக்கம். .. “புத்தகங்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள். வாசிப்பதை ஒரு தியானம் போல் செய்யுங்கள். எந்த அளவு நீங்கள் புத்தகங்களை உள்வாங்குகிறீர்களோ அந்த அளவு நீங்கள் அந்தப் புத்தகங்களாகவே மாறிவிடுவீர்கள்” என்பதே படத்தின் பிரதானக் கருத்தாகிறது.
உலகில் நிகழும் எல்லா மாற்றங்களுக்கும், எல்லா புரட்சிகளுக்கும் அடிநாதமாய், மூல வேராய் ஓடும் ‘இழை' எது என்று நீங்கள் ஆராய்ந்து நோக்கினால் ,அது ஒரு புத்தகமாகத்தான் இருக்கும்!
புத்தகங்கள் மனிதர்களைப்போல் நம்மை அலட்சியப்படுத்துவதில்லை. அவமதிப்பதில்லை. இகழ்வதில்லை. பொறாமைப்படுவதில்லை. வன்மம் பாராட்டுவதில்லை. மாறாக, கேன்மைப்படுத்துகின்றன. வாசிக்கிற எவரையும் பேதமின்றி அரவணைத்து தெளிய வைத்து உயர வைக்கின்றன. இப் படத்தின் கருப்போல நாம் எல்லோருமே நிஜமாகவே ஒரு புத்தகத்தையாவது உள்வாங்கி ஊறவைத்திருப்போம். அது நம் வாழ்வை நெறிப்படுத்தியிருக்கும். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நம்மை வழிநடத்தியிருக்கும்.
யோசித்துப் பார்த்தால், நம் மீது அர்த்தமற்றுத் தொற்றியிருக்கும் நம் பெயர்களை உதறிவிட்டு, நாம் உள்வாங்கிய, உணர்ந்த புத்தகங்களின் பெயரைச் சூட்டிக் கொண்டால் எத்தனை நன்றாகயிருக்கும்! நீங்கள் ஒரு தொல்காப்பியமாக, திருக்குறளாக, சிலப்பதிகாரமாக, பாஞ்சாலி சபதமாக, பாண்டியன் பரிசாக உலவிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். உலகமே ஒரு உலவும் நூலகமாக எத்தனை அழகாக, அர்த்தமுள்ளதாக இருக்கும்...?!!
ராய் பிராட்பரி
ஏப்ரல் 23- உலகப் புத்தக தினமென்பதாலும், இப்படத்தைப் பொறுத்தவரை ‘கதை' தான் பிரதானமென்பதாலும் இப்படத்தின் மூலக் கதையெழுதிய ராய் பிராட்பரி பற்றிக் குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாயிருக்கும்.
1920 ஆகஸ்ட் 22-ல் அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் பிறந்த ராய், 1938-ல் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு 1942 வரை தெருத் தெருவாக தினசரிகளைக் கூவிக் கூவி விற்று தான் தனது பிழைப்பை நடத்த வேண்டியிருந்தது. அந்தக் காலக்கட்டங்களில், இரவு நேரத்தில் பொது நூலகங்களில் தனது பெரும்பான்மையான நேரங்களைச் செலவழித்தார். இது இவரை நல்லதொரு படைப்பாளியாக உருவாக்கியது. அவ்வப்போது சில சிறுகதைகள் எழுதிப் பிரசுரமானாலும் 1950-ல் வெளியான'The Mation Chronicles' எனும் நாவல்தான் இவரை அமெரிக்கா முழுதும் பிரபலப் படுத்தியது.
இந்தப் படத்தின் கதைக் கருவில் ‘Fire man' என்ற சிறுகதையைத் தான் ராய் முதலில் எழுதினார். பிறகு இது குறுநாடகமாக விரிவாக்கப்பட்டது. பின் இன்னும் சற்று விரிவாக்கி ‘Fohrenheat 451' என்ற பெயரில் நாவலாகப் பரிணமித்தது.
ஓ ஹென்றி நினைவு விருது, அமெரிக்க விஞ்ஞான எழுத்தாளர்கள் விருது,பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் விருது, கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற ராய் பிராட்பரி, ஒரு முறை சிறந்த கதாசிரியருக்கான விருதுக்காக ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
இதே கதையில் மிகவும் ஈர்க்கப்பட்ட உலகின் தலைசிறந்த திரைக்கதியாசிரியரும், இயக்குனருமான ஃப்ராங் டாராபண்ட் (Green mill, Shawshank, Redemption) தன்னுடைய பார்வையில் இதற்கொரு திரைக்கதை எழுதி அந்தப் படத்தை விரைவில் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அனேகமாக 2012-ல் அந்தப் படம் வெளியாகக் கூடுமெனத் தெரிகிறது.
Thanks for the info..!
பதிலளிநீக்குthanks kochu .. thanks for your visit and comment
பதிலளிநீக்குஅருமையான இடுகை பாரதி...புத்தக காதல் பற்றிய வித்யாசமான கதை அமைப்பில் ஒரு படமா...எனக்கும் அந்த அத்தை கதாபாத்திரம் ஆச்சர்யம் அளித்தது...அப்புறம் காட்டில் அந்த புத்தக காதலர்கள் அந்த புத்தக கதாபாத்திரமாய் மாறி விடும் புதுமை ஆச்சர்யாமாய் இருந்தது...அதுவும் .// அவர்கள் ‘இல்லை... இவர் வால்யூம் 1, நான் வால்யூம் 2' என்று கூறுவர்!// இந்த இடத்தை வெகுவாய் ரசித்தேன்...புத்தக வாசிப்பை இவ்வளவு அழகாய் ஸ்கிரிப்ட் பண்ணியது எனக்கு பெரிய ஆச்சர்யம் தான்...நல்லா தகவல்களும் தொடர்ந்து கொடுத்து இருக்கீங்க....நிறைவான பதிவு பாரதி...வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆனந்தி. இன்னும் ஒரு அற்புதமான படம் புத்தகம் பற்றி இருக்கிறது. வரும் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது . அதையொட்டி அந்த படத்தின் விமர்சனத்தை இந்த வலைப் பூவில் பதிவு செய்கிறேன்.
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும் போது அவசியம் வாசியுங்கள்
நானும் ஒரு புத்தகப் பிரியைதான். அருமையாய் இருக்கு இந்த படம்.. பகிர்வுக்கு நன்றி பாரதி குமார்
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனம்மை ... இப்போதுதான் நானும் உங்கள் வலைப்பூ வை பார்த்தேன் . கவிதை , பங்குச்சந்தை ஆலோசனை, புத்தக சந்தை பற்றிய கட்டுரை என்று கலக்கலாக பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமையான எழுத்து நடை + வசீகரிக்கும் எழுத்துக்கள் + மற்றும் பல = தங்கள் பதிவுகள்..
பதிலளிநீக்குஇந்த படத்தை பார்த்துவிட்டு நானும் சில வார்த்தைகளை பகிர்ந்திருந்தேன்.. ஆனால், உங்கள் அளவுக்கு வாய்ப்பே இல்லை.
நல்ல படம்..எதிர்க்காலத்தை பற்றி பல சிந்தனைகளை உருவாக்க கூடிய படைப்பு.
தங்களது பார்வைகளில் திரைப்படத்தை பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள்.
நன்கு ரசித்தேன்.இன்னொரு முறை படம் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பல.