ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

போட்டுத்தள்ளு

          எப்படியோ ஒரு கசகசப்பு மரணம் நிகழ்ந்த வீட்டில் புகுந்துவிடுகிறது. சம்பூரணத்தாச்சிக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. படிக்கட்டிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் இறைவனடி சேர்ந்துவிட்டார். மல்லிகாதான் முதலில் அவரது மரணத்தை உணர்ந்தவள் பின்பு பிரகடனப்படுத்தியவளும் அவளே... மரணம் பற்றிய செய்தி மனிதர் விட்டு மனிதர் பரவுகையில் இயல்பான வருத்ததை மீறி மெல்லிய மகிழ்ச்சி இழையோடுவதை கவனித்திருக்கிறீர்களா? அதிர்ச்சி மிக்க ஒரு புதிய செய்தியை  முதலில் அறிவித்த பரவசம் அது.
          சம்பூரணத்தாச்சி மரணத்தை எல்லோரும் கல்யாண சாவு என்றார்கள். ஒருத்தரையும் படுத்தாம அவரது ஆத்மா போய் சேர்ந்தது என்று ஆறுதலாக சொல்ல ஏதுவாக பனிப்புகை போல் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
          மல்லிகா மெல்ல விசும்ப ஆரம்பிக்க “ம்....ம்.. வழிகூட்டி சூடம் ஏத்திட்டுதான் அழணும்' பெரியம்மாவின் கண்டிப்பான குரல் கேட்டது.
          வாசல் எதிரே தெருகூட்டி சூடம் ஏற்றியபின் முறையான அழுகுரல்கள் எழும்பின.
        ஈஸ்வரனிடம் மெல்லிய குரலில் எல்லோரும் வந்து சொல்லவேண்டியவங்களுக்கு தகவல் சொல்லியாச்சில்ல என்று கரிசனமாக கேட்டனர்.
      அதான்... இப்ப செல்ஃபோன் வந்திடுச்சில்ல.. வாயு வேகத்துல செய்தி போயிடுச்சு..
         அக்கம் பக்கம் கேள்விப்பட்டவர்கள் ஒன்றிரண்டாக வரத்துவங்கினர். யாரொ ஊதுவத்தியை கொளுத்தி ஆச்சியின் தலைமாட்டருகே வைத்தனர். ஊதுவத்தி வாசனைகூட அச்சத்தையும், இறுக்கத்தையும் தன்னுள் ஏற்றிப் பரவியது.
           மாணிக்கம் எங்கிருந்தோ பந்தல் போடும் ஆட்களையும், சங்கு சேகண்டிக்காரர்களையும் அழைத்துவந்திருந்தான். நாட்டாமைக்காரர் லேசான தள்ளாட்டத்துடன் அவர்களோடு பேரம் பேசிக்கொண்டிருந்தார். அடுத்தவர் மரணம் அவரைப்போன்ற சிலருக்கு கொண்டாட்டம்.
          ஈஸ்வரன் யாரையோ அழைத்து சொன்னார் போயும் போயும் அவங்ககிட்ட  பேரம் பேசிட்டு... சரின்னு சொல்லிட்டு  அடுத்துஆக வேண்டிய காரியத்தை பாருங்க..
           ஒரு ஓரமாக உட்கார்ந்து சங்கு ஊதுகிறவர் தன் கைங்கர்யத்தை ஆரம்பித்தார். சப்தம் கேட்டோ என்னவோ அகிலாகுட்டி தூக்கத்திலிருந்து கண்ணைக் கசக்கியபடியே சிறு விசும்பலுடன் வெளியேவந்து ஈஸ்வரனின் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
        "அப்பா பசிக்குது"
        "ஏய், மல்லி என்ன பண்றே அங்கே? பாப்பாவுக்கு ஏதாவது கொடு."
         மல்லிகா அழுத முகத்தோடு வெளியே வந்து
        'என்னடி எழுந்தவுடனே படுத்தற? எதுக்கு இப்ப அழுவுற?"
        "நீ எதுக்கு அழுவற?"
         "ஆச்சி செத்துப்போயிட்டாங்க.வா உள்ளே."
        "எந்த ஆச்சி?"
        "நம்ம ஆச்சிதாண்டி.. இன்னிக்கு ஒரு நாள் படுத்தாம கம்முன்னு இரு தெரியுதா?"
          அகிலாகுட்டியைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அகிலா வாகாக அமர்ந்து மல்லியின் தோளில் இருகை பூட்டி சாய்ந்துகொண்டாள். மெல்ல மல்லியின் காதருகே கேட்டாள்...
       "அப்ப ஸ்கூல் லீவா?"   
         "அதுல இரு. ஆச்சியை பாக்கணும்னு இல்ல..."
 
        ஆச்சியின் உடலருகே சென்று அவரது கால்களைத் தொட்டு அகிலாவின் கண்களில் அவளே ஒற்றினாள். பிறகு கீழே இறக்கிவிட்டாள்.
         இறங்கிய உடனே அவளது கைகளை சுரண்டி , "அம்மா, அம்மா ஆச்சிக்கு தலையில அடிபட்டுடுச்சா?"
        "இல்லையே."
         "அப்புறம் ஏன் கட்டு போட்டிருக்கீங்க?"
         "செத்துப்போனா அப்படித்தான்."
        "அப்ப குமாரு மாமா தலையில கட்டுப்போட்டுட்டு வந்தாங்களே அவங்க செத்துப்போகலை?"
        "அய்யோ, தரித்திரம் வாயை மூடு.. புரியாம ஏதாவது உளறாதே."
         "உனக்குத்தான் எதுவும் புரியலை...' என்று முணுமுணுத்தாள் அகிலா. 

       'மணி என்னம்மா ஆச்சி?'
        "இப்ப நீ எந்த ஆபீசுக்கு போகனும்னு மணி கேக்கறே?"
        "படுத்தாதேம்மா ... கடிகாரம் நின்னுபோயிடுச்சு ஏன்?"
       "நிக்கலை.. நாந்தான் நிறுத்தினேன்."
       "அதான் ஏன் நிறுத்தினே?"
       "அது அப்படித்தான். சும்மா ஏதாவது தொணதொணன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்ககூடாது."
        அப்போது உள்ளே வந்த பெரியப்பா,  "குளிகை சாயந்திரம்தானே வருது இப்ப மணி என்ன ஆவுது ?"
        "தாத்தா நீ ஆபிஸூக்கு போறியா?" 

       "பல்லுல போடுவேன்"  என்று அவள் முதுகில் சாத்தினாள்.
       அகிலா 'வீல்' என்று கத்ததுவங்கினாள்.
        "அடிக்காதே மல்லி சின்னப்புள்ளதானே அவளுக்கு என்ன தெரியும். அவளுக்கு கொஞ்சம் பால் குடு.. பசியிலதான் அடம் பண்றா"
என்று பெரியம்மா அவளை ஆதரவுடன் தன்னருகில் இழுத்துக்கொண்டாள்.
         "ரொம்ப வாய் பெரியம்மா.. எந்த நேரத்துல என்ன சொல்லி வைக்குமோன்னு பயமா இருக்கு."
        "நாம பேசரதான் அது கத்துகிட்டு பதிலுக்கு பேசுது அழாதே அகிலு."
         உள்ளே சென்ற மல்லி கொஞ்சம் பால் எடுத்துக்கொண்டு வந்தாள்.

         மணியாரு கொல்லையில
         மல்லியப்பூ பறிச்சு வந்தேன்
         அடி என் கண்ணே அந்த
         மல்லியப்பூ வாடலையே
        ஒன் உசிரு வாடிடுச்சே

         ராவுத்தரு தோப்புக்குள்ளே
        தேன்கதளி எடுத்து வந்தேன்
        தேன்கதளி அழுவலையே பாவி
        ஒன் தேகம் இப்ப அழுவிடுச்சே

  என்று மூக்கை சிந்தி ஒப்பாரி வைத்தாள் பட்டுக்கோட்டை மாமி.           

       அகிலா மெல்லிய குரலில் வெறொரு சுருதியில் தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
         ஆற்றிய பாலை டம்ளரில் ஊற்றி அகிலாவிடம் நீட்டினாள் மல்லி.

       அகிலா கோபத்தோடு அதை வாங்காமல் இன்னும் சற்று சத்தம் கூட்டி அழுதாள்.
         "தே... நிறுத்து ராகம் போடாதே."
         "நான் ஒண்ணும் ராகம் போடலை. அந்த பொகயிலை பாட்டிதான் ராகம் போடுது."
          கோபத்தின் உச்சிக்கேப் போன மல்லி அவளை அடிக்க கை ஓங்க, சிரிப்பை பெரும் சிரமத்துடன் அடக்கிய பெரியம்மா, அகிலாவை லாவகமாக அணைத்து அவளிடமிருந்து காப்பாற்றினாள்
           "பாத்தில்ல பெரியம்மா... நல்லவேளை அந்த மாமிக்கு கொஞ்சம் காது கேக்காது. இப்படித்தான் என் உயிரை எடுக்குது."
         "சரி, சரி அந்த பாலை என்கிட்ட கொடு. நான் கொடுக்கிறேன்" என்று அவளிடமிருந்து வாங்கி அகிலாவிடம் கொடுத்தாள் பெரியம்மா.
         கொஞ்சம் குடித்ததும், "இவளை மாடியில விட்டுடறேன். இங்க இருந்தா ஏதாவது வாயடிச்சுகிட்டே இருப்பா விடு பெரியம்மா" என்று அகிலாவைத் தூக்கிகொண்டு போய் மாடியில் விட்டுவிட்டு கீழே வந்தாள்.
           சோழவந்தான் அத்தை தனது பரிவாரங்களுடன் 'ஓ' வென ஓலமிட்டபடி உள்ளே நுழைந்தாள். ஆச்சிக்கு ரொம்ப நெருக்கம். ஒப்பாரி களைகட்டியது.
          ஈஸ்வரன் தனக்கு தெரிந்தவர்களை ஆச்சியின் சடலத்துக்கருகே அழைத்து வந்து நிறுத்திவிட்டு சோகமே உருவாக சிறிது நேரம் நிற்பதும், வெளியேறுவதுமாக இருந்தார்.
           திடீரென்று ஹை வால்யூமில் டீ.வியின் அலறல் கேட்டது.
          "அண்ணே, அண்ணே நம்ம பாண்டியனை போட்டுத்தள்ளிட்டானுங்க அண்ணே..."
         "யார்ரா... அவன் நம்ம ஆளுங்க மேலேயே கையை வச்சவன்?"
        "அந்த முத்துவேலோட ஆளுங்க அண்ணே."
        "நம்ம பசங்களை கூப்புட்ரா.. அவன் ஆளு ஒருத்தன் மிஞ்சக்கூடாது. அத்தினி பேரையும் போட்டுத்தள்ளுங்கடா... பாத்துடுவொம்."
        மல்லி வேகமாக மாடியேறினாள். அகிலாக்குட்டியோட வேலையாத்தான் இருக்கும். அதுதான் எதை சாப்பிட குடுத்தாலும் டீ.வியை போட்டுக்கும்.
        ரூமுக்குள் நுழைந்த உடனே தெரிந்துவிட்டது அகிலாதான். பாய்ந்து சென்று டீ.வியை நிறுத்தினாள் மல்லி.
        "சனியனே.. நேரம் காலம் இல்லை... எந்த நேரத்துல டீ.வி போடற நீ?" கோபமாக கத்தியபடி ப்ளக்கை பிடுங்கினாள்.
         அகிலா ரிமோட்டை எடுத்து அழுத்தி அழுத்திப் பார்த்துவிட்டு "டி.வியை போடு சனியனே" என்றபடி அழ ஆரம்பித்தாள்.
       "வாயில போடுவேன் எருமை..ஆச்சி செத்ததுக்கு அழுவலை.. டீ.வியை நிறுத்தினா அழுகை பொத்துகிட்டு வருதோ?" என்று அவள் முதுகில் போட்டாள்.
        மேலே வந்த ஈஸ்வரன், "அடடா என்ன சத்தம் மல்லி? வந்தவங்களை கவனி. இவளை என்கிட்ட விடு" என்றதும் மல்லி வேகவேகமாக கீழே இறங்கி வந்தாள்.
        ஈஸ்வரன் சமாளித்துவிடுவார். ஆனால் அந்த கோட்டான் அடங்காதே. என்று நினைத்தபடி நடந்தாள்.
         கீழே சடங்கு பொருட்களை வாங்கச் சென்ற மூர்த்தி வேர்க்க விறு விறுக்க நின்றிருந்தான்.
        "என்னடா மூர்த்தி?"
        'அக்கா, அத்தான் எங்கே?'
       "மாடியில...."
        கீழே ஈஸ்வரனும் இறங்கி வந்தார். "என்ன மூர்த்தி?"
       மூர்த்தி ஈஸ்வரனை தனியே அழைத்துச் சென்று, "அத்தான் கடைத்தெருவே களேபரமா இருக்கு. நம்ம பஞ்சாயத்து தலைவர் பன்னீரை யாரோ போட்டுத்தள்ளிட்டாங்க அத்தான்."
         "அய்யய்யோ... எப்படா?"
        "காலையிலதான். ஜீப்பில போயிட்டு இருந்திருக்காரு. எவனோ நாட்டு வெடிகுண்டை போட்டுட்டான். ஜீபிலேர்ந்து எகிறி விழுந்து ஸ்பாட்டிலேயே அவுட். ரெண்டு பேரு ரொம்ப சீரியஸா இருக்காங்களாம்."
        "போட்டவன் எவனாம்?"
        "எல்லாம் தேர்த‌ல் தகராறுதான் காரணம்னு பேசிக்கிறாங்க. போலிங் அன்னிக்கு பன்னீரோட ஆளுங்க ரெண்டு பேரை போட்டுட்டாங்கல்ல. அதான் பதிலுக்கு இவரை போட்டுட்டாங்க. கடையெல்லாம் அடைச்சி கெடக்கு. பன்னீரோட ஆளுங்க கத்தி, கபடாவோட வெறிபுடிச்சா மாதிரி சுத்திகிட்டு இருக்கானுங்களாம்."

        ”என்ன எழவுடா இது... இந்த நேரத்துல? நம்ம காரியத்துக்கு வர்றவங்க பத்திரமா  வந்து சேர்ந்து, அவங்களுக்கு வேண்டியதை பார்த்து நாம செய்ஞ்சு பத்திரமா அனுப்பியாகணுமே... எப்ப நாம பாடியை எடுக்கறது?” ஈஸ்வரனுக்கு தலை சுற்றியது.
       ”ஓரளவு கலவரம் நின்னாத்தான்...”
          ஆச்சியின் சாவு செய்தி சுவாரஸ்யம் குன்றி அதைவிட சுவாரஸ்யமான பன்னீரின் சாவுச் செய்தி பரபரப்பாக பரவியது அங்கே...
       வேறு எந்தெந்த ஊரிலோ யார் யாரையோ போட்டுத் தள்ளிய கதைகளும், அதில் கோரமாக உறுப்புகள் வெட்டப்பட்டு வீசப்பட்ட பராக்கிரமங்களும் கூடுதல் கற்பனை கலந்து பரிமாறப்பட்டன. ஆச்சி சாவு கல்யாண சாவு என்று சொன்னவர்கள் இப்போதோ... இருந்திருந்து கிழவி இப்பயா மண்டையப் போடணும்?' என்று கரித்தார்கள்.
        அகிலாக்குட்டி மாடியிலிருந்து கூட்டத்தில் அங்குமிங்குமாக நடந்து மலங்க மலங்க விழித்தாள். இதற்குள் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தான் கண்ட அந்த அற்புதக் காட்சியை விலாவாரியாக ஒரு திரைக்கதை போலச் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கொலேரென்று அவரைச் சூழ்ந்து கொண்டு குறுக்குக் கேள்விகளால் சம்பவத்தை இன்னும் சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தது. ஒருவர் பெண்கள் பகுதிக்கு நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தார். செய்தி கைகால் முளைத்து புதுப் புது வடிவங்களில் உருவெடுத்து அலைந்து கொண்டிருந்தது. குண்டு வீசியவன் அருகிலிருந்தால் அவன் கூட சுவாரஸ்யமாக நின்று கேட்குமளவு கதை படு பரவச நிலையை எட்டியிருந்தது.
         அகில் குட்டி நின்று நிதானமாக எல்லாக் கதைகளையும் உள்வாங்கிக் கொண்டு புதிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
 ஈஸ்வரனிடம் சென்ற அகிலா அவரது சட்டையைத் தன் சிறு விரலால் சீண்டி அழைத்தாள்...
         “அப்பா... அப்பா...”
         “என்ன?”
         “கிட்ட வா”
         அவளைத் தூக்கி நெஞ்சருகே அமர்த்திக் கொண்டார். சட்டென்று சப்தமாகக் கேட்டாள்...
         “நம்ம ஆச்சியை யாருப்பா போட்டுத் தள்ளினது?”
        ஒருநிமிடம் எல்லாப் பரபரப்பையும் தூக்கிச் சாப்பிட்டது அவளது கேள்வி.
         கூட்டம் எதுவும் பேசாமல் அந்தக் கணம் ஸ்தம்பித்தது.


        ம‌ர‌ண‌ம் என்ப‌து இய‌ற்கையாக‌ நிக‌ழ்வ‌து என்ப‌தை அந்த‌ ஆறு வ‌ய‌து குழ‌ந்தையிட‌ம் எப்ப‌டி விள‌க்குவ‌து என்று புரியாம‌ல் விழித்தான் ஈஸ்வ‌ர‌ன்.


நன்றி: செளந்தர சுகன் ,- ஏப்ரல் -2012

10 கருத்துகள்:

 1. நல்ல சிறுகதை .வாழ்த்துக்கள்.மரணங்களை சொல்லிசெல்கிற வாழ்க்கை இயற்கை எனபிஞ்சுகளிடம் புரிய வைக்க படாத பாடுபடுகிறது.இன்றைக்கு உருவாகி வைக்கப்பட்டிருக்கிற கருத்துருவாக்கம் அப்படி.அதைதானே மெகாதொடர்களும்,சில திரைப்படங்களும் விடாது செய்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி விமலன் சார் .மிக சரியாக கதையை உள்வாங்கி இருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
 3. சௌந்தர சுகனிலும் படித்தேன். ஆண்டு அனுபவித்த கல்யாண சாவு வீட்டில் , நானும் இருந்திருக்கிறேன் இருந்தேன் . குழந்தைகள் பயப்படுவார்கள் என்று நாமாக கற்பிதம் செய்துக் கொண்டு அவர்களிடம் சொல்ல முற்பட சட்டென்று அவர்கள் போட்டு உடைத்து விடுகிறார்கள் நம்மை , யதார்த்தமாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மணிச்சுடர். சமகால சமூக சூழல் கொலை, வன்முறை ஆகியவற்றை அப்படி ஒன்றும் தவறில்லை என்பது போல் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டது . வரும் தலை முறையினருக்கு மானுட நேயத்தையும், அறத்தையும் , நியாயதர்மங்களையும் எப்படி உணர்த்தப் போகிறோம் என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது அதன் வெளிப்பாடே இந்த கதை

   நீக்கு
 4. வலைச்சரத்தில் இன்று உங்கள் இந்தக் கதை அறிமுகம் ஆகியுள்ளது. இணைப்பு இதோ:
  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html
  எனது முதல் வருகை இது.
  ரொம்பவும் யதார்த்தமான கதையை படித்த நிறைவு.

  எனது மாமியார் மரணித்த போது எனது மைத்துனரின் 5 வயதுக் குழந்தை வெகு இயல்பாக அந்த மரணத்தை ஏற்றுக் கொண்டது பற்றி அதிசயப் பட்டிருக்கிறேன்.

  நாம் தான் குழந்தைகள் என்று தவறாக நினைத்து விடுகிறோம். அவர்களுக்கு வாழ்க்கை புரிந்திருக்கிறது.


  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றிங்கம்மா... உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.. கற்பனையை மீறிய அதிர்சிகளை கூ ட ஊடகங்கள் மிக எளிதாக குழ்ந்தைகளிடம் அறிமுகப்படுத்திவிடுகின்றன .எல்லா உணர்வுகளையும் சுலபமாக துடைத்தெறிந்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.மனிதம் மெல்ல மெல்ல அழிந்துவருகிறதோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த கதை ..

  பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...