ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

என்ன செய்யப் போகிறோம்?

“கிடங்கில் தீட்டப்பட்டுக் காத்திருக்கும்
போராயுதங்களைவிட
கையில் வைத்திருக்கும் ‘ஒரு வாக்கு'
கூர்மையானது”

வரலாற்றின் திறந்த பக்கங்கள் ஜனநாயக ஆட்சிமுறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. அதன் கூறுகளை நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சராசரி இந்தியக் குடிமகனோ அதன் மீது அதிருப்தியுற்றவனாகவே காணப்படுகிறான். ஆனால் அவ்விதமான அதிருப்திகளை எதிரொலிக்க வேண்டிய தேர்தல் களத்தில் திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தவற விட்டவர்கள் போல தங்கள் முன்தீர்மானங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு கையில் கிடைக்கும் கொழுகொம்பைப் பற்றியபடி பரிதவிக்கிறார்கள்.

தற்போதைய தேர்தல் முறை பற்றியும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தேர்தல் காலங்களில் மட்டும் விவாதிக்கப்பட்டு பின் அவை மறக்கவும் படுகிறது. தேர்தல் முறை பற்றி விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் தேவைப்படுவது ஒரு புறமிருந்தாலும், இருக்கின்ற விதிகள் பற்றியும், அவை பற்றிய விழிப்புணர்வும், நம்முடைய உரிமைகள் குறித்தும் நாம் அறிய வேண்டியவை ஏராளம்.

பெரும்பான்மையான வாக்காளர்கள் இன்றைய அரசியல் மீது ஆர்வமில்லாத காரணத்தாலும், இதனால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்கிற அபிப்ராயத்தினாலும் வாக்களிக்கச் செல்வதில்லை. ஆனால் எத்தனையோ தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப் படுகிற பொழுது, ஒவ்வொரு வாக்கும் எத்தனை அதிமுக்கியமானது என உணர முடியும்.

இன்னும் சிலர் தாங்கள் வாக்களிக்கப் போகும் முன்பே தங்களது வாக்கினை வேறு எவரோ கள்ளத்தனமாகப் போட்டு விடுகிறார்களே என்றும் பிறிதொரு பிரிவினர் நிற்கும் வேட்பாளர்கள் எவருக்குமே வாக்களிக்கும் விருப்பமில்லையே என்றும் அதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.

இரண்டுக்குமே நமது தேர்தல் விதிமுறைகளில் வழிமுறைகள் உண்டு. நம்முடைய வாக்கினை வேறு எவரோ போட்டுவிட்டால், நாம் நம்முடைய ஆட்சேபணையை அந்த வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, நம்முடைய இருப்பிட மற்றும் அடையாளச் சான்றுகளைக் காண்பித்து நிரூபித்தபின் புதிய வாக்குச் சீட்டில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த வாக்குச் சீட்டு பெட்டியில் போடப்படாமல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு வித்தியாசம் ஒற்றை இலக்கத்திலிருந்தால் அப்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இது பற்றி குமுறிக் கொண்டிராமல் உரிமையோடு கடமையைச் செய்யலாம்.

அடுத்ததாக ‘எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை' என்றால் வாக்குச் சாவடியிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் எல்லா வாக்காளர்களையும் போல் நம் பெயரையும் கையொப்பத்தையும் பதிந்து விட்டு 17-A படிவம் பெற்று அதில்

‘49-O' விதிப்படி எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என பதிவு செய்யலாம். இதனால் என்ன பயனென்றால், ஒன்று, நம் பெயரில் வேறு எவரேனும் வாக்களித்து விடாமல் தடுத்து விடலாம். அடுத்து, இதே போன்று அதிகம் பேர் வாக்களித்தால் புதியதொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய அவசியத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

எனவே நம்முடைய ஒரு வாக்கு மதிப்பு மிக்கது. மாற்றத்தைத் தரவல்லது. ஆட்சி அதிகாரத்தையே கூட முடிவு செய்ய வல்லமை பெற்றது.

விருப்பமான எவருக்காவது வாக்களியுங்கள். அல்லது எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாவது வாக்களியுங்கள்.

ஒருபோதும் வாக்களிக்கும் உரிமையை விட்டுத்தராதீர்கள். நம் தீர்மானங்கள் எல்லாம் நிர்மாணிக்கும் உரிமையும், பொறுப்பும் நம் விரலருகில்... நாம் என்ன செய்யப் போகிறோம்?

10 கருத்துகள்:

 1. மிகச் சரியான நேரத்தில்
  வாக்காளர்களின் ஜன நாயகக் கடமையை
  தெளிவாக அறிவுறுத்திப்போகும் நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையான அறிவுரை
  இந்த தேர்தலில் ஊருக்கு வர சாத்தியப்படவில்லை.வருத்தமாக உள்ளது

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு பாரதி.

  என் இடுகைகளில் கூட நான் புறக்கணிப்புப் பற்றி எழுதப்பட்ட கருத்துக்கள் ஒரு கோபத்தில் எழுதப்பட்டவையே.

  ஆனால் உங்கள் வார்த்தைகளில் தெரியும் நிதானம் ஆரோக்கியமானதும் அறிவார்ந்ததுமாகும்.

  49ஓ தான் என்னுடைய சாய்ஸ்

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி சுந்தர்ஜி சார் ... உண்மையில் சில சந்தர்ப்பவாதிகள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட சிலரை தவிர மீதி பேருக்கு இந்த தேர்தல் நடை முறை மீது பெரிதாக நம்பிக்கை ஒன்றுமில்லை .. நம்மால் எப்படி முடியும்? என்ற மக்களின் அவநம்பிக்கையின் மீதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடுகிறது ... something is better than nothing எல்லா பயணங்களும் ஒரு சிறு அடியில்தான் துவங்குகிறது .. உங்கள் முதல் அடி பலத்த அடியாக மாறட்டும் ...உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கு என் வந்தனம் .. உங்கள் வலைப்பூ வித்யாசமாக அழகாக உள்ளது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி கீதப்ரியன் சார் . உங்கள் வாக்கைப் பெறும் அதிர்ஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் போலும் ... அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் ......

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு பாரதி.உங்கள் கருத்து மிகவும் தேவையான சமயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நீங்கள் சொல்வது போல பெரும்பான்மை மக்களுக்கு இந்த தேர்தல் நடைமுறை மீது நம்பிக்கை இல்லை தான். (நான் கூட அந்த பெரும்பான்மையில் தான் நிற்கிறேன்) மக்களின் இந்த அவநம்பிக்கையில் தான் அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடுகிறது என்ற உங்கள் வரிகள் உண்மை. ஆனாலும், என்ன மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. எரிகிற கொள்ளியில் எது நல்லது என்கிற மாதிரி தானே இருக்கிறது அரசியல் கட்சிகள்? வேண்டுமானால் ஒன்று செய்யலாம், நாமே நேரடி அரசியலில் இறங்கி விடலாம்

  பதிலளிநீக்கு
 8. தாராளமா வாங்க பிரியா .. உங்களைப் போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் வருவது நல்லதுதானே .. அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிக்கொள்ளாமல் நாமே இறங்கலாம் என்று சொல்ல முன்வந்ததே நல்ல துவக்கம்தான் .. ஏனெனில் சாக்கடை என்று ஒன்றை இறைவன் படைக்கவே இல்லை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். என்பதால் மனிதர்கள்தான் அதை சுத்தப்படுத்த வேண்டும் . தேவை நல்ல உள்ளமும் ... பொதுவாழ்வை ஏற்க மனோதிடமும்தான் .. ஊழலின் மீது மக்களின் அளவற்ற வெறுப்புதான் அன்னா ஹசாரே வுக்கு குவிந்த ஆதரவுக்கு காரணம் .. அதை அரசியல் சக்தியாக மாற்ற தவறிவிட்டோம் ..இப்போதும் ஒன்றும் குடி முழ்கி போய் விடவில்லை தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒருவர் இரண்டுமுறைக்கு மேல் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும் என்று போராட ஆரம்பித்தால் போதும் பெரிய அளவு ஆதரவு கூடும்... ஆனால் எதையும் ப்ளான் பண்ணித்தான் செய்யணும்

  பதிலளிநீக்கு
 9. திட்டமிட்டு செய்கிறவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் அவர்களை இந்த மீடியா கண்டுக்கொள்வதில்லை. மேலும் அவர்களின் உழைப்பை மிக சாதுரியமாக சுரண்டி தன்னுடையதாய் வெட்கம் இல்லாமல் பிரசாரம் செய்கிறார்கள். ஊடகங்களும் மௌனமாய் தவறானவர்களின் பிரசாரத்துக்கு துணை போகிறார்கள். நாமும் இன்னமும் நமக்கு ஒரு தலைமையை தேடிக் கொண்டிருக்கிறோம் . நம்மை நாமே நம்பாமல். இப்படி எழுத இருக்கிறது நிறைய ஆதாரத்துடன். ஆதங்கம் மேலிட , உங்களக்கு ஒரு வணக்கம் உங்கள் பதிவிற்காக.

  பதிலளிநீக்கு
 10. உங்கள் ஆதங்கம் புரிந்து கொள்ளகூடியது உங்களிடம் இன்னும் மேலதிக கருத்துக்கள் இருக்ககூடும். உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்கள் .. எல்லா நெருப்பிற்கும் சிறு பொறிதான் ஆதாரம்

  பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>