ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ் சினிமாவும் சமூகமும்

தமிழ் சினிமாவும் சமூகமும்
                                                             

                மக்களாட்சி தமிழ்ச் சமூகத்தின் போக்கினை மிகச் சுலபமாக இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். திரைப்படங்கள் உருவானதற்கு முன், திரைப்படங்கள் உருவானதற்குப் பின் என்று...
                தமிழகத்தின் அரசியல், தமிழர்களின் இயல்பு, உரையாடல் நடை, உடை, பாவனைகள் எல்லாவற்றையும் தமிழ்த் திரைப்படங்கள் தீர்மானித்தன. தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் ஒரு அரசியல் தலைவருக்கு சாதாரணமான காய்ச்சல் என்றால் கூட கட்சி வேறுபாடுகள் களைந்து, அவர் நலம் பெற எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நேரிடையாக சந்திக்கும் போது மனமாச்சர்யங்களைக் களைந்து, சகஜமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தனது வாரிசு எதிர்க்கட்சியிலுள்ள தலைவரின் வாரிசை காதலித்து மணம் புரிய நேரிட்டால், திருமணத்துக்கு சம்மதம் இருந்தாலும், தலைமை விரும்பவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் தந்தையே திருமணத்துக்குப் போகாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.
                எதிரியின் வீட்டில் கை நனைப்பதும், உறவு கொள்வதும் இல்லை என்கிற மனோநிலையோடு இயங்குவது நம் சினிமாவிலிருந்து நாம் பெற்றதன் விளைவு தான் நம் அரசியல் சூழல்.
                இந்தியாவிலுள்ள திரையரங்குகளில் 25 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன். அந்த அளவுக்கு தமிழ்ச்சமூகம் திரைப்படங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.
                .எஸ். பன்னீர் செல்வத்தைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தொடர்ச்சியாக 46 வருடங்கள் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களே தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே திரைப்படங்கள் தீண்டத்தகாத பொருளாகக் கருதி விலக்கி வைத்துவிட்டு எளிதில் நகர்ந்து சென்று விட முடியாது.
                மெளனப் படம்கீசக வதம்' (1916) மூலம் துவங்கிய தமிழ் சினிமா வரலாற்றில் சலனப்படங்களாக இருந்தவரை, அது ஒரு மாயாஜால வித்தையாகவே இருந்துள்ளது. பேசும் படங்கள் வர ஆரம்பித்த போது சமூகத்தோடும் சினிமாவிற்குமான பிணைப்பு பிரிக்க முடியாத பந்தமாகிவிட்டது.
                1931-ல் வெளிவந்தகாளிதாஸ்' தான் தமிழ்க்குரல் கேட்ட முதல் படம். ஆனால் முழுக்க முழுக்க தமிழ்ப்படமல்ல. கதாநாயகன் பி.ஜி.வெங்கட்ராமன் தெலுங்கில் பேச கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி தமிழில் பேச, அந்த திரைப்படத்தில் நடித்த சில துணைக் கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசினர்.
                ஹனுமப்ப முனியப்ப ரெட்டி என்னும் ஆந்திராவைச் சேர்ந்த HM ரெட்டி, இந்திய பேசும்படமானஆலம் ஆரா'வை இயக்கிய அர்தேஷ் இரானியிடம் பணிபுரிந்தவர்.
                முதன் முதலாக திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவதைக் கேட்டு, இந்த ஒலிப்பதிவுக் கருவிகள் மற்ற மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் சொற்களைப் பதிவு செய்யுமா என்ற சந்தேகம் ரெட்டிக்கு வந்தது. அதன் காரணமாக, தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, ‘காளிதாஸ்' படத்தை எடுத்தார். தெலுங்கில் வெளிவந்த முதல் பேசும் படமானபக்தப் பிரகலாதா'வை இயக்கியதும் அவர்தான்.
                காளிதாஸ் படத்தின் படச்சுருள்கள் மும்பையின் ஸ்டுடியோக்களில் பிரதி எடுக்கப்பட்டு சென்னைக்கு இரயிலில் வந்த போது மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி தியேட்டர் வரை எடுத்து வரப்பட்டது. அன்று தொடங்கிய ஆராதனை இன்றுவரை நிற்கவேயில்லை.
Kalidas_sudesamitran_poster.jpg
                சென்னையில்சினிமா சென்டிரல்' என்ற திரையரங்கில் படம் திரையிடப்பட்டபோது. பலத்த கைதட்டல்கள், விசில்கள் பறந்தன. ‘காளிதாஸ்' புராண காலத்துக் கதை என்றாலும் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளோடு இரண்டு தேசபக்தி பாடல்களை இணைத்திருந்தனர். கதைக்கும் அந்தப் பாடல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ரசிகர்கள் கேட்கவில்லை. (இப்பொழுதும் அப்படித்தானே)
                ஏனெனில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து குரல் கொடுக்க அன்றைய கலைஞர்கள் நாடகம் எனும் ஊடகத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினர். தேசபக்திப் பாடல்கள் இடம்பெறாத நாடகங்கள் அன்றைய காலகட்டத்தில் மேடையேற்றப் படுவது அரிது. அது வள்ளித் திருமணமாக இருந்தாலும், பவளக் கொடியாக இருந்தாலும் கண்டிப்பாக தேச விடுதலைக்கான வேட்கையுடன் காட்சிகளையும், பாடல்களையும் சேர்த்து நாடகங்கள் அமைக்கப்பட்டனடி.கே.எஸ். சகோதரர்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தேசபக்திப் பிரச்சாரத்துக்காக உருவாக்கி நடித்தனர்.
                நாடகங்களின் நீட்சியாகத்தான் திரைப்படங்களை அன்றைக்குக் கையாண்டனர். சிவபெருமான் வேடமிட்டாலும், முருகன் வேடமிட்டாலும் காந்தியை வாழ்த்தியும், தேசபக்தியை மெச்சியும் பாடிவிட்டுச் செல்வது ஒரு முரணாகக் கருதப்படவில்லை.
                அந்த பாணியில் திரைப்படங்களிலும் அப்படியான பாடல்கள், காட்சிகள் தொடர்ந்தன. தமிழில் வெளியான முதல் பேசும் படமானகாளிதாஸ்' படத்தில்இந்தியர் ஏனோ நமக்குள் வீண் சண்டை?” மற்றும், “ராட்டினமாம் காந்தி கை பாணமாம்ஆகிய இரண்டு பாடல்களும் இடம்பெற்றன. மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இசையமைத்த அந்தப் பாடல்களை டி.பி.ராஜலட்சுமி பாடினார்.
                பாஸ்கரதாஸ் தான் தமிழ்ச் சினிமாவின் முதல் பாடலாசிரியர், இசையமைப்பாளர். துவக்ககாலத்தில் பாடல் எழுத வந்தால் அதற்கு பாடலாசிரியர்தான் இசையமைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. பாஸ்கரதாஸ் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்தவர். நடிப்பு, இசை, பாடல் இயற்றுதல், நடிக்கவும் ஆடவும் கற்றுக் கொடுத்தல் என பல்கலை வித்தகராக இருந்தவர். சிறை தண்டனைக்கோ, அடக்குமுறைக்கோ அஞ்சாதவர். எழுதுகின்றவாறே தன் வாழ்க்கையையும் வாழ்ந்து காண்பித்தவர். காங்கிரஸ் இயக்கம் இவரை எல்லாம் கொண்டாடியிருக்க வேண்டும்.
                ஆனால், நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் குறித்த உயர்வான அபிப்ராயம் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்குக் கிடையாது.
                பணம் தந்தால் நடித்து விட்டுப் போவது போல் அரசியல் நிகழ்வுகளிலும் அவர்கள் இருக்க வேண்டுமென்று பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் நினைத்தார்கள். சத்தியமூர்த்தி போன்ற ஒருசில தலைவர்கள் திரைக் கலைஞர்களை காங்கிரஸ் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினர் என்றாலும் காங்கிரஸின் தீண்டத்தகாதோர் பட்டியலில் திரைப்படங்களும் நாடகங்களும் இருந்தன.
                ஆனால், திராவிட இயக்கம் மிகச் சரியாக கலைஞர்களையும் திரைப்பட ஊடகங்களையும் பயன்படுத்தியது.
                காங்கிரஸ் இயக்கத்துக்கு தன்னிச்சையாகவே கலைஞர்கள் தங்கள் திரைப்படங்களுள் ஆதரவாக காட்சிகளை உருவாக்கினார்கள். கே.பி.சுந்தராம்பாளின் கணீர் குரலில் ஒலித்த தேசபக்திப் பாடல்கள் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தியது. சத்தியமூர்த்தி தான் அதை உணர்ந்து காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்ட சமயங்களில் கே.பி.சுந்தராம்பாள் மற்றும் வி.நாகையா போன்ற கலைஞர்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினார். காங்கிரஸுக்கு ஆதரவாக நாடகங்கள் மற்றும் செய்தித் திரைப்படங்களும் சத்தியமூர்த்தியின் துணையோடு பிரச்சார நோக்கில் கொண்டு செல்லப்பட்டன. சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக காலடி எடுத்து வைத்ததன் மூலம் கே.பி.எஸ். சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் பதவி பெறும் சூழலை உருவாக்கிய முதல் திரைத்தாரகை. அன்று துவங்கிய சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம் இன்று வரை இந்தியாவில் நீடிக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில்...
                (தேசப்பற்று காரணமாக கே.பி.எஸ். இயல்பாக அரசியலில் நுழைந்தாரோ அதுவோலவே தமிழகத்தின் திராவிட இயக்கம் வலுப்பெற்ர போது, கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் இயல்பாக அந்தக் கொள்கைகளின் மீதான ஈர்ப்பால் அரசியலுக்குள் நுழைந்தனர்.)
                காளிதாஸுக்குப் பிறகு வெளிவந்த படங்களில் தேச முன்னேற்றம், தியாக பூமி, சேவாசதனம், மாத்ருபூமி, பக்த சேதா ஆகிய படங்கள் தேசபக்தியைத் தூண்டுவதாகவும், சமூகக் கொடுமைகளை வெளிச்சமிட்டும் காட்டிய முக்கியமான படங்கள்.
                மிக பிற்போக்குத்தனமான காலகட்டமாக இருந்த 1940-களில் சாதிக்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், மூடப்பழக்கவழக்கங்கள், ஆகியவற்றைச் சாடி மிகத் தைரியமாகப் படமெடுத்த இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்கள்.
                ‘சேவா சதனம்' எனும் படம் பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த்-தின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. தந்தையின் வயதை ஒத்த முதியவர் நடேச ஐயரைவை மணக்க நேரிடும் இளம் பெண் எம்.எஸ். சுப்புலட்சுமியை, சந்தேகத்தின் பெயரால் சதா துன்புறுத்திக் கொண்டிருக்கிறார் கணவனின் சகோதரி குண்டம்மாள். அவரும், நடேசனும் சேர்ந்து சுப்புலட்சுமியைவீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். தன் குரல் இனிமையால் புகழ் பெறும் சுப்புலட்சுமியை கணவன் இறுதியில் புரிந்து கொள்கிறான். கதை வழக்கமான ஒன்றுதான் என்றாலும் படத்தின் இறுதிக் காட்சியில் தனது பிற்போக்குத் தனமான குணத்துக்குக் காரணமாகக் கருதும் பூணூலைக் கழற்றி விடுகிறார் நடேச ஐயர். அன்றைய காலகட்டத்தில் பரபரப்பான காட்சியாக கருதப்பட்ட இப்படம், இதன் காரணமாகவே பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. ஒருபுறம் பலத்த வரவேற்பையும் பெற்றது. குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பிரதானமாகக் கொண்ட இந்தப் படத்தில் கூடதேச சேவை செய்ய வாரீர்' என்ற பாடலை இடம்பெறச் செய்துள்ளார் இயக்குநர் கே.சுப்ரமணியம்.
                அன்று ஆனந்த விகடனில் தொடராக வெளியான, அதே சமயம் திரைப்படமாகவும் உருவாகி பெரும் எதிர்பார்ப்பையும், பல புதுமைகளையும் படைத்தது அமரர் கல்கியின்தியாக பூமி'.
thiyagaboomi.jpg
                தொடர்கதையாக வெளிவரும்போதே அதன் திரைப்படக் காட்சிகள் புகைப்படங்களாக பொருத்தமான இடங்களில் அச்சில் இணையாக இடம் பெற்றன.
                தேசப்பற்று இல்லாத கணவன் தேசத்துக்கு விரோதமான செயல்களைச் செய்ததால், அவனது மனைவியாக இருக்க விருப்பமின்றி தனது தாலியை கழற்றி தூக்கி எறிந்து விடுகிறாள் கதாநாயகி. இன்னொரு புரட்சிகரமான முடிவை தைரியமாக படத்தில் காட்சியாக்கினார் இயக்குநர் கே.சுப்ரமணியம்.
                படம் வெளியான சமயத்தில் நீதிக்கட்சி ஆதரவோடு இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமராக (அன்றைக்கு அதுதான் பெயர்) இருந்த காரணத்தினால், படம் தணிக்கையோ, தடையோ இன்றி வெளியானது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவளிக்காமல், காங்கிரஸ் வெளியேறியதால், பிரிட்டிஷார் காங்கிரஸ் ஆதரவுப் படம் என்ற காரணத்தின் அடிப்படையில்தியாக பூமி'யை தடை செய்ய முடிவெடுத்தனர்.
                படம் வெளியாகி 22 வாரங்கள் கடந்த நிலையிலும் சென்னை கெயிட்டி தியேட்டரில் படத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.
                படத்தைத் தடைசெய்வதை எதிர்த்து ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எழுத்து மூலமாக தடை உத்தரவு திரையரங்கு அதிபர் கையில் கிட்டும் வரை படத்தை இடைவெளியின்றி தொடர்ந்து ஓட்டினால் எல்லோரும் பார்க்க வசதியாக இருக்கும் எனக் கருதிய படத்தின் அதிபர் எஸ்.எஸ்.வாசனும், இயக்குநர் கே. சுப்ரமணியமும்குறுகிய காலத்துக்குள் பணம் சம்பாதித்திட வேண்டும் என்கிற வணிக எண்ணமின்றி' இலவசமாகத் தொடர்ச்சியாக திரையிட்டனர்.
                தடையுத்தரவு திரையரங்கு அதிபரிடம் வரும் போதும் படம் ஓடிக்கொண்டிருந்தது. காவல்துறையினர் படத்தை உடனடியாக நிறுத்தும்படி நிர்பந்தித்தனர். ஆனால், படத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். முடிவில் திரையரங்குக்கு உள்ளேயே தடியடி நடத்தி அனைவரையும் வெளியேற்றி படத்தை நிறுத்தினர். திரையரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க பலமுறை தடியடி நடத்திய காட்சிகளை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், திரையரங்குக்கு உள்ளேயே தடியடிப் பிரயோகம் நடந்ததுதியாகபூமி' திரையிடலின் போதுதான். படத்தில் மகாத்மா காந்தி ராட்டினத்தில் நூல் நூற்கும் காட்சி ஒன்று துண்டுப் படமாக இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
                கே.சுப்ரமணியன் புரட்சிகரமான படங்களை இயக்கியது மட்டுமல்ல, திரைத் துறைக்கு அற்புதமான நடிகர்களையும் அறிமுகப்படுத்தியவர். எம்.கே. தியாகராஜ பாகவதர், எம்.எஸ். சுப்புலட்சுமி, பி.எஸ். சரோஜா, எஸ்.டி. சுப்புலட்சுமி (பின்னாளில் இவரையே சுப்ரமணியம் மணந்தார்),டி.ஆர். ராஜகுமாரி போன்ற பலரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குண்டு. ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' தோன்றக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.
                கதையும், இயக்குநர்களும் கோலோச்சிய காலத்தில் புயலென நுழைந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தனது வாழ்நாளில் மொத்தம் 14 படங்களே நடித்தாலும் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் இவர்தான். இவர் நடித்த சிவகவி ஒருவருடம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அந்தச் சாதனையை இவர் நடித்த ஹரிதாஸ் முறியடித்தது. மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி இன்றளவும் தகர்க்க முடியாதபடி சாதனையை நிகழ்த்தியது.
                அவரது குரல் வளமும், நடை, உடை, பாவனைகளும் தமிழகத்தை ஒரு காய்ச்சல் போலப் பற்றிக் கொண்டது. பாகவதர் கிராப், பாகவதர் ஜிப்பா என்று தமிழகத்தில் உடைக்கலாச்சாரத்தையும், உருவ அமைப்பையும் மாற்றிய வலிமை தியாகராஜ பாகவதருக்கு இருந்தது.
                நாயகர்களைத் துதி பாடும் மனோபாவம் இவர் காலத்தில் துவங்கியதே. இவரைப் பற்றிப் பல்வேறு கதைகள் பரபரப்பாக உலவின.
                பத்து விரல்களிலும் பத்து மோதிரங்கள் மாட்டிக் கொண்டு, வெள்ளிச் சங்கிலி பூட்டிய தங்க ஊஞ்சலில் தான் அவர் சதா ஆடிக் கொண்டிருப்பார் என்று அண்ணாந்து பார்த்து ஆராதிக்கும் மோகம் இவரது காலத்தில்தான் தான் துவங்கியது. பின்னாளில் தகதகவென மின்னுவதற்கு எம்.ஜி.ஆர். தங்க பஸ்பம் சாப்பிட்டார் என்பது தொடர்ந்து இன்றளவும் நாயக மோகம் பரவித் திளைக்கிறது.
                நாடகங்களில் மிக அதிகமான பாடல்கள் இடம் பெற்றால்தான் அது நாடகத்துக்குப் பெருமை என்ற எண்ணம் எல்லா நாடகக் கலைஞர்களுக்கும் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களையும் பார்த்ததினால், ஒவ்வொரு படத்துக்கும் அதிகமான பாடல்கள் இடம் பெறுவது வழக்கமானதாகி விட்டது. எல்லிஸ் ஆர். டங்கன்  போன்ற இயக்குனர்கள்  வந்த பிறகு பாடல்களை குறைக்கும் முயற்சி தொடங்கியது. கலை என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததில் நாடகத் தாக்கத்திலிருந்து  திரைப்படங்கள் வெளிவர பன்னெடுங்காலம் ஆகியது. பாரதிராஜா திரைத்துறைக்கு வரும் வரை அது தப்பிக்க முடியாத பழக்கமாகவே இருந்து வந்தது.
                ஆனால், பம்மல் சம்பந்த முதலியார்  நாடகத்தில் இடம் பெறுவது போல் திரைப்படத்தில் பாடல்கள் தேவையல்ல என்றும், படத்தின் நீளமும் நாடகத்தில் உள்ளது போல அதிகம் இருக்கத் தேவையில்லை என்றும் அன்றைக்கே குறிப்பிட்டு இருந்ததை அவரது தீர்க்கதரிசனமான கருத்தை எவரும் கவனிக்கவே இல்லை.
                வங்கத் திரைப்பட உலகம் சத்யஜித்ரே, ரித்விக் கத்தக் போன்ற உன்னதமான இயக்குநர்களின் அபாரமான படைப்பியக்கங்களால் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, தமிழ்த் திரையுலகம் ஜனரஞ்சக பூச்சுக்களுடன் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலிருந்து விடுபடவில்லை. தமிழில் புரட்சிகரமான சிந்தனையினை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கொண்டிருந்தாலும் அதனை கலை நேர்த்தியுடன் வெளிப்படுத்த அப்பொழுது இயலாமல் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
                எம்.கே. தியாகராஜ பாகவதர் லட்சுமிகாந்தன் வழக்கில் சிறை சென்ற போது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அந்த இடத்தைப் பிடித்தார். திராவிட இயக்கப் பற்றுக் கொண்ட அவர், அதே அளவு ஈடுபாடு கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தங்களது திரைப்படங்கள் வாயிலாக திராவிட இயக்க, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி வந்தனர்.
                சி.என். அண்ணாதுரை தமிழகமெங்கும் பரவலாக புகழ்பெற்ற சமயம் வேலைக்காரி, நல்ல தம்பி, ஓர் இரவு ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதன் மூலம், அந்தப் படங்கள் தமிழ்ச் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. திரையுலகையும், திரைக்கலைஞர்களையும் எப்படி அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பதில் வித்தகர் அண்ணா.
                எம்.ஆர்.இராதா என்கிற தன்னிகரற்ற கலைஞர், நாடகம், திரைப்படம் இரண்டிலும் சமரசமின்றி தனது பாணியில் இயங்கியவர். திரைப்படத் துறையில் தனது கருத்துக்களுக்கு முரணான எண்ணங்களுடன் இயக்குநர்கள், கதையையும் பாத்திரப்படைப்பையும் உருவாக்கியபோது, சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று திரும்பவும் நாடகத் துறைக்கே வந்து விட்டார். நடிப்பில் தனக்கென்று ஒரு பாணி, கருத்துக்களில்  அசைக்க முடியாத நம்பிக்கை, துணிச்சலான போக்கு இவற்றின் காரணமாக தனித்த ஆளுமையைப் பெற்றவர் எம்.ஆர்.ராதா. இன்றைக்கும் அவருக்கு இணையான நடிப்புத் திறனோ, கொள்கைப் பிடிப்போ, தைரியமான செயல்பாடுகளோ கொண்ட மற்றொரு கலைஞனை காண்பதரிது.
                அவரது இரத்தக்கண்ணீர் நாடகம் நாடெங்கும் தீயைப்போலப் பரவியபோது அதனை திரைப்படமாக்க பெருமாள் முதலியார் விரும்பினார். ஆனால், வில்லனைப் போல் சித்தரிக்கப்படும் கதாநாயகனாக நடிக்க பலருக்கும் தயக்கம். சினிமாவுக்கே வரமாட்டேனென நாடகத் துறைப் பக்கம் போன எம்.ஆர்.ராதாவை தேடிப் பிடித்து அழைத்து வந்து அவரையே நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார். திருவாரூர் தங்கராசு திரைக்கதை வசனத்தில்  எம்.ஆர்.ராதாவின் இணையற்ற உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை காரணமாக படம் திரையரங்குகளில் வசூலைக் குவித்தது. காலம் கடந்தால் பழமை புளிக்கும் என்பார்கள், ஆனால் இன்றைக்கும் திரையிட்டால் பார்க்க அலுக்காத சில திரைப்படங்களில் இரத்தக் கண்ணீரும் ஒன்று.
                இளங்கோவன், சி.என்.அண்ணாதுரை கோலோச்சிய வசனத் துறையில் மு.கருணாநிதியின் வருகை மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. வி.சி.கணேசன் என்கிற மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்திய பராசக்தி, மனோகரா, எம்.ஜி.ஆர். நடித்த மந்திரகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்கள் மூலம் திராவிட இயக்கக் கருத்துக்கள் திரைப்படங்கள் வழியே சென்றதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் அளவு வளர்ந்தது. ‘தணிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் திராவிட நாடு பிரகடனத்தை திரைப்படம் மூலம் சாத்தியமாக்கிட முடியும்' என்று அண்ணாதுரை உறுதியாக சொன்னதற்குக் காரணம், திராவிட இயக்கத்தினர் திரைப்படத் துறையை எப்படி மக்கள் பிரச்சார சாதனமாக மாற்ற முடியும் என்கிற கலையை  சுலபமாக இனம் கண்டதனால் தான்.       
mgr2.jpg                                                
                சிவாஜி கனேசன் அரசியல் கட்சியில் இருந்தாரே தவிர, ஒருபோதும் அவரால் அரசியல்வாதியாக இயங்க முடிந்ததில்லை. திரையுலக வாழ்வின் துவக்க காலத்தில் சிவாஜியும், திராவிட இயக்கத்தில் தான் இருந்தார். ஆனால் திராவிட இயக்க அரசியல் பாணி அவருக்கு ஒரு மூச்சுத் திணறல் போல் இருந்திருக்க வேண்டும்.
                எனவே அவர் நீண்ட காலம் அங்கிருக்காமல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். அவர் சிறந்த நடிகர் என்கிற மக்கள் எழுப்பியிருந்த சிம்மாசனத்தில் இருந்து வெளிவர விரும்பவில்லை. அவரது கவனம் அவருக்கு அடுத்தடுத்து கிடைத்த சவாலான கதாபாத்திரங்கள் மீதே இருந்தது.
                ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற மனிதர் ஒரு மேதையைப் போல் திட்டமிட்டு தனது திரைப்படங்களையும், கதாபாத்திரங்களையும், காட்சிகளையும், பாடல்களையும் உருவாக்கிக் கொண்டதை அவ்வளவு சுலபத்தில் கடந்து சென்றுவிட முடியாது. எம்.ஜி.ஆரைப் போல் எல்லாவற்றிலும் ஆளுமை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் ஏனோ அவரது திட்டமிட்ட நகர்தலையும், கலை நுட்பங்களை உள்வாங்கும் திறனையும், உழைப்பையும், ஒழுக்க சீலர், நல்லவர் என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தினார் என்பதை மறந்து விட்டு, தங்களது பஞ்ச் டயலாக்கை, அதற்குக் கிடைக்கும் கைதட்டல் மீது கொண்ட அதீத நம்பிக்கைகள் காரணமாக வாக்குப் பெட்டிகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.
                இந்த இருதுருவங்களும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். நடை, உடை, வசன உச்சரிப்பு ஆகியன இளைஞர்களிடையேயும், பெண்களிடையேயும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சிவாஜியின் நடையை திரையில் பார்க்கிற சமயங்களில் எல்லாம் சிலிர்த்துப் போகிற சென்ற தலைமுறை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
                இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படம், திரைக்கதை அளவிலும் பாத்திரப் படைப்பிலும் நிறைவான படம் தான். நண்பனின் மனைவியை பெண்டாள நினைக்கும் ஒரு சாதாரண இளைஞனை பெரும்தன்மையோடு ஏற்றுக் கொள்கிற நண்பனின் கதை. உளவியல் ரீதியாக பார்த்தால், சந்தர்ப்பம் கிடைக்காத வரைதான் ஒருவன் யோக்கியன் என்பதை அடிநாதமாக கொண்ட படம். ஆனால், திரையரங்குகளில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் உருவானதால் படம் வெற்றி பெறவில்லை. இந்த நிகழ்ச்சி தான் இருவரையும் அதன் பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற தீர்மானம் எடுக்க வைத்தது.
                பொதுவாக, இந்தியத் தன்மை ஒன்றுண்டு. புராண இதிகாசங்கள் வழியே வாழ்க்கையைத் தரிசிக்கும் இந்தியர்கள், உலகில் நடக்கும் அத்தனை தீமைகளையும் யாரோ ஒரு அவதாரப்புருஷன், இராஜ குமாரன், தெய்வப் பிறவி தோன்றி அழித்துவிட கண்டிப்பாக வருவார் என்கிற மனோபாவம் மிக்கவர்கள். புரட்சி என்பதோ, மாற்றம் என்பதோ எங்கிருந்தோ வந்து ஒரு மாயாஜாலம் போல் குதிக்க வேண்டும். சாத்தியமற்ற அத்தனையையும் சாதித்திட அந்த மாபெரும் சக்தியால் மட்டுமே முடியும் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள்.
                எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் ஓடும் இந்த சரடை மிகக் கவனமாகக் கண்டறிந்தவர் போல் தன்னைத் தானே செதுக்கியபடி சென்றார். ஒவ்வொரு விதையையும் நிதானமாக விதைத்தார். அறுவடை நாளுக்காக நிதானமாகக் காத்திருந்தார். காலம் அவரைக் கையில் ஏற்றிச் சென்று பத்திரமாக அவரது கைகளில் அறுவடையான விளைச்சலை பதமாகச் சேர்த்தது. அவருக்கே உரிய இயல்பான ஆளுமையும், ஈகைக் குணமும், அபரிமிதமான கரிஸ்மா பவரும் திரைப்படங்களை தனக்கான வழியில் வளைத்து செலுத்தும் திறனும் இன்னொரு நபரால் முடியுமா என்பது சந்தேகமே.
              DMK's trump card_1967 General elections.jpg  

    எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட சமயத்தில் அவரது உருவங்கள் தாங்கிய போஸ்டர்கள் மற்ற அனைத்தையும் விட பலமான ஆயுதமாக இருந்தது. ஆயுதம் தன் பலம் எதுவென உணர்ந்த போது தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். என்கிற பிம்பத்தின் பின் ஒரு ஒளி வட்டம் சூழ்ந்தது. எம்.ஜி.ஆரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களை வில்லன்களாகப் பார்க்கும் மனோநிலைக்கு மக்கள் தயாராகி விட்டனர்.
                மூன்று நிகழ்வுகள் மூலம் தமிழ் மக்கள் சமூகத்தின் மனநிலை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை, தாக்கத்தை அவதானிக்க முடியும்.

1.
                திரைப்படச் சுருள் முதன்முதலாக மும்பையில் தயாராகி சென்னை வந்த போது, இரயில் நிலையத்துக்கே சென்று மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்ற நிகழ்ச்சி. நாடகங்கள் பரவலாக நடத்தப்பட்ட காலங்களிலேயே நடிகர்கள், பாடகர்கள் மீது தமிழ் மக்களின் பிரமிப்பான கவர்ச்சி, அவர்கள் மீது இருந்தது. லட்சியத்துக்காக பாடுபட்டு தியாகம் செய்த நாட்டுப்பற்றாளர்கள், படை வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் களம்கண்டு வெற்றி கண்ட வீரர்கள், இலக்கியத்தில் உன்னதமான ஆக்கங்களைத் தந்த படைப்பாளிகள், விஞ்ஞானிகள் ஆகியோரை நெருங்கி, அவர்களை ஆராதிக்கும் மனோபாவத்தை விட நாடகங்களின் மீதான ஈர்ப்பு எல்லை கடந்து இருந்தது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள், படை வீரர்கள், புலவர்கள் மீது இத்தகைய ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் நாடக நடிகர்கள் தங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் பரவலாக புகழ்பெறத் துவங்கியபோது அவர்களையே முருகனாக, சிவனாக, கிருஷ்ணனாக, மன்னர்களாக, வீரர்களாக, தலைவர்களாக உருவகிக்கத் துவங்கியதன் தொடர்ச்சிதான்காளிதாஸ்' படச்சுருளுக்குக் கிடைத்த கொண்டாட்டமான வரவேற்பு. ஒரு விமானமோ, கணினியோ, பெண்களை கடும் உழைப்புத் துயரங்களிலிருந்து விடுதலை செய்த கிரைண்டர், வாஷிங் மெஷின் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்ட போது இத்தனை வரவேற்பில்லை
                பிற்காலத்தில், ‘வெள்ளிக்கிழமை விரதம்' என்கிற தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம் வெற்றிகரமாக ஓடியபோது அதில் நடித்தராமு' என்கிற ஆட்டை, படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தும் பொருட்டு. தமிழகமெல்லாம் பவனி வரச் செய்தார்ஆடு சென்ற இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் ஆட்டைப் பார்க்கக் கூடியது.
                அந்த சமயத்தில் வாசித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.(கவிஞர் பெயர் நினைவில்லை... மன்னிக்க)
                “ஆடு என்னவோ
                கம்பீரமாகத் தான் இருந்தது
                மக்கள்தான்
                மந்தையாகினர்
               
                திரைப்படத்தின் ஒரு ஃபிரேமில் ஒரு ஓரத்தில் வரும் மேஜை, நாற்காலி கூட ஆராதனைக்கு உரிய தகுதி பெற்றதாகி விட்டது. நடிகைகளின் பெயரில், திரைப்படங்களின் பெயரில் சேலைகள் உடைகள் வருவது ஒரு வியாபார யுக்தியாக கருதப்பட்டது.
                கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளிவந்தபாலயோகினி' திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா மிகப் புகழ் பெற்றதன் விளைவாக, அன்றைக்கு இருந்த சோப்புக் கம்பெனி ஒன்று தனது விளம்பரத்தில் பேபி சரோஜாவின் படத்தை வெளியிட்டு பிரபலப்படுத்தியது. தன் அனுமதியின்றி மகள் படத்தை வெளியிட்ட்டது தவறு என்று சரோஜாவின் தந்தை விஸ்வநாதன் நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். (பாலயோகினி வெளிவந்த சமயத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் அதிகமாக சூட்டப்பட்டது)

2.
                தியாகபூமி படத்துக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது திரையுலகில் நடந்த போராட்டமும் தடியடிகளும்...
                22 வாரங்கள் தொடர்ந்து ஓடிய ஒரு திரைப்படம் நிச்சயம் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, படம் வெளிவருவதற்கு முன் தடை என்றால் மக்களிடம் அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்கிற ஆர்வமிகுதி இருக்கும். ஆனால், ஒரு படம் வெளிவந்தபிறகு  அதற்குத் தடை என்றால் அதற்கெதிரான போராட்டங்கள் என்பது வெறும் சினிமா ஆசை மட்டும் என்று கருதிவிட முடியாது. அன்றைக்கு பரவலாக இருந்த தேசபக்தி உணர்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை ஆகியவையும் ஒரு காரணம். இப்படியான தன்னெழுச்சி போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே நீடிக்கும். காங்கிரஸ் இயக்கத்தினர் தான் மிகச் சரியான பாதையில் அந்த உணர்வை வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறி விட்டதற்கு காரணம் சினிமா மீது அவர்களுக்கு இருந்த அலட்சிய மனோபாவமே...

3.
                கூண்டுக்கிளி திரைப்படம் திரையிட்ட அரங்குகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், அதன் காரணமாக அவர்கள் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததும் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருத இடமிருக்கிறது.
                கூண்டுக்கிளி படத்தில் நடிக்க இருவரும் சம்மதித்த போதும் நடிக்கும் போதும் அவர்களுக்குள் ஏதும் ஈகோ பிரச்சனைகள் இருந்ததாக செய்திகள் இல்லை. அவர்கள் இருவரும் அந்தக் கதையின் மீதும், கதாபாத்திரத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையில் இணைந்து நடித்தனர். ஆனால் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களிருவரையும்சேர்ந்து நடிப்பதில்லை' என்ற முடிவை நோக்கித் தள்ளியதில் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
                ஒன்று, காலந்தோறும் திரைப்படங்களில் இரண்டு துருவங்கள் இருந்தே ஆக வேண்டும்(ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ்) என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற ஆர்வத்தையும் கதைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கத்தையும் ஒரு நடிகனிடமிருந்து பிடுங்கப்படுகிறது.
                இரண்டாவது, அரசியலில் ஈடுபடும் நடிகர்கள் தேவையோ இல்லையோ ஒரு எதிரியைத் தீர்மானித்து அந்த எதிரிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை தீர்மானிப்பது. முதல் விளைவு கலையின் நோக்கத்தை சிதறடித்தது. நடிகர்கள் தங்களுக்கென்று தோற்றுவிக்கப்பட்ட ஒரு போலியான பிம்பத்தை கட்டிக்காக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. இரண்டாவது விளைவு, அரசியலில் நல்ல நோக்கத்துடன் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.
                எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தான் தங்கள் ரசிகர்களை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. எந்த ஒரு பிரச்சினையின்  தீர்வையும் தேவதூதர்கள் போல் வருபவர்களே தீர்மானிக்க வேண்டும் என்கிற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்தாக்கம் தோன்றுவதற்குக் காரணம். மக்களாகிய நாம்தான் எந்த தீர்மானத்தையும் உறுதியாக எடுக்க வேண்டும். மேலும் வணிக ரீதியாக இயங்குபவர்கள், மக்களின் பிரிந்துபட்டு கிடக்கும் இயல்பைத்தான் விரும்புவார்கள்.
                எம்.ஜி.ஆர். அரசியல் களத்தில் வென்றது போல் என்.டி.ஆர். ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றதும் திரையுலகக் கலைஞர்களுக்கு அதிகாரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. தனிக்கட்சி துவங்கிய எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கார்த்திக், சீமான் போன்றோர் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு நிலையை எட்ட முடியாததற்குக் காரணம், சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான அணுகுமுறையை ஏற்காது. எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். மீதிருந்த பிம்பம், ‘ஒரு அவதார புருஷன்' என்கிற மாதிரியான உச்சபட்ச தோற்றம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கிடைத்த வெற்றிடத்தை ஜெயலலிதா நிரப்பினார். கருணாநிதி மீதான எதிப்பு அரசியலை எம்.ஜி. ஆருக்குப்பின் ஜெயலலிதா தொடர்ந்தார்ஜெயலலிதா ஒரு பெண்ணாக அதுவும் நடிகையாக இருந்தவர். இதன் காரணமாக அவர்மீதான ஏளனப்பார்வை, விமர்சனங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று முதல்வர் என்கிற நிலையை எட்டியதற்கு அவர் தனது ஆளுமையால் எழுப்பியிருந்த இரும்பு கோட்டை போன்ற ஒற்றை மைய அதிகாரத் தன்மையே காரணம். அவரளவில் அப்படியொரு மையத்தை ஏற்படுத்தாவிடில் அவர் இத்தனை காலம் அரசியலில் நீடித்திருக்க முடியாது.
                எப்படியிருந்தாலும், தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்கிற நிலையை உருவாகி விட்டது. இந்த சூழலில் திரைப்படத்துறை சார்ந்தவர்கள் அரசியலில் இறங்கக் கூடாது அப்படி இறங்கத் தகுதியில்லை என்று ஒரு சாரரும், அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஒரு சாரரும் தங்கள் கருத்துக்களை விதைத்து வருகிறார்கள்.
                வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரும் அரசியலில் இறங்கலாம்.அது ஒவ்வொருவரின் பிறப்புரிமை. அதை யாரும் தடுத்துவிட முடியாது.
                ஆனால், அரசியலில் மாற்றம் என்பது, சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர தனி நபர் கவர்ச்சியினால் இருக்கக் கூடாது. அரசியலுக்கு வர நினைக்கின்ற எவரும் நடப்பு அரசியலில் இருந்து ஒரு மாற்று அரசியலை முன் வைக்க வேண்டும்.
                காந்தியக் கொள்கைகள் இருந்த காலத்திலேயே சுபாஷ் சந்திரபோஸ், திலகர் போன்றோர்  முன்வைத்த வேறுபட்ட கொள்கைகள் அணுகுமுறைகள், அவர்களுக்கு இணையான காலத்தில் தோன்றி வளர்ந்த பொதுவுடமை கொள்கைகள் எப்படி இருந்தனவோ...  அதற்குப் பிறகு, திராவிட இயக்கக் கொள்கைகள், அகண்ட பாரதத்தை முன் வைத்த ஜனசங் இயக்கத்தினர், நக்சல்பாரிகள் என்று வெவ்வேறு தளத்தில் இயங்கியதால், ஒரு தத்துவார்த்தமான விவாதம் நிகழ வாய்ப்பு இருந்தது. ஆனால், தனிநபர் அரசியல் என்பது நோக்கமோ, வரைபடங்களோ, உபகரணங்களோ இன்றிப் பயணிக்கும் ஒரு நிராயுதபாணியின் பயணம் போலத்தான் இருக்கும்.
                திரைத்துறையினருக்கு இருக்கின்ற மிகப்பெரிய அனுகூலம், அவ்ர்களுக்குக் கிடைக்கும் பரந்துபட்ட அறிமுகம். ஒரு சாதாரண மனிதன் தனது  உருவத்தைப் பதிய வைக்க பல வருடங்களையும், இரவு பகல் பாராத உழைப்பையும் தரவேண்டும். அப்படியும் கூட அதற்கான சாத்தியம் 100க்கு 10 சதவீதம்தான். எனவே, திரைத்துறையினர் தங்களுக்குக் கிடைத்த இந்த மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கான கொள்கைகளை நேர்மையான முறையில் உருவாக்க வேண்டும். அரசியல் சிந்தனையும், அறமும் கொண்ட அறிவார்ந்த திறமைசாலிகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
                இந்த சூழலில் இன்னொரு செயல்பாட்டையும் நாம் கவனமாக ஆராய வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே தோன்றும் ரசிகர் மன்றங்கள். ஒரு படத்தில் அரிதாரம் பூசியவர் தோன்றி விட்டாலே அவருக்கு மதுரையில் ஒரு ரசிகர் மன்றமும் கூடவே தோன்றிவிடும் என்பார்கள். இவர்கள் எல்லாம் அறியாமையாலும், சினிமா கவர்ச்சியாலும் இப்படி ஆகிவிட்டதாக ஒருசிலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் சிந்திக்கத் தெரியாத அப்பாவிகள் அல்ல.
                இன்றைய கால கட்டத்தில் ஒரு சாதாரண அரசியல் இயக்கத்தில் ஒரு நகர செயலாளராகவோ, மாவட்ட செயலாளராகவோ, தேர்தலில்  போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளராகவோ வருவதற்கு பல லட்சங்களையும் கடுமையான பின்புலம், தந்திரங்கள் என சகல விதங்களிலும் உழைக்க வேண்டும். ஆனால் ஒரு திரைப்பட நடிகர் அரசியலில் இறங்கினால், ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்து கொண்டு பேனர், தோரணம், பாலாபிஷேகம் ஆகியவற்றை மட்டும் செய்தால் போதும் மிக எளிதாக அந்த உயரத்தை எட்டி விடலாம். காலப்போக்கில், ஏதோ ஒரு பெயரில் அரசியல் கட்சி, பின் சந்தர்ப்பமும் சூழலும் சரியாக அமைந்து விட்டால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துவிடும் என்கிற தொலைநோக்கு திட்டத்தோடு தான் ரசிகர்கள் என்ற போர்வையில் இயங்குகிறார்கள்.
                ரஜினிகாந்த் இதையெல்லாம் புரிந்து கொண்டிருப்பதால் அவர் தயங்குகிறார்ரஜினிகாந்தை இழுக்கப் பிரயத்தனப் படுபவர்கள் ஆட்சி அவர் பெயரிலும் அவரை இயக்குகிற சூத்திரக் கயிறை தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்ற சூழ்ச்சி இருப்பதையும் ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களது முகம் மட்டும் போதும் அதிகாரத்தைக் கைப்பற்ற... அவர்களது மூளை தேவையில்லை அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது சில நுண்ணிய அரசியல்வாதிகளின் திட்டம்.
                தமிழ்ச் சினிமாசமூகத்திலிருந்து எதை அதிகம் பெற்றுக் கொண்டது என்று நோக்கினால், பரபரப்பான செய்திகளின் மையங்களைப் பற்றித்தான் அவை அதிகம் பிரதிபலித்தன. மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி துவங்கி, ஆட்டோ சங்கர், நித்தியானந்தா, சில்க் ஸ்மிதா வரை மக்களிடையே எதிர்மறைப் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை மீது ஈடுபாடு காட்டின. சென்னையில் நடந்த இதய தான அறுவைசிகிச்சை பற்றி மலையாளத்தில் எடுக்கப்பட்டு அதன் மறு உருவாக்கமாக தமிழில் வந்தது. ஆக நல்ல விஷயங்களை திரையுலகம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. அதனை கலையாக்குவதற்கும் முயற்சிப்பதில்லை.
                இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், ஈழப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வியல் பிரச்சினை, தாமிரபரணி ஆற்றுச் சம்பவங்கள், போன்ற சமகால சம்பவங்கள் பற்றிய முழுமையான படங்கள் இல்லை.
                அதைப்போல் மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும் என்கிற முனைப்பும் குறைவுதான்.
                வீரபாண்டிக் கட்டபொம்மன், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களில் கதையமைப்பு மற்றும் காட்சிகள் சிவாஜியை முன்னிட்டே அமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும், அந்த சரித்திர புருஷர்களை மக்கள் மனதில் அழிக்க முடியாத அளவு பதிய திரைப்படம் ஒரு காரணமாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பாரதி, காமராஜ், பெரியார், இரணியன் படங்கள் நல்ல முயற்சிதான் என்றாலும் அவை பரவலாக கொண்டு செல்லப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பரபரப்பற்ற கதையோட்டம் இல்லாதது காரணமாக இருக்கலாம். உண்மையான வரலாற்றை மிகைப்படுத்தாமல் படமாக்கியதால்  பெரும் வெற்றியைப் பெறாமல் போயிருக்கலாம்.
                பேசும்படங்கள் துவங்கிய காலத்திலிருந்து 1977 வரை வெளியான பெரும்பாலான படங்களில் நாடகங்களின் தாக்கமே அதிகம் இருந்தது. இடையில் முயற்சிக்கப்பட்ட அந்தநாள், உன்னைப் போல் ஒருவன் (ஜெயகாந்தன்), யாருக்காக அழுதான் போன்ற சில படங்கள் தவிர யதார்த்தப் படங்களின் முயற்சி மிகக் குறைவே.
                பாரதிராஜாவின் 16 வயதினிலே வந்த பிறகு திரையுலகம் பெரும் மாற்றத்தை சந்தித்தது. அதுவரை ஸ்டூடியோ அரங்குகளை மட்டும் சுற்றிவந்த கேமரா, மெல்ல வயல்வெளி, சலசலக்கும் ஆறு, குப்பங்களின் குப்பைக்கூளங்கள், சாக்கடைகளிலும் நுழைந்து பயணித்தது. அத்துடன் பாரதிராஜா இன்னொரு மகத்தான மாற்றத்திற்கு காரணமாக இருந்தார். நடிகர், நடிகைகள் என்றால் சிவந்த மேனியும், வடிவான முக அழகும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற Myth- உடைத்தார். எளிமையான கிராமத்து முகங்கள் அத்தனை கவர்ச்சியற்ற கதாநாயகிகள், கொடூரமான முகம், விகாரமான சிரிப்பு இருந்தால்தான் வில்லன் என்பதையும் மாற்றி பூனை போன்று இருப்பவர்களுக்குள்ளும் வில்லன்கள் இருக்கிறார்கள் என்பதையும், பாரதிராஜா தனது திரைப்படங்கள் வழியே உருவாக்கினார். மற்றொன்று வட்டார வழக்கு சொல்லாடல், இயல்பான கிராமத்து உரையாடல்கள் ஆகியவற்றையும் அவரது படங்களின் வாயிலாக பரவலாகப் பயன்படுத்தினார்.
                70-களில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரைத்துறையில் புகுந்தாலும், பெரிதான மாற்றங்கள் எதையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. காட்சிகளின் பிரம்மாண்டம் ஒளிப்பதிவில் நேர்த்தி மட்டுமே அவர்களின் பங்களிப்பாக இருந்தது.
                சமீபகாலமாக குறும்பட இயக்குநர்கள் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்த பிறகு, இன்னமும் எளிமையாகிறது சினிமா. ஒருபக்கம் கோடிக்கணக்கில் இறைத்து ரசிகர்களை சதா பிரம்மிப்பில் மிதக்க வைக்கும் முயற்சி. மறுபக்கம் சிறு சிறு மின்னல்கள் போல் காட்சியமைப்பு, எளிய உள்ளடக்கம், யதார்த்தமான மனிதர்கள் என்று குறும்பட இயக்குநர்கள் வேறொரு தளத்துக்கு திரைத்துறையை இட்டுச் செல்கின்றனர்.
                இவையெல்லாம் திரைத்துறைக்கு போதுமா என்றால்... போதாதுதான். இலக்கியங்களை, சமகால எழுத்தாளர்களின் படைப்புக்களை, திரைமொழியில் கொண்டுவரும் முயற்சி அதிகரிக்க வேண்டும். உலகத்தின் மிகச் சிறந்த படங்களில் 70 சதவீதம் நாவல்களின் திரைவடிவமே.
                இந்தியாவின் சிறந்த படங்கள் குறிப்பாக, வங்க மொழியில், மலையாளத்தில் ஏன்... தமிழில் கூட சிறந்த படங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டால், சிறுகதை, நாவல்களை எடுத்துக் கொண்டு திரைப்படங்களானவைதான்... இந்த முயற்சி தொடரும்போது இந்திய சினிமா உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கும்.
                தமிழில் கதாநாயகர்களுக்குப்பிறகு பொதுவான பார்வையாளர்களை அதிகம் பாதித்தவர்கள் நகைச்சுவை நடிகர்களே. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர். இராமச்சந்திரன், தங்கவேலு, பாலையா, நாகேஷ், சந்திரபாபு, சுருளிராஜன், விவேக், வடிவேலு என்று தொடர்ச்சியான நகைச்சுவை மரபு தமிழகத்தின் திரையுலகில் மகத்தான நடிப்பாற்றலையும், கருத்தாக்கங்களையும் உருவாக்கியோர். கதாநாயகர்கள் பிரச்சார பாணியில் உரக்கக் கத்தி ஓங்க வைத்திட நினைத்த நீதி, நியாயங்களை, அவர்களையும் தாண்டி நகைச்சுவை நடிகர்கள் பரவலான பாமர மக்களை இலகுவாகச் சென்றடைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் முழுப்படத்தை எடுத்து முடித்துவிட்டு, தனியே நகைச்சுவை ட்ராக்குக்காக வருவது தொடங்கிற்று. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி..மதுரம் இணைந்து நடித்த காட்சிகள் அத்தனையையும் தரமான நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.
                என்.எஸ்.கிருஷ்ணன் மட்டும் ஒரு சார்லி சாப்ளின் போல் தனக்கென்று முழுபடமும் வருமளவு பாத்திரங்களை உருவாக்கி திரைப்படங்களை தயாரித்து இருந்தால் சாப்ளினுக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார்.
                தங்கவேலு, .வி.சரோஜா ஜோடி நாகேஷ் மனோரமா ஜோடிகள் தமிழகத்தின் சிரிப்பு நிமிடங்களுக்குக் காரணகர்த்தாக்கள்.
                சந்திரபாபு, சுருளிராஜன் இருவரின் உடல்மொழி, அங்க சேஷ்டைகள் தனித்துவமானது. வடிவேலு திரைக்கு வந்த பிறகு தமிழர்களின் உரையாடலை தீர்மானிப்பவராக இருந்தார்... இருக்கிறார். உடல் மொழியும், உச்சரிப்பும், கதாபாத்திரத் தேர்வும் அவரை உச்சிக்குக் கொண்டு சேர்த்தன.
                விவேக் பலகுரல் பேசும் கலைஞர் என்பதால் எவரையும் இமிடேட் செய்து நடிக்க அவரால் முடிந்தது. பிரச்சார நெடி அடித்தாலும், தைரியமாக தமிழகத்தில் பிற்போக்கான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக விமர்சித்து வருகிறார்.
                நடிகர்களை அடுத்து இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாக பாதித்திருக்கின்றார்கள்.
                 எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், வி.குமார்,.எம். ராஜா, விஸ்வநாதன் இராமமூர்த்தி, இளையராஜா, டி.ராஜேந்தர், .ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ்,என்று மிகத் தொடர்ச்சியான இசைமரபு இருக்கிறது.
                ஆரம்ப காலங்களில் கர்நாடக இசை ஆக்கிரமித்திருந்த நிலை மாறி திரை இசை அல்லது மெல்லிசை என்றொரு பாணியை கே.வி மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தியும் ஏற்படுத்தியதன் மூலம், கண்ணுக்குத் தெரியாமல் கட்டப்பட்டிருந்த இசையின் கயிறுகள் அறுக்கப்பட்டன. பிறப்பிலிருந்து இறப்பு வரை பாடல்களே நமது இயல்பான வெளிப்பாடு. உதாரணம் நாட்டுப்புறப் பாடல்கள். இதனை மிகச் சிறப்பாக உணர்ந்து இயற்றியவர்கள் எளிய மக்களே.
                சினிமாவில் கர்நாடக இசை ரசிக்கப்பட்டதே தவிர பரவலாக உள்வாங்கப் படவேயில்லை. அதற்கு காரணம் கர்நாடக இசை சமுதாயத்தில் மேம்பட்ட மக்கள் இசையாக இருந்தது.
                அடித்தள மக்களின் இசை வேட்கைக்கு மெல்லிசை வடிவம் இயல்பாக பொருந்துகிறது.இந்திப்படப் பாடல்கள் மீது தமிழ் மக்கள் ஈர்ப்பு இருந்த காலத்தில்  திரையுலகில் நுழைந்து அவர்களால் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்கவும், தலையாட்டவும் செய்தவர் இளையராஜா. அவரது இசையின் தாக்கம் இல்லாமல் ஒரு தினம் கூடக் கழிந்ததில்லை. பிறமொழிப் பாடல்களை பிரதியெடுத்து தமிழ் திரைபடப் பாடல்கள் உருவான காலம் போய், தமிழ்த் திரைப் பாடல்களை அப்பட்டமாகப் பிரதி எடுத்து பிற மொழியில் பாடல்கள் உருவாயின. திரையுலகம் தாண்டி அவர் சிம்பொனி, How to name it? Nothing but Wind, திருவாசகம் ஆகியன திரைகடல் தாண்டி பேசவைத்தது.
                .ஆர்.ரஹ்மானின் வருகை, தமிழ்த் திரைக்கு ஒரு மேற்கத்திய தோற்றத்தை தந்தது. அவரது துள்ளலான இசைபாணி தமிழர்களின் கொண்டாட்ட கால ஆர்ப்பரிப்பு போல கட்டற்றுப் பாய்ந்தது. தமிழ்த் திரையிசைக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்தவர் .ஆர்.ரஹ்மான். இளையராஜா தன்னை நாடிவந்தவர் எவராயினும் மறுக்காமல் தனது இசைக்கொடையை தந்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் 15 நாட்களுக்கு ஒரு திரைப்படம் வீதம் இசையமைத்து தந்து கொண்டிருந்தார்
                ஆனால் .ஆர். ரஹ்மான் அப்படியில்லாமல் திட்டமிட்டு தனது நகர்தலையும், இலக்கையும், களத்தையும் நிர்ணயித்துக் கொண்டார். எனவே, அவர் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் இயல்பாக விரைவாக அடைந்தார். அவர் பெற்ற இரண்டு ஆஸ்கர் விருதுகளும் தமிழர்களை தலை நிமிரச் செய்திருக்கின்றன. ரஹ்மானின் மற்றொரு சாதனை புதிய புதிய குரல்களை, நவீனமான ஒலிகளை திரைப்படம் தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வது. இந்தப் போக்குதான் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய குரல்களைத் தேட வைத்தது. திறமையானவர்கள் தங்களது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி அதன்மூலம் திரைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்றால், .ஆர்.ரஹ்மான் அவரைப் பின்பற்றி, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், இமான் எனப் பலரும் இப்பொழுது புதுக்குரல்களைப் பதியவைத்து பிரபலப்படுத்தியது தான் காரணம். இன்றைய சமுதாயம் உத்வேகத்துடன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள இவர்களது பங்களிப்புகள் முக்கியமானவை.
                ஆனால், இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே மெட்டுக்களைத் தேர்வு செய்து விட்டு, அதற்கு ஏற்றாற்போல் பாடல்கள் எழுதும்படி பாடலாசிரியர்களை நிர்பந்திப்பதால் நல்ல வரிகள் கொண்ட பாடல்கள் வருவது வருவது அருகிவிட்டது. கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி. ஆகியோருடன் இணைந்து கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் இயற்றிய பாடல்களில் பெரும்பான்மையானவை பாடல்களுக்காக இசையமைக்கப்பட்ட்வைதான். படத்தின் கதையும், பாடல்களுக்கான சூழலும் அன்றைக்கு போலில்லை என்று சொன்னாலும், பாடலாசிரியர்களுக்கு தன்னிச்சையான சுதந்திரத்தை இன்றைய இசை தரவில்லை. இசையும், கவிதையும் இணைந்து பயனளிக்கும் போதுதான் ஒரு மகத்தான பாடல் கிடைக்கும். தமிழர்களின் வாழ்வில் பல மாற்றங்களை மறைமுகமாகத் தந்த பாடல்கள் எல்லாம் அப்படி உருவானவைதான். ஆனால், இன்றைய இசை ஒரு கேளிக்கை என்ற அளவிலேயே இருப்பது இசை அமைப்பாளருக்கு கூட நல்லதில்லை.
                திரைப்படங்கள் தமிழர்களின் ஒவ்வொரு கணத்தின் போதும் பொருத்திப் பார்த்து நெகிழும்படியும், மகிழும்படியும் செய்ததில் கண்ணதாசனுக்கும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், வாலிக்கும் பெரும்பங்கு உண்டு. தத்துவார்த்தமான கண்ணதாசனின் பாடல்கள் ஒரு சராசரித் தமிழனின் வாழ்வில் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய தகவமைப்புடன் அளவின்றி பொக்கிஷம் போல் கொட்டித் தீர்த்தவை. அவரது வரிகள் உழலாத மனமே இல்லை என்கிற அளவுக்கு அவரது திரைப்படப் பாடல்களின் தாக்கம் அவரது காலத்தில் இருந்தன. கண்ணதாசனைப் பிரதி எடுப்பது போல் இருந்தாலும் வாலியின் வரிகள் கவித்துவமான சொல்லாடல் கொண்டவை. அலுக்காத அந்த பாணியில் இருவரது கவித்திறனால் அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல் பாடல்கள் பொங்கிப் பிரவாகம்  எடுத்தன. எனவேதான் எவருக்கும் அஞ்சாத வித்யாகர்வத்துடன் கவிஞர்களுக்கே உரிய கம்பீரத்துடன் பாடலாசிரியர்கள் உலவ முடிந்தது.
                பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் உழைக்கும் மக்களின் உள்ளபடியான உணர்வை பதிவு செய்தவை. எளிய  மக்களின் உதடுகளிலும் தங்கி இதயங்களையும் நிறைத்தவை அவரது பாடல்கள். பட்டுக்கோட்டையின் பாடல்களை இன்றும் எவராலும் பிரதியெடுக்க முடியாதபடி அவரது பாணி ஒரு தெருப்பாடகனின் கட்டற்ற இசையறிவைப் போல் தனித்துவமானது.
                இசைக்கருவிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே எழுத வந்த வைரமுத்துவின் காலம் மிக மிக நெருக்கடியானது. இசையை மீறி தன்னையும், கவிதையையும் நிறுத்திக் கொள்ள மிகப் பெரிய போராட்டத்தை அவர் நடத்த வேண்டியிருந்தது. அதில் அவர் மகத்தான வெற்றியும் பெற்றார். கண்ணதாசன், பட்டுக்கோட்டை ஆகியோரின் பாணியிலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாட்டையை வகுக்கவும் அவர் தவறவில்லை. இலக்கியவாதிகளுக்குள் மட்டுமே உலவி வந்த வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை தமிழர்கள் மத்தியில் பரவலாக்கியவர்கள் வைரமுத்துவும் அவரைத் தொடர்ந்து தாமரையும் ஆவர்.
                சமகால அரசியல் சூழல் மீதும், நிகழ்வுகள் மீதும் எதிர்வினை நிகழ்த்துகிற துணிச்சல் பாடலாசிரியர்களுக்கு இருந்து வந்தது குறிப்பிடத் தக்கது. கண்ணதாசன் தொடங்கி, அறிவுமதி,தாமரை வரை தங்கள் கருத்துக்களை மிகத் துணிச்சசலுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.
                திரையுலகம் சமகால நிகழ்வுகளோடு திரைப்படங்களில் அதிகம் கதைக்கவில்லை என்றாலும் சமூகப் பொறுப்புடன் ஒரு சிலரேனும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு துணை நின்றது. குறிப்பாக, இந்தியா யுத்த காலங்களில் பெரும் நிதிச் சுமையுடன் இருந்த போதும், பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டித் தந்திருக்கிறார்கள் அத்துடன் தங்களது பங்களிப்பையும் தந்திருக்கிறார்கள்.
                காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினையின் போது தெருவிலிறங்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம், பல்வேறு விமர்சனங்களையும் தாங்கியிருக்கிறார்கள். அவர்களது போராட்டம் ஒரு விளம்பரப் படம் போல. நட்சத்திரக் கண்காட்சி போல இருந்தனவே தவிர, உள்ளார்ந்து இல்லை என்று விமர்சிக்கப் பட்டார்கள். இப்படி விமர்சித்தவர்கள் யாரும் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இல்லை. நான்கு சுவர்களுக்கு உள்ளே அமர்ந்தபடி பிரச்சினைகளின் தீவிர தளத்தில் பெருச்சாளிகள் போல் பதுங்கி இருந்துவிட்டு, யாராவது போராடிக்கொண்டிருந்தால் தங்கள் திருவாய் மலர்ந்து அருள்வாக்கு மட்டும் சொல்பவர்கள்.
                இந்தக் கட்டுரை தமிழர் வாழ்வு நிலையோடு திரைப்படங்களின், கலைஞர்களின் தாக்கம் பற்றிய ஒரு மீள்பார்வையே தவிர மிகச் சிறந்த திரைப்படங்கள் எவை? அவை உலகத் தரமானவையா என்ற கேள்விகளுக்குப் போகவில்லை.
                விமர்சன நோக்கில் எழுதுபவர்கள் எல்லாம் வங்கத் திரைப்படங்கள் போல், மலையாளத்திரைப்படங்கள், மராத்திகன்னட திரைப்படங்கள் போல் ஏன் தமிழில் வரவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்த கேள்வியை எல்லா தரப்புக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
                வங்கத்திலுள்ளதைப் போல் சித்தாந்த ரீதியான வேறுபட்ட இயக்கங்கள் ஏன் தோன்றவில்லை? வங்க, மலையாள, கன்னட, மராத்தி இலக்கியங்கள் அளவுக்கு ஏன் இங்கு படைக்கப்படவில்லை? கேரளத்தில், கர்நாடகத்தில் உள்ளது போல் இலக்கியவாதிகளை மதிக்கும் போக்கு ஏன் தமிழகத்தில் இல்லை? இன்றைக்கும் ஒரு முதல்வர் கேரளத்திலோ கர்நாடகத்திலோ பதவி ஏற்றால் இலக்கியவாதிகளைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்(அதன்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்) எனவே நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இருக்கும் நமது திரைப்படங்களும்...
                திரைப்படங்களால் சமூகமும், சமூகத்தால் திரைப்படங்களும் செம்மையடைய என்ன வழி என்பதற்கு விரிவான விவாதம் தேவை. அதற்கு கல்விச்சாலைகள்தான் மிகச் சரியான இடமாக இருக்கும். திரைப்படங்கள் குறித்த பாடதிட்டங்கள் பல்கலைக்கழகங்களில் வகுக்கப்பட வேண்டும். திரைப்படங்களின் தொழில்நுட்பப் பயிற்சிகள் குறித்த புரிதல்கள் வரும் சூழலை உருவாக்க வேண்டும்.
                எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படங்களை கண்டிப்பாக ஆவணப்படுத்த வேண்டும். மெளனப் படங்கள் வந்த காலத்தில் கிட்டதட்ட 120 படங்கள் தமிழகத்தில் தயாரானதாகச் சொல்கிறார்கள். அதில் நாகர்கோயிலில் எடுக்கப் பட்ட மார்த்தாண்டவர்மா தவிர வேறு எந்தப் படத்தின் பிரதியும் இப்பொழுது நம்மிடம் இல்லை. தமிழின் பேசும் படங்கள் வந்த துவக்க காலத்தில் வெளிவந்த படங்களின் பிரதிகள் எதுவுமே நம்மிடம் இல்லை. இயக்குநர் பாலுமகேந்திரா தன்னுடைய ஆகச் சிறந்த படங்களான மறுபடியும், வீடு, சந்தியாராகம் போன்றவற்றின் நெகட்டிவ் பிரதிகளை எடுத்துப் பார்த்தபோது அவை முற்றிலும் சிதைந்து போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், தமது பிற படங்களான மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள் போன்றவற்றின் பிரதிகளை பார்க்கும் துணிச்சல் இல்லை என்றும் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். டிஜிட்டல் யுகம் வந்ததால்  அவரது படங்களை நாம் பார்த்துவிட முடிகிறது.
                படச்சுருள்களில் மட்டுமே பதிவான பல்லாயிரக்கணக்கான படங்களில் பிரதிகளும் இல்லை என்பது நமக்கு வரலாற்று நோக்கு இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. திரைத் துறை சார்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் கோலோச்சுகிற தமிழகத்தில் ஆவணப்படுத்த ஒரு காப்பகம் இல்லை என்பது வேதனைக்கு உரியது. எனவே தணிக்கைக்கு வரும்போது எல்லா திரைப்படங்களையும் ஒரு பிரதியைப் பெற்று ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். பல்கலைக் கழகங்களை இந்த பணியில் அரசு ஈடுபடுத்த வேண்டும்.. திரைப்படங்களுக்கே இந்த கதியென்றால் ஆவணப்படங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. இந்தியாவின் முதல் முழு நீள ஆவணப்படம் என்றால் அது .கே.செட்டியாரின்காந்தி' படம் தான். கிட்டதட்ட ஒரு லட்சம் மைல்கள் பயணித்து பல தேசங்கள் அலைந்து, பல லட்ச ரூபாய் செலவு செய்து எடுத்த அந்தப் படம் மூன்று (தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்) மொழிகளில் உருவானது. அதன் ஒருபிரதி கூட நம்மிடம் இல்லை. அமெரிக்காவின் பல்கலைக் கழகம் ஒன்றில் ஒரு பிரதி இருப்பதாக சொல்கிறார்கள். ஆவணப்படங்களும் குறும்படங்களும் கூட பத்திரமாகப் பாதுகாக்கப் பட வேண்டும். தமிழ்த் திரையுலகம் குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றால் நம்மிடையே அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றால் வரலாறு நம்மை ஏளனப்படுத்தும்.
                தமிழ்த் திரைப்படம், குறும்படம் குறித்து விமர்சன நோக்கில், வரலாற்று நோக்கில் நூல்கள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது. தியோடர் பாஸ்கரன், அசோக மித்திரன்,அம்ஷன் குமார், வெங்கட் சாமிநாதன், அறந்தை நாராயணன்,மதன், எஸ்.ராமக்ருஷ்ணன், அஜயன் பாலா, பி.ஆர்.மகாதேவன், நிழல் திருநாவுக்கரசு, திருநின்றவூர் சந்தானக்கிருஷ்ணன், செந்தூரம் ஜெகதீஷ், சாருநிவேதிதா உட்பட பலரும் எழுதி வருகிறார்கள். சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற நூல் முற்றிலும் புதிய முயற்சி. ஆனால் சிட் ஃபீல்ட்-இன் திரைக்கதை பற்றிய நூல் போன்றதோர் முயற்சி இனிமேல்தான் தமிழில் நிகழவேண்டும்
                தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் எழுதியஅசையும் படம்' என்கிற ஒளிப்பதிவு குறித்த நுட்பமான, தெளிவான, எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் நடையில் உருவான ஒரு புத்தகம் மட்டும் காணக் கிடைக்கிறது. நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட அந்த புத்தகம் ஒளிப்பதிவு துறையில் நுழைய முயல்பவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டி.
                
    மற்றொரு ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் தனது வலைப்பூவில் ஒளிப்பதிவு குறித்த நுட்பங்களை எளிய மொழியில் கட்டுரைகளாகப் பதிவிட்டு வருகிறார். அதுவும் நூலாக வரவேண்டும்.
                மற்ற தொழில்நுட்பங்களான படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்றவை பற்றியும் நூல்களை அந்தந்த துறை சார்ந்தவர்கள் எழுத வேண்டும்.
                திரைப்படங்களை ஒதுக்கி வைத்தோ, புறக்கணித்தோ தமிழ்ச்சமூகம் இருக்க முடியாது. அது, அன்றாட நமது உயிர் வாழ்வதற்கான கடமைகளான உண்ணுதல், உறங்குதல் போலாகிவிட்டது. எனவே அதுபற்றி பொத்தாம்பொதுவாக குறை கூறுவதை விடுத்து ஆக்கப் பூர்வமாக அதனோடு பயணிப்பது சமூகத்துக்கும் நல்லது; தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது.
                                                -----------------
(இந்திய  சினிமாவின் 100வது ஆண்டைக் கொண்டாடும் விதமாய் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்துள்ள இச் சிறப்புக் கட்டுரை  எனது வலைப் பூவின் 100வது பதிவாகவும் அமைந்துவிட்டது!)


நன்றி: 'கல்கி' தீபாவளி மலர்-2013



5 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...