ஞாயிறு, 4 ஜூலை, 2010

கடவுளின் வாழ்த்து

எல்லாக் கணங்களும் கடந்து போகின்றன
எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமலேயே...
எல்லா தினங்களும் முடிந்து போகின்றன
எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலேயே...

இருப்பினும் சில தினங்களை நினைவு கூர்கிறோம். சில தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ப்ரியங்களைப் பகிர்ந்து கொள்ள சில நாட்களைத் தேர்வு செய்கிறோம். நாட்கள் சரியாக அமைந்து விடுகின்றன.

ப்ரியங்களை மிகச் சரியாகப் பகிர்கிறோமா? யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு முறை புத்தாண்டு பிறக்கும் போதும் உற்சாகமாக வரவேற்கிறோம். வாழ்த்துகளும் விசாரிப்புகளும் பரிமாறப் படுகின்றன. சில உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு பின்பு, மறக்கப் படுகின்றன.

ஆனால், குறிப்பாக என்ன செய்தோம் என்று நினைவு படுத்த முடியவில்லை. ‘புத்தாண்டும் ஒரு தினமே' என்று நினைவுப் பெட்டகத்தில் இருக்க மறுத்து கரைந்து விடுகிறது.

மனித வாழ்வில் சராசரி வாழ்வு 60 வயது. ஏதுமறியா குழந்தைப் பருவம், ஏதும் முடியா முதுமைப்பருவம் நீக்கினால், உண்பதும் உறங்குவதுமாகக் கழியும் பெரும்பொழுதும் போக உருப்படியாய் கழிந்த பொழுதை மட்டும் கணக்கிட்டால் மாதக் கணக்கில் சுருங்கிடும் அற்பமே நம் வாழ்நாள்.
வேஷமின்றி துவேஷமின்றி பிறருக்காக வாழ்தல் என்பது மிக உன்னதமான நாட்கள். நம் ப்ரியமானவர்களுக்காக வாழும் வாய்ப்புக் கிடைத்தால் அவையும் அர்த்தமுள்ள நாட்களே.

எல்லா குடும்பத்திலும் எவரேனும் ஒருவர் ஜீலையில் பிறந்திருக்கிறார்கள்.
அப்படி ஜீலையில் பிறந்த அனைவருக்காக, அவர்களை வாழ்த்த நாங்கள் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தோம்.





‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது'  என்றாள் ஒளவை.

சகலமும் சரிவரப் பெற்று வாழும் நாம், அப்படியாக இல்லாமல் ஊனமுற்றவர்களாகப் பிறந்து வறுமையில் வாடும் சிலரோடு நம் உறவினர் பிறந்த தினங்களைக் கொண்டாடினோம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வாய் பேச இயலாத, காது கேளாத குழந்தைகள் கல்வி பயில அரசுக் காப்பகங்கள் மட்டும்தான் வழி. அங்கு தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவுக்காக அரசு ஒதுக்கும் தொகை மாதம் ரூ.225/- மட்டுமே. அந்த தொகைக்குள் அவர்களுக்கு தினசரி மூன்று வேளைகள் வீதம் மாதம் முழுதும் உணவிட வேண்டும். கஞ்சியோ கூழோ, கலந்த சாதமோ, விற்கும் விலையில் கட்டுப்படியாகும் காய்கறிகளோ இட்டு நிரப்பி அக்குழந்தைகளின் பசியாற்ற காப்பகப் பொறுப்பாளர்கள் படும் பாடு படாத பாடுதான். நன்கொடையாளர்கள் கிடைக்கும் நாட்களில் தான் அக்குழந்தைகளின் வயிறு நிறைந்து முகம் மலர்கின்றன.

இந்த ஜீலை மாதம் பிறந்தநாள் காணும் நம் பிரியமானவர்களுக்காக 25.06.2010. அன்று கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகள் 25 பேருக்கு மதிய உணவும், அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் கைவினைப் பொருள்கள் செய்யத் தேவையான பொருட்களும் அளித்து மனநிறைவோடும் நிம்மதியோடும் வீடு திரும்பினோம்.






கடந்த 7,8 வருடங்களாக இது போன்ற வெவ்வேறு காப்பகங்களில் எங்கள் திருமண, பிறந்தநாள், உறவினர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறோம்.



இதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் நீங்களும் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கான சிறந்த தினங்களை இப்படிக் கொண்டாடத் திட்டமிடலாமென்றுதான்.


சில கேள்விகள் எழுவது இயற்கை.

1.ஒரு வேளை உணவளிப்பதால் அவர்கள் துயரம் தீர்ந்துவிடுமா?

எல்லாக் கடலும் நீர்த்துளிகளின் சேர்க்கைதான். பிறருக்காக சிந்தும் கண்ணீர் ஒரு துளியென்றாலும் அது கனமானது, ஈரமானது, தேவையானது...



2.கையில் பணமிருந்தால் எல்லாரும்தான் செய்யலாம்...அந்த அளவுக்கு வருமானமில்லாதவர்கள்...?

உங்கள் கொண்டாட்டங்களுக்காக நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தொகையில் சிறிதளவு தரலாமே... இல்லாவிடில், உங்கள் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு ஏதேனும் கற்பித்தல், வழிகாட்டல், மகிழ்வித்தல் என இயன்றதை செய்யலாம். தேவை, எளியோர்க்கு இரங்கும் கருணை மனம்.



3.அரசுதானே இதைச் செய்யவேண்டும்... நாமெதற்கு?

யார் செய்ய வேண்டுமென்ற தர்க்கம் வயிற்றுக்குத் தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது பசி. தீர்க்க முயல்பவன் தர்க்கம் செய்வதில்லை.



4. மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மீன் தருவதை விடச் சிறந்தது..

மீன் பிடிக்கக் கற்றுத் தருவது மாபெரும் கொடை. முடிந்தால் அதைச் செய்யலாம். அது வரை மீன் கொடுங்கள்

.
5.ஒரு நாள் தந்து விட்டால் மீதி நாள் அதற்கு மனம் ஏங்குமே...



எல்லா தினங்களிலும் யாராவது பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்குக் கூட உங்கள் பிரியமானவர்களின் பிறந்தநாளாக இருக்கலாம். நீங்கள் தரலாம். அல்லது அவரைத் தரும் படித் தூண்டலாம். அப்படியான முயற்சியிது.



எங்களுக்குப் பிரியமான உங்களுக்காகவும், நாங்கள் இதைச் செய்தோம். கட்டாயம் ஏதுமில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் உங்கள் அருகில் நீங்கள் தருவதைப் பெற எவரேனும் இருக்கலாம்.
பிறப்புக்கும் இறப்புக்குமிடையே என்ன சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதேனும் ஒரு முறை தாக்கியிருக்கலாம்.

‘என் வாழ்வின் அத்தியாயத்தில் அர்த்தமுள்ள பக்கங்களும் இருந்தன' என்று அடையாளப் படுத்த உங்களுக்கான தினங்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

இதோ மெளனமாகப் பிரார்த்திக்கும் இவர்களிடம் பேசிக்கொள்ள மொழியில்லை. ஆனால் அர்த்தம் பொதிந்த வரிகள் நிரம்பியிருக்கின்றன.



கடவுளின் அருளுக்காக எல்லா வழிகளிலும் பிரார்த்திக்கிறோம். கடவுளை வாழ்த்தியபடி...

கடவுளின் வாழ்த்து சுலபமாகக் கிடைக்கிறது... நமக்காகப் பிரார்த்திக்கும் மனங்களில்...

எல்லோர்க்கும் எங்கள் பிரார்த்தனைகள்...

எல்லோர்க்கும் எங்கள் வாழ்த்துகள்...!



மிக்க அன்புடன்,






(நெய்வேலி பாரதிக்குமார்)

2 கருத்துகள்:

  1. உங்களின் இந்த முயற்சிக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள் .!! பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க என் மனதின் சந்தோஷங்கள் ஒரு பக்கம். ஏன் என்றால் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரிடமும் பிறர்க்கு உதவும் குணம் இருக்கின்றது. அதனுடைய விகிதம் மாறுபடலாமே தவிர , ஒருவரிடம் சுத்தமாக இல்லை என்று கூறி விட முடியாது.. எத்தனையோ நபர்களிடம் அந்த எண்ணங்கள் இருந்தாலும் அதை செய்வதற்கான கணங்கள் அவர்களுக்கு நேர்வதில்லை.. சிலர் அதனை முழு நேரமாக எடுத்து செய்கிறார்கள், சிலர் தேடிச்சென்று செய்கிறார்கள், சிலர் சுற்றத்தில் இருப்பவர்களுக்கு செய்கிறார்கள்,இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. உதவி யார் வேண்டுமானாலும் செய்யலாம் , ஆனால் தேவை படுகிற நேரத்தில் செய்வதே மிக உயர்வானது, உன்னதமானதும் கூட. அந்த வருசையில் உங்களின் இந்த பணி மிகவும் சிறப்புற்றது.

    உங்களின் இந்த முகப்பை படிக்கும் நிமிடங்கள் கண்டிப்பாக அனைவர் மனதிலும் உள்ள உதவும் எண்ணம் கொஞ்சம் மலரத்தான் செய்யும் . பூக்கள் மட்டும் தான் மலர்ந்த பின்பு மொட்டு நிலைக்கு மாறாதவை. ஆனால் மனிதன் மனம் அப்படி இல்லை, மலர்வதுக்கு எடுத்த நாழிகளை விட மிக குறைவான நிமிடங்களிலே பழைய நிலைக்கு மாறிவிடும். அவனை குறை கூறவும் முடியாது, அவனின் சூழ் நிலை, குடும்ப நிலை, பணியின் பளு, அப்படியே சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்தும் காரணியாக அமைகிறது.

    இவற்றிற்கு என்ன தான் வழி?? கண்டிப்பாக யாராவது ஒருத்தர் முன்னோடியாக இருக்க வேண்டும் & முன்னடத்த வேண்டும். எனக்கு பிடித்த வரி - "தலைவர்கள் எப்பொழுதும் உயரத்தில் இருப்பதில்லை, பல சமயம் கீழிருந்து மேலே தள்ளப்படுகிறார்கள் அல்லது உயர்த்தப்படுகிறார்கள்". நிஜம் தானே.!! தொடங்கல் தான் ஒரு விஷயத்திற்கு அரிதான ஒன்று. நினைப்பவர்கள் அனைவரும் தொடங்குவதில்லை.. அந்த தொடக்கத்தை ஆரம்பித்த உங்கள் பணி எதற்காகவும் எப்பொழுதும் நிற்காமல் மேலும் மேலும் வளர இந்த நிமிடம் வரை வாழ அருள் புரிந்த என் ஐயனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதைவிட என்ன கடவுள் வாழ்த்து இருந்துவிடப் போகிறது. உங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...