வியாழன், 21 ஜூலை, 2016

பெயரில் என்ன இருக்கிறது?!

பண்டைய ரோமானியர்களின்
பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்
வெளியீடு: முகிலன் பதிப்பகம்
                              அடையாறு, சென்னை-20
பேசிட:      96002 44444, 044-24410248
மின்னஞ்சல்: marudurar@yahoo.com
பக்கங்கள்: 136
விலை: ரூ.80/-

      பெயரே இல்லாமல் மனித சமூகம் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் என்னவாக ஆகியிருக்கும்? மனிதர்கள் என்கிற இனமே இல்லாமல் போயிருக்கும்.. நமக்கென்று ஒரு வரலாறு உருவாகியிருக்காது.. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற ஒன்று நிகழ்ந்திருக்காது.. ஏனெனில் மனிதர்கள் என்கிற உயிரினத்துக்கே பெயர் சூட்டும் வழக்கம் இல்லாவிடில்.. நாம் எங்கே இயந்திரங்கள், உபகரணங்கள், வேதியல் தனிமங்கள், உயிரியல் உன்னதங்கள் ஆகியவற்றை வேறுபடுத்தி   பெயரிட்டிருப்போம்..? ஆக பெயர் என்பது வெறுமனே அடையாளம் மட்டுமல்ல.. அது கண்டுணர்தலின் துவக்கம். பெயரிடுதலின் வரலாற்றை ஆய்வதென்பது ஒரு சுவாரசியமான தேடல்.. அத்தகைய சுகமான அவசியமான தேடலை தனது ‘பண்டைய ரோமானியர்களின் பெயர் சூட்டு விழாவும்  பெயரீட்டு முறையும்’ நூலின் மூலம் நம்மையும் அழைத்துக்கொண்டு செய்திருக்கின்றார் மருதூர் அரங்கராசன் அவர்கள்...

      பெயர்கள் குறித்த அதிதீவிரமான சிந்தனை எனக்குள் உண்டு. உலகக் கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் போது இத்தாலிய அணியின் வீரர்களின் பெயர்கள் மனதுக்கு சற்று ரம்யமாக, நெருக்கமாக இருப்பதை பல நேரம் உணர்ந்திருக்கிறேன்  
     
                  பெயர்-சொல்

பெயரில் என்ன இருக்கிறது
என்று சொன்னாலும்
இன்னொருவரின் பெயர்
                  நன்றாக இருக்கும்போது
அதிருப்தி எழுகிறது
நம் மீது சுமத்தப்பட்ட பெயர் மீது......

     ............பெயர்களை மறப்பவர்கள்
     நினைவைச் சுண்ட நெற்றி சுருக்கி
          ‘சே... நல்ல பேருப்பா...' என்று
     புலம்புகையில்  தோன்றுகிறது
         ‘எல்லோரும் மறக்கட்டும் என் பெயரை...'

 -கல்கியில் பிரசுரமான என்னுடைய கவிதை வரிகள், அந்த எண்ணங்களின் வெளிப்பாடே.. எனவே கூடுதலான அதீத ஆர்வம் இந்த நூலை பார்த்தவுடனே எனக்குள் கிளர்ந்தது. இயல்பிலேயே வரலாற்றை அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு இந்த நூல் அரிதாகக்  கிடைத்த பரிசு..
      தலைப்பில் பண்டைய ரோமானிய .. என்று ஒரு புள்ளியில் குவிக்கும் தன்மை இருந்தாலும் நூலாசிரியர், உலகம் தோன்றியதிலிருந்து துவங்கி, சைகை மொழி, எழுத்து, பெயரிடுவதற்கான அவசியம் என ஒழுங்கான வரிசையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தனித்த பெயர்களை உருவாக்கும் முன் எப்படி ஒவ்வொருவரும்  அடையாளப் படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதை தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவை உணர்வில் அனுமானமாய் சொல்லியிருப்பது அழகு...
      ஒரு தமிழ் உணர்வாளர் வரவு செலவு கணக்கை எழுதினால் அதிலும் பீறிட்டெழும் மொழி உணர்வை எப்படியாகிலும் நுழைத்திட முயலுவாரோ அது போல இன்றைய கனிமொழிகளின் குழந்தைகளுக்கு இடப்படும் வடமொழிப் பெயர்கள் குறித்த ஆதங்கத்தை தனக்கே உரிய அறச்சீற்றத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
      அதே சமயம் அவருள் உலவும் தமிழறிஞர், வரலாற்றுச் செய்திகளை தரும்போதும் சர்க்கரைப் பொங்கலின் நடுவே தட்டுப்படும் முந்திரியைப்போல  கூடவே தமிழிலக்கியங்களை தருவது அத்தனை சுகமான சுவை. இறையனார் அகப்பொருளின் உரை எப்படி வழிவழியாக பரிமாறப்பட்டது என்பதைச் சொல்லும் இடம் அதற்கான உதாரணம்.
      ரோம் என்னும் பெயர் எப்படி வந்திருக்கும் என்பதற்கான அவரது அலசல் பல புதிய விஷயங்களை நமக்கு தந்தபடியே செல்கிறது. இதுநாள் வரை ரோமுலஸ் புராணக்கதையை மட்டும்தான் அதற்கான காரணம் என நான் நம்பியிருந்தேன். எனது ‘பழம் பெருமை பேசுவோம்’ ( விகடன் வெளியீடு ) நூலில் அந்த முழுக் கதையும் அத்திப்பழம் பற்றியக் கட்டுரையில் உள்ளது. (ரோம் சாம்ராஜ்யத்தை  ஆண்டுவந்த நியுமிட்டர் என்ற அரசனின் மகள் ரியோ சில்வியா. நியுமிட்டரின் சகோதரன் அமோலியஸ் தந்திரமாக நியுமிட்டரைக்கொன்று ஆட்சியை பிடித்துவிடுகிறான். கொடுங்கோலனான அமோலியஸ் தனக்கு எதிராக அரசக்குடும்பத்தின் எந்த ஆண் வாரிசும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான்.
      அந்த சமயத்தில் ரியோ சில்வியா தான் வணங்கும் மார்ஸ் என்னும் தெய்வத்தை வணங்கி கன்னியாக இருக்கும் போதே கருத்தரிக்கிறாள். ரொமுலாஸ் மற்றும் ரெமுஸ் என இரண்டு ஆண் மகன்களை பெற்றெடுக்கிறாள். அமுலியாஸ் அந்த குழந்தைகள் இருவரையும் கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறான். ஆனால் எப்படியோ அவனது கண்களுக்குப்படாமல், தனது குழந்தைகளை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்கவிடுகிறாள். அந்த பேழை மெல்ல ஒரு கரையில் ஒதுங்குகிறது. கிட்டத்தட்ட நம்ம மகாபாரதக் கதை மாதிரியான கதை) இது புராணம் சார்ந்தது ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பொருத்தப்பாடுகள் உள்ள சரித்திரச் சான்றுகள், கிரேக்க மொழியில் அர்த்தம் நிறைந்த அந்த சொல்லின் மகத்துவம் என பல்வேறு புதிய செய்திகளை மின்னல் வெட்டு போல அடுக்கிக்கொண்டே போகிறார்.
      பெயர் பதிவுகளை செய்த சீசர் அகஸ்டஸ் பற்றி நாம் அட! என வியந்து கொண்டிருக்கும்போதே ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் பதிவை செய்த மார்க்கஸ் ஔரெலியஸ் பற்றிய செய்தியை அடுத்த வரிகளில் தந்து திகைப்படைய செய்கிறார். செய்திகளை அள்ளித்தருவதில் அவர் எந்த ஒளிவு மறைவு தந்திரத்தையும் செய்வதே இல்லை. மடைதிறந்த வெள்ளம் போல் அது பாய்ந்து கொண்டே இருக்கிறது.
      ரோமானியரின் பெயர் சூட்டு விழா பலிச்சடங்கு ஆகியவற்றை குறிப்பிடும்போது தமிழ்க் கலாச்சாரத்துக்கும் அவர்களுக்குமான பல ஒற்றுமைகளை, பிரித்து பிரித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்வாங்க முடிகிறது. பெயரிடுதலின் பல வேறுபாடுகளை அழகாக நமக்கு எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார். குறிப்பாக ரோமானிய ஆண்பால் பெண்பால் பெயர் வித்தியாசங்களை இனி நாம் எளிதாக அடையாளம் காண இயலும் விதத்தில் சுலபமாக பதிவு செய்திருக்கின்றார். பலியிடப்படும் மிருகத்தின் தியாகத்தை மறக்காத நன்றி உணர்வுடன் தம் குழந்தைகளுக்கு பன்றி என்று பொருள்படும் பெயர்களை சூட்டும் ரோமானியர்களின் பண்பு வியப்புக்குரியது. நாம் தின்றுவிட்டு அதனை வசவு சொல்லாக அல்லவா பயன்படுத்துகிறோம்? ரோமானியப் பெயர்களின் தொகுப்புப் பட்டியலை இணைத்திருப்பது சிறப்பு..
      ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு இனத்திலும் புழங்கி வரும் இப்படியான பெயர்கள் பற்றிய ஆய்வும் அறிதலும் அவசியமான ஒன்று. இன்னும் பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் பேச்சை முடித்துவிடும் சாமர்த்தியமும் பழக்கமும் உள்ள மருதூரார், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்ககூடாதா என்று எண்ணும் சமயத்தில் நூலை முடித்துவிட்டார்.. இது மருங்கூர் கண்ணன் சொன்னது போல அவரது எழுத்துப்பணியில் புதியதொரு பயணம்..உண்மையில் அவர் பெயர் சொல்லும் புத்தகம் ..
                  
            


ஞாயிறு, 3 ஜூலை, 2016

இந்திய ஆவணப்பட உலகின் அடையாளம் - ஆனந்த் பட்வர்த்தன்

கலகக்கார கலைஞர்கள்-7
                             

                              இந்திய ஆவணப்பட உலகின் அடையாளம்
                                                            ஆனந்த் பட்வர்த்தன்
              
               , பார்வையாளர் அரங்குகளோ இல்லாத சூழலில் அம்மாதிரியான முயற்சிகள் தற்கொலைக்கு ஒப்பானதாகவே கருதப்பட்டன.  இன்றைய அறிவியல் வளர்ச்சி யுகத்தில் சிடி, டிவிடிக்கள் மற்றும் கையாளுவதற்கும் வாங்குவதற்கும் உரிய எளிய ரக கேமராக்கள் வந்த பிறகு குறும்படங்களின் வருகை அபரிமிதமாக இருக்கின்றது. குறும்படங்களை மக்களிடம் சேர்ப்பதற்கான ஊடகங்களும் இன்று பெருகி வருகின்றன. ஆனால் ஆவணப்படங்களின் நிலை இன்றைக்கும் அத்தனை ஆரவாரமானதாக இல்லை.
ஃபிலிம் கேமராக்களின் ஆதிக்கம் இருந்த வரை மாற்று சினிமாக்கள் குறித்த முயற்சிகள் குறைவாகவே இருந்தன. எவ்வித லாபம் ஈட்டும் வணிகரீதியான சாத்தியக்கூறுகளோ
               குறும்படங்கள் எடுப்பவர்களில் பெரும்பாலோர் தங்களது திரையுலக பிரவேசத்துக்கான விசிட்டிங் கார்டுகளாக அவற்றை கருதுவதால், அந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் வித்தியாசமான நவீன முயற்சிகள் சமகாலத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான அங்கீகாரத்தை ஓரளவுக்காவது அவர்கள் பெற்றுவிடுகின்றனர். ஆவணப்படங்கள் எடுப்பது ஒரு தன்னார்வத் தொண்டு போன்றதுதான். பொருளாதார ரீதியான ஒத்துழைப்போ கலாப்பூர்வமான வரவேற்பையோ ஆவணப்பட இயக்குனர்கள் எதிர்பார்த்து இயங்க முடியாது. இந்த சூழலில் ஒரு வரலாற்றை பதிவு செய்வது, ஒரு நிகழ்வை பதிவு செய்வதென்பதே மிகப்பெரிய சவாலாக இன்றைக்கும் இருக்கின்ற வேளையில், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை அதிகாரத்தின் எதிர்தளத்தில் நின்றுகொண்டு ஆவணப் படங்களை தருவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. இந்தியாவின் ஆனந்த் பட்வர்த்தனை அப்படியான துணிச்சல் மிக்க கலைஞராக நாம் அடையாளம் காணலாம்.
               மகராஷ்டிராவில் 1950 ஆம் வருடம் பிறந்த ஆனந்த் பட்வர்த்தன் 1970 ஆம் வருடம் மும்பை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை முடித்தார். அதற்குப்பிறகு அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புகழ்பெற்ற பிராண்டெஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை படிக்க 1972-ஆம் ஆண்டு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அமெரிக்காவின் முதல் யூத நீதிபதியான லூயிஸ் பிராண்டெஸ் உருவாக்கிய அந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவின் பிரபலமான பலர் படித்திருக்கிறார்கள். ஆனந்த் பட்வர்த்தன் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் வியட்னாம் மீதான அமெரிக்க யுத்தத்தை  எதிர்த்து அமெரிக்காவிலேயே இயக்கங்கள் தோன்றி மிகப்பெரிய போராட்டங்கள் நிகழ்ந்த நேரம். இயல்பிலேயே சமூகப் பிரச்சினைகள் மீது ஆர்வம் கொண்ட பட்வர்த்தன் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்டார். போரின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான உயிரிழப்புக்கள், அப்பாவி மக்கள் அநாதரவாக அலைக்கழிக்கப்பட்ட துயரம், பணியின் நிமித்தமாக இராணுவ வீரர்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்படவேண்டிய அவலம் ஆகியன குறித்த பரந்துபட்ட பார்வை அவருக்கு அங்கேதான் கிடைத்தது.
               அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும் அடித்தட்டு மக்கள் சமூகத்துக்காக  எதையேனும் செய்யவேண்டும் என்கிற பேராவல் அவரை முன்னகர்த்திக்கொண்டே இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்களுக்காக எழுத்தறிவூட்டும் இயக்கங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
               அதே சமயம் இந்தியாவெங்கும் பரவிக்கிடந்த ஊழலை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாரயணன் நடத்திய அறப்போராட்டங்கள் மீது அவரது கவனம் திரும்பியது. பீகாரில் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளில் அவர் ஈடுபடத்துவங்கினார். அந்த போரட்டங்களின் போது நடந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க தன் நண்பரிடமிருந்து ஒரு கேமராவை வாங்கினார். அதனையே ஒளிப்பதிவாக செய்தால் என்ன என்ற எண்ணம் அவருள் ஓடியது.
                அவர் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்றோ, தொடர்ந்து அந்தத் துறையில் இயங்கவேண்டும் என்றோ திட்டமிட்டு அதனை செய்யவில்லை. உண்மையில் அன்றைக்கு இருந்த சூழலில் ஒரு கேமாரவை வைத்துக்கொண்டு அசாதரணமான நிகழ்வுகளை படம் பிடிப்பதும் அத்தனை எளிதான காரியமும் இல்லை. பதுங்கி, பதுங்கி ஒரு ஆயுதப் போராட்டக்காரனைப் போல செயல்படவேண்டிய நெருக்கடிதான் நிலவியது. இருப்பினும் வரலாற்று ரீதியாக  அதனை பதிவு செய்வது அவசியம் என அவர் கருதினார். அப்படியாக அவர் தனது நண்பர் பிரதீப் கிருஷ்ணன் உதவியோடு எடுத்த ஒளிப்படத்துண்டுகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய waves of revolution தான் அவரது முதல் ஆவணப்படம். கிராந்தி கா தரங்கெயின் என்ற தலைப்பிடப்பட்டு வெவ்வேறு லேப்களில் 30 நிமிடங்கள் ஓடக்கூடியதாக ரகசியமாக படத்தொகுப்பு செய்யப்பட்டது.
               உருவாக்குவதற்கே இத்தனை சிரமப்பட்ட சூழலில் அதனை திரையிட எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்த படத்தை காண வேண்டும் என்பதற்காக பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்டு பின்னர அயல்நாடுகளுக்கு சென்றபிறகு மீண்டும் ஒன்று சேர்த்து அதற்குப்பிறகு திரையிட்டார்கள்.
               அதற்குப்பின் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது சிறையில் வைக்கப்பட்ட அப்பாவி மக்கள் சந்தித்த துயர நிலைகள் குறித்து zameer ke bandi ( prisoners of conscience)  என்ற ஆவணப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் எடுத்தார். 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த படம் எடுக்கப்பட்டாலும்   1978 ஆம் ஆண்டுதான்  இப்படம் வெளிவரும் சூழல் வாய்த்தது. இந்த படத்தில்தான் அவருக்கு முதல் சர்வதேச விருது கிடைத்தது. 1982-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேசபட விழாவில் டைன் விருது வழங்கப்பட்டது.
               தனது ஆவணப்பட முயற்சிகளுக்கு வலுவான தொழில்நுட்ப கல்வி வேண்டும் என்பதற்காக கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற சேர்ந்தார். 1980 ஆம் வருடம் ஏப்ரல் 16இல் கனடாவில் அகதிகளாக வசித்த ஆசியாவைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப்பெற வேண்டி மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னணி குறித்து பதிவு செய்து  A time to Rise  என்கிற ஆவணப்படத்தை எடுத்தார். இந்த படத்துக்கும் டைன் விருது மற்றும் ஜெர்மனியில் உள்ள லிப்சிக் நகரில் நடைபெற்ற ஆவணப்பட விழாவில் வெள்ளி புறா விருதும் வழங்கப்பட்டன.
               சர்வதேச அளவில் அவரது படங்கள் விருது பெற்றாலும் அவரது ஹமாரா ஷாஹர் ( Bombay our city)  என்கிற ஆவணப்படம்தான் அவரை இந்தியாவெங்கும் பரவலாக அறியச்செய்தது. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படம் மும்பையை அழகுப் படுத்தும் நோக்கில் மும்பையின் பாதி மக்கள் தொகையாக விளங்கிய நடைபாதை வாசிகளை அப்புறப்படுத்தும் அதிரடித் திட்டத்தின் விளைவாக அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியான துயரத்தை பதிவு செய்தது. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
               இந்த படத்திலிருந்துதான் அவரது சட்டப் போராட்டம் துவங்கியது. தேசிய ஒளிபரப்பில் தனது ஹமாரா ஷாகர் படத்தை திரையிட அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. வேடிக்கை என்னவென்றால் ஹாங்காங் மற்றும் ஸ்வீடனில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிட இந்த படம் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டிருந்தது. எனவே அவர் நீதி மன்றத்தை நாடினார். மும்பை உயர்நீதிமன்றம் ஒளிபரப்ப உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்றார்கள். அங்கும் பட்வர்த்தனுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் தீர்ப்புப்படி தூர்தர்ஷனில் நான்கு வருட போராட்டத்துக்குப் பின் ஒளிபரப்பானது.
               அதற்குப்பிறகு அவர் எடுத்த In memory of Friends பஞ்சாப்பில் நடந்த மதம் சார்ந்த உள்நாட்டுக் கலவரங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தையும் ஒளிபரப்ப நீதிமன்றம் வரை சென்று அங்கு பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே 1996 இல் ஒளிபரப்பானது.
               அயோத்தி பிரச்சினையின் போது நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டு அவர் எடுத்த கடவுளின் பெயரால் ( Ram ke Naam)' என்ற படத்தினால் பல எதிர்ப்புகளை அவர் தாங்க வேண்டியிருந்தது. அதனை திரையிட பல இடங்களில் தடைகள் ஏற்பட்டன. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் பொது அரங்கில் திரையிட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து கேரள சிந்தனையாளர்கள் போராடினார்கள். இந்த போராட்டத்தின்போது அவரது கடவுளின் பெயரால் என்கிற தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தின் மையக்கருத்தினை அடிப்படையாகக்கொண்டு ராமச்சந்திரன் மாகேரி என்பவர் ஒரு வீதி நாடகமாக நடித்துக் காண்பித்தார்.
               

               சிறந்த புலனாய்வு ஆவணப்படம் என்கிற தேசிய விருதினை இந்த படம் பெற்றிருந்தாலும் தேசிய தொலைக்காட்சியில் திரையிட மீண்டும் நீதிமன்றம் சென்றுதான் பட்வர்த்தன் ஆணை பெற வேண்டியிருந்தது. பின்னர் இதே ஆவணப்படம் மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஒரு வாரத்துக்கு திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
               ஆணாதிக்க சமூகத்தில் சடங்குகள் பெயரால் பெண்கள் மீதான அடக்குமுறைகள் பற்றிய அவரது பிதா, புத்ர தர்மயுத்தம் மிக முக்கியமான ஆவணப்படம்.
               பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்வுக்குப்பிறகு ஆசிய பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம், போர் அச்சுறுத்தல் ஆகியவற்றின் விவாதத்துக்குரிய விஷயங்களைப் பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்திய அவரது போரும் அமைதியும் ( War and peace')  படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் பெற அவர் அனுப்பிய போது 21 முக்கிய காட்சிகளை நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அதற்கும் நீதிமன்றம் வரை சென்று எந்த காட்சியையும் நீக்காமல் சான்றிதழ் பெற்றார்.
               போராட்டம் என்பது அவரது வாழ்வில் இணைந்தே பயணிக்கக்கூடியதாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் வந்த அவரது Jai bhim comrade'  அவரது தலைச்சிறந்த ஆவணப்படமாகக் கருதப்படுகிறது. 1997 ஆம் வருடம் மும்பையில் இருந்த அம்பேத்கரின் சிலையை யாரோ சில விஷமிகள் அவமரியாதை செய்ததை கண்டித்து தலித் மக்கள் ஒன்றுகூடி போராடியபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் மரணமடைந்தனர். அந்த செய்தியை கேட்டு மனம் வெதும்பிய மராத்தி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினத்தில் இருந்து சுமார் 14 ஆண்டுகாலம் நடந்த நிகழ்வுகளையொட்டி பதிவு செய்து  காட்சிகளை தொகுத்து   இந்த படத்தை மிகச் சிரமத்துடன் பட்வர்த்தன் உருவாக்கினார்.
               இவைத் தவிர நர்மதா அணைத்திட்ட விளைவுகள் குறித்த A Narmada  diary என்ற ஆவணப்படத்தையும், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பற்றி பேசும்  Fishing in the sea of greed  என்ற படத்தையும் ( இதில் கன்னியாகுமரி கட்டுமர மீனவர்களைப் பற்றியும் அவர்களது அன்றாட துன்பியல் வாழ்க்கைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
               இவரது Ribbons for Peace  என்கிற 5 நிமிட இசை ஒளிப்படத்தில் புகழ்பெற்ற இந்தி நடிகர்கள் நசுரூதின் ஷா, அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இவரது பல கட்டுரைகள் பல்வேறு ஆங்கில இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
               இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்விட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச படவிழாக்களில் வழங்கப்பட்ட  விருதுகளை பலமுறை பெற்றிருக்கும் ஆனந்த் பட்வர்த்தனுக்கு சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 
               ஆனந்த பட்வர்த்தனின் நேர்காணலை  தமிழகத்தைச் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் R.V. ரமணி   ஹமாரா இந்துஸ்தான்' என்கிற ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார். R.V. ரமணி ஏற்கனவே பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நேர்காணலை ஆவணப்படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

               தொடர்ந்து எவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் இன்றி, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை எவ்வித சமரசங்களும் இன்றி, பலவித இன்னல்களை சந்தித்து, அவற்றை திரையிட மனம் தளராத போராட்டங்களுக்கு இடையிலும் உருவாக்கி வரும் ஆனந்த் பட்வர்த்தன் இந்திய ஆவணப்பட உலகின் அசைக்க முடியாத அடையாளம்
                               நன்றி ; நிழல் காலாண்டு இதழ் 


  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...