திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் உதவியாளராகப் பணிபுரியும் A.R.சுப்புராஜ் இயக்கி, நடித்திருக்கும் ‘பயணம்' குறும்படம் சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.
மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வட இந்தியக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். அவர்களைப் பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மனநிலை பிறழ்ந்து விடுகிறது. தந்தையின் சொத்தான வீட்டை விற்று நான்கு பிள்ளைகளும் பல லட்ச ரூபாய் பங்காகப் பெறுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் தங்களது தந்தையை தங்களோடு வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. ஆளாளுக்கு உப்புசப்பில்லாத காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறார்கள். முடிவில் பிள்ளைகளில் ஒருவன் சொல்லும் யோசனை பார்க்கும் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. கன்னியாகுமரி செல்லும் இரயிலில் அவருக்கு டிக்கெட் எடுத்து ஏற்றி விடுவதன் மூலம் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவது அவர்கள் திட்டம். அதன்படி அவர் ஏற்றி விடப் படுகிறார். அதே இரயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக சிறு சிறு திருட்டுக்கள் செய்து வரும் சிறுவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்குப் பயணிக்கிறார்கள்.
வயிற்றைப் பசிக்கும் போது ‘கானா' ‘கானா' என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியாத அந்த முதியவரின் செய்கைகள், முதலில் அச்சத்தோடும், பின்பு கவலையோடும் கவனிக்கப் படுகின்றன. இரயில் ஒவ்வொரு மாநிலமாகக் கடந்து தமிழகத்துக்குள் நுழைகிறது. சிறுவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சிறு சிறு பொருட்களைக் கவர்கின்றனர். பெரியவருக்கு ஒன்றிரண்டு தின்பண்டங்கள் தின்னக் கிடைக்கின்றன.
சிறுவர்களில் ஒருவனுக்கு, தான் மும்பையில் திருடச் சென்ற வீட்டில் இப் பெரியவரைக் கட்டிப் போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. யாரோ வரும் சந்தடியில் மறைந்திருந்து, அங்கு வந்த நால்வரையும் அவர்களின் திட்டத்தையும் கேட்டவன் சந்தடியின்றி நழுவியதையும் ஞாபகப் படுத்திக் கொள்கிறான். ஆக அவர்கள் திட்டப்படி அவரை அநாதரவாக இரயிலேற்றி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்துபோகிறது. சிறுவன், தன் நண்பனிடம் பெரியவர் பற்றிய உண்மைகளைச் சொல்லி, அவரைக் காப்பாற்றிப் பராமரிக்கலாமென அனுதாபம் மிக சொல்கிறான். தங்களது பல தவறுகளுக்குப் பிராயச்சித்தமாய் அது இருக்கட்டுமென அவர்கள் முடிவு செய்கின்றனர். கருணையுடன் அவரை அணுகும் போது, பழைய திருட்டுக்களுக்காக அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் காவலரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
‘வாங்கடா திருட்டுப் பசங்களா' என்றபடி தங்களைப் பிடித்துக்கொள்ளும் காவலரிடம், ‘அந்தப் பெரியவரோட பிள்ளைகளை என்னன்னு சொல்லுவீங்க?” என்று அந்தச் சிறுவர்கள் கேட்கும் காட்சி, பார்வையாளர்களான நம்மைச் சுடுகிறது.
பெரியவர், யாரும் கவனிப்பாரற்று, ‘கானா கானா' என்றபடி நடந்து செல்கிறார் தனியாக...
நெஞ்சைப் பிழியும் இந்தக் காட்சியுடன் படம் முடிவடைகிறது!
யதார்த்த வாழ்வுக்கு எதிராகவும், தொடர்பில்லாமலும் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சமகால மனிதர்களின் அவல வாழ்வைப் பதிவு செய்யும் குறும்படமாகப் ‘பயணம்' அமைந்திருக்கிறது.
குறும்படத்தில் மனநிலை பிறழ்ந்தமுதியவராக நடித்திருக்கும் இயக்குனர் சுப்புராஜின் தந்தை எஸ். அருணாச்சலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக சாலிகிராமம் கிளையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வங்கியில் பணிபுரிந்தாலும் அவரது மனம் முழுக்க நடிப்புத் துறையிலிருந்திருக்கிறது. அவ்வப்போது, அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின், பணிச்சுமை காரணமாக நடிக்கமுடியாத ஏக்கத்திலேயே இருந்திருக்கிறார்.
அண்மையில் அருணாச்சலத்தின் ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட, அவரது பிள்ளைகள் A.R. குமார், A.R.பேபிராஜன், A.R. சுபாஷ். A.R. சுப்புராஜ் நால்வரும் முடிவு செய்த போது, அவருக்கு என்ன பரிசளிக்கலாமென்ற பலத்த ஆலோசனைகளுக்கு இடையில் சுப்புராஜ் தான் இந்த யோசனையைச் சொல்லியிருக்கிறார். ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, ஒரு குறும்படம் எடுப்பது; அதில் அவர்களது தந்தையையே பிரதான பாத்திரமாக நடிக்க வைப்பது என்று முடிவானது. குறும்படத்தின் கதைப்படி பெற்ற தந்தையை அனாதரவாகப் பரிதவிக்க விடுகிறார்கள் பிள்ளைகள்; ஆனால் படத்தைத் தயாரித்த பிள்ளைகளோ தங்களது தந்தையின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி, அவருக்கு ஆத்ம திருப்தி தந்தது என்ன ஒரு அழகிய முரண்!
அருணாசலத்தின் தத்ரூபமான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஈரம் கசிந்த பார்வையை பதியச் செய்கிறது. அவர் தனது யதார்த்தமான நடிப்பாற்றலால், அந்தக் கதைக்கு உயிரூட்டியுள்ளார். சுப்புராஜ் ஏற்கனவே இயக்கிய,'செடி' என்ற குறும்படம், திருப்பூர் அரிமா சங்கப் பரிசு, திருச்சி லயன்ஸ் க்ளப்-கிழக்குவாசல் உதயம் குறும்படப் போட்டியில் பரிசு, சென்னை prime force academy பரிசு உட்படப் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்தப் படம், பிள்ளைகளால் ஒரு தந்தைக்கு தரப்பட்ட மகத்தான பரிசு!
மகன்(கள்) தந்தைக்காற்றும் உதவியென்பது இதுதானோ...!!
நண்பரே அருமையானதொரு அறிமுகம்.
பதிலளிநீக்குகண்டிப்பாக ‘பயணம்’ போன்ற குறும்படங்கள் வெற்றியடைய வேண்டும்.அறிமுகத்திற்கு நன்றி.
வார விடுமுறை நாட்களில் கண்டிப்பா பதிவு எழுதவும்.நன்றி.
நண்பரே
பதிலளிநீக்குநல்ல அறிமுகம்,பார்க்க தூண்டிய எழுத்து,அவசியம் பார்க்கிறேன்
மிக்க நன்றி மரா சார் திடீரென்று எதிர்பாராமல் போனில் வந்து ஆச்சரயத்தையும் மகிழ்ச்சியையும் தந்தீர்கள் உங்கள் அக்கறையான ஆலோசனைக்கு நன்றி அடிக்கடி பதிவுகள் இட முயற்சிக்கிறேன். இரண்டு பத்திரிகைகளில் தொடர் கட்டுரை அவ்வப்போது கதைகள் , கவிதைகள் வேறு பத்திரிகைகளுக்காக கட்டுரைகள் , குறும்பட பணிகள் என்று சுமைகளோடு திரிகிறேன் இருப்பினும் இடுகைகள் வர முயற்சிப்பேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி , நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதப்பிரியன் சார் உங்கள் வாசிப்புக்கும், உடனடி பதிவுக்கும் நன்றி இந்த கட்டுரை கல்கியில் பிரசுரமானது.
பதிலளிநீக்குஉங்கள் திரை விமர்சனங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது.. சில கண்களில் நீரை வரவைக்கிறது... இது அதில் ஒன்று.... சுகனில் வரும் உங்கள் கட்டுரைத் தொடருக்கு நான் பரம ரசிகை....பாராட்டுக்கள் பாரதி...
பதிலளிநீக்குஆஹா உங்கள் கவிதைகளுக்கு நானும் என் துணைவியாரும் ரசிகர்கள். உங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி. தஞ்சையில் சுகனை சந்தித்தபோது உங்களைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தோம் . மீண்டும் நன்றி
பதிலளிநீக்கு@ கிருஷ்ணப்பிரியா
பதிலளிநீக்குநானும் உங்க கவிதைகளுக்கு விசிறி.நன்றி.
என் கவிதைகளுக்கு ரசிகர்கள் என்றதும் ரொம்ப மகிழ்வாக இருக்கிறது... உங்களுடன் இன்று பேசியது நிறைவாய் இருக்கிறது பாரதி..
பதிலளிநீக்குமரா நீங்கள் என் விசிறியா? அந்த அளவுக்கு எழுதி விட்டேனா? கொஞ்சம் பெருமையாய் தான் இருக்கு... உங்களுக்கும் என் நன்றி..
இந்த அருமையான குறும்பட விமர்சனம் இன்றைய வலைச்சரத்தில்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகன்(கள்) தந்தைக்காற்றும் உதவியென்பது இதுதானோ...!!
பதிலளிநீக்குசிறப்பான நடிப்பாற்ற்லை காட்சிப்படுத்திய குறும்படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!