இயக்குனர்: கேத்தரின் பிக்ளே
தயாரிப்பாளர்: நிக்கோலஸ் சார்ட்டியர்
கதாநாயகன்: ஜெரோமி ரென்னெர்
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவப் படையில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் பிரிவுகள் அங்கு ஒரு வருடத்திற்கு ஒரு குழு என்ற சுழற்சி முறையில் பணியாற்றுகின்றன.
மரணத்தின் அருகே சென்று கை குலுக்கி குசலம் விசாரிக்கும் அந்த எமகாதக வேலையில் வில்லியம் ஜேம்ஸ், தாம்சன், ஓவன், ஸான்பார்ன் அடங்கிய குழு 2004-ல் பணியாற்றுகிற போது நேர்கின்ற பரபரப்பான, வேதனையான சம்பவங்களே படத்தின் மையக் கரு.
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் தாம்சன் இறந்து விடுகிறார். தேசம் விட்டு தேசம் வந்து, சொந்த பந்தங்கள் இல்லாத பூமியில் பழகிய நால்வரில் ஒருவரின் இழப்பு மற்றவர்களை வெகுவாக பாதிக்கிறது.
தாம்சனுக்குப் பிறகு ஜேம்ஸ்தான் வெடிகுண்டுகளோடு உரையாடி, உறவாடி அவற்றை உயிரற்ற ஜடமாக்கும் பணியை செய்ய வேண்டியிருக்கிறது.
குறுந்தகடுகளை விற்கும் பெக்ஹாம் என்ற சிறுவனோடு ஜேம்ஸுக்கு விளையாட்டாக நட்பு உருவாகிறது.
தங்களது அடுத்த வேட்டையின் போது முகம் சிதைந்த இறந்து போன சிறுவனின் வயிற்றுக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்து, ஜேம்ஸே அதனை வெளியிலெடுத்து அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இறந்து போன சிறுவன் பெக்ஹாம் தானோ என்ற சந்தேகம் எழ, ஜேம்ஸ் அவன் வேலை பார்க்கும் கடையில் தேடுகிறான். அங்கு அவனைப் பற்றி எந்த தகவலும் சொல்லப்படாமல் போக கவலையுடன் முகாமுக்கு வருகிறான்.
மற்றொரு வேட்டையில் உடனிருக்கும் ஓவனின் இடுப்புக்குக் கீழ் படுமோசமாகக் காயம் படுகிறது. அவன் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் படுகிறான்.
ஈராக்கிய அப்பாவி ஒருவரின் இடுப்பில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து கட்டிவிட, அதனைச் செயலிழக்க வைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் அவர் தூள் தூளாகும் காட்சி உருக்கமானது. இந்த கொடூரமான காட்சியை நேரில் பார்த்தபின் இனி இப்படியான பணியில் ஈடுபடக் கூடாது என்ற மன உறுதி ஸான் பார்னுக்கு ஏற்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில் பெக்காம் குறுந்தகடுகளை விற்றபடி வருகிறான்.
தங்களுக்கான சுழற்சி முறை முடிந்து ஜேம்சும், ஸான் பார்னும் நாடு திரும்புகின்றனர். ஜேம்ஸ் தன் வேதனைப் பெட்டகத்தைத் திறந்து, கொடூரமான அனுபவங்களை தன் ஒரு வயதுக் குழந்தையிடம் சொல்லுகிறான். ஆனாலும் மீண்டும் வரும் அடுத்த சுழற்சி பணிக்காக திரும்பவும் தயாராகும் காட்சியோடு படம் முடிவடைகிறது.
படத்தில் ஜேம்ஸ்-ஆக வரும் ஜெரோமி ரென்னெரின் நடிப்பு அபாரமானது துல்லியமான முகபாவங்கள், அங்க அசைவுகள் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன. பேரி அக்ராய்ட்டின் ஓளிப்பதிவு பாலைவன வறட்சியையும் மீறி அழகியலாக காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. ஒரே காட்சியில் வெவேறு கோணங்களை படமாக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கதையமைப்பு இருந்தாலும் கோணங்களை அடுத்து அடுத்து மாற்றுவதில் குழப்பமில்லாத நேர்த்தியை கையாண்டிருக்கிறார்.
ஒரு ஆவணப் படத்துக்கான சாயலுடன் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் ஆஸ்கார் விருதைப் பெறுவதற்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்திருக்கிறது.
அமெரிக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ‘பொஹம்மர்'என்ற இராணுவ வீரர், அமெரிக்கா முழுவதும் மிகப்பிரபலமானவர். அவரது வலைப்பூ மூலம் ராணுவ வீரர்களுக்காக நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வீரர்களின் குடும்பத்துக்காக உதவி வருகிறார். பொஹம்மர் படத்தில் ஜேம்ஸ் தன்னிச்சையாக பல இடங்களில் முடிவெடுத்து, தன் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்படாமல் சாகஸங்கள் நிகழ்த்துவது போல் காண்பிக்கப் பட்டிருப்பதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இராணுவத்தில் கடைநிலை ஊழியன் மேலதிகாரிக்குக் கட்டுப் படாதவன் என்கிற பிம்பத்தை தோற்றுவித்துவிடும் என்பதோடு, படத்தில் வீரர்கள் அணிந்திருக்கும் இராணுவ உடைகளும் தவறானவை. பாலைவனத்தில் அணியத்தக்கவென்றே பிரத்யேகமான உடைகள் தான் அமெரிக்க அரசால் தரப்பட்டன. வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க பல்வேறு முறைகள் உள்ளன. படத்தில் பெரும்பாலும் கட்டிங் ப்ளேயர், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையே அதிகம் பயன் படுத்துவது வர்த்தக படங்களின் அடியொற்றியே எடுக்கப்பட்டிருக்கும் அறியாமையை காட்டுகிறது என்பதும் அவரது குற்றச்சாட்டு.
விருது அறிவிக்கப்படும் முன் படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘நிக்கோலஸ் சார்ட்டியர்' ஆஸ்கார் நடுவர் குழு உறுப்பினர்களுக்கு இ.மெயில் மூலம் இந்தப் படத்தை தேர்வு செய்யும் படி வேண்டுகோள் அனுப்பியது ஆஸ்கார் குழுவை எரிச்சலூட்டியது. அவர் எச்சரிக்கப்பட்டு, விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டார்.
படத்தின் கதை ‘மார்க்போல்' என்ற பத்திரிகையாளருடையது. இவர் ஈராக் யுத்தத்தின் போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார். வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவில் பணியாற்றிய அமெரிக்க இராணுவ வீரர் ஜெஃப்ரி சார்வரின் சாயலாகவே படத்தின் ‘ஜேம்ஸ்' கதாபாத்திரம் படைக்கப் பட்டிருப்பதாக அமெரிக்கா முழுவதும் நம்பப் படுகிறது. இதன் காரணமாக படத்தில் இராணுவம் பற்றிய ஆட்சேபகரமான தகவல்கள் இருப்பதாக தற்பொழுது‘ஜெஃப்ரி' வழக்குப் பதிவு செய்துள்ளார். சிறந்த கதாசிரியருக்கான ஆஸ்கார் விருதை இந்த படத்துக்காகப் பெற்ற மார்க்போல் தான், இப்படத்தின் தொழில் நுட்ப ஆலோசகரும் கூட. எனவே, மார்க்போலுக்கு இந்த வழக்கு கூடுதல் தலைவலியைத் தந்துள்ளது.
இதேபோல 1930-ல் எடுக்கப் பட்ட All Quiet on Western Front என்ற படமும் ஆஸ்கார் விருது பெறும் போது பல சர்ச்சைகளைச் சந்தித்தது. ஜெர்மன் இராணுவ வீரர்கள் மீதான அனுதாபப் பார்வையோடு எடுக்கப் பட்டது அந்த படம். அவர்களின் கொடூரமான இன்னொரு முகத்தை மறைக்கும் முயற்சி என்று விமர்சிக்கப் பட்டது.
2010-க்கான கோல்டன் குளோப் விருதுப் போட்டியில் ஜேம்ஸ் காமரூன் இயக்கிய ‘அவதார்' படம் ‘ஹர்ட் லாக்கரை'ப் பின்னுக்குத் தள்ளி வென்றாலும், ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், ‘அவதாரை' தோற்கடித்து ‘ஹர்ட் லாக்கர்' பரிசை தட்டிச் சென்றது.
‘அவதார்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவிதான் ‘ஹர்ட் லாக்கரை' இயக்கிய கேத்தரின் பிக்ளே என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம்.
(கல்கியில் வெளிவந்தது)
நண்பரே,மிகவும் அருமையான தரமான விமர்சனக் கட்டுரை,கல்கியில் வெளிவந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎத்தனையோ படங்கள் கடந்த ஐந்து வருடங்களில் ஆப்கானிய,இரானிய சூழ்நிலைகளை உலகுக்கு உரைத்தாலும்,இப்படம் சொன்ன சேதி புதிது,வெடிகுண்டு அகற்றும் பணி என்பது தமிழ்திரைப்படங்களில் வருவது போல அவ்வளவு லேசுப்பட்டதல்ல என புரிய வைத்த படம்.மிகவும் அருமையான எழுத்து நடை.தமிழிஷ்ல் இணைத்துவிடுங்கள்.
இரானியவுக்கு பதில் இராக்கிய என்று இருக்க வேண்டும்,மன்னிக்க
பதிலளிநீக்குநல்லதொரு விமர்சனம் நண்பரே.அவுக வீட்டுக்காரரு நல்ல பல விசயங்கள் சொல்லி குடுத்திருப்பாரு போல இந்த இயக்குனர் அம்மாவுக்கு :)
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் உங்கள் ஆலோசனைப்படி தமிலிஷ்-ல் பதிந்து விடுகிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்கள் நுட்பமான விமர்சனத்துக்கு மீண்டும் நன்றி
பதிலளிநீக்கு