திங்கள், 20 ஏப்ரல், 2015

ருசிஆற்று மணலில் வீடுகட்டி
போட்டிபோட்டு கலைக்கும்போது
ஒட்டியிருந்த  மண் ருசியை
வயது முதிர்ந்ததும்
கல்வியும், பதவியும் தடுக்கின்றன

நீர்விட்டுப் பிசைந்து, பிடித்த ரூபத்தில்
உருட்டி செதுக்கி தேற்றிய உருவத்தை
தாழ்வாரமெங்கும் பதித்ததுண்டு

விரல்களில் மிச்சமிருந்த மண்துகள்கள்
எந்த உப உணவுமின்றி உள்ளே சென்றுவிடும்..

வளர்ந்தபின் மண்ணோடு இருந்த
தொடர்புகள் யாவும் அறுந்து போயின
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்ட
குடும்பத்தை புறக்கணிப்பது போல
கால்களில் மிதிபடுவதோடு சரி..

விவசாயம் லாபகரமானது இல்லை
என்று போதிக்கப்பட்டதால்
தோட்டம் சீர் செய்யக்கூட
தொடுவதில்லை உபகரணங்களை..

பளிங்குத்தரைகளை
பெயர்க்க முயற்சிப்பதில்லை பெருச்சாளிகள்...

மழைவந்தால் , இறுக்க மூடிக்கொண்டு
தொலைக்காட்சிகளோடு  சங்கமித்துவிடுகிறோம்
மண்வாசனை மடிந்துபோய்விடுகிறது
குளிர்சாதன அறைக்குள் வராமலேயே....

எத்தனைக் கழுவினாலும்                  
சாமர்த்தியமாக தப்பிய
ஒரு நாவற்பழம்
நாவினில் சேர்த்துவிடுகிறது
மண்ணின் ருசியையும்
நழுவிப்போன பால்யத்தையும்...

நன்றி: 'கல்கி' 19.04.2015.

4 கருத்துகள்:

 1. நாவல்பழம் நாவில் சேர்த்த மண்ணின்ருசியும், நழுவிய பால்ய்த்தையும்..... நினைவுகளின் பாரம் ஏறிக் கிடக்கிறது. நன்று நண்பரே !

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  இந்தப்பழந்தின் சுவை தெரிவதில்லை சிலருக்கு.. நம்ம ஊரில் அதிகம்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நாவலோடு ஒட்டி வந்த மண் துகள்.....

  இழந்த சுவையை மீட்டெடுத்த கவிதை.....

  பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>