வியாழன், 7 செப்டம்பர், 2023

 

கடவுளின் கவிதை

            -நெய்வேலி பாரதிக்குமார் 



 

               டைப்புக் கடவுள் அவசரமாக அழைத்ததன் பேரில் அவரது அவை பிற கடவுள்களாலும் அறிஞர்களாலும் நிரம்பியிருந்தது.

               கடவுள் எல்லோரையும் பார்த்து, “எனக்கு ஒரு சிக்கல். அதற்குத் தீர்வு காணவே உங்களை எல்லாம் அழைத்தேன்என்றார்.

               உங்களுக்குச் சிக்கலா?” வியப்புடன் கேட்டார் மழைக்கடவுள்.

               ஆமாம். நான் ஒரு கவிதை எழுத வேண்டும்... அது என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க வேண்டும்”.

               ப்பூ... இவ்வளவுதானா...! இந்த உலகத்தையே படைத்தவர் நீங்கள். கவிதை படைப்பதா பெரிய விஷயம்?” -பூமிக் கடவுள்.

               சிக்கல் அதில் இல்லை. மனிதர்களையும் படைத்துவிட்டு கூடவே பல ஆயிரம் மொழிகளையும் படைத்து விட்டேன். இதில் நான் எந்த மொழியில் எழுதினால் எல்லோருக்கும் போய்ச் சேரும்?”

               நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதுங்கள். உலகத்திலுள்ள அத்தனை மொழியிலும் மொழிபெயர்த்து விட கடவுள்களான நமக்குக் கஷ்டமா என்ன?” செல்வத்துக்கான கடவுள்.

               விஷயம் என்னவென்றால் நான் என்ன உணர்வில் கவிதையைப் படைக்கிறேனோ அதே உணர்வில் கவிதையை வாசிக்கிறவர்களும் உணரவேண்டும். உதாரணமாக நான் மழைச்சாரலில் நனைந்து பெற்ற இன்பத்தை, பனித்துளிகளை தொட்டு  கிடைத்த ஆனந்தத்தை நான் எப்படி உணர்ந்தேனோ அதே உணர்வில் மனிதர்கள் உணர வேண்டும்.

               இதுவரை பேசாமலிருந்த மொழிகளுக்கான கடவுள், “அது சாத்தியமில்லாத ஒன்றாயிற்றே. வெவ்வேறு மனநிலையுடன், வெவ்வேறு உணர்வுகளுடன் வெவ்வேறு சிந்தனைத் திறனுடன் மனிதர்களைப் படைத்துவிட்டோம் என்பதால்தானே அவரவர்களுக்கு ஏற்றாற்போல் இத்தனை ஆயிரம் மொழிகளைப் படைத்தோம்.

               அதுவுமில்லாமல், படிக்கிறவர்கள் அவரவர் கோணத்தில் உணர்வது தானே கவிதையின்  அடிப்படை இயல்பு... படைக்கிறவனது உணர்வுகளோடு இயைந்தே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லையேஎன்றார் இலக்கியத்துக்கான கடவுள்.

               கடவுள் புன்னகைக்கிறார். அந்த இலக்கணம் எல்லாம் மனிதர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு. கடவுளின் கவிதை எல்லாவற்றுக்கும் மேலானதாக இருக்க வேண்டும் அல்லவா?”

               அப்படியொரு கவிதை... எல்லோராலும் ஒரே உணர்வுடன் உணரப்படுகிற கவிதை... படைப்பது என்பது சிக்கல்தான். ஆனால் அதற்கு வழி இருக்கிறது... தமிழகத்தில் இருந்து சுப்பிரமணிய பாரதி எனும் கவிஞர் இங்குதான் நம்மோடு இருக்கிறார். 400, 500 வருடங்கள் அவருக்கு ஆயுள் அருளப்பட்டிருந்தால் எவ்வளவு அற்புதமான கவிதைகள் எழுதியிருப்பாரோ அத்தனையையும் தனது 39 வயதிலேயே எழுதிவிட்டார். அவரிடம் இதற்கு உபாயம் இருக்கக் கூடும்என்றார் கல்விக்கடவுள்.

               சுப்பிரமணிய பாரதி அவைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் கடவுளின் சிக்கல் சொல்லப்பட்டது.

               கேட்டதும் இடி, இடியென சிரித்தார் பாரதி. கடவுளே நீர் இதைத் தெரிந்து கேட்கிறீரா அல்லது தெரியாமல் கேட்கிறீரா?”

               உமக்குப் பதில் தெரியுமா?”-கடவுள்.

               நன்றாகத் தெரியும். நீங்கள் அப்படியான கவிதையை ஏற்கனவே எழுதிவிட்டீர்கள்.

               என்னது... நான் ஏற்கனவே எழுதிவிட்டேனா?”

               ஆமாம். அதுவும் ஒன்றல்ல... கோடிக்கணக்கில் எழுதிக் குவித்து விட்டீர்கள்.

               கோடிக்கணக்கிலா... நீங்கள் யாராவது வாசித்திருக்கிறீர்களா?” என்று அவையைக் கேட்டார் கடவுள்.

               எல்லோரும் தயக்கத்துடன் உதட்டைப் பிதுக்கினார்கள்.

               பாரதி, நீரே சொல்லிவிடும் பதிலை” - கடவுள்.

               எல்லோராலும் மொழிகளைத்தாண்டி ஒன்று போல் உணரக்கூடிய கவிதைகள் குழந்தைகள் தான்... அவர்களைத் தான் அன்றாடம் படைத்துக் கொண்டு இருக்கிறீர்களே...

               ஒருவராலும் மறுக்கமுடியாத அந்த உண்மையை எல்லோரும் கைதட்டி ஏற்றுக் கொண்டனர்.

               கடவுள் பெருமையோடு மர்மப்புன்னகை புரிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...