சனி, 14 ஆகஸ்ட், 2010

‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)


‘கலை கலைக்காக' என்றும், ‘கலை மக்களுக்காக' என்றும் இரு வேறு வாதப் பிரதிவாதங்கள் எல்லா மொழியிலும், எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கலைக்காக மக்கள் திரண்ட சம்பவம் அங்கொன்று இங்கொன்றாக சரித்திரம் சந்தித்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியான shwaas(சுவாசம்) என்னும் திரைப்படம் அப்படியான மெளனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.


வணிக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி திரைப்படங்களின் நெரிசலுக்கு இடையே மராத்தி மொழிப் படங்கள் சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகின்றன. இந்தித் திரையுலகில் நுழைய முயற்சிப்பவர்கள் கிடைக்கும் இடைவெளியை நிரப்ப மராத்தி படங்களை எடுத்து வந்தனர்.

இந்திய அரசால் வழங்கப்படும் ‘தங்கத் தாமரை' விருது 1954ல் shyamach Aai என்ற படம் பெற்றபிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் வேறு எந்த மராத்தி படமும் அந்த விருதைப் பெறவே இல்லை என்ற நிலையில் shwaas திரைப்படம் அந்த விருதைப் பெற்று ,மராத்தி மொழிப் படங்களின் திருப்புமுனையாகவும் இருக்கிறது.


சந்தீப் சாவந்த்

புனேயில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மராத்தி பெண் எழுத்தாளர் மாதவி கர்புரே ஒரு பத்திரிகையில் தீபாவளி மலருக்காக எழுதிய கதைதான் shwaas. இந்தக் கதையை வாசித்த கணக்குப் பதிவாளர் விஸ்வனாத் நாயக் இது பற்றி நாடக நடிகர் அருண் கடவாலேயேவிடம் தெரிவிக்க, கதையால் ஈர்க்கப் பட்டு, தான் இயக்கும் முதற்படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்யும் முயற்சியிலிருந்த இயக்குனர் சந்தீப் சாவந்துக்குப் பிடித்துப் போனது.

படத்தின் கதை மிகச் சுருக்கமானது. முதியவர் விசாரே(அருண் கடவாலே) தன் 10 வயது பேரக்குழந்தை பரசுராமுக்கு ஏற்பட்ட பார்வைக்குறைவை சரி செய்ய பட்டணத்துக்கு வந்து, பிரபல மருத்துவர் ஸானேவிடம் காண்பிக்கிறார்.



பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் retino blastoma எனப்படும் கண் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸானே... அறுவை சிகிச்சை தவிர வழியில்லை, அதுவும் விரைவில் செய்தாக வேண்டுமென்கிறார். பரசுராமின் உயிரைக் காக்க, பார்வை பறிபோவதை தவிர்க்க முடியாதென்கிறார்.

பரசுராமிற்கும் அவனது பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் விசாரேவுக்கு. நோயாளிக்கு சிகிச்சை முறை பற்றிய அறிவுறுத்தலும், அறிவித்தலும் சட்டப்படி நியாயமெனினும் பத்து வயது பிள்ளையிடம் உனது கண்பார்வையை பறிகொடுத்தே உன் உயிரைத்தக்க வைக்க வேண்டுமென தெரிவிக்க, தேற்ற, மிரண்டு திகைக்கிறார் விசாரே.

அவருக்கு துணை வந்த சமூக சேவகி ஆஸ்வாரி, மருத்துவர் ஸானேவிடம் மன்றாடி, அவர் மூலமே பரசுராமுக்குத் தெரியப்படுத்துகிறார்.

முதலில் அழுது ஆர்பாட்டம் செய்தவன் நிலைமையின் தீவிரம் புரிபட ஓய்ந்து போகிறான். குறித்த தேதியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். எதிர்பாராவிதமாய் அறுவை சிகிச்சை ஒரு நாள் தள்ளிப் போகிறது. படுக்கையிலேயே நாள் முழுதும் இருக்கச் சலித்தவனைச் சமாளிக்கப் பாடாய்ப் படுகிறார் விசாரே. மூடிக்கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கும் போது மட்டுமே அமைதியாகிறான் அவன். வெளியுலகக் காட்சிகளுக்கான அவனது ஏக்கம் புரிகிறது விசாரேவுக்கு.

திடீரென மருத்துவமனை அறையிலிருந்து மாயமாகின்றனர் பாட்டனும் பேரனும். மருத்துவர் ஸானேயும் நிர்வாகமும் பதைக்கின்றனர். தகவல் வெளிக்கசிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மருத்துவமனைக்குப் படையெடுத்து யூகங்களாலும் கேள்விகளாலும் திணறடிக்கின்றனர். மருத்துவர் ஸானே மிகுந்த கோபமாகிறார்.

பொழுது சாயும் நேரத்தில் விசாரேயும் பரசுராமும் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். பரசுராம் கையில் ஏகப்பட்ட விளையாட்டு பொம்மைகள். எதிர்ப்படும் ஸானே, விசாரேயைக் கடுமையாகத் திட்டுகிறார்.

பரசுராமுக்கு பார்வையிருக்கப் போகும் இந்த ஒரே ஒரு நாளாவது அறைக்குள் அடைந்து கிடக்காமல் புறவுலகின் எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், அவனையொத்த வயதினருடன் குதூகலமாக விளையாடி மகிழவும் தான் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் விசாரே.



அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஸானே, கடிந்து கொண்டதற்குப் பிராயச்சித்தம் போல், அறுவை சிகிச்சை செய்யப் போகும் அறையை குழந்தைகள் விரும்பும் பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்க, பணியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.

பரசுராம் ஒளியிழந்த தன் விழிகளைக் கண்ணாடிக்குள் ஒளித்து ஊர் திரும்ப, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு அவனை வரவேற்க நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

இப்படம் இந்தியாவின் அதிகாரப் பூர்வமான திரைப்படமாகப் பரிந்துரைக்கப் பட்டு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப் படுகிறது. பிறகுதான் மராத்தி மக்களின் உணர்வுப் பூர்வமான எழுச்சியை நாம் உணரும் நிகழ்வுகள் நடந்தன

அமெரிக்காவில் தயாரித்து திரையிடப்படும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் எளிதாக ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலிக்கப் படும். பிறமொழிப் படங்கள் ‘சிறந்த அயல்மொழித் திரைப்படம்' எனும் பிரிவில் மட்டும் பரிசீலிக்கப்படும். படத்தை நடுவர்கள் மற்றும் ஆஸ்காரின் 5835 உறுப்பினர்கள் கண்டு அவர்கள் மனதில் படம் பற்றிய மதிப்பை பதிய வைக்க செலவு பிடிக்கும் மெனக்கெடுவைச் செய்ய வேண்டும். ஏனெனில், உலகம் முழுக்க ஏற்கனவே பிரபலமான படங்கள் உறுப்பினர்களிடையேயும் அறியப்பட்டிருக்கும். பிற மொழி படங்கள் பற்றி ஆஸ்கார் குழுவினரிடம் பிரபலப்படுத்த படத்தை தயாரித்தவர்கள்தான் முயற்சிக்கவேண்டும். அமீர்கான் கூட ‘லகான்'படத்துக்காகவும், பின்னர் ‘தாரே ஜமீன்பர்' படத்துக்காகவும் நிறையச் சிரமப்பட்டார்.

shwaas படத்தை தயாரிக்க ஆன செலவை (30,00,000) விட அதிக தொகை படத்தை முன்னிறுத்த(promote) தேவைப்பட்டது. மஹராஷ்ட்ராவில் உள்ள ஜோஹேஸ்வரி பள்ளிக் குழந்தைகள், விளக்குகள் தயாரித்து விற்றுக் கிடைத்த ரூ.30,000 பணத்தை தந்தனர். வேறொரு பள்ளி மாணவர்கள் பகுதி நேர வேலையாக கார்களைத் துடைத்து அதில் கிடைத்த தொகையை அனுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தார். அமிதாப்பச்சன் ரூ.ஒரு லட்சமும், கோவா அரசு 2.5 லட்சமும், மகாராஷ்டிர அரசு 15 லட்சமும் தந்தனர். அமெரிக்காவிலுள்ள மகராஷ்டிர மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் மகாராஷ்டிர நாடக அமைப்புகள் 65,000 ரூபாயும், சித்தி வினாயகர் ஆலய நிர்வாகிகள் தனியொரு உண்டியல் மூலம் திரட்டி தந்த சிறு தொகையும் பயன்படுத்தி 14 முறை ஆஸ்கர் குழுவினர் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் மக்களை ஈர்த்து பெருந்திரளாகச் சேர்ப்பது கூட அரிதாகி விட்ட சூழலில், ஒரு மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு திரைப்படத்தின் பின்னே திரள வைத்தது பெரும் எழுச்சி என்று சொல்லலாம்.

படத்தில் சிறுவனாக நடித்த அஸ்வின் சிட்டாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றான். shwaas திரைப்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும், பெரும்பாலான மக்கள் திரளும் திருமண மண்டபங்கள், பள்ளி அரங்குகளில் மக்களாலே பல முறை திரையிடப்பட்டு மராத்தியர்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தது.

40கோடி,50கோடி முதலீடு செய்து ஒரு படத்தை தயாரிக்கத் தயாராய் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற வெகு குறைந்த முதலீட்டில் வருடத்துக்கு ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தால் மக்கள் அவர்கள் பின் திரளமாட்டார்களா என்ன?

(கல்கியில் பிரசுரமானது)

7 கருத்துகள்:

  1. நண்பரே
    நல்ல அறிமுகத்திற்கு நன்றி.
    மாற்று சினிமா வளர்ச்சி மக்களின் ஆர்வம் அபார ரசனை மூலமே சாத்தியமாகும்.நான் மாத்ருபூமி என்னும் ஹிந்தி படமும் இப்படி தேடி பார்த்தேன்.கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.
    http://en.wikipedia.org/wiki/Matrubhoomi

    பதிலளிநீக்கு
  2. அருமையான இடுகை நண்பரே. மராத்தில அருமையான படங்கள்லாம் வந்திருக்கு.உங்களுக்கு தெரியாதது இல்ல. சுகன் பாஷைல சொல்லனும்னா,
    ”அற்புதமான படம்.அழகா பதிவு செய்துட்டீங்க ஐயா.” :)நன்றி

    பதிலளிநீக்கு
  3. நண்பரே முடிஞ்சா ‘நட்டரங்’ பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி கீதப்பிரியன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி மாத்ரு பூமி மிக சிறப்பான படம் என்னிடம் அதன் பிரதி இல்லை பல வருடங்களுக்கு முன் பார்த்தது மீண்டும் நினைவு படுத்தினீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி நட்டரங் நான் பார்த்தது இல்லை .நீங்கள் குறிப்பிட்ட பிறகு அவசியம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது . கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிக நல்ல பதிவு.. இது போன்ற நல்ல படங்களை எடுக்க கார்ப்பொரேட் நிறுவனங்கள் முன் வந்தால் நாடு முன்னேறிவிடாதா? அதனால் தான் கவனமாக தவிர்க்கிறார்கள்.. மக்கள் இப்படியே இருப்பதில் தானே அவர்களின் வெற்றி இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் ப்ரியா நம் ஏமாளித்தனத்தில் அல்லது நம் மெத்தனத்தில் இருக்கிறது அவர்கள் வெற்றி. ஆனால் சில குப்பை படங்களை கோடி கோடியாய் கொட்டி செலவழித்து பார்க்கும்போது மனம் இயலாமையில் பதைக்கிறது. அவர்களின் நோக்கங்கள் லாபம் ஈட்டவா கணக்கு காட்டவா என்று... இரணடாவது காரணம் நிஜம் என்றால் ஒரு நல்ல படம் எடுக்கவேண்டும் என்று என் அவர்களுக்கு தோன்றுவதில்லை? எத்தனை இலக்கியங்கள் நம் மண்ணில் இன்னமும் கடைக்கோடி வரை போய் சேராமல் இருக்கிறது? இந்த ஆதங்கம்தான் என் திரைப்பட விமர்சனங்களின் நோக்கம் ... மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...