வெள்ளி, 17 ஜூன், 2022

 

கடுதாசி

                             


                                                                  

                ன்வே வள்ளிநாயகம், என் பேருக்கு மணியார்டர் எதாச்சும் இருக்கா?' திண்ணையில் அமர்ந்துகொண்டு, வெற்றிலையை சவைத்தபடி எப்போதும்போல் கேட்டார் பெரியசாமி.

                எம்.ஓ.தானே நாளைக்குத் தாரேன்.' என்று வழக்கம் போல் சொல்லிவிட்டு, ‘இப்போதைக்கு கார்டுதான் இருக்கு' என்றார் போஸ்ட்மேன் வள்ளி நாயகம்.

                அட, எதுக்குய்யா கார்டு? போறபோக்கில போஸ்ட் ஆஃபீசையே இளுத்து மூடிட வேண்டியதுதான். இந்த போன்லாம் வந்தப்புறம் தந்தி ஆபீசை மூடுனாமாதிரி... இந்த கல்யாணப் பத்திரிகை, போன் பில்லு, கருமாதி பத்திரிகை இல்லன்னா உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காது போல.. இப்பம்தான் பணத்தை எந்த ஊர் பேங்க்ல வேணும்னாலும் கட்டலாம் போலிருக்கே..'

                இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே ரிடையர்மெண்டுக்கு என்று நினைத்த போது மலைப்பாக இருந்தது வள்ளி நாயகத்துக்கு. கட்டிலிருந்த கார்டை எடுத்து பெரிய சாமியிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்த அவர், ‘ம்க்கும், வழக்கமா வர்றதுதான் ஆச்சிதான் போட்டிருக்காக..அந்த காலத்து அஞ்சாங் க்ளாஸ். இன்னும் தடுமாறாம எளுதுது..  என்னவே மழையில நனச்சிட்டீரா.. எழுத்தெல்லாம் அழிஞ்சி கலங்கி கெடக்கு'

                இத்தனை கடுதாசி இருக்கு.. இது மட்டும் எப்படி நனையும் அண்ணாச்சி. இப்படி குடுங்க.' என்று வாங்கிப் பார்த்த வள்ளிநாயகம், ‘ ஆச்சி அளுதிருக்குமோ' என்றார்.

                சற்று திடுக்கிட்டுப் பின் சுதாகரித்த பெரியசாமி சவம், இங்க வந்து கெடன்னா கேக்கமாட்டேங்கா.. காது ரெண்டும் பங்சர். பெறவு எப்படி பேசுவா போன்ல. அதான் கார்டா கிழியுது வாரந்தவறாம.. கடுதாசி எல்லாம் ஒண்ணப்போல இருக்கும் அது இல்லை, இது இல்லன்னுட்டு.. அங்க எவன் மல்லுகட்டச் சொன்னாங்கறேன்... நான் பலத படிச்சவொடனே கிழிச்சுடறது, சிலத படிக்கறதே இல்லை. போன் வந்தப்புறம் எவன் கடுதாசியை எல்லாம் மதிக்கறான்?'

                அப்போதுதான் பெரியசாமி இடுப்பில் புத்தம்புதிதாக முட்டிக்கொண்டிருந்த பச்சை பெல்ட்டைப் பார்த்தார் வள்ளிநாயகம். அது என்ன அண்ணாச்சி, புதுசா பெல்ட்டெல்லாம் தரவுக்காரவுக மாதிரி..'

                அத ஏன் கேக்குற... கோவில்பட்டி மாப்புள போனதரம் வந்தப்ப ஒரு செல்' ஐ வாங்கி குடுத்துட்டாக.. நமக்குத்தான் மேசட்டை போடற பழக்கமே இல்லயே.. அது என்னமோ பவுசாமே'

                பவுச் அண்ணாச்சி'

                அந்தகருமந்தான். அதுல வச்சிக்கலாம்னாங்க. கழுத..  அதெல்லம் நமக்கு சரிபட்டு வருமா? அதான் புது பெல்ட்.' பெருமிதமாக இடுப்பில் தட்ட அந்த நேரம்பார்த்து செல் அடித்தது. அட மக்கா, தட்டினவுடனே அடிக்கி' என்றபடி செல்லை காதில் வைத்தவர் அல்லோ' என்றார்.

                அண்ணாச்சிங்களா... இங்க செத்த மின்னாடி ஆச்சி தவறிட்டாக. நீங்க கொஞ்சம் வொடனெ பெறப்புட்டு வந்திங்கன்னா பரவால்லை' சட்டென்று கைகள் நடுங்கின பெரியசாமிக்கு. காற்று வந்து அவரது கையிலிருந்த கார்டை பறித்துச்சென்றது.

    அண்ணாச்சி பதட்டப்படாதீக.. இப்பமே கெளம்புங்க. கேக்கறனேன்னு தப்பா நெனைக்காதீக ஆச்சியை  போட்டோ புடிச்சு வச்சிருக்கீகளா.. இல்ல அவுக குரலை புடிச்சி வச்சிருக்கீகளா டேப்புல..'

                இல்லையென்று உதட்டை பிதுக்கிய பெரியசாமியின் கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அருகிலிருந்த பேரனின் முதுகில் தட்டி விரட்டிய பெரியசாமி பதட்டமாக கத்தினார், ‘ ஏலே.. அந்த கார்டை புடிலே'                        

                        - நன்றி : சங்கு இலக்கிய இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...