திங்கள், 7 பிப்ரவரி, 2011

The Story of Weeping Camel



பொதுவாக காட்சிக் கலை வடிவங்களை திரைப்படங்கள், விவரணப்படங்கள், குறும்படங்கள் என்று தான் வகைப்படுத்துவார்கள். இந்த வரிசையில் சேர்க்க வேண்டிய இன்னொரு பிரிவுமிருக்கிறது. அது விவரணக் கதைப் படம் (Docu.drama) என்று குறிப்பிடலாம். முழுக்க முழுக்க கற்பனை சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள் இது போல உருவாக்கப் படுகின்றன. கால அளவு மட்டும் வித்யாசம். விவரணப்படங்கள் (Documentry film)குறிப்பிட்ட வரலாற்றைப் பதிவு செய்பவையாக இருக்கும். அது தனி மனித வாழ்க்கை வரலாறாகவோ இடம், சம்பவம், பொருளென்று ஏதேனும் ஒன்றை மையப்படுத்தி நேரடியான தகவல்களைத் தருபவை. விவரணப்படங்கள் பல சமயம் தட்டையாக அமைந்துவிடும் அபாயமிருக்கிறது. சொல்லப்படும் விஷயம் குறித்து எவர்க்கு ஈடுபாட்டுடன் ஆர்வமிருக்கிறதோ அவர்களால் தான் அவற்றை சலிப்பேற்படாமல் பார்க்க இயலுமெனில் பதிவு செய்யப் பட்ட ஆவணங்கள் வெறுமனே காப்பகங்களில் அடைபட்டுக் கிடப்பதுதான் நியதியா?



இந்தக் கேள்விக்கு விடையாக இருப்பவை விவரணக் கதைப் படங்களென்று கருதுகிறேன். சொல்லப்பட வேண்டிய விஷயங்களை ஒரு கதைபோல ஜோடித்து அதற்கெனக் கதை மாந்தர்களை உருவாக்கி, சுவைபடச் சொல்ல முயற்சிப்பது நல்ல உத்தியெனலாம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘The Story of Weeping Camel' என்கிற விவரணக் கதைப்படம். மங்கோலிய மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட மங்கோலிய நாடோடி மக்களின் இன வரைவியல் படமென்று கூடக் கூறலாம்.

மங்கோலியா, மத்திய ஆசியாவில் ஒரு எல்லையில் சீனாவையும், மறு எல்லையில் ரஷ்யாவையும் கொண்ட, நிலங்களால் சூழப்பட்ட நாடு. அந்நாட்டின் மக்கள் தொகை வெறும் முப்பது லட்சம் பேர் மட்டுமே. அதிலும் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் நாடோடிகள். செங்கிஸ்கான் என்கிற ஒரே ஒரு பேரரசன் அவர்களை பனிரெண்டாம் நூற்றாண்டில் ஒருங்கிணைத்து ஆட்சி செய்தான். அதற்கு முன்பும், பின்பும் சிறு நாடோடிக் குழுக்களாக வாழ்ந்து வருபவர்கள் மங்கோலிய இன மக்கள்.

வேட்டையாடுவதும், விலங்குகளை வளர்ப்பதும், பால்பொருட்கள், விலங்குகளின் தோல் பொருட்கள் விற்பதுமே அவர்களது பிரதான தொழில். இன்று, உலகின் பேரதிசயமாக விளங்குகின்ற சீனப் பெருஞ்சுவர் கட்டப்படுவதற்கு ஒருவகையில் மங்கோலிய நாடோடிகள் தான் காரணம். ஹன்(HUN) எனும் மங்கோலிய நாடோடிகள் குழு அவ்வப்போது சீன எல்லையை ஊடுருவி, அவர்களது தேசத்தினை ஆக்கிரமிப்பதும், கிடைத்த பொருட்களைக் களவாடித் திரும்புவதுமாக இருந்தனர். இது போல வெவ்வேறு எதிரிகள் நுழைவதைத் தடுக்க அன்றைக்கு இருந்த சீன அரசன் 6000 கி.மீ. நீளமுள்ள தடுப்புச் சுவரைக் கட்டினான். இன்று நிலவிலிருந்து பார்த்தால், பூமியில் தெரிகிற ஒரே விஷயம் ‘சீனப் பெருஞ்சுவர்தான்'!

இந்தியாவைப் போன்றே பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றும் மங்கோலியா 1921-ல் தான் ஒருங்கிணைந்த தேசமாக ஒற்றை அதிகார மையத்தின் கீழ் வந்தது.

மங்கோலிய மக்கள் மூன்று வெவ்வேறு பிரிவுகளாக வாழ்க்கை முறையிலும், வசிப்பிடத் தேர்விலுமாக மிகப்பெரிய வித்தியாசத்துடன், ஏற்றத் தாழ்வுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இயல்பான தொழில்கள், விவசாயம், நவீன அறிவியல் வசதிகள். உயர்கல்வித் திட்டங்கள் என்றொரு பிரிவினரும்(மங்கோலிய நகர வாசிகள்), இரண்டாவதாக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் சில அறிவியல் சாதனங்கள், நகரங்களில் கிடைக்கும் சிறு சிறு வேலைவாய்ப்புகள் போக எஞ்சிய நேரங்களில் வளர்ப்பு விலங்குகளை மேய்ப்பதும், அதன் மூலமாக வருவாய் ஈட்டலுமாக இருக்கும் சிறு கிராம வாசிகள், முற்றிலும் அறிவியல் வசதிகளற்ற தட்பவெப்பம், மேய்ச்சல் நிலங்களின் தேவைக்கேற்ப இடம் மாறும் தற்காலிக வசிப்பிடங்களைக் (Tent) கொண்ட மக்கள் என்று அவர்களை மூன்றாகப் பிரித்து விடலாம்.

மூன்றாவது பிரிவினரை நாடோடிகள் (Nomadic People) என்றும், இரண்டாவது பிரிவினரை சூழல் நாடோடிகள் (Semi Nomadic People) என்றும் இன வரைவியலாலர்கள் குறிப்பிடுகின்றனர்.


கோடை காலத்தில் சர்வ சாதாரணமாக 47  டிகிரி -க்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலும், குளிர் காலத்தில் மைனஸ் 40 டிகிரி  -க்கு கடும் பனியும் நிலவும் ‘கோபி' பாலைவனங்கள் தான் நாடோடிகளின் வசிப்பிடங்கள். நாடோடிகளைப் பொதுவாக ‘ஐ'விலங்கு மனிதர்கள் என்று குறிப்பிடுவார்கள். குதிரைகள், இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகம்(Bacterian Camel), திபேத்தியன் எருதுகள், நாட்டு ஆடுகள், கம்பளியாடுகள் இவைகள் தான் அவர்கள் உலகம். இந்தியர்களைப் போலவே பல பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், வழிபாடுகளைக் கொண்டவர்கள் மங்கோலியர்கள். வளர்ப்பு விலங்குகள் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டவர்கள்.

The Story of Weeping Camel அவர்களின் வாழ்க்கை முறையையும், ஒட்டகத்தின் மீதான அவர்களின் அதீத பாசத்தையும் பதிவு செய்திருக்கின்ற அற்புதமான விவரணக் கதைப்படம்.

கோபி பாலைவனத்தில் ‘குல்லா'வைக் கவிழ்த்து வைத்தது போன்ற தற்காலிகக் கூடாரங்களில் மூன்று தலைமுறைகள் சேர்ந்து ஒரு குடும்பமாய் வாழும் மங்கோலிய நாடோடி ‘அயுர்சனா', இரட்டைத் திமில் ஒட்டகங்களையும், கம்பளியாடுகளையும் வளர்த்து வருகிறார்.

ஒட்டகங்களின் உடற்கூறுகள், அவற்றின் பிரச்சினைகளை நன்கறிந்த பெரியவர்களின் ஆலோசனைகளோடு, வளர்க்கும் இரண்டாம் தலைமுறைத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்... ட்யூட், அக்னா என்பது அவர்களது பெயர்.

நிறைமாத கர்பிணியாக இருக்கும் அவர்களது ஒட்டகம் எதிர்பார்த்த தினத்தையும் தாண்டி, சிரமப்பட்டுப் பிரசவிக்கிறது. அவர்கள் கணித்ததை விடவும் அளவில் பெரிதான, வெள்ளை ஒட்டகக் கன்று பார்க்க மிக அழகாயிருக்கிறது. ஆனால் அதன் தாய் ஒட்டகத்திற்கு, தன்னைப் பிரசவத்தில் கஷ்டப்படுத்திய வெள்ளை ஒட்டகக் கன்றின் மீது வெறுப்பு. அதன் காரணமாகப் பால் தர மறுக்கிறது.

கன்றையும் தாயையும் எப்படியாவது ஒருங்கிணைக்கச் செய்து பாலூட்ட வைக்க, குடும்பமே முயற்சி செய்கின்றனர். ஆனால் முடியவில்லை. ஒட்டகத்திடமிருந்து பாலைக் கறந்து, உடைந்த மாட்டுக் கொம்பு மூலம் கன்றின் வாயில் பால் புகட்டுகின்றனர். வெள்ளைக் கன்றோ தாயிடம் புசிக்கவே முயற்சிக்கிறது.

நாடோடிகளின் வழக்கப்படி, ஒரு இசைக் கலைஞரை வரவழைத்து, அவர்களது பாரம்பரியமான மெல்லிய இசையை வாசிக்க வைத்தால் ஒட்டகம் மனமிரங்குமென்பது அவர்களது கடைசி நம்பிக்கை. அதன்படி நகரத்திலிருக்கும் வயலின் இசைக் கலைஞர் ஒருவரை உறவினர் மூலம் வரவழைக்க முடிவு செய்கின்றனர். தகவல் தொடர்புச் சாதனங்கள் எதுவுமற்ற அந்த இடத்திலிருந்து அவர்களது செய்தியை நகரத்துக்கு எடுத்துச் செல்ல, தங்களது குழந்தைகள் ட்யூட் மற்றும் அக்னாவை வேறு ஒட்டகங்களின் மீதேற்றி அனுப்பி வைக்கின்றனர். பத்து வயதான ட்யூட்டும் ஆறு வயதான அக்னாவும் சிறு கிராமம் வழியே நகரத்தையடைந்து, அங்கு தங்கள் உறவினரிடம் கடிதத்தினைத் தந்து வயலின் கலைஞரை வரவழைப்பதுதான் கதை.

ட்யூட் மற்றும் அக்னா வசிக்கும் பாலைவனக் கூடார வாழ்வு, நகரம் செல்லும் வழியில் இளைப்பாறும் சிறு கிராம மக்களின் வாழ்வு, முற்றிலும் மாறுபட்டு வசதிகள் நிரம்பிய நகர மக்கள் வாழ்வு என்று மூன்று மங்கோலிய மக்கள் குழுக்களின் வாழ்வியல் சூழலை அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிம்பசாரன் தவா.

துவக்கக் காட்சிகளில் காட்டப்படும் நாடோடிகள் வாழ்க்கைச் சூழல் நம் இந்திய மக்களின் கலாச்சாரத்தை ஓரளவுக்கு ஒத்திருக்கிறது. ஒட்டகத்துக்கு மூக்கணாங்கயிறு இடும் நிகழ்வு, சிறு சடங்கு போல் எளிமையாக இருக்கிறது. ஒட்டகத்தின் பாலை, வீட்டின் முதிய பெண்மணி நான்கு திசைகளிலும் விசிறி விட்டு பின், மூக்கணாங்கயிறு மாட்டப் போகும் ஒட்டகத்தின் மீதும் தெளித்து ‘நல்ல உடல் நலத்துடனும், செழிப்போடும் வளரும்படி' பிரார்த்திக்கிறார். விலங்குகளை வணங்கும் நம் மரபைப் போல.

அதைப்போல மலைப்பகுதிகளுக்கு வேட்டைக்காகவோ, மேய்ச்சலுக்காகவோ செல்வதற்கு முன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறு கற்களைப் போட்டு, அதனை மூன்று முறை சுற்றி வந்து வணங்கிவிட்டு பின்னரே தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். இப்படி இடப்படும் கல் ஒரு அம்பாரம் போல குவிந்திருக்க, அதன் மீது நீலவண்ண துணியொன்றைக் கொடி போல் பறக்க விடுகின்றனர். இப்படிக் குவிக்கப் பட்டிருக்கும் சிறு கற்குவியலை, ஒரு குறிப்பிட்ட தினத்தில் குடும்பத்தினரோடு உணவுப் பொருட்களையும் கையோடு எடுத்துச் சென்று வணங்கிவிட்ட பின் அங்கேயே உணவருந்துகிறார்கள்.

மிக மிக ஆச்சர்யமாக இதே போன்றதொரு வழக்கத்தை சேலம் அருகேயுள்ள தாண்டவராயபுரம், அவனியாபுரம் போன்ற கிராமங்களில் வாழும் போயர் இன மக்கள் பின்பற்றுகின்றனர். கிணறு வெட்டுவதும், ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் கேபிள்களைப் புதைக்க நீளமான குழிகளை வெட்டுவதும் அவர்கள் பணி. இப்படிச் செல்வதற்கு முன் தங்கள் மூதாதையரை வணங்கும் நோக்கில், மரணமடைந்தவர்களுக்கான ‘கல்லிடுதல்' என்னும் சடங்கில் குவிக்கப்படும் ‘குட்டாங்கல்லு' என்னும் கற்குவியலை வணங்கிவிட்டுத்தான் பயணத்தைத் துவங்குகின்றனர்.

மங்கோலியர்கள் வணங்குவதற்கு முன் ‘சங்கு' ஊதும் வழக்கமும் ,முதியவர்கள் ருத்திராட்ச மாலையை உருட்டுவதும் நம் இந்திய மக்களின் சமயச் சடங்குகளை ஒத்திருப்பது வியப்பளிக்கிறது. திபேத்திய புத்திஸம் (Tibatian Buddhism) கொள்கைகளை பின்பற்றும் அவர்களுக்கு ‘பூமி' தான் தாய்! ‘வானம்' தான் தகப்பன்!!

குழந்தைகளை உறங்க வைக்க மங்கோலியத் தாய் பாடும் பாடல், கிட்டத்தட்ட தமிழகத் தாய்மார்கள் பாடும் தாலாட்டை ஒத்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இசையின் மூலம் மழையை வரவழைக்கலாம்; வைத்தியமும் செய்யலாமென்ற நம்பிக்கையுடைய நம் இந்திய சமூகத்தைப் போலவே முரண்டு பிடிக்கும் ஒட்டகத்தை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று அவர்கள் நம்புகிறார்கள்.

படத்தில் ஒட்டகம் கன்று ஈனும் காட்சியையும், மணல் புழுதிப் புயல் வீசும் காட்சியையும் தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லூகி ஃபெலோலானி. உண்மையில், கோபி பாலைவனம் போன்ற வறண்ட நிலக்காட்சி ஒரு ஒளிப்பதிவாளருக்கு சவாலான களமாகும். பச்சைப் பசேலென்ற இயற்கைக் காட்சிகள் ஒரு ஒளிப்பதிவாளரின் திறனை எளிதில் ஒரு பொதுப் பார்வையாளனுக்கு உணர வைத்து விடும். ஆனால் ஒரு சிறு செடி கூட அசையாத தட்டையான மணல் பிரதேசத்தை நம் மனதில் பதிய வைப்பது அத்தனை எளிதில்லை. ஒரு காட்சியில் மிகப் பிரயத்தனப்பட்டு ‘கானல் நீர்' காட்சியைப் படமாக்கியிருப்பார். அதனால்தான் என்னவோ படத்தின் இணை இயக்குனராக லூகி ஃபெலோலானியை கெளரவப்படுத்தியிருக்கிறார் பிம்பசாரன் தவா.

நகரத்துக்குச் சென்று திரும்பும் குழந்தை, அங்கிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி மீது ஆசைப்பட்டுக் கேட்க, அவனது தாத்தா,'அந்தப் பிசாசு நமக்கு வேண்டாம். அது நம் நேரத்தை விழுங்கும்' என்று மறுக்கிறார். மாறும் அடுத்தக் காட்சியில் குழந்தைகள் சிறுவண்டியை மணல் பிரதேசத்தில் இழுத்துச் சென்று, குப்பிகளில் மணல் நிரப்பி, மளிகைக் கடைப் பொருட்களாகப் பாவித்து விளையாடுகின்ற காட்சியை வைத்திருப்பார். மின்சாரமேயில்லாத அவர்கள் வசிப்பிடத்தில், குழந்தைகளின் விளையாட்டு மண் சார்ந்தும், சூழல் சார்ந்தும் இருக்க முடிகிற சாத்தியத்தை எந்த வசனமுமில்லாமல் புரியவைக்கிறார்.

அருமையானதொரு வயலின் இசையைக் கேட்டு ஒட்டகம் கண்களில் நீர் வழிய நிற்பதும், தனது கன்று பாலருந்த அனுமதிப்பதும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

காட்சி ஊடகம் வழியே ஒரு விஷயத்தை எப்படி ஆவணப்படுத்துவது என்பதற்கு அரிய உதாரணமாகிறது இப்படம். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் எத்தனையோ மரபு சார்ந்த, மண் சார்ந்த, இனம் சார்ந்த விஷயங்கள் ஆவணப்படுத்தாமலும், அப்படியே ஆவணப்படுத்தியிருந்தாலும் இன்னும் பார்வையாளர்கள் கவனத்துக்குச் சென்று சேராமலுமிருக்கின்றன.

கடல் கொண்ட குமரிக் கண்டத்தைப் பற்றியும், பூம்புகார் பற்றியும், ஆதிச்ச நல்லூர் பற்றியும் இன்னும் பிற தொல்பொருள் ஆய்வுகள் தனிமனித ஆர்வத்தை நம்பியே இதுகாறும் அதிகமாக நடந்தேறியிருக்கின்றன. இப்பொழுதுதான் அரசு இந்த ஆய்வுகள் மேல் கவனத்தைத் திருப்பியுள்ளது.

இவற்றைக் கவனப் படுத்துவதும், அதனைப் பார்வையாளர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்வதும் ஊடகவியல், திரைக்கலைஞர்கள் கையிலும் இருக்கிறது என்று உணர்பவர்கள் அவசியம் காணவேண்டிய படிம், ‘ஒட்டகத்தின் கண்ணீர் பற்றிய கதை'.

பிம்பசாரன் தவா (இப்படத்தின் இயக்குனர்)

தற்பொழுது ஜெர்மனியில் வசித்துவரும் பிம்பசாரன் தவா, மங்கோலியாவில் உள்ள ‘உலான்பதார்' எனும் ஊரில் பிறந்தவர். ஜெர்மனியில் உள்ள மியூனிச் நகரில் ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சி பற்றிய கல்வி கற்றுத் தேர்ந்தவர். இவர் பெரும்பாலும் மங்கோலிய நாடோடிகள் பற்றிய திரைப்படங்களையும், ஆவணப் படங்களையும் எடுத்துள்ளார். இவரது படங்களில் நடிப்பவர்களும் நாடோடிகள்தான். ஜெர்மன் ஃப்லிம் அவார்ட் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள தவாவின் மிகப் புகழ்பெற்ற படங்கள் ‘டூ ஹார்ஸஸ் ஆஃப் செங்கிஸ்கான்', ‘தி கேவ் ஆஃப் தி யெர்ஸோபிக்.'

15 கருத்துகள்:

  1. அன்பின் பாரதிக்குமார்,
    நல்லா இருக்குன்னு சொன்னா பொசுக்குனு முடிஞ்சிரும். இத நான் சனிக்கிழமை படிச்சவுடனேயே உங்ககிட்ட பேசினேன்.அற்புதமான பதிவு இது. எவ்ளோ விசயங்கள்,எப்படிப்பட்ட ஒரு
    பார்வை...அநேகமா உங்க ‘விழித்திரையில் நிற்கும் திரைப்படங்கள்ல’ இதுதான் மாஸ்டர்பீஸ்னு நெனைக்கிறேன். எதுக்கும் 2 மாசம் கழிச்சு மறுபரிசீலணை செய்யுறேன் :)

    பதிலளிநீக்கு
  2. பிம்பசாரன் தவாவை வாழ்த்த தமிழ்ல வார்த்தை இல்ல. Excellent,wonderful, marvellous. நான் ’சம்ஸாரா’ பான் நலின்லேர்ந்து இனி பிம்பசாரன் விசிறியா மாறிட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  3. பாலைவன வாழ்க்கை ப்ற்றி இவ்வளவு தகவல்கள் தரும் படமா! ரொம்ப அருமையா இருக்கே! நிச்சயம் நிறைய தகவல்கள் அறிய முடியுமென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் ப‌ல‌ காட்சிக‌ளை க‌லந்து த‌ங்க‌ பாத்திர‌த்தில(ச‌ன் குழும‌ம்)கொதிக்க‌வைச்சு, பிர‌மாண்ட‌ இய‌க்குன‌ர் அதை விள‌ம்ப‌ர‌ த‌ட்டில‌ ப‌ர‌ப்பி, சூப்ப‌ர்ஸ்டார் ஜிகினா தூவின‌ எந்திர‌னை பாக்கிற‌ த‌மிழ‌னுக்கு இஒபோது, இய‌ற்கை ம‌ண‌ம்(ல்) வீசும் அச‌லை ர‌சிக்க‌ கூறு இல்லை பாரதிகுமார் சார். எந்திர‌ன் தான் இந்தியாவின் மிகப்பெரிய‌ வெற்றிப்ப‌ட‌மாம். இய‌க்குந‌ர் ச‌ங்க‌ருக்கு ஆங்கில தொலைகாட்சி சாத‌ணை விருது வ‌ழங்கி, க‌வுர‌ப்ப‌ட்டுக் கொள்கிற‌து. உங்க‌ள் ப‌திவு ஒரு நல்ல‌ ப‌ட‌த்தின் டிரைல‌ர் பார்த்த உண‌ர்வைத் த‌ந்த‌து. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி மரா ... உங்கள் உடனடி தொலைபேசி , உற்சாகமான குரல் இரண்டுக்கும் நிறைய கடன்பட்டிருக்கிறேன் . உங்கள் அன்பான உந்துதல் காரணமாகத்தான் என் வலைப்பூவில் இவ்வளவு விரைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என் துணைவியார்தான் டைப் செய்கிறார்.. என்னுடைய மகன்தான் பொருத்தமான படங்களை அழகாக பதிய செய்கிறான் இல்லையேல் என் ப்ளாக் பல சமயம் பிளாங்காக வே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி எஸ்கே ... உங்கள் கருத்துரைக்கு நன்றி .. படம் பார்க்கும் பொது நீங்களும் பாலைவனத்தில் அந்த குடும்பத்தோடு பயணிப்பது போல இருக்கும் பசேலென்று இருப்பது மட்டும் காட்சியல்ல அழகான அந்த மணல் வரிகள் கூட அற்புதமான கவிதை வரிகள் என்று பார்க்கும்போது தோன்றும்

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி வாசன் ... உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .. எல்லோருடைய மனக்குமுறலையும் பிரதிபலிப்பதாய் இருந்தது உங்கள் கருத்து.இப்படியான படங்களைபற்றி எழுதுவதன் நோக்கமும் வாசிக்கிற இன்றைய தலைமுறை இயக்குனர் யாரேனும் கொஞ்சம் யோசித்தால் ஒரு மாறுபட்ட தளத்தில் தமிழ் சினிமா பயணிக்கும் என்ற நப்பாசையில்தான் தொடர்ந்து சௌந்தர சுகனில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் வாய்ப்பு இருந்தால் வாசியுங்கள் இதழ் முகவரி ' சௌந்தர சுகன் , சி- 46 , இரண்டாம் தெரு முனிசிபல் காலனி தஞ்சாவூர் மிக்க நன்றி வாசன் ... உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .. எல்லோருடைய மனக்குமுறலையும் பிரதிபலிப்பதாய் இருந்தது உங்கள் கருத்து.இப்படியான படங்களைபற்றி எழுதுவதன் நோக்கமும் வாசிக்கிற இன்றைய தலைமுறை இயக்குனர் யாரேனும் கொஞ்சம் யோசித்தால் ஒரு மாறுபட்ட தளத்தில் தமிழ் சினிமா பயணிக்கும் என்ற நப்பாசையில்தான் தொடர்ந்து சௌந்தர சுகனில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் வாய்ப்பு இருந்தால் வாசியுங்கள் இதழ் முகவரி ' சௌந்தர சுகன் , சி- 46 , இரண்டாம் தெரு முனிசிபல் காலனி தஞ்சாவூர் -613007 சுகன் தொலைபேசி எண் 9894548464

    பதிலளிநீக்கு
  8. ஹா! எத்தனை நுணுக்கமான விரிவான எழுத்து பாரதிக்குமார்.

    மங்கோலியர்களின் வாழ்வுமுறை- அவர்களின் வரலாற்றுப் பின்னணியில் தொடக்கி ஒரு முழு விளக்கத்துக்குப்பின் அழும் ஒட்டகத்தின் விமர்சனம் அவர்களுக்கும் நமக்குமுள்ள இடைவெளியையும் எதற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அருமையாய்ச் சொன்னது.

    இனி உங்களின் பின் தொடர்பவன் நான்.

    சினிமாவை விட்டு நெடுநாட்களாய் விலகி வசிக்கும் எனக்கு மறுபடியும் சினிமாவை அறிமுகப்படுத்துங்கள் பாரதி.வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நண்பரே
    பதிவை இரண்டு நாள் முன்பே படித்துவிட்டேன்,பின்னூட்ட நேரமில்லை சென்றுவிட்டேன் ,ஆயினும் பதிவு இன்னும் மனதில் நிற்கிறது, நல்ல தேர்ந்த எழுத்து நடை.எவ்வலவு விஷயங்கள்? அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் துணைவியாருக்கும் மகனுக்கும் பாராட்டுக்கள்.இந்த அளவுக்கு உங்களுக்கு உதவுகிறார்களே? பெரிய பாங்கு.

    இதை விரைவில் பார்த்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. @சுந்தர்ஜி...
    மிக்க நன்றி. உங்கள் வருகை மகிழ்ச்சியூட்டுகிறது. புதுச்சேரியில் சிறந்த அயல்மொழி திரைப்படங்கள் நல்ல தரத்துடன் கிடைக்கின்றன. வாய்ப்பு இருப்பின் பாருங்கள். Farenheit 451 என்ற படத்தை புதுச்சேரியில் தான் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  11. @கீதப்பிரியன்...
    மிக்க நன்றி. உங்கள் வலைப்பூவை வாசிக்கும்போது பிரமிக்கிறேன். எத்தனை பதிவுகள்.... எவ்வுளவு பின்னூட்டங்கள்.... உங்களின் கருத்துரைகளும் உள்ளார்ந்த வாசிப்பின் பிரதிபலிப்பு... உங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் ஒரு விவரணப் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு.அந்த படத்தில் ஒரு வீடு..வீடல்ல அது. உணர்வுகளின் கூட்டு சங்கமம்.கானாடு காத்தான் செட்டி மார்கள் வீடு போல ஒரு வீடு! அந்த வீட்டில் 100 வயது முதியவர்.பெரியப்பா..அவருக்கு கீழ் 90, 95,98,89,86,75 வயதுகளில் சித்தப்பா,அத்தை,மாமா,மாமி,என்று உறவுகளின் கலவையாய்!அதற்கு கீழ் இப்போது ரிடய்ர்டான பேரன்! அந்த கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 150 பேர்கள். இப்போது பிறந்து நான்கே மாதமான எள்ளு பேத்தி உட்பட! எப்படி அது சிதைந்து காலமென்னும் காட்டாற்று வெள்ளத்தில் சின்னா, பின்னமாய்ப் போய் அந்த வீட்டில் எதிரெதிர் சுவற்றைப் பார்த்துக் கொண்டு வீங்கிய விழிகளுடன் ஒரு வயதான தம்பதி!
    கூட்டுக் குடும்பத்தில் ஆரம்பித்து, அது எப்படி ஒரு நியூக்ளியஸ் ஃபேமிலியாய்..தேய்ந்து.. எல்லாருடைய சுய நலங்களாலும் .சுய விருப்புக்களாலும்..ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் இழந்து பரிதாபமாய் விழுந்து கிடப்பதைப் போல் ..
    குறும் படம் பண்ண ஆசை! இப்போது சர்வீசில் இருப்பதால் நேரமில்லை. நான் ரிடைய்ர்டாகும் போது..
    நானும் என் இல்லாளும் இப்படித் தான் ஒருவரைஒருவர் பரிதாபமாய் பார்த்துக் கொண்டு..
    அப்போது அந்த மாதிரி கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட ஒரு ப்ரம்மாண்டமான ஜாயிண்ட் ஃபேமிலி எடுக்க பலவீனமான உணர்வுகள் அதற்கு இடம் கொடுக்காமல் போக...
    நேரம்..பணம்..எல்லாம் இருந்தும்..
    மறுபடியும் நாங்கள் விழிகளில் நீரோடு..விட்டத்தைப் பார்த்துக் கொண்டு...
    அது தான் யதார்த்தம்!
    அது தான் சாஸ்வதம்!!

    பதிலளிநீக்கு
  13. "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன...வேரென நீயிருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்..’
    இப்படித் தான் அவரவர் இணைகளோடு பழசைக் கிளறி அதில் ஒரு ஸ்வாரஸ்யம் கொண்டு..காலம் என்னும் வேள்வித் தீயில் ஒவ்வொருவராக விழுந்து விடப் போகிறோம் நாம் எல்லாருமே..
    அதுவும் தனித் தனி மரமாகவே!

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி அய்யா உங்கள் நீளமான பதிவு உங்கள் உள்ளத்தில் ஆழமான பதிந்துவிட்ட இழப்பின் வலியை, உண்மையான உணர்வை பிரதிபலித்துவிட்டது வாய்ப்பு இருந்தால் உங்கள் கனவான ஆவணப்படத்தை விரைவில் எடுங்கள் நாங்களும் காண ஆவலாயிருக்கிறோம்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...