சனி, 11 செப்டம்பர், 2010

விசும்பல்


“சொக்கன் வந்துட்டானா?”
“கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி.....”
“ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம் நீயா பாத்து ஊதவேண்டியதுதான்... ஒனக்கு ஒரு ஆளு மேம்பார்வை பாத்துகிட்டு வெரட்டிகிட்டு இருக்கமுடியாது... சுத்தம்பற ஊதுனாத்தான் பேசுனபடி காசு..” தலையாரி உத்தரவு போட்டுக்கொண்டே நடந்தார்.
“ தெரு கிளிஞ்சிடாது... ஓன் சோலியப்பாரு... அய்ய.... என்னப் பத்தி கவலப்படாதே” சங்கை எடுத்து மணி அடித்தபடி ஊதத்துவங்கினான் சொக்கன்.
தெரு சனம் ஒவ்வொருவராய் வர துவங்கினர். சின்ன வயசு சாவுதான் என்றாலும் விபத்து நடந்து மூணு மாதமாகியும் அப்பவோ இப்பவோ என்று இழுத்துக்கொண்டதில் எதிர்பார்த்த சாவுதானே என்ற அசுவாரசியம் தெரிந்தது எல்லோர் முகத்திலும். ஊரில் நல்ல காரியம் வைக்க தேதி குறிக்க முற்படுபவர்கள் ‘எதுக்கும் ஒரு எட்டு செவனாண்டி வூட்டுல பாத்துட்டு வா.. அங்க வேற ஒண்ணு சொள்ளைகரைக்கு போவேனான்னு அடம் புடிச்சுகிட்டு கெடக்கு” அப்பிடின்னு ஆளனுப்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
32 வயசெல்லாம் ஒரு வயசா... ஆனாலும் மனித மனம் எத்தனை குரூரமாக மாறிவிடுகிறது சுயநலம் என்று வந்துவிட்டால்... செவனாண்டி மகன் சம்பத்து வண்டியில் ஏறி ஒரு அரக்கு அரக்கி பறந்தானென்றால் தெரு கொஞ்சம் ஆடிதான்போகும். கடைசியில் அவனது வாகனமே அவனுக்கு எமனானது..முதுகெலும்பில் பட்ட அடி மூளையை பாதிக்க வெறும் உயிர் ஒடும் ஊடகமாக மட்டுமே அவனது உடல் கிடந்தது மூன்று மாதமாய்...
“ முருகேசா... மருதாயி கெளவிக்கு ஆளனுப்பிட்டியா?”
“ அனுப்பிட்டேன் பெரிசு. அவ மவகாரி வந்துருக்கா போல இருக்கு.. மதியமா வரேன்னிருக்கா..”
“ அதுவும் செரிதான்.. தெருக்கார சனத்துக்கு தொண்டை அடுத்த வேளை கவளம் எறங்கறவரைக்குந்தான்...அப்பறம் கத பேச ஆரம்பிச்சுடுவாளுக..அப்பறம் ஒப்பாரி வைக்க ஆளிருக்காது மருதாயி அப்பம் வந்தா போதும்”
மருதாயி கெளவி குரலும், ஒப்பாரியும் ஜில்லா பிரசித்தம். எங்க சாவு விழுந்தாலும் முறைக்காரனுவங்களுக்கு முன்னாடி அவளுக்கு செய்தி போயிடும். அப்பப்ப டீ தண்ணியும், ஒரு சொம்பு சுடு தண்ணியும் இருந்தாபோதும்,ரெண்டு நாளானாலும் பிசிறு தட்டாது ... ஊரு கிடுதாங்கற மாதிரி வெங்கலக் குரல் அவளுக்கு.
புருஷன்காரன் ரெண்டு புள்ளையக் குடுத்துட்டு ஓடிப்போனப்பறம் தென்னங்கீத்து முடையற வேலை போக ஒப்பாரிக்கு போறதுலதான் அவ பொழப்பு ஓடுது. ‘எவன் வூட்டுலயாவது எழவு வுளுந்தாதான் எனக்கு வாழ்வு' என்பாள் அடிக்கடி.
பாத்திர யாவாரி வேலுவத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னு, இப்ப அவங்கிட்ட அடியும் ஒதையும் தின்னு ஒடம்பு வீங்கி மாசம் தவறாம வர்ற மவ எச்சுமி பத்தின துக்கமும், காலு வெளங்காம மூளை வளராம வூட்ட விட்டு நகராம மொடங்கிக் கெடக்கற மவன் ராசுவோட வைத்தியத்துக்கு காசு இல்லாத துக்கமும் தீரப்போவதுமில்ல... அவ அழுக ஓயப்போறதுமில்ல.
எப்படி முடியுது விடாம அழுவ அப்படீன்னு யாராவது கேட்டா,
‘உங்களுக்கெல்லாம் பொறக்கறச்சயும் சாவறச்சையும் தான் அழுவை. எனக்குப் பொழப்பே அழுவைதான்' அப்படீன்னு அவ பொலம்பறதைக் கேட்டா கஷ்டமாத்தான் இருக்கும்.
மருதாயிக் கெழவி அடுப்பு நெருப்பைத் தூண்டியபடி எச்சுமி பக்கம் திரும்பாமல் எக்கச்சக்க கோபத்தில் இருந்தாள்.
“எவடி இங்க ஒன்னை வெத்தலைப்பாக்கு வெச்சு கூப்பிட்டா? எதுக்கு வர்றே? பெரிய கார்த்திகை அன்னிக்குக் கூட வயித்தால போயி இப்பவோ அப்பவோன்னு கெடந்தேன். இருக்காளா செத்தாளான்னு பாக்க ஒரு நாதியில்லே. இப்ப மட்டும் எதுக்குடி வந்தே...?”
“எங்க போவேன் ஆத்தா... நெனச்சா வர்றதுக்கு சீமான் வூட்லயா வாக்கப்பட்டிருக்கேன்? ரெண்டு அலுமினியப் பாத்திரத்த வெச்சுகிட்டு தெருத்தெருவா சுத்தற வெறும் பயகிட்டல்ல லங்கு அடிச்சிட்டு கெடக்கேன்...”
“நானாடி கட்டிக்கச் சொன்னேன்? ஒந்திமிருக்கு நாயி வாயில வெரல விட்டுட்டு இப்பக் கடிக்கிதே கொதறுதேன்னா எப்பிடி?”
“அதான்... அதான். கெரவம். என் புத்திக்கு நாத்தம் புடிச்சிக் கெடக்கேன். மவராசி நீ சொன்னதான்... வெளக்கமாத்தால மொத்து, என்னை அடிச்சிக் கொல்லு... ஆனா என்னை வராதேன்னு சொல்லாதே ஆத்தா.”
பேரப்பய முருவன் இது எதுலயும் கவலப்படாம மருதாயிக் கெழவி புடவையப் பிடிச்சு இழுத்தான்.
“வருந்தோறும் ஏண்டி இந்த சிசுவ வேற இளுத்துகிட்டு வர்றே... தூண்டிப் புழுவாட்டம். இவனக் காமிச்சிக் காமிச்சி இருக்கற மீனெல்லாம் பிடிச்சிட்டுப் போயிட்ட. இப்ப ஏங்கிட்ட என்னாடியிருக்கு? கொளம் வத்திப் போச்சு. போதும் என்ன வுட்டுடு.”
“அப்பிடி சொல்லாத ஆத்தா. சைக்கிளப் பிடிங்கிட்டுப் போயிட்டான் கடங்காரப்பய. அவன் ஒரு கழிச்சல்ல போவோ... வெக்கங் கெட்டு அவன் கால்ல வுளுந்து கூட கதறிப்பாத்தேன். படுபாவி மனசெரங்கலையே. எட்டி ஒதச்சிட்டுப் போயிட்டான். சைக்கிள் இல்லாம யாவாரத்துக்கு எப்பிடி போவும்?”
முருவன், சோர்ந்து சுருண்டு கிடக்கும் ராசுவின் முகத்தில் இரு கைகளால் அடித்து எழுப்பினான். ஒரு முறை தலையுயர்த்திப் பார்த்து விட்டு, இயலாமல் திரும்பவும் சுருண்டான் ராசு.
“அங்க பாரு... ஆமை மாதிரி கெடக்கு. என்னால சாவக் கூட முடியாதுடி. இது இருக்கற வரைக்கும் என் உசிரப் புடிச்சு வெச்சிக்கணும். ஒப்பன் ஓடிப் போறப்ப வைரமும் வைடூரியமுமா வெச்சிட்டுப் போனான்...? இந்த சப்பாணிப் பயல ஏந்தலையில சுமையா தானே வெச்சிட்டுப் போனான்? எங்க சுத்தி எங்க வந்தாலும் ரவைக்கு வூடு திரும்பிடனும். ஒரு ஆம்பளையா லட்சணமா சைக்கிள் வாங்கப் பணம் பொரட்ட முடியாத பொறம்போக்கு ஒன்னை ஒதைச்சு அனுப்புறானே... தூத்தேரி... வெளங்குவானா?”
“நல்லா துப்பு... காறி துப்பு.” புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழுத எச்சுமி, “அடி...தாங்கலை ஆத்தா. ஆம்பளையா லட்சணமா என்னையத்தான் போட்டு ஒதைக்கிறான். நேர்ல பாக்க ஒனக்குக் கொடுத்து வெக்கலை. சம்பாதிக்கத் துப்பில்லைன்னு சொல்லிட்டாப் போதும்... எலும்ப ஒடிச்சிட்டுத்தான் மறுவேலை... இங்கப் பாரு” என்று புடவையைத்தூக்கி கெண்டைக்கால் காயத்தைக் காண்பிக்கிறாள்.
“புள்ளையையும் காயத்தையும் காட்டிக் காட்டி என்னைக் கரைக்காதடி. வேணுமானா ஒரு ஓரமா ஒக்காரு. ஒருபாட்டம் ஒனக்காவ அழுவறேன்.”
“காதுல போட்டிருந்தியே ஏழுகல்லுத் தோடு... அதைக் கொஞ்சம் குடு ஆத்தா. அப்பனாணை விக்க மாட்டேன்... எங்கனாச்சும் வெச்சி, ரெண்டு மாசம்... எண்ணி ரெண்டே மாசம் மூட்டுக் குடுத்துடறேன்.”
“ஏங்கிட்டப் பொட்டுத் தங்கம் இல்லே தாயி... ஆளை வுடு. அத வெச்சுத்தான் எனக்கு வைத்தியம் நடந்துச்சு. தோ... கெடக்கானே சவலைப் பிள்ளை... அவனுக்கும் வைத்தியம் பாத்தேன். இனும ஒரு நயா பைசா பேறாது.”
“கஞ்சிக்கிக் கூட வழியில்ல வூட்ல... யாவாரத்துக்குப் போயி இன்னியோட நாப்பத்தஞ்சு நாளாச்சு. இன்னும் எத வித்து சாப்பிடறதோ தெரியல. எப்பிடிப் பொழைப்பேன் ஆத்தா?”
“நீ வாழ வேண்டாண்டி வாழ வேணா. ஒண்ணு, இங்க வந்துறு. இல்ல செத்துப் போயிடு. ஒருத்தி வாழ ஒம்போது பேர் சாவ முடியாது. வாழ்ந்து வழிச்சது போதும். போம்மா மவராசியா.”
“என்னா ஆத்தா இப்புடி சொல்லிட்ட... ஒரு பெத்த தாய் இப்புடிப் பேசலாமா?”
“என்னை என்னடி பண்ணச் சொல்ற? வந்ததுக்கு ஆக்கி வெச்சிருக்கறதச் சாப்புட்டுட்டு அந்த அரிசிப் பானையில கொஞ்சம் நொய்யரிசி இருக்கு. எடுத்துட்டுக் கெளம்பு. அவ்வளவு தான் முடியும்.”
“ஏ கெளவி... தலையாரி ஒன்னை அர்சண்டா வரச் சொன்னாரு. பாடை கட்டறப் பயலுவ கூட வந்துட்டானுவோ. ஒன்னைக் கையோட இட்டாரச் சொன்னாரு.” வாசலில் குரல் கேட்டது.
தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு கிளம்பிய மருதாயி, “ரெண்டு ரெஸ்க் கெடக்கு அந்தப் பச்சை டப்பாவில.முருவனுக்கு அதை எடுத்துக் குடு. இங்க ஒரு எழவு. நா போவனும். சாப்புட்டு நீ கெளம்பு.” வெளியேறினாள் மருதாயி.
செவனாண்டி வீட்டில ஜனம் கொலேரென்று கூடியிருந்தது. மருதாயி தெருவுக்குள் நுழைந்த போதே புரிந்துகொண்டாள். ஒறமொறக்காறனுவ அதிகம்னு. கூடுமான வரைக்கும் எவ கொரலையும் எழும்ப விடக் கூடாதுன்னு தொண்டைய செருமிகிட்டு, கையிரண்டையும் உயரே விரித்து, பெருங்குரலெடுத்து,
“அய்யோ... ஈ வந்து மொய்க்கலையே
எறும்பு ஒன்ன நெருங்கலையே
கண்ணுல வெச்ச உசிர
இமை கூட காக்கலையே...
என்னப் பெத்த அய்யா
பூவாட்டம் தூங்குறியே
பொழுது இன்னும் சாயலியே”
என்று பிணத்தருகே சென்று அட்டனக்கால் போட்டமர்ந்து மூக்கைச் சிந்தி அருகாமை தூணில் தடவினாள்.
சன்னமாக மெலிந்து தேய்ந்து ஆங்காங்கு அழுது கொண்டிருந்த குரல்கள் ஆசுவாசமாயின. அப்பாடா... வந்துட்டா. இனும அவ பாத்துப்பா என்ற மகிழ்ச்சியில் புற வாசலுக்கு நழுவினர் பெண்டுகள்.
சிவனாண்டி பெண்டாட்டியும் மாமியாரும் பாய்ந்து வந்து மருதாயியைக் கட்டிக்கொண்டு அவள் பாட்டுக்கு சுருதிபோல ராகம் போட்டு அழுதனர்.
“வலை போட்டு வீசினாலும்
சிக்காத வஞ்சிரமே...
சங்கு கழுத்தழகா
உன் சிங்கார சிரிப்பழக
சேத்து வெக்க மறந்தேனே
பாவி, இனியெப்ப பாக்கப்போறேன்
பொசக் காத்து போறாப்ல ஏங்கண்ணே
பொசுக்'குன்னு பறப்பியே தெருமேல
பொணமாக் கெடக்கியே
புயலோஞ்சு கெடக்குது ஊரு”
ஒருமணி நேரம் சளைக்காமல் தனியாவர்த்தனமாய் ஒலித்தது கெழவியின் ஒப்பாரி. வருகிறவர்கள் அவளுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் புடவைத் தலைப்பை வாயில் புதைத்தபடி துக்கம் தாளாதவர்கள் போல குனிந்தபடி நழுவினர்.
மேட்டுத் தெரு பொன்னம்மாவுக்கு மருதாயி மேல் தாங்கமுடியாத பெருமிதம் உண்டு. யாருக்கும் கேட்காமல் பக்கத்திலிருந்தவரிடம் கெழவியின் பராக்கிரமத்தை பரப்பிக் கொண்டிருந்தாள்.
“எம காதகி... அவ இழுவைக்கு எவளும் கிட்டே நெருங்க முடியாது. அழுவறத நெறுத்திட்டா பொணமே எந்திரிச்சி ‘பாடுடி இன்னும் செத்த'ன்னு கேக்கும்!”
“நெசம் தான் ஆத்தா! பெத்தவ கூட இத்தனை பதறலை... அட! இவ ஒப்பாரிக்கே சாகலாம் போலிருக்குன்னா பாத்துக்கயேன்.” பொன்னம்மாவுடன் பாக்கியமும் உவந்தோங்கி போனாள்.
“இருக்காதா பின்னே... நம்ம வல்லக் கோட்டைக்காரரோட மூத்தாரு செத்தப்ப, அவரு புள்ள சிங்கப்பூரிலேருந்து வரணும்னு ரெண்டு நாள் பொணம் கெடந்துது. மவராசி ஓயலியே! ரெண்டு நாளும் இவ அசராம வெச்ச பாட்டுலதான் பொணம் நாறாம தூங்குச்சுன்னு இப்பவும் ஊர் பேசுதே.”
“மூஞ்சுல அழவை வெக்கலைன்னாலும்... மூச்சுல அழுவைய வெச்சுட்டான் கடவுள்.”
ருக்குமணி கெழவி மருதாயி காதில், “ஒன்னப் பத்திதான் பின்னாடி இருக்கறவளுவோ பேசிக்கறாளுவோ. தலைய உட்டு உன்னை எறக்கறதில்லே.”
“உளுது... உளுது... காதுல உளுது. பின்னாடி எல்லா சிறுக்கிவோளும் பெருமையாத்தான் பேசுறாளுவோ... எதுக்க வந்துட்டா ஒப்பாரி வெக்கிறவ வர்றாளே... சகுன பெசகுன்னு ஒளியறாளுவோ. எதுலியும் எனக்கு ஏறுமாறுதான்.பாரேன்... வெத்தலைத் தட்டில களிப்பாக்கைத் தேடறேன் பொட்டலம் பாக்கா கெடக்கு!” என்றபடி களிப்பாக்குக்காக முந்தியின் முடிச்சையவிழ்க்கும் போது பகீரென்றது அவளுக்கு.
தோட்டைக் காணோமே என்று விக்கித்து ஒருகணம் திகைத்த மருதாயிக்கு உடனே ஞாபகம் வந்தது, ‘அய்யோ நேத்து தானே பத்திரமாயிருக்கட்டும்னு அரிசிப்பானையில வெச்சேன். ஆக்கங்கெட்ட மூதி! அத மறந்துட்டு முந்தியில முடிஞ்ச நெனப்பா வந்துட்டேனே... ராசுப்பயலுக்கு இடுப்பு தேஞ்சித் தேஞ்சி ரணமாக் கெடக்கு. டவுனுக்குப் போயி வைத்தியம் பண்ணலாம்னு இத்தினி நாளு சாக்ரதையா காவந்து பண்ணி வெச்சிட்டு இன்னைக்கு வுட்டோட்டிட்டேனே... சும்மா கெடந்தவள நொய்யரிசிய எடுத்துக்கோன்னு வேற சொல்லித் தொலைச்சிட்டேனே... பாதகத்தி கண்ணுல பட்டுட்டா நோவாம எடுத்துடுவாளே. வெக்கத் தெரியாதவ வெக்கப்போர்ல வெச்ச மாதிரி ரோசனையில்லாம கைநீளக்காரி இருக்கற எடத்துல நொய்யரிசிப் பானையில மாட்டிக்கிச்சே தோடு...! பச்ச வாழியம்மா இப்ப நா என்ன பண்ண... உள்ளுக்குள் மருகினாள் மருதாயி.
அப்போதுதான் உள்நுழைந்த சிவனாண்டியின் உறவுக்காரி மருதாயியைக் கட்டிக்கொள்ள ஒப்பாரியை விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள் மருதாயி.
“கையிருப்பு கரைஞ்சிடுச்சே
களவாட விட்டுட்டேனே
தங்கமே ஒன்ன
ஒளிச்சு வெக்கத் தெரியலையே
எமங் கையில கொடுத்தேனே
வெலையில்லா பொக்கிஷமே
வேற கதி ஏதெனக்கு
ஒண்ணே ஒண்ணு
ஏங்கண்ணே கண்ணு
ஒன்னை விட்டா யாரெனக்கு?
கழுகு ஒன்னக் கொத்தாம
காவந்து பண்ணி வெச்சேன்
பருந்து ஒன்னத் தூக்காம
பத்திரமா பாத்து வெச்சேன்
காத்தாட்டம் பறந்திடுச்சே
கண்சிமிட்டும் நேரத்தில
கையிருப்பு கரைஞ்சிடுச்செ
களவாட வுட்டுட்டனே”
தாண்டிச் சென்ற தலையாரியை அருகே அழைத்து ‘எப்ப சாமி எடுக்கப் போறீங்க' என்று கேட்டாள்.
“எடுத்துட வேண்டியதுதான். குளுசம் முடிய அரை மணியிருக்கு இப்ப ஒனக்கென்ன அவசரம்?”
“இல்ல... ஏம் மவ வந்திருக்கா...”
“ஆமா, டெல்லிக்கு மகராணி... சோத்தை தின்னுட்டு கெடக்கப்போறா... போலாம் போலாம் செத்த தொணப்பாதே.”
இன்னும் அரைமணி நேரமா.. அதுக்குள்ள அவ கையில சிக்கிட்டா... சண்டாளி அடுத்த செகண்டு கெளம்பிடுவாளே... பெரியகுப்பம் அய்யனாரே, எட்டணா சூடமேத்தறேன். அவ கண்ணுல மாட்டாம மறைச்சுடு. அவளும் என்ன பண்ணுவா... காசில்லாத கூறு... அதுக்காவ….. அந்தக் கால் சூம்புன பயலுக்கென்ன விமோசனம்? இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மருதாயி. நிமிஷங்கள் நரகமானது.
“பொணத்தக் குளுப்பாட்டனும்... எல்லாம் செத்த வெளிய இருங்க” ஏழுமலையின் குரல் கேட்டு அப்பாடாவென்றிருந்தது அவளுக்கு.
இன்னும் செத்த நேரம் தள்ளுனா ஓடிப்போயிடலாம். பொணத்தை எடுத்தாத்தான் ஒப்பாரி கூலி கைக்கு வரும். பொணம் சொள்ளக் கரைக்குப் போவாம தலையாரி காசு பிரிச்சி கொடுக்க மாட்டான்.
“சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...
சொர்க்கம் சேர்... வைகுண்டம் சேர்... ஈஸ்வரன் பாதம் சேர்...” ஏழுமலை சூடத் தட்டை ஏந்திக் கொண்டு பிணத்தைச் சுற்றி வர நெருங்கிய உறவுக் கூட்டமும் கூடவே சுற்றியது.
“கோயிந்தா... கோயிந்தா...” என்றபடி பிணத்தைத் தூக்க பெண்டுகளும் குரலுயர்த்தி அழுதனர். நகரத் துவங்கியது ஊர்வலம்.
எப்பவும் மணிக்கடைக்கு வந்து டீயும் பொறையும் உள்ளே போனால்தான் வண்டி நகரும் மருதாயிக்கு. ஆனால் இன்னைக்கு அதையெல்லாம் உதறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடிருக்கும் தெருமுனைக்கு ஓடினாள். மனசு வேற திடும் திடும்ன்னு அடிக்குது வேகமா. முருவன் குரல் கூட கேக்கலையே... அம்மா தாயே பச்சைவாழியம்மா என்னைக் கைவிட்டுறாதே... வேண்டுதலோடு நுழைந்தாள் வீட்டுக்குள். ராசு மட்டும் கூழையாய் சுருண்டுகிடந்தான். நடுவீட்டில் அரிசிப்பானை கவிழ்ந்துகிடந்தது. நிமிடத்தில் புரிந்து போனது மருதாயிக்கு.
“அய்யோ பாதகத்தி... கண்ணு சிமிட்டறதுக்குள்ள களவாண்டுட்டியே... நீ கட்டையில போவோ... நாசமத்துப் போவோ... அம்மா தாயே இருந்த ஒண்ணும் போச்சே... நா என்னா பண்ணுவேன்” என்று புடவையை கீழே விரித்து கதறத் துவங்கினாள்.
ராசுவுக்கு விழிப்பு வந்து ஒரு கணம் அலங்க மலங்கப் பார்த்தான். கடைவாயில் ஒழுகிய எச்சில் துணியையெல்லாம் நனைத்திருந்தது. அவளது அழுகையைப் பார்த்துப் பார்த்து அலுத்ததாலோ என்னவோ தலையை ஒரு உதறு உதறி திரும்பவும் சுருண்டு கொண்டான்.
“பெத்த வயித்துல பெரண்டைய வெச்சிக் கட்ட... இப்படி ஒரு புள்ள எனக்குத் தேவையா...பாழும் வயித்துல நெருப்பு வெச்சித் தீய்க்க...” ‘ஓ’வென்று ஓலமிட்ட அவளது குரல் இரவைக் கிழித்து தெருவெங்கும் பரவியது.
“கெழவி….நிறுத்து. நிறுத்துன்னா நிறுத்தனும் ”குடிகார மாசிலாமணி குரல் இடிபோல் வெளியே கேட்டது. நிக்கவே முடியாத அளவுக்கு போதை தலைக்கேறி தள்ளாடினான் மாசி. “உள்ள வந்தேன்... வாயில மிதிச்சிடுவேன். ஓங்கொரலக் கேட்டாலே எங்க எழவு விழுந்துடுச்சோன்னு சும்மா பகீருங்குது வயிறு. எதுக்குடி அழுவுற...? இப்ப எதுக்கு அழுவுற...? யார் இங்க மண்டையப் போட்டா? ஒனக்கு தான் பொணத்தக் கண்டா பிச்சிட்டுக் கெளம்புமே பாட்டு. அப்புறமெதுக்கு ஒப்பாரிக்கு ஒத்திகை... ஒழுங்கா வாய மூடு... இல்ல... தலையாரிகிட்ட தெருக்காரங்க எல்லாம் சேந்து எந்த எழவுக்கும் உன்னக் கூப்புடக்கூடாதுன்னு கண்டிச்சி சொல்லிடுவோம். அப்பறம் ஒன் பொழப்பு நாறிடும் நாறி!” என்று துண்டை உதறி கத்தி மாதிரி வீசிட்டு நடையக் கட்டினான்.
“ஒழிச்சிடுவன்... யாருகிட்ட...” என்று காற்றிடம் சவால் விட்டு நாக்கைத் துருத்தி எச்சரிக்கை செய்தான் மாசி.
உறவே இல்லாத எத்தனையோ பிணத்துக்காக தொண்டை வறள ஒப்பாரி பாடிய மருதாயி பொழைப்புல மண்ணு விழுந்துடுமேன்னு பயந்து வாயில் துணியைப் புதைத்துக்கொண்டு சப்தம் வராமல் விசும்பினாள்.
கழுவ முடியாத கறையோடு கண்ணீர் அவளது சுருங்கிய கன்னங்களில் உருண்டோடி பின் விக்கித்து நின்றது.
(கல்கியில் வெளிவந்தது)

4 கருத்துகள்:

  1. The current and the under current different only in the Ocean.
    I have felt the currents in this story.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி சார் முடிந்தால் இதே வலைப்பூவில் என் நடுகல் என்ற கதையை அவசியம் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை...கல்கியில் படித்த போதே மனதை தொட்டது.. மிக நன்றாக எழுதுகிறீர்கள் பாரதி... அங்கங்கே தெறிக்கும் விமர்சன வரிகளும், அழகான உவமைகளும், வர்ணனைகளுமாக அசத்துகிறீர்கள்... மனம் நிறைந்த பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  4. ஒ கல்கி வாசிக்கிறிர்களா? மிக்க மகிழ்ச்சி .. விசும்பல் பற்றிய நேர்மையான கருத்தை தொலைபேசியில் தெரிவித்தமைக்கு நன்றி என்னிடம் பேசிய பலரும் உங்கள் கருத்தையே சொன்னார்கள் . அதற்கு பரிசு கிடைக்காமல் போனதும் கூட ஒரு விதத்தில் நல்லதுதானோ என்று தோன்றுகிறது .உங்கள் பாராட்டைவிட உயர்ந்ததா என்ன அந்த பரிசு ?

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...