காட்சி - 6
பாத்திரங்கள் :
வ.உ.சி, சிவம்
வ.உ.சி.:
வாருங்கள் சிவம்.
என்ன இன்று
உங்கள் முகத்தில்
மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது...!
சிவம்:
உண்மையிலேயே மகிழ்ச்சியான
செய்திதான். நமது வீரம் செறிந்த போராட்டத்தின்
காரணமாக, ஆலை
நிர்வாகம் பணிந்து
வந்து விட்டது.
வேலை நேரத்தை
நிர்ணயம் செய்து
விட்டதோடு, உடல் நலம் சரியில்லாத தொழிலாளர்களுக்கு
தேவைப்பட்ட மருத்துவ வசதி, விடுப்புச் சலுகைகள்
ஆகியவற்றை அளிப்பதாக,
உத்தரவாதம் தந்துள்ளது.
வ.உ.சி.:
நல்லது. தொழிலாளர்கள்
இனி நிம்மதியாக
இருக்கலாம். இந்தியாவுக்கே முன்மாதிரியாக
இப்போராட்டம் அமைந்து விட்டது!
சிவம்:
ஆனால் நீங்கள்
மட்டும்... ஏதோ கவலையில் இருப்பதாக... தோன்றுகிறதே....
வ.உ.சி.:
பிரிட்டீஷ் நேவிகேஷன்
கம்பெனி தங்கள்
கப்பலில் பயணம்
செய்வதற்கு முற்றிலும் இலவசமென அறிவித்திருக்கிறது. அதோடு, இலவசப் பொருட்களையும் தருவதாக
அறிவித்துள்ளது. நமது சுதேசி கப்பல் கழக
கப்பல்கள் இரண்டு
மூன்று நாட்களாக
ஆட்கள் இல்லாமல்
பயணத்தை ரத்து
செய்து விட்டன.
இலவசத்துக்கு மயங்கிய மக்கள் அதற்குப் பின்னே
நிகழப் போகும்
ஏகாதிபத்திய திட்டங்களை உணரவில்லை.
சிவம்:
மக்கள் அப்படித்
தான் இருப்பார்கள்.
ஆசை படுத்தும்
பாடு அளவற்றது
தானே...
வ.உ.சி.:
இந்த
நஷ்டத்துக்கு என் அரசியல் ஈடுபாடுகள் தான்
காரணம் என்று
சுதேசிக் கப்பல்
கம்பெனி முதலீட்டாளர்கள்
சிலர் சந்தேகிக்கிறார்கள்.
எனவே, நான்
விலகினால் மட்டுமே
கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியுமென அவர்கள்
கருதுகிறார்கள்.
சிவம்:
ஒருபோதும் ஒப்புக்
கொள்ளாதீர்கள். நீங்கள் மைய விசையாக இருப்பதால்
தான், இந்தக்
கம்பெனி இன்னும்
உயிர்ப்புடன் இருக்கிறது.
வ.உ.சி.:
இப்போதைய பிரச்சினை
நான் இருக்கிறேனா,
இல்லையா என்பதல்ல.
நமது சுதேசிக்
கப்பல் கழகம்
இருக்குமா என்பது
தான்.
சிவம்:
கப்பல்கள் இரண்டும்
தூத்துக்குடி வந்தபோது, மகாகவி பாரதியார் இந்தியா
பத்திரிக்கையில் கப்பலில் நீங்கள் வெற்றிக் கொடியோடு
வருவது போலவும்,
தமிழ்மக்கள் கூடி நின்று, வீரச்சிதம்பரம் வாழ்க
என்று குரலெழுப்புவது
போலவும் கார்ட்டூன்
வரைந்திருந்தாரே... அந்த அளவுக்கு
கப்பலையும் சிதம்பரனாரையும் யாராலும் பிரித்துப் பார்க்க
முடியாதே...
வ.உ.சி.:
எதுவும் நிரந்தரமல்ல.
எல்லாம் ஒருநாள்
மாறும்.
சிவம்:
இருபத்தி மூன்றாவது
காங்கிரஸ் மகாசபைக்
கூட்டம் வருகிற
டிசம்பர் ஆறாம்
தேதி சூரத்தில்
நடைபெறப் போகிறதே...
அந்தக் கூட்டத்தில்
தமிழகத்திலிருந்து நூறு பேராவது
கலந்து கொள்ள
வேண்டும் என்று
திலகரும் அரவிந்தகோஷும்
விரும்புகின்றனர். வட இந்தியத்
தலைவர்கள் அனைவருக்கும்
தெரிந்த ஒரே
தென்னிந்திய தலைவர் நீங்கள் தானே. எனவே
நீங்கள் வருவதும்,
மிக முக்கியம்
என்று செய்தி
அனுப்பியிருக்கிறார்கள்.
வ.உ.சி.:
திலகரும் அரவிந்தரும்
என் மீது
காட்டும் பாசத்துக்கு
என்ன கைம்மாறு
செய்யப் போகிறேன்...
நூறு பேரை
மகாசபைக்கு அனுப்புவது நம் இலக்கு. அதில்
ஐம்பது பேரின்
பயணச் செலவை
நான் ஏற்கிறேன்.
மீதி ஐம்பது
பேரின் பயணச்
செலவுக்கு மண்டகாயம்
சீனிவாசாச்சாரியிடம் பேசி ஏற்றுக்
கொள்ளச் செய்வது
என் வேலை.
சிவம்:
பிரிட்டிஷ் எதேச்சாதிகாரத்துக்கு
எதிராக நாம்
தீவிரமாக இயங்க
வேண்டிய தருணமிது.
நாம் எல்லோரும்
திலகரின் கரங்களை
பலப்படுத்த வேண்டியது அவசியம்.
வ.உ.சி.:
நிச்சயமாக. வங்கத்
தலைவர்கள் சுதந்திரப்
போராட்டத்துக்கு முன் நிற்கையில் தங்கத் தமிழர்கள்
அதற்கு வலு
சேர்ப்பது கடமையல்லவா...
பாத்திரங்கள் :
வ.உ.சி, சிவம்
சிவம்:
பிள்ளைவாள்... கேள்விப்
பட்டீர்களா... அரவிந்த கோஷிற்கு எதிராக சாட்சி
சொல்ல மறுத்த
விபின் சந்திர
பாலரை கைது
செய்ததே... பரங்கியர் அரசு... இப்பொழுது இறங்கி
வந்து விடுதலை
செய்யப் போகிறதாம்
அவரை.
வ.உ.சி.:
மிக நல்ல
செய்தி. சுதேசிப்
பொருட்களை மட்டுமே
வாங்குவோம். அந்நியப் பொருட்களை எரித்தழிப்போம். என்ற
கொள்கையில் திடமான நம்பிக்கைக் கொண்ட காங்கிரஸ்
இயக்கத்தின் நாக்கு, விபின் சந்திர பாலு
வெளியே வருவது
வீறு கொண்ட
வேங்கை வேட்டைக்கு
வருவதைப் போல.
விபின் சந்திர
பாலர் ஆயிரம்
யானைக்குச் சமம்.
சிவம்:
உங்கள் மீது
மாறாத அன்பு
கொண்டவர் ஆயிற்றே...!
வ.உ.சி.:
அதிலென்ன சந்தேகம்?
சூரத் மாநாட்டில்
அவரும் அரபிந்தரும்
எப்படி நம்மை
அன்போடு உபசரித்தார்கள்!
விபின்பாலர் விடுதலையாகும் தினத்தை நாம் வெகு
விமர்சையாக தமிழகத்தில் கொண்டாட வேண்டும்.
சிவம்:
விபின் சந்திரபாலர்
விடுதலைப் பெருவிழா
என்று நாம்
தூத்துக்குடியில் அமர்க்களப்படுத்தி விடுவோம்.
வ.உ.சி.:
அது மட்டுமல்ல.
விதேசிப் பொருட்களை
எரிக்கும் போராட்டத்தை
நாம் இன்றிலிருந்தே
துவங்கி விடுவோம்.
நாம் அந்நியப்
பொருட்களின் மீது வைக்கும் தீ சுதந்திர
நாளுக்கான வேள்வித்
தீ!
சிவம்:
சுதேசி இயக்கத்தில்
அசைக்க முடியாத
தூண் விபின்
என்றால் நீங்கள்
நிலைக்கதவு அல்லவா!
வ.உ.சி.:
எரிப்பது மட்டும்
நம் செய்கையாக
இருக்கக் கூடாது.
நமது நெசவுத்
தொழிலாளர்கள் நெய்யும் ஆடைகளின் உற்பத்தியை இதன்
மூலம் பல்கிப்
பெருகச் செய்ய
வேண்டும். நெசவாளர்
கூட்டுறவுச் சங்கம் ஒன்று அமைத்து அவர்களது
உற்பத்திப் பொருட்களுக்கு நல்லதொரு சந்தையை நாம்
ஏற்படுத்தித் தரவேண்டும்.
சிவம்:
இன்னும் வேறென்ன
கனவு உங்களுக்கு?
வ.உ.சி.:
அண்மையில் சென்னை
சென்ற போது
பயிரேதும் செய்யப்படாது
தரிசு நிலங்கள்
சில ஆயிரம்
ஏக்கர் கணக்கில்
வெட்டவெளியாய்க் கிடக்கின்றன. சென்னையில் ஒரு வேளாண்
சங்கம் அமைக்கும்
முயற்சியில் இருக்கிறேன். சென்னையில் தரிசு நிலங்களைப்
பயிர் செய்து
அதனைப் பசுமை
நகராக மாற்ற
வேண்டுமென்பதும் என் கனவு.
சிவம்:
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமும்
உங்களுக்கு நாட்டைப் பற்றித் தான் நினைவு.
சரி, நாளையே
அந்நியத் துணி
பகிஷ்கரிப்பு போராட்டத்தைத் துவக்குவோம்.
அதில் விபின்
பாலர் விடுதலைப் பெருவிழா
பற்றியும் அறிவிப்போம்.
வந்தே மாதரம்!
வ.உ.சி.:
வந்தே மாதரம்!!
(கனவு மெய்ப்படுமா...?!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>