சனி, 24 டிசம்பர், 2011

சுடுநிழல்

     புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துணை அழகாய் இருப்பதில்லை. எல்லாப் புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது.
       அறிமுகமில்லாதவர்களின் வீடுகள் கூட எனக்குப் பெரும்பாலும் அந்நியமாய் இருப்பதில்லை. அந்த வீடுகளின் சுவர்களைப் புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை.
      ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும்கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள்.
      அப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்குப் போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லாப் பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும் போதும், வீட்டைக் காலி செய்ய முற்படும்போதும் தான் நீங்கள் உங்கள் வீட்டின் எல்லாப் பகுதிகளையும் முழுமையாகச் சுற்றி வருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் பொருட்களும் தென்படும்.
      “பாட்டி, இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு?”
      “இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த போட்டோவெல்லாம் அதுல இருக்கு. ஆமா, அது எப்படி உன் கையில் கிடைச்சுது?”
      “கூடக் கொஞ்சம் பழைய போட்டோல்லாம் இருக்கு போல”.
      “ஆமா... எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டு வெச்சது. உங்கப்பன் உன் வயசுல மண்ணம்பந்தல் காலேஜில படிக்கறச்ச புடிச்ச போட்டோ கூட அதுல தான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.”
      கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன்.
     “இதென்ன பாட்டி எனக்கு காது குத்தின போது எடுத்தது போலிருக்கு”!
     “கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினோம். அப்பல்லாம் கறுப்பு வெள்ளைதான். அடையாளம் தெரியுதா அதிலே இருக்கறவங்களை உனக்கு?”
      “காது குத்தினப்போ எடுத்ததா? அப்போ உன்னோட அழுமூஞ்சியைப் பார்க்கணுமே...” என்றபடி பிரவீணா என்னருகில் அமர்ந்தாள்.
      “ஏன் பாட்டி, யார் மடியில உட்கார்ந்து எங்க அண்ணன் காது குத்திக்குது?”  என்று கேட்க, பொருள்களை எடுக்க வந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர்.
      பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின், “செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை... சரோஜான்னு பேரு. அவ வீட்டுக்காரருதான் உங்களுக்கெல்லாம் மாமா முறை.”
      “ஏன்...? அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு?”
       பாட்டி ‘சொல்வதா, வேண்டாமா' என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள்.           
     “அவங்களுக்கும் அரசல்புரசலாத் தெரியும்... சொல்லு, பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில்.
       “அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாத லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்தக் கோவத்தில் அவங்க வர்றதில்லை அப்ப. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்து போயிட்டிருக்காங்க!”
        “ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூடப் பாட்டி ரொம்பக் க்ளோசா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாகச் சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள்.
      “அடச்சீ, கழுத... அது தாத்தாதான்... அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி நெத்தியில வந்து விழும்!” சொல்லும்போதே பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பு முகத்தில் வழிந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள்.
     “ஓஹோ... அதுதான் சங்கதியா...?! ஆமா தாத்தா, அது என்ன...? முன்னாடி ரயில் இன்ஜின் லைட் மாதிரி சுருட்டி நெத்தி மேல ரவுண்டு கட்டியிருக்கே... அதுக்கே தெனம் ஒருமணி நேரம் ஆகும் போலிருக்கு!”
      “வாயாடிக் கழுத. அஞ்சு வயசு வரைக்கும் உனக்குப் பேச்சே வரலைன்னு பதறிப் போயி, கழுதைப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்ட பாடு... இப்ப என்னடான்னா இந்த பேச்சு பேசறே!”
      “நெனைச்சேன்... இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பீங்கன்னு!”
      “ஏய், கொஞ்சம் கேப் கிடைச்சா சந்துல சைக்கிள் விடறே நீ? இரு... இரு.. உன்னோட காதுகுத்தி போட்டோவெல்லாம் இன்னும் பாக்கியிருக்கு. அம்மா, அங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? இங்க வா சீக்கிரம்!”
      அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன்.
       “இது யாரு பாட்டி இந்தப் பொண்ணு?”
 எட்டிப்பார்த்த பாட்டி, தாத்தா, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர். எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தல் முடியும்!
       “அது வேடிக்கையான கதைப்பா. உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போவலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டிருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னி விட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு... இப்பக் கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுசியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக் குடுன்னு ஒரே அடம். அப்பத்தான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரிக் கட்டிவிட்டு, பூபொட்டெல்லாம் வெச்சு ஒரு ஞாபகத்துக்கு எடுத்தது.”
       அம்மாவும் கையைத் துடைத்துக் கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும்.
       “அடடா... யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்தப் பொண்ணு?”
      “அது மல்லிகா. அதான்... செம்பரும்புல ஒரு மாமா இருக்காருண்ணு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி. அவரு பொண்ணு. உங்கப்பா அவளைக் கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தைகூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்குக் கட்டிக் குடுத்ததாக் கேள்வி”.
       “அடடா... மிஸ் பண்ணிட்டியேப்பா... எவ்வளவு அழகா இருக்காங்க! போயும் போயும் இதப் புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக் காட்டி.
       “ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப் படுத்தற? இப்ப வருத்தப்பட்டு ஆகப்போறதென்ன?” போலியாய் முகத்தில் சோகத்தைத் தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் மொத்தினாள்.
       “பாட்டி, இது யாரு? மணாளனே மங்கையின் பாக்கியம்ன்னு பொதிகைல ஒரு படம் போட்டானே... அதுல நடிச்ச ஹீரோயினா?”
        “போடி வாயரட்டை. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன். தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தைச்சிட்டு, அதை முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிருக்காங்க...!”
        “சண்டைக்கு போற சண்டியர் மாதிரி! ஏன் தாத்தா... அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல... வளர்த்ததா?”
       தாத்தா பிரவீணாவின் காதைப் பிடித்து மெல்லத் திருக, “சரி, சரி... ஒத்துக்கறேன். வளர்த்ததுதான்” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக் காட்டி, “அய்யய்ய... கசம். இது யாருபாட்டி?”
       “உங்கப்பா தான். எட்டு மாசத்துல எடுத்தது.”
       “ஒரு ஜட்டி போடக் கூடாது? ஷேம் ஷேம் பப்பி ஷேம்.”
       வீடே குலுங்கி ஒருமுறை சிரித்தது.
       அப்பாவின் ஸ்கூல் போட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரஸ்யமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனைக் காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவைக் கலாய்த்தோம்.
       வீரபாண்டிய கட்டபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி, “ஏம்பா, நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களூக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா...?! மானம்கெட்டவனே அப்படீன்னு வசனம் பேசியிருப்பியே... அத ஒருதரம் பேசிக் காட்டு” என்று இன்னும் சத்தாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது.
       எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழ முடியாத நிமிடங்களை, கேமரா ஒரு ‘க்ளிக்'கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்குத் தொலைத்து விட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை.
       “இது யாரு ஒரு பொண்ணு... சின்னப் பையன் கூட... பையனைப்பார்த்தா அப்பா முகம் மாதிரி தானிருக்கு!”
       சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்          
      “யாருப்பா அது?” என்றேன் மறுபடி
       “அந்தப் பையன் நாந்தான். அந்தப் பொண்ணு...” சற்றே தடுமாறி, “அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலைகுனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும் தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தனர். மனிதர்கள் பொய் பேசும் போது எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்!
       என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்குத் தோன்றியது. பாட்டி இதைக் கிளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத் தெரியும். பாட்டிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரைதான் என்றும் தெரியும்.
       மெல்ல அடுப்பங்கரைக்குச் சென்றேன்.
      “பாட்டி, என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட?”
      “ஒண்ணுமில்ல...” என்று என் பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல் குச்சிகளைச் செருகியபடி இருந்தாள் பாட்டி.
       “இங்க பாரு பாட்டி... கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கக் கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ? நான் கேட்டா எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்டியே? அடுப்பைச் சீண்டினது போதும். அது எரிஞ்சுகிட்டுத் தானிருக்கு.”
       சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச் சுண்டி அடுப்பு நெருப்பில் எரிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்துக் கொண்டாள். கரடுதட்டின கைகளூக்குத் தான் எத்தனை சக்து! எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது.
        சுற்றும் முற்றும் பார்த்தபடி, சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள். “அவ உனக்கு அத்தை முறை வேணும். உங்கப்பாவை விட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமாயிருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வெச்சோம். என்னமோ அவ தலைவிதி...” புடவைத் தலைப்பை எடுத்துக் கண்களைத் துடைத்தாள் பாட்டி.
       “இப்ப எங்க இருக்காங்க?”
 யாருக்குத் தெரியும்... கடவுளுக்கே வெளிச்சம் என்பது போல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள்.
        “அவ அழகுதான் அவளுக்கு வெனையாப் போயிடுச்சு. பொம்பளைப் புள்ள அழகாப் பொறந்துடக் கூடாதுய்யா. அது பெத்தவங்களுக்கும் கஷ்டம், அதுக்கும் கஷ்டம்.”
        மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத் தூணில் தடவினாள். சுருங்கிச் சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டோடியது.
       “அப்ப இங்கதான் கும்மோணம் கோர்ட்ல கிளார்க்கா வேலை பார்த்தான் சவுந்திரபாண்டியன்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்கமாட்டான். அவ படிக்கப் போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ... அவன் கிட்ட அப்பிடி என்னத்தக் கண்டாளோ... அவனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலுல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம, குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமாச் சொல்லிட்டாரு. அப்பறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன் கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ளக் காலெடுத்து வெச்சா வெட்டிபுடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தா கூடப் பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளேயே விடலை.”
       அடைத்துக்கொண்ட தொண்டையை ஒரு முறை செருமிச் சரிசெய்த பாட்டி, “என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ண்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க  முடியல. அதான் அவ பண்ணின ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளைப் புள்ளை கூடப் பொறந்துச்சு. அப்பவும் தாத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் அவளைப் பத்தித் தகவலே இல்லை. ஒரு தரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப் போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி. வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே...” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “கோர்ட்லதான் வேலை பார்க்கறதாச் சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே... ஒண்ணும்  கம்பசித்திரமில்லையே...”
       “யாரு மெனக்கிடறது? இத்தினி ஆம்பிளைங்க இப்பிடிக் கல்லு மனசோட இருக்கறச்ச, ஒத்தப் பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு?”
 “அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார் தாத்தா?”
 “அதான்...” குரலை சற்று  வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். ‘பட் பட்'டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது.
      “அதான்யா... அதான்! ஆம்பிளைக்கு ஒரு நியாயம்; பொம்பிளைக்கு ஒரு நியாயம்! உங்கப்பன் வெவகாரம் காதுல விழுந்தப்ப என்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பன் புத்தி பேதலிச்சுப் போச்சோன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத் தேடிகிட்டு ஓடுனாரு உங்க தாத்தா. அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம்... அவன் இஷ்டத்துக்கே அனுசரிச்சுப் போகலைன்னா கொள்ளி போட உங்களுக்குப் புள்ளை இருக்கமாட்டான்னு... சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி...?! இதோ எரியலை அடுப்பு?!” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக, முன்னைவிடத் தகதகவென எரிந்தது.
       “அதுக்காக உங்கப்பனைக் குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா? அப்பிடி என்ன கொலைபாதகம் அது?”
       “கவலைப்படாதே பாட்டி. இப்பத்தானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் அத்தையை தேடிக் கண்டு பிடிச்சிடுவோம்.”
       “பிரயோசனம்?” உதட்டைப் பிதுக்கினாள். “என்ன பிரயோசனம் சொல்லு? கரிக்கட்டையை மறுபடி விறகாக்க முடியுமா? பதினைஞ்சு இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கயிருந்து போயி. என்ன இருந்தாலும், அவ மகதான் எனக்கு முதல் பேத்தி. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத் தண்ணி, ஏன்... ஒருவேளை கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்.
       அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லாம் எம்மவ துடிச்சியிருப்பா? போன வாழ்க்கையும் காலமும் திரும்ப வருமா?
 கேட்டா, அவ தலைவிதிம்பாங்க. அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா... பொம்பிளை ஜன்மம் மொத்தத்துக்கும் விதிக்கப்பட்டதுய்யா.
       உங்கம்மாவுக்கு மட்டுமென்ன...  சின்ன வயசிலேயே உங்கம்மாவைப் பெத்த பாட்டி செத்துப் போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவேயில்ல. அவரு சாவுக்குப் போயி தான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்.
       அதனாலதான் உங்கம்மாவை ஒரு சுடுசொல்லு சொன்னதில்லை நானு. அவளும் எம்மவ மாதிரிதானே. இன்னொரு தரமா அவ என் வயத்துல பொறந்துடப் போறா? நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சுத் தீர்க்கணும்” கண்ணீர் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்து கொண்டு ஓடியது.
       அதுவரை கையில் தொடும் போதும், கண்ணில் படும் போதும் ‘தண்'ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதன்முறையாக சுட்டது.
       அடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா, “என்ன வடிவு... என்ன அடுப்பில் ஒரேயடியா பொகையுது?” என்றார் எரிச்சலோடு.
        “ஒண்ணுமில்ல... ஈரம்... அதான் பொகையுது” கண்களைத் துடைத்துக் கொண்டாள் பாட்டி.
       எனக்குப் புரிந்தது... இந்தப் புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று!
 

புதன், 23 நவம்பர், 2011

ஒளிப்பதிவிற்கு ஓர் உரைப்பதிவு

  
                       
    “அசையும் படம்”


ஆசிரியர்  : ஒளிப்பதிவாளர். சி.ஜெ. ராஜ்குமார்
வெளியீடு   : சினிமா கலை ரசனை இயக்கம் (faam)
பதிப்பகம்   : கீற்றுப் பதிப்பகம்,
     கிரீடு வளாகம்,
     23, அரங்கநாத நகர்,
     சிதம்பரம்-608 001.
விலை        :ரூ.150/-


     அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை புரட்சியிலோ, புத்தகங்களிலோ, சமகால சமூக வெளியீடுகளிலோ தேடாமல்  திரையரங்கங்களில் தேடுபவர்கள் நம் தமிழர்கள். அரசியலில் மாற்றம் என்பது சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மூலம் அல்ல என்ற உணர்வு  இல்லாமல் போனதற்குக் காரணம் நமக்கு அரசியல் குறித்தும் தெளிவு இல்லை; திரைப்படம் குறித்தும் தெளிவு இல்லை என்பதே...
      
     திரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் அதீத ஆற்றல், பிரம்மாண்டம் எல்லாம் அந்தப் பாத்திரங்களாக நடிப்பவர்களின் வெளிப்பாடு அல்ல... அதற்குப் பின்னே பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.
      
      ஒளிப்பதிவுக் கலையென்பது ஒரு திரைப்படத்தின் பிரதானமான தொழில்நுட்பக் கலை. ஒரு படைப்பாளியின் கற்பனையையும், ஒரு பார்வையாளரின் சிந்தனை ஓட்டத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கின்ற முக்கியமான பொறுப்பு ஒரு ஒளிப்பதிவாளருக்கு உண்டு.
      
      உண்மையில் நாமெல்லாருமே ஒரு வகையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். நாம் சம்பந்தப்படாத ஒரு நிகழ்வை அல்லது ஒரு கதையை இன்னொருவர் நம்மிடம் விவரிக்கும்போது நம் மனசுக்குள் அந்தச் சம்பவத்தை, இடத்தை, காலத்தை கற்பனையில் காட்சியாகத் தீட்டியபடியே இருப்பது இயல்பே. ஆனால் அதற்குத் திரைவடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல...
      
      தொழில்நுட்பத் திறனும் படைப்பாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் தான் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும். பார்வையாளராக இருக்கிற ஒருவன், திரைத்துறையில் ஆர்வம் காரணமாகப் பணியாற்ற முயற்சித்தால், பல்வேறு அலைகழிப்புகள், கரிப்புகளோடு அவனை நாலாபக்கமும் இழுத்துச் செல்லும் விசித்திரக் கடல் சினிமா. நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரமும் 
     
      அதன் ஆழத்தையும், அகலத்தையும், தன்னளவில் விளக்கவும், அளக்கவும் முனைந்திடும் புத்தகம் ‘அசையும் படம்' அனேகமாக, தமிழில் ஒளிப்பதிவு குறித்து இத்தனை விளக்கங்களுடனும் விரிவாகவும் வந்திருக்கும் முதல் புத்தகம் இது எனலாம்.
      
      ‘மண்', ‘கனவு மெய்ப்பட வேண்டும்' படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு. சி.ஜெ. ராஜ்குமார் எழுதிய இந்தப் புத்தகம், கமலஹாசன், பாலுமகேந்திரா, நாசர், ஜனநாதன் போன்ற தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாலேயே பாராட்டப் பட்டது. ஒரு புகைப்படக் கருவி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா வரை அதன் வரலாற்றையும் படிப்படியான முன்னேற்றங்களையும் விரிவாக அலசியிருக்கிறது இந்தப் புத்தகம்.  எளிதான, நேரடியான, எந்த இருண்மைத்தன்மையும் அற்ற சி.ஜெ. ராஜ்குமாரின் மொழிநடை, வெறுமே எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மனிதரும் புத்தகத்துள் எளிதாக நுழைந்து உள்வாங்க முடியும்.
      
      திரைத் துறையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொள்வது என்பது குருகுல வாசம் போல. பெரும்பான்மையான வித்தகர்கள் தங்கள் வித்தைகள் அனைத்தையும் அத்தனை எளிதாகக் கற்றுத் தருவதில்லை. காயமின்றிக் கசிவின்றி ஒரு கலையை இன்னொருவருக்கு மடை மாற்றுவதென்பது ஜீரணிக்கவே முடியாதவர்கள் நிரம்பியிருக்கும் திரைத் துறையில், தன் சிராய்ப்புகள், முறிவுகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் விலையாகத் தந்து பெற்ற அனுபவங்களை, அதன் வலிகள் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் வரும் தலைமுறைக்குத் தந்திருக்கிறார் சி. ஜெ. ராஜ்குமார்.
      
       நூலின் உள்ளடக்கத்தை மறைமுகமாக  இரு பெரும் பகுதியாக பிரித்திருக்கிறார் ஆசிரியர். முதலில் ஒரு ஒளிப்பதிவு கருவியின் தொழில்நுட்ப கூறுகள், அதன் பயன்பாடுகள் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் அதே சமயம் எளிமையாகவும் குற்¢ப்பிடும் அவர், அதோடு விலகிச் சென்றுவிடாமல் திரைத்துறையின் இன்ன பிற பிரிவுகளான படத்தொகுப்பு, மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். எனவே ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல்,  இயக்குனராகப் போகிறவரும் தனக்கான கையேடாக இந்நூலை வைத்துக்கொள்ளலாம். கூடவே ஒரு ஒளிப்பதிவு கருவி தோன்றிய வரலாறு, உலகத் திரைப்படங்களின் அட்டவணை, இது வரை வெள்ளித் தாமரை விருது பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அந்த படங்கள் என பல தகவல்கள் அடங்கிய  சிறு கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது புத்தகம்.
      
       நூலில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்,குறிப்பாக பல இடங்களில் தகவல்களுக்கு துணை நிற்கும் வரைபடங்கள்,புத்தக வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்திருக்கும் கோவை அரவிந்தனின் பணியும் அற்புதமானது.
      
      புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்களுக்கான கலைச் சொற்களை எடுத்தாள்வதற்கும்,  மற்றும் மெய்ப்பு பணிகளில் அக்கறையோடும் பங்காற்றியிருக்கும் திருமதி. இராஜேஸ்வரியின் பங்கு புத்தகத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.
     
        பதிப்புலகில் அதிகம் அறியப்படாத, அதே நேரம் அதிக உழைப்பைத் தந்து புத்தகத்தை உருவாக்கியிருக்கும் சிதம்பரம் கீற்றுப் பதிப்பகத்தார் (திருநாவுக்கரசு), நூலிற்கு மிகக் குறைந்த விலையையே நிர்ணயித்துள்ளது பின்பற்றப் பட வேண்டியதொரு நல்ல விஷயம்.
      
       எடிசன் ஒரு முறை இரயிலில் பயணித்தபோது, பக்கக் காட்சிகளாக ஓடிய மரங்களையும், மனிதர்களையும் பார்த்து ‘அசையும் சித்திரங்கள்' என்று முணுமுணுத்தாராம். பின்னாளில் சினிமா கேமராவின் முன்னோடியாகக் கருதப்படும் அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘கைனடோ ஸ்கோப்' என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில்(கைனடோ-அசையும்; ஸ்கோப் -படம்) அசையும் படம் என்றுதான் பொருள். அன்று எடிசன் மெல்ல உச்சரித்த சொல், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி ஒன்று உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.  

       இன்று  திரைத்துறையில் நுழைய விரும்புகிற, ஒளிப்பதிவாளராகும் வேட்கையுடனிருப்பவர்கள் உரக்க உச்சரிக்கப் போகும் சொல் ‘அசையும் படம்' எனும் இப்புத்தகத்தின் பெயராக இருக்கும் எனலாம்.
      

புதன், 19 அக்டோபர், 2011

அன்பின் அடையாளம்

எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பவன்தான் நான். இருப்பினும் இனிய உறவுகளும், நெருங்கிய நட்பு வட்டமும் நினைவாக வருடம் தோறும் வாழ்த்துவதும், உற்சாகமூட்டும் பரிசுகளை அளித்து கவுரவிப்பதும் குதுகலம் தருவதாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

இவர்களின் அன்பு நெகிழச் செய்கிறது என்னை. இவற்றுக்கு பிரதியாய் மனப்பூர்வ அன்பை  அன்றி வேறென்ன தந்து ஈடு செய்துவிட முடியும் என்னால்...?!

நேற்று உஷாவின் அன்பை சுமந்து வந்த கூரியர் ஊழியர் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டது எங்களிடம் ஒப்படைத்த பிறகுதான். அந்த திளைப்பில் திக்குமுக்காடியிருக்கும் போதே இன்று கிருஷ்ணப்ரியாவிடமிருந்து மின்னஞ்சல்! இம்மின்னஞ்சலைப் பதிவிடுவது கூட தம்பட்டமாகும் என்றேன். நிலாமகள் சில சமயங்களில் மருந்து ஏதுமற்ற பிடிவாதம் நிரம்பியவர்.

நன்றி உஷா!






நன்றி பிரியா!


அன்பின் பாரதி.,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.........
உங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு அனுப்பிய உங்கள் சிறுகதை தொகுப்பின் விமர்சனம் அனுப்பியிருக்கிறேன்......



      உலகில் ஒவ்வொருவர் வாழ்வும் கதைகளால் நிரம்பியிருக்கிறது.. சிலர் மட்டுமே அந்த கதைகளை வாசிக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே பிறர் வாசிக்கவும் தருகிறார்கள். அப்படி வாசிக்கத் தருவதிலும், சுவையாய், அந்த கதைகளுக்குள் சென்று நாமே வாழ்கிற அனுபவத்தைத் தர மிகச் சிலரால் மட்டுமே முடிகிறது... அப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது நெய்வேலி பாரதிக்குமாரின்முற்றுப் பெறாத மனுசிறுகதைத் தொகுப்பு...

      கதைகள் என்பது படித்து முடித்தப் பிறகும் மனதுக்குள் ரீங்கரித்து உள்ளச் சுவர்களை குடையும் வண்டைப் போல, உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் நல்லப் பாட்டைப் போல, வேதனை தீர்க்கும் மருந்தைப் போல, உற்சாகத்தை அள்ளித் தரும் நண்பனைப் போல இன்னும் பலப் பலவாய் தோற்றம் தரக்கூடியவை.... இது அத்தனையையும் செய்கிறது இவரது கதைகள். மிக இயல்பான நடை, கவித்துவம் மிளிரும் வரிகள், நமக்குமே நடந்தது போன்ற கதைக்கரு..... இந்த முற்றுப்பெறாத மனு முற்றாய் கனிந்த பழக்குவியல் என்றால் அது மிகையில்லை.....

       "தெருக்கள் இல்லாத ஊர்..". இந்தக்கதையைப் படிக்கும்போது நமது பால்யமும் பிறந்த ஊரும் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை....தொகுப்பின் ஆரம்பமே மிக அழகான கடிதம் கதையாய் விரிகிறது... கடிதம் எழுதுவதே காலாவதியாகிப் போன காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை படிப்பவர்கள் கூட பாக்கியசாலிகள் தான் என்று தோன்றுகிறது....கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகள் எல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரியாமல் போய் பல காலமாகிவிட்டதே.... அந்த கடிதம் படிக்கும் போது எனக்குத் தோன்றியது....காட்டாமணக்குச் செடிகள் இப்பொழுது இருக்கிறதா என்ன?அழிந்து போனவை வெறும் விளையாட்டுக்களும், செடிகொடிகளும்மட்டும் தானா? “கேபிள் டிவி ஒயர்களும், தொலைபேசி ஒயர்களும் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து எல்லா மென்மையான உணர்வுகளையும் வெளியேற்றிவிட்டது.....” என்று அழகாக கவித்துவமாக சொல்கிறார் பாரதிக்குமார்...

      "பக்கத்து இருக்கையில் மரணித்தவன். .. " படிக்கும் போதே மனதை அதிர வைக்கிறது.... ஒரு மரணம் எதிர்பாராமல் நிகழ்கையில் , நாம் அந்த மரணத்தோடு எதிர்பாராமல் சம்பந்தப்படுகையில் என்ன விதமான அதிர்வுகள நேருமோ அது அத்தனையும் நமக்குள் ஏற்படுகிறது... அடுத்தவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தும் மனிதர்கள், அவர்கள் அனாயசமாக உதிர்க்கும் ஆபாச வார்த்தைகள், அதிலும் நுணுக்கமாக பெண்களை இழிவுபடுத்தும் விதம், மரணத்துக்குப் பின்னும் கூட அவன்நம் ஆளாஎன்று பார்க்க நினைக்கும் கயமைத் தனம் என்று அதிர்வுகளைத் தந்து கொண்டே போகும் கதை, இறந்தவன் ஒரு அரவான் என்பதை அறிவிக்கும் இடத்தில் நெஞ்சைப் பிளந்து விடுகிறது.... அவர்களும் நம்முடன் வாழும், நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் என்றுணராத மாக்கள்.....
      ஆசிரியர் இறுதியில் கேட்கும் கேள்விக்கு என்ன தான் பதில்?

      "வீடு சின்னது " சிறுகதை கதையல்ல... அழகான கவிதை..... செடிகளுக்கும், மரங்களுக்கும் கூட நம் வீட்டில் இடம் கொடுக்க வேண்டுமென்ற குழந்தைகளைத் தவிர வேறு யாரால் யோசிக்க முடியும்...!

     "கதை சொல்லு " ரொம்ப உன்னதமான உளவியல் சார்ந்த கதை.... எல்லாம் தெரிந்தவர் என்று நினைத்துக்கொண்டிருப்பவரால் சின்னக் குழந்தைகளிடம் வெற்றிபெற முடியாமல் போகிறது... ஒன்றும் தெரியாதவள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் அவர் மனைவி மிக இயல்பாக அவர்களது மனதை வென்றெடுக்கிறாள். அவரது அகங்காரத்தைபோங்க மாமா உங்களுக்கு கதை சொல்லவே தெரியலஅடித்துவிடுகிறது குழந்தை..... நாமெல்லாம் கூட சில சமயங்களில் இந்த குழந்தைகள் என்னும் தெய்வங்களிடம் இப்படி அடி வாங்கித் தான் திருந்த வேண்டியிருக்கிறது என்ற சூட்சுமமான கருத்து உள்ளோடும் கதை....

     "சுவாசிக்க கொஞ்சம் புகை....." கண்ணீர் வராமல் படிக்க முடியாது.....இப்படி எத்தனை தொழில்கள் நசிக்கும் போது எத்தனை உயிர்கள் வெந்து போயிருக்கும் என்ற வேதனை எழாமல் இந்த சிறுகதையை தாண்ட முடியாது யாராலும்.. அதுதான் ஆசிரியரின் வெற்றி. இழந்த பிறகு தான் எந்த பொருளுக்கும் மதிப்பு கூடிப்போகும். ஆனால் அப்பா பிள்ளை பாசம், அந்த பிள்ளையின்ஏழைத் தந்தையை சேதப்படுத்தாத கனவுகள்”, வைக்கும் விதமான அந்த உறவின் நெகிழ்ச்சி என்று மனதை உருக்கும் கதையாக்கம்....
      "ஆறு மனமே ஆறு" நல்ல கற்பனை..... இயல்பான மனிதர்களின் புலம்பல்களை ஆற்றின், காற்றின் மேலேற்றி அழகான ஒரு கதையை வடித்தெடுத்திருக்கிறார்.. . "திட்டும் போது புலம்புவதும், புகழும் போது புளகாங்கிதப் பட்டுப் போவதுமான மனித மனம், தன் விருப்பம் போல இயற்கையைப் பேச..." என்ற சின்ன வரிகளால், இருக்கும் போதே அதன் மதிப்பை உணர வைக்கிறது.... “உன்னுது என்னுதுன்னு ஒரு பய சொல்ல முடியாதுல்லஎன்று கடலை எண்ணி ஆறு சொல்கிறதே... இன்று கடலைக் கூட உன்னுது என்னுது என்று பிரித்து மக்களை கொல்கிறார்களே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை......

      "உயிருள்ள மெழுகு...." படித்த போது அனுராதா ரமணனின்கூட்டுப் புழுக்கள்நினைவுக்கு வந்தது. புகழ் வெளிச்சத்தில் மின்னுகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களது புகழ் என்னும் அந்த மாயைக்குப் பின்னால் அவர்கள் இழந்த எத்தனை எத்தனை இன்பங்கள் இருக்கிறது என்னும் பெரிய கருத்தை சின்ன சின்ன வாக்கியங்களால் நிறைந்திருக்கும் இந்த கதை அழகாய்ச் சொல்கிறது.....

     "வள்ளியின் கணவன்......."  உண்மை தான்... பொறுப்புகளுக்குத் தகுந்த மாதிரி நடக்கத் தெரிந்த மனிதன் தான் வாழ்வை வெற்றிகரமாய் வாழ்கிறான். தன்னுடைய ஆசைக்கென்று புத்தகம் வாங்க பணம் சேர்த்தாலும் குடும்பத்தின் ஆசைக்கென்று அந்த பணத்தை செலவு செய்யும் சுயம்பு பிரகலாதன் மனதில் மட்டுமல்ல, படிக்கும் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான்.... பிறருடைய மகிழ்ச்சியில் மகிழ்கிறவனே உண்மையில் உயர்ந்தவன் என்கிற அருமையான செய்தி புதைந்திருக்கும் இந்த கதை என்னை மிகவும் ரசிக்க வைத்தது. கதையின் ஊடாக வருகின்ற புத்தகக் கண்காட்சியின் வர்ணனை நாமும் ஒரு முறை கண்காட்சியை சுற்றிய உணர்வை ஏற்படுத்துகிறது....

      "கேள்விகள்..."  மனதை கணக்க வைக்கிறது..... அதைப் பற்றி அதிகம் எழுதுவது கூட மனதை உறைய வைக்குமோ என்ற அச்சத்தை, துயரத்தை தருகிறது.... நம் கண் முன்னால் இப்படி எத்தனை கேள்விகள்..... பதில் தான் யாரிடமும் இல்லை....

     "மயில் குட்டி...." எப்படி பாரதி... இத்தனை நுணுக்கமான சின்ன நூல் போன்ற பின்னி மெத்தென்ற குளிருக்கு இதமான சால்வையாக்கி விடுகிறீர்கள்? என்று கேட்கத் தோன்றுகிறது... சரளமான நடையில் அருமையான கதை...
பிள்ளைகளுடைய உலகம் தான் எத்தனை எளிமையானது... அவர்கள்
நமக்கு என்னவெல்லாம் கற்றுத் தருகிறார்கள்.... எதிலிருந்தும் எளிமையாய்
விசயத்தைக் கூட விடாமல் பிடித்து இழுத்து அழகாய் விடுபட்டுக் கொள்ள, எதனோடும் வேகமாய் ஒட்டிக் கொள்ள.... எத்தனை வயதானாலும் குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கத் தான் செய்கிறது.

     " மரங்கள்"சிறுகதை...... சுற்றுச்சூழல் மாசுப்படுவது பற்றி இங்கு யாருக்குக் கவலையிருக்கிறது....? அவரவர் தேவைக்குத் தகுந்த மாதிரி அவரவர் வாழ்வு என்று போய்க் கொண்டிருக்கிறர்கள்.... சுந்தரேசன் மாதிரி ஒரு சிலர் எத்தனை அலட்சியப்படுத்தப் பட்டாலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்... அரசாங்க ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை இடங்களில் மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லிப் போகிறது கதை.... நடுவே வரும் கவிதை அழகு... “அடிக்கடி அலையாதே கறுத்து விடுவாய் என்றணைக்க அம்மா உண்டோ உனக்கு எனக்கிருப்பதைப் போல..” என்னவொரு பெருமிதம் தொனிக்கும் வரிகள்....
      "ஷாமு..." குட்டிக் கதை என்றாலும் மிகப் பெரிய கதை.....அம்மா பற்றிய அந்த அழகான கவிதை வந்த கதைக்குப் பின்னால் இந்த கதை.... யதேச்சையான நிகழ்வா, அல்லது திட்டமிட்டு தொகுக்கப் பட்டதா என்று தெரியவில்லை...ஆனால் அந்த வரிகளில் மூழ்கி வெளி வருகையில் இந்த கதை மனதை ஆறாத்துயரத்தில் ஆழ்த்துகிறது....

     "நிம்மதி.....". சூதாடி பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு சுள்ளென்று அடி தருகிற கதை...கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான மனம், நகரத்து சூதாட்ட விடுதிகளின் போக்கு, அங்குள்ள சூழல் குறித்த வர்ணனை, விழித்திருக்கும் போதே நம்மை சுருட்டிக் கொண்டுவிடுகின்ற கயமைத் தனம் என்று அழகாய் விரிகிறது கதை.... “இனி தொலைக்கிறதுக்கு ஒன்னுமில்லங்கற இடத்தில தான் நிம்மதி குடியேறும்என்ற தத்துவத்தில் முடியும் இந்த கதை அருமை....
     "சேனல் தேசம்..." இன்றைய உலகின் யதார்த்தம்... ஒரு நாள் தொலைக்காட்சி இல்லையென்றாலும் மக்கள் சார்ஜ் இழந்த ரோபோக்கள் போல நின்று விடுவார்கள் போல.... மனிதர்களோடு உறவாடுவதை விட சுவையான, அதிமுக்கியமான விஷயமாக ஆகி விட்டது இன்று தொலைக்காட்சியுடன் உறவு.... நீண்ட போராட்டத்துக்குப் பின் சேனல் தெரியும் போது வந்து போகிற செய்தியின் மறைபொருளில் நாம் தான் ஆடிப் போகிறோம்... அங்கே மாட்டிக் கொண்டவனின் நிலை என்னவாயிற்றோ என்று.... யாரைப் பற்றியும் கவலைபட நேரமில்லாத இந்த சேனல் தேசத்தில் அதைக் குறித்த கவலை யாருக்குத் தோன்றக் கூடும்?

      "முற்றுப் பெறாத மனு.......". சிறுகதை தொகுப்பின் பெயர்.... இந்த சிறுகதையைவெறும் கதையாய் படிக்க முடியவில்லை என்பது தான் இந்த கதையின்வெற்றி... ஆடுகள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ உயிர்களைத் தின்றுதான் வாழ்கிறது மனித இனம். என்றாலும், ஒரு சக மனிதனைப் போல நம்முடன் கூட வளரும் ஒரு உயிரை இரக்கம் சிறிதுமின்றி வெட்டிக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்பதை உணர்த்தும் கதையாக இது இருக்கிறது...முற்றுப் பெறாத அதன் மனு கண்ணீரை வர வைக்கிறது...
     தொகுப்பு முழுதுமே கதாசிரியரின் அழகான வரிகளின் அணிவகுப்பு  நம்மை கொள்ளை கொள்கிறது.... கவித்துவமான அவரது வரிகள் கதைக்கு மேன்மேலும் அழகைத் தருகிறது...
      “அந்த காலத்து நடிகை ராஜஸ்ரீயின் கருவிழிகள் போல நீள்வட்ட கோடு
வரைந்து”... ராஜஸ்ரீயைப் பார்க்காதவர்களை அவரைத் தேடி பார்க்கத் தூண்டும் வரிகள்....

     ”களவாடிப் போகிறவ்ர்களின் பாஷை எதுவானால் என்ன அழுகையையும் துக்கத்தையும் உணராதவர்களின் பாஷை எதுவாக வேணுமனாலும் இருந்து விட்டு போகட்டும்எத்தனை அழுத்தமான வரிகள்....
     “சிறைக்குள் அடைபட்டு தவித்த கிளிகள் கதவு உடைபட்டதும் வெளியே பறக்கத் துடித்து வருவது போல அவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் தெரிந்தன

       இன்னும் இன்னும் எடுத்து சொன்னால் பலப்பல வரிகளை சொல்லிக்கொண்டே போகலாம்..... படிக்க எளிதான, மனதைத் தொடும் கதைகள், அழகான நடையில் என்பது கூடுதல் தகுதி...
      தொகுப்புக்கு விமர்சனம் எழுத என்று தினமும் (“நேரம் கிடைக்கும் போது எழுதலாம்”) அலுவலகம் எடுத்து வருவேன் ஒரு நாள் என்னிடம் உதவிக்கு இருக்கும் பையன் எடுத்து புரட்டி விட்டு சொன்னான், “அருமையான கதைகளா இருக்கும் போலிருக்கேம்மா, படிக்கத் தருவீங்களா எனக்குஎன்று.....
      சும்மா புரட்டிப் பார்ப்பவர்களையே  புரட்டி விடக் கூடிய கதைகள்  மிகுந்த இந்த கதை தொகுப்பைத் தந்த நெய்வேலி பாரதிக் குமாரை மனமார பாராட்ட வேண்டும்.


      தொகுப்பின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரை, பின்னுரை என்று அவர் வடித்து தந்திருக்கும் வரிகளெல்லாமே அவரது கற்பனா உள்ளத்துக்கு சான்றாக விளங்குகிறது.... கதைக்கென்றே எடுக்கப் பட்ட
புகைப்படங்கள் அவரது மற்றும் அவரது நண்பர் ந. செல்வன் ரசனையை பறை
சாற்றுகின்றது.....

       இது போன்ற, இதை விடவும் இன்னும் வீரியம் நிறைந்த பல சிறுகதை
தொகுப்புகளை பாரதிக்குமார் தர வேண்டும்.... தருவார்....


-கிருஷ்ணப்ரியா
www.krishnapriyakavithai.blogspot.com/


  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...