வியாழன், 7 செப்டம்பர், 2023

 

முயலாமை

                                          -நெய்வேலி பாரதிக்குமார்

               



    குதூகலமாய் குதித்து வந்த முயல் வழியில் ஆமையை நிறுத்தி வருகின்ற வனராஜா தேர்தலில் நான் நிற்கப்போகிறேன். மறக்காமல் உன் ஓட்டை நீ எனக்குத் தரவேண்டும்.என்றது.

               நீயா... உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” வியந்து கேட்டது ஆமை.

               நான்தான் வெள்ளையாக இருக்கிறேனே

               ஆமை சிரித்தபடி சொன்னது நினைவில் வைத்துக்கொள்.. நீ காட்டில் இருக்கிறாய். நாட்டில் இருப்பதாக எண்ணமா?”

               இருட்டை ஊடுருவிப் பார்ப்பேன்... வேகமா ஓடுவேன்...

               நீ ஓடுகிற லட்சணம் பற்றி என்னிடமே சொல்கிறாயா? ஓட்டப் பந்தயத்தில் என்னிடம் தோற்றவன்தானே நீ?”

               கொஞ்சம் கண்ணயர்ந்த நேரத்தில் கோடு தாண்டி விட்டாய்... என்னுடையக் காதுகள் மிக நீளமானவை... எந்த பிரச்சினையையும் காது கொடுத்துக் கேட்பேன்.

               இப்படியாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது... இரவும் கவிந்தது. வாக்குவாதம் முற்றுப்பெறவில்லை. வேட்டைக்காரன் கைவிளக்குடன் வந்தான். முயலின் கண்களுக்கு நேராக வெளிச்சத்தைப் பாய்ச்சினான். பழக்க தோஷத்தில் வெளிச்சத்தைப் பார்த்து பயந்து அப்படியே நின்றது முயல். ஆனால் ஆமையோ தனது ஓட்டுக்குள் அமைதியாய் பதுங்கியது.

               அப்படியாக... அலப்பறை செய்த முயல் மறுநாள் கறியானது.

               அப்படியாக தன் ஓட்டுக்குள் தன்னைப் பாதுகாக்கத்  தெரிந்த ஆமை ஓட்டுக்குள் இருந்ததனால் தப்பித்துக் கொண்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...