ஞாயிறு, 2 ஜூலை, 2017

பனியில் நனையும் கவிதைகள்


                   சங்கு இதழில் பிரசுரமான சிறுகதை 

                          
                                        





பனியில் நனையும் கவிதைகள் 
                                                                                                                      

               ழுக்கும் தூசுமாக இருந்த என் இடம், மூச்சடைக்க வைத்தது. யாராவது கொஞ்சம் சிரத்தை எடுத்து எங்கள் இடத்தை துடைத்து சுத்தம் செய்யலாம். கொஞ்சம் இடம் மாற்றி வைத்தால் கூட ஆசுவாசமாக இருக்கும். கைப்படாத கன்னிப் பெண்ணைப் போல் இருப்பது எங்களைப் பொறுத்தவரை அத்துனை புனிதமான விஷயமில்லை. பெரும்பாலும் நான் இருக்கும் அலமாரியின் தலையில் கவிதைகள்என்று எழுதியிருப்பதைப் பார்த்ததுமே எங்கள் வரிசைப் பக்கம் நுழையாமல் தவிர்த்து நகர்ந்து விடுவார்கள்.
               எப்பொழுதாவது நூலகத்தின் கடைநிலை ஊழியன் கையில் பறவையின் இறகைப்போல் மென்மையான துடைப்பானை எடுத்து வருவான். பெரும்பாலும் நான் இருக்கும் வரிசையில் ஆள் நடமாட்டமே இல்லை என்பதால் வசதியாக சுவரோரம் சாய்ந்து ஓய்வெடுக்க செளகர்யமாக இருக்கும் என்பதால் பெயருக்கு எங்கள் அலமாரிகளை ஒரு வீசு வீசிவிட்டு உட்கார்ந்து விடுவான்.
               அவனையும் கூட நூலகர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து துடைத்து வைக்கக் கூடாதா என்று அதட்டுவதே இல்லை. போன வாரம் இப்படித்தான் துடைத்துக் கொண்டே இருந்தவன் திடீரென்று என்னை அலமாரியிலிருந்து வெளியே எடுத்தான். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்னது... வாசிக்கப் போகிறானா?!' என்று ஆவலோடு அவனையே பார்த்தேன். என்னைப் பிரித்து ஒரு தட்டு தட்டினான். வலிக்கவேயில்லை. அப்பாடி! புரட்டவாவது செய்கிறானே' என்று குதூகலமானேன்.
               ஒரு மூலையில் அழுக்கில்லாத பக்கத்தை சரக்கென்று கிழித்து உருட்டி காது குடையத் துவங்கினான். அடச்சே! அற்பப் பதரே! கண்களால் கெளரவிக்க வேண்டிய என்னை இப்படி அழுக்கு பிடித்த காதுகளால் நுகரலாமா?' என்று கதறினேன். அவன் காதுகளில் குடைதலின் சுகம் நுழைந்தபிறகு என் குமுறல் எங்கே விழப்போகிறது?!
               என்னைப் படைத்தவனைத் தேடுகிறேன்... எங்கே இருக்கிறான் அவன்? இந்தக் காது குடையும் காட்சியைப் பார்த்தால் உயிரையே விட்டுவிடுவான். நான் இங்கு வருவதற்கு முன் ஒரு கங்காரு தன் குட்டியை சுமந்து கொண்டு நிற்பதைப் போல் என்னை மார்போடு அணைத்தபடி திரிந்து கொண்டிருப்பான். ஒரு பிறந்த கன்றின் கழுத்துப் பகுதியை வருடுவது போல அச்சகத்திலிருந்து முதலில் வந்த எனது பக்கங்களை பிரித்து வருடுவது அபாரமான சுகம் என்று சொல்லிக் கொண்டே பலாச்சுளைகளை விரித்து அவற்றின் அழகையும் வாசத்தையும் ருசிப்பது போல் அத்துனை வாஞ்சையுடன் நுகர்வான்.
               பாதி வெட்டப்பட்டும் மீதி வெட்டப்படாமலும் இருக்கும் பக்கங்களின் மேல் மற்றும் கீழ் ஓரங்களை மயில் தோகையை வருடி பிரித்துப் பார்ப்பது போல நோகாமல் எடுத்து தனது மேசை இழுப்பறையில் பத்திரமாய் வைப்பான். தனது குழந்தையின் முதல் மொட்டை வைபவத்தின் போது விழுந்து கிடக்கும் கேசம் ஒரு தகப்பனுக்கு எத்தனை உசத்தியானதோ,அத்துனை உயர்வானது அவனது கவிதை புத்தகத்தின் ஒவ்வொரு பிசிறும்..
               யாராவது தெரிந்தவர்கள் வந்து விட்டால் முதல்  பரிசு பெற்ற ஓவியன் தனது தூரிகையின் குழந்தையான ஓவியத்தை  காண்பிப்பது போல குதூகலத்துடன் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு வரியையும் நிதானமாக வாசித்து காண்பிப்பான். அர்த்தம் புரிகிறதா என்று இடையிடையே கேள்வி வேறு.
               ஒருவரும் காது கொடுத்து கேட்கவேயில்லை என்பதை உணரவேயில்லை அவன்.
               எங்கே போனான் என்னைப் படைத்தவன்?
               ஆனாலும் ஒரு கட்டத்தில் என்னை அவனே ஒளித்து வைக்க வேண்டியிருந்தது. என்னைப் பார்க்கின்ற தருணத்திலெல்லாம் என்னுடைய முதல் கவிதை நூல் என்று யாரிடமாவது பீற்றிக் கொண்டால் கடன் கொடுத்த வட்டிக்கடைக்காரன்  கவிதையுமில்ல; மண்ணாங்கட்டியுமில்ல... என் அசலும் வட்டியும்யா அது..பொறுமானமில்லாத பொருளா போயிடுச்சு..உன் வாயை நம்பி கடன் குடுத்துட்டேன்' என்று புலம்பிவிட்டுப் போவான். நாள் செல்லச் செல்ல அடுப்பெரிக்க உதவுமா இது?' என்று உக்கிரத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தபோது நடுங்கிப் போன அவன், எப்படி கடன்காரன் கண்ணிலிருந்து மறைப்பது என்று திட்டமிட்டபடியே இருந்தான். அதற்குப் பிறகு, யார் காதுபடவும் தன் கவிதை நூல் பற்றி அவன் பிரஸ்தாபிப்பதேயில்லை.
               ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களுக்குத் தருவதற்காக, தன்னிடமிருக்கும் மிக உயர்ந்த பரிசு தனது கவிதை நூல் என்பதில் அவனுக்கு ஒருகாலத்தில் அலாதி மகிழ்ச்சி இருந்தது. ஆனால், அந்தப் பரிசை யாருக்கும் தெரியாமல் அவனே ஒரு கட்டத்தில் ஒளிக்க வேண்டியதாயிற்று.
               எப்படியும் நூலகத்திற்குத் தேர்வாகிவிடுவேன் என்று நம்பி இருந்தான். ஆனால் கவிதைப் புத்தகங்களையெல்லாம் எடுப்பது குதிரைக் கொம்பு என்ற தகவல் இவனுக்குத் தாமதமாகத் தான் உரைத்தது. கடைகடையாக ஏறத் துவங்கினான். ஒருமுறை ஒரு புத்தகக் கடையில் ஏறி கல்லாவில் சுவாரஸ்யமாக கண்களை மூடியபடி பல் குத்திக் கொண்டிருந்த நபரை நெருங்கி, அவர் எப்போது கண் திறப்பார் என்று அவரது முகத்தையே உற்று பார்த்தபடியே நின்றிருந்தான். திருப்பள்ளியெழுச்சி பாடினால் கூட திறவாத கண்கள் போலிருக்கு அவருக்கு! சில நிமிடங்கள் கழித்து தன் முகத்தைச் சுற்றி வந்த ஈயைப் பார்த்தான். அவரது முகத்தை நெருங்கிச் சுற்றக்கூடாதா என்று எல்லாக் கடவுள்களையும் பிரார்த்தித்தான். மெதுவாக மனமிரங்கி அந்த ஈ, அவரது கண்களுக்கருகே அமர்ந்தது. சட்டெனத் தட்டிவிட்டு கண்விழித்து, “என்ன வேணும்?”
               “கவிதை... கவிதை புத்தகம்.
               “அதோ அந்தப் பக்கம் பாரு, ஒரு பத்து பதினைஞ்சி கெடக்கும்.
               “இல்ல ... நான் எழுதியிருக்கேன். என்னோட புத்தகம்..
               என்னை தன் கைப்பையிலிருந்து வெளியே எடுத்துக் கொடுத்தான். என்னவோ கரப்பான் பூச்சியை கையில் கொடுத்தது போல் அருவருப்பாக முகத்தை வைத்துக் கொண்டு,  “இத வச்சிகிட்டு என்ன பண்றது?”
               “இல்ல... உங்க கடையில வைச்சு வித்துக் கொடுத்தீங்கன்னா... உங்க கமிஷனை வேணா எடுத்துக்குங்க
               “எந்தப் பய கவிதையெல்லாம் வாங்கறான்? சினிமாவுல பாட்டெழுதியிருக்கியா நீ?”
               “இல்ல சார்.
               “கிழிஞ்சது. ஒண்ணும் போணி ஆவாதே.... ஒரே ஒரு வழிதான் இருக்கு. இப்படியே போனீன்னா நாலு மூலை ரோடு வரும். அங்க சாயந்திர நேரத்துல சரியான கூட்டம் வரும். அப்படியே போற வர்றவன் கிட்ட ஃப்ரீயா கொடுத்தா சீக்கிரம் தீர்ந்து போயிடும். வாங்கறவன், தெருமுனை வரைக்கும் பத்திரமா வெச்சிகிட்டுப் போனாலே சந்தோஷம்தான்... என்ன நான் சொல்றதுஎன்று கோணலாக வாயை வைத்துக் கொண்டு சிரித்தார்.
               “இல்ல சார். எல்லாம் ஆழமான கவிதைகள். வேணும்னா ஒண்ணு படிச்சிக் காட்டறேன்.
               “ஏம்பா, இது என்ன திருநெல்வேலி அல்வாவா? சாம்பிளுக்கு சாப்பிட்டு பார்க்கறதுக்கு? சத்தியமா வெலை போவாது. ஒன் ஆசைக்கு ஒண்ணு, ரெண்டு வச்சிட்டு போ. ரெண்டு வருஷம் வச்சிருப்போம். அதுக்கப்பறம் எடைக்கு போட்டுடுவோம். அதுக்குள்ள வந்து வாங்கிகிட்டா புத்தகம் மிஞ்சும்.
               “பரவாயில்லை சார். நான் வேற கடை பார்த்துக்கறேன்.
               “தோ பாரு தம்பி, பார்த்தா நல்லவனா தெரியற. இந்த வாஸ்து, ஜோசியம், சமையல் குறிப்பு இது மாதிரி புத்தகம் போடு. பிச்சுகிட்டு ஓடும். ஏன் இதைக் கட்டிகிட்டு மாரடிக்கிறே. எவ்வளவு செலவாச்சு?”
               “இருபதாயிரம் ....
               “அடப்பாவி! கண்ணை தொறந்துகிட்டே கெணத்துல போட்டுட்டியே. திரும்பவுமா கெடைக்கப் போவுது?”
               எல்லாப் போட்டிகளிலும் கடைசி நபராக வருபவன் போல துவண்டு போய் வெளியே வந்தான். அவன் கண்களில் விழுந்த நீர் என் மீது விழுந்தது. உஷ்ணத்தில் கொதித்தன என் பக்கங்கள்.
               சக கவிஞன் ஒருவனைத் தேடி என்னை எடுத்துக்கொண்டு பார்க்கச் சென்றான்.
               “வாடா, காலத்தை வென்ற கவிஞா!
               “சும்மா இருப்பா. நீயும் நக்கலடிக்கிறே.
               “எங்க போயிட்டு வரே?”
               “வழக்கம் போல புத்தகம் விக்கலாம்ன்னு தான்.
               “கேள்வி எதுவும் கேட்கப் போறதில்ல. பதில் உன் முகத்திலும் வார்த்தையிலும் இருக்கே. ஏன் உனக்கு இந்த விபரீத ஆசை?”
               “வாங்கிக்கலைன்னா கூட பரவாயில்லை. சும்மா கூட வைச்சிக்க மாட்டேன்னுட்டான். அலமாரியில எவ்வளவு இடம் காலியா இருந்துச்சு தெரியுமா? அப்படியே ஒரு ஓரத்தில இடம் கொடுத்திருந்தா அதுபாட்டுக்கு கெடந்திருக்கும். நானும் அந்தக் கடையில என் புத்தகம் இருக்குன்னு சொல்லிட்டிருந்திருப்பேன்.
               “இப்பல்லாம் கவிதை எழுதறது கள்ளத் தொடர்பு வச்சிக்கிற மாதிரி. சொல்லவும் முடியாது. ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணவும் முடியாது. ரகசியமா உனக்குள்ளேயே முணங்கிக்க. கொஞ்சம் கவிதை சத்தம் கேட்டாக் கூட போதும். தெறிச்சி ஓடிடுவானுங்க. இந்த லட்சணத்துல புத்தகம் விக்க தூக்கிகிட்டு அலையிற நீ!
               “அட வச்சிக்கிலன்னாலும் பொறுத்துக்கலாம். அந்த ஆளு கிண்டல் வேற பண்றான். சுண்டல் கொடுக்கற மாதிரி முக்குட்டுல நின்னு சும்மா குடுன்றான்.
               “அவன் சொல்றான்னு குடுத்து கிடுத்து வைக்காதே. வீட்டுக்கு கூட எடுத்துட்டு போவமாட்டானுவ. மூல நோய் நோட்டீஸ் மாதிரி தெருவுல உன் கண்ணு முன்னாடியே தரையில போட்டு எவனாவது மிதிச்சிட்டு போயிட்டிருப்பான்.
               “என்னமோ திருட்டுப் பொருள விக்க முடியாத மாதிரி என் கவிதைப் புத்தகத்தை நான் வச்சிகிட்டு அலைய வேண்டியிருக்கு.
               “கவிதைகள் விற்பனைக்கு அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானவை அப்படின்னு கெளரவமா சொல்லிட்டு பத்திரமா உள்ளயே வச்சிக்க. திடீர்னு ஒரு ரூபா நோட்டு செல்லாதுன்னு சொன்னா மாதிரி.. யாரோ கவிதை புத்தகங்கள் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க போல.. விக்கறதுங்கறதை மறந்துடு.. யாராவது ஒர் ஆளு உன் கவிதையை படிச்சு மனசுக்குள்ளயாவது ஒரு நிமிஷம் ரசிச்சா அது கூட திருப்தியான விஷயம்தானே?”
               “ ஆமா
               “ அப்ப ஒண்ணு பண்ணு... நீயா  லைப்ரரிக்குப் போயி ஃபிரியா குடுத்துடு.. இது சுண்டல் குடுக்கற மாதிரி இல்லை.. படிக்க ஆர்வம் உள்ளவன் கையில காசு இல்லன்னா லைப்ரரிக்குத்தானே வருவான்.. அவன் கைக்கு கிடைக்கட்டும்.
               அப்படியாக நான் இங்கு வந்து சேர்ந்தேன். என் முதல் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தாளில் இது வரை ஒரே ஒரு தேதி முத்திரை கூட குத்தப்படவேயில்லை..
               என்ன செய்து கொண்டிருப்பான் என்னைப் படைத்தவன்..?
               திடுமென எனது அலமாரிக்கு நான்கைந்து பேர் வந்தனர். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து உதவியாளர்கிழிந்து போன பக்கங்கள், ஒடியும் நிலையில் உள்ள தாள்களுடன் உள்ள புத்தகங்கள் என்று எடுத்து நூலகரிடம் தலைப்பைச்சொல்லி தனியே எடுத்துவைத்தான். என்னருகே வந்து நூலகர் என்னை எடுத்தார்.
               “ சார், இந்தப் புத்தகம் அப்படி ஒண்ணும் பழசா இல்லை. ஆனா இது வரைக்கும் ஒருத்தரும் எடுக்கவே இல்ல..
               “யார் எழுதுனது இது?”
               “ யாரோ ஒரு ஆள்... கவித புத்தகம்..
               “ இதுவும் இருக்கட்டும்யா... எல்லாமே கிழிஞ்ச புத்தகமா இருந்தா ஏலம் கேக்கறவன்.. எடுக்க மாட்டான்.. ஒண்ணு ரெண்டு புதுசு மாதிரி இருந்தாத்தான் வெலை கூடவச்சு கேப்பான்.. ஏல கட்டுல சேரு..
               நீண்ட நாள் கழித்து அலமாரியிலிருந்து இறக்கப்பட்டேன். ஒரே இடத்துல நின்னுகிட்டே இருந்தது உடம்பெல்லாம் வலிக்குது. சட்டென்று வீசிய ஒரு அவசரக்காற்றில் சிலிப்பிக்கொண்டேன். என் தாள்கள் படபடத்தன. சுகமாக இருந்தது.
               ஒரு கைதியின் கரங்களை பின்புறமாக கட்டி அழைத்துச் செல்வதைப்போல என்னை சக புத்தகங்களோடு கட்டி ஏலம் நடக்கும் அறையில் வைத்தனர். அலமாரியில் இருந்த போதாவது அப்படி இப்படி உடலை சாய்க்கும் வசதி இருந்தது. இப்போது நகரக்கூட முடியவில்லை.. கட்டுண்டோம் பொறுத்திருப்போம்...
               ஒரு வழியாக பழைய புத்தக  மொத்த வியாபாரி ஒருவன் எங்களையெல்லாம் ஏலத்தில் எடுத்தான். ஏலம் விடும்போது என்னென்ன புத்தகங்கள் கட்டில் உள்ளன என்று சொல்லப்படுவதில்லை. ஒரு கட்டை எடுத்து மேஜையில் வைப்பார்கள். இதுல பத்து புத்தகம் இருக்கு.. அப்படியே இருபது ரூபாஎன்பார்கள். புத்தக கனத்தை வைத்து விலை கூடும், குறையும். நல்ல வேளை கட்டில் இருப்பதில் கவிதைப் புத்தகமும் உண்டு என்று சொல்வதில்லை. தெரிந்திருந்தால் மொத்த வியாபாரி என்னை கழித்துக் கட்டியிருப்பான்.
               அலமாரியில் இருந்த வரை ஒருவரும் சீண்டவில்லை. என்றாலும் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் கட்டுக்குள் வந்த பிறகு நாடு கடந்த அகதியைப்போல் ஆனது என் நிலைமை. காற்றோட்டமற்ற கோணிப்பைக்குள் கிடந்தேன். குமுறி அழக்கூட முடியாது. மனிதர்களுக்கு தனிமைச்சிறை என்பார்களே அது போல கும்பலுக்குள் தனிமைச்சிறை, சாக்குப்பை வாசம்.
               ஏதோ என்னுடைய அட்டைப்படம் கொஞ்சம் அழகாக இருந்ததைப் பார்த்து ( ஏமாந்து) ஒரு ஃபிளாட்பாரக் கடைக்காரன் பாடபுத்தகங்களோடு என்னையும் வாங்கிவந்து கடை விரித்துவிட்டான். படிப்பறிவு இல்லாதவனால்தான் ஒரு கவிதைப் புத்தகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்.
               இங்கும் என்னை சீண்டுவாரில்லை. என்றாலும் காற்றோட்டமாகக் கிடந்தேன். எப்பொழுதாவது வீசும் மெல்லிய தென்றல் காற்று, என்னைப் புரட்டி படித்துவிட்டுச் செல்லும். உங்கள் மீது உரசிவிட்டுச் செல்லும் தென்றல் ஏன் அத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் யோசித்திருக்க மாட்டீர்கள். உண்மையில் அது என்னைப்போன்ற படிக்கப்படாத கவிதைகளைச் சுமந்த  புத்தகங்களை வருடிவிட்டு வந்திருக்கும்.
               இப்படியாக நாட்கள் கழிந்தன. கூட்டம் இல்லாத நாட்களில், தூசு தட்டும் நேரங்களில் எல்லாம் கடிந்துகொள்ளாமல், எங்களைத் திட்டாமல் ஃபிளாட்பார வியாபாரி அட்டைப்பெட்டிக்குள் வைப்பதே இல்லை. வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞனை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ( குறிப்பாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது) திட்டிக்கொண்டிருக்கும் தகப்பனைப்போல அவன்இந்த எழவை, புள்ளைவோ பாட புத்தகம் மாதிரி இருக்கேன்னு தெரியாம சேத்து எடுத்தாந்துட்டேன் அந்த மொள்ளமாறியும் சொல்லவே இல்ல.. ஒண்ணுக்கும் ஒதவாம கெடக்கு..என்று பீடியை வலித்தபடியே புலம்புவான்.
               திடீரென ஒரு நாள் எனக்கு மிகப்பரிச்சயமான குரல் கேட்டது. கண் விழித்து உரக்கக்கேட்டேன்.
               “ பெரியவரே இந்த புத்தகம் எவ்வளவு?” என்று என்னை கையிலேந்திக்கொண்டு கேட்டான். அட  பாசத்தின் வாசம் வீசும் அதே விரல்கள்.  பசியால் தவித்த குழந்தை குழந்தையை விட்டுவிட்டுப்போன ஒரு தாயின் மடியைத் திரும்பவும் பற்றி முந்தானையை இழுப்பது போல காற்றின் உதவியோடு அவன் கைகளை என் தாள்கள் தடவின. எனது பிரம்மா... அடப்பாவி எங்கு இருந்தாய் நீ இத்தனை நாளாய்..?..
               கண்களை அகல விரித்து அவனை நெருக்கத்தில் பார்த்தேன். முகத்தில்  இரு கண்கள் என்ற பெயரால் இரண்டு குழிகள். நாசி தவிர பிற அனைத்தும் மயிர்க்காடுகளில் மறைந்து கிடந்தன. எண்ணெய் காணாத தலை செம்பட்டை வண்ணத்துடன் பறக்கவும் தெம்பின்றி துடித்துக்கொண்டிருந்தது.
               “ இதுவா.... பத்து ரூவா குடு..
               பைகளைத் துழாவியவன். ஒன்றிரண்டாக சில்லறைகளை பொறுக்கினான். திருப்பித் திருப்பி எண்ணினான்.
               “ ஒரு ரூவா குறையுது...
               வந்த கிராக்கி கை நழுவி போய்விடக்கூடாதே என்று அவசரமாக ...
               “ பரவாயில்ல வச்சுட்டு புத்தகத்தை எடுத்துட்டுப்போ.. இது மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு வெளங்காத புத்தகம் இருக்கு.. வேணும்னா வந்து வாங்கிக்க
               உதடுகளை பிதுக்கினான் என்னுகிட்ட பணம் இல்ல
               “ பணம் இருந்தா கண்டிப்பா வாங்கிடுவ இல்ல.. முருகா இவனுக்கு இன்னும் முப்பது நாப்பது ரூவா பாத்து கருணை காட்டுப்பாஎன வாய்விட்டு வேண்டிக்கொண்டான் வியாபாரி.
               நீண்ட நாள் கழித்து என்னை அணைக்கும் கைகள் கிடைத்தன. ஆதியில் அவனிடமிருந்த உற்சாகம் இல்லை. ஆனால் அதே அரவணைப்பு.. அதே நேசம்.
               நடக்கவே சிரமப்பட்ட அவன் என்னைச் சுமக்கும் அளவுக்குக்கூட தெம்பில்லாதவனாக இருந்தான். மிக மிக மெல்ல நகர்ந்து, கடற்கரை பக்கம் வந்தான். ஆளரவமற்ற இடத்தில் அமர்ந்துகொண்டு என்னை ஒவ்வொரு பக்கமாக பிரித்துப் படித்தான். குரல் எழும்பவில்லை என்றாலும் அந்த ஒலி கவித்துவமாக வெளிவந்தது. பாதி படித்துக்கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் செருகின. காய்ந்த உதடுகளை நாவால் வருடினான். மீண்டும் படிக்க எத்தனித்தான்.
               சோர்வுற்ற அவனது உடல் அவனை படுக்கும்படி கெஞ்சியது. மார்பில் என்னை மலர்த்தியபடி அப்படியே கீழே சரிந்தான். அவனிடமிருந்து பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. காற்று மெல்ல என்னை சரித்து கீழே போட்டது. அவனிடமிருந்து பிரிந்து வந்து சற்றுத்தள்ளி விழுந்தேன். கறுத்த இரவில் தனியாக அவன் உடலோடு கிடந்தேன்.
               இரவு கவிய கவிய மெல்ல பனி பெய்தது. காற்று பக்கங்களை நகர்த்த நகர்த்த பனி ஒவ்வொரு வரியாக நனைத்தது. என்னைப் படைத்தவன் மரணத்துக்கான கண்ணீர் என்று சட்டென தோன்றியது எனக்கு. காற்றின் ஈரம் ஒவ்வொரு எழுத்தாக நனைத்து, என் ஒவ்வொரு எழுத்தும் பனி வழியே காற்றில் கலந்தது.
               எவருமே படிக்காத கவிதைகள் இப்படியாக பனியில் மிதந்தபடி காற்றினூடே.....
              
                                    நன்றி : 'சங்கு ' காலாண்டு இதழ்  ஏப்ரல் 2017
              

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...