சனி, 13 நவம்பர், 2010

குட் பை சில்ட்ரன்


 எத்தனை பரபரப்பு நிறைந்த ஊராக இருந்தாலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமாக இருந்தாலும், புகைவண்டி நிலையங்களுக்கு மட்டும் அமைந்துவிடுகிறது மிக அமைதியான சூழல். யோசித்து யோசித்துச் சொற்களை நெய்து கவிதை புனையும் கவிஞனைப் போல, எல்லா இரயில் நிலையங்களிலும் குல்மொஹர் போல் ஏதோ ஒரு மரம் ஒவ்வொரு பூவாய்ச் சிந்துகிறது. தண்டவாளங்களின் சரளைக் கற்களில் தடுமாறாமல் மிதந்து வந்து ஆளற்ற நடைமேடை இருக்கைகளில் மெல்ல அமர்கிறது காற்று. இத்தனை இதமாகவும் இத்தனை மென்மையாகவும் காற்றை வேறெங்கும் நம்மால் தரிசிக்க முடியாது. தோற்றுப் போனவர்களையும், புறக்கணிக்கப் படுபவர்களையும் வேறு யாரும் இத்தனை இதமாக அணைத்து ஆறுதல் சொல்லிவிட முடியாது.

புகைரத நிலையத்தில் தேங்கி நிற்கும் அமைதியைக் கையில் ஏந்தி அப்படியே ஊர் முழுக்கத் தூவி வந்தால் எப்படியிருக்கும்?!
 சில மனிதர்களுக்கு வாய்க்கப்படும் பணிகள், என்னைப் போல் சில பேருக்குப் பொறாமையை ஏற்படுத்தி விடுகின்றன. புத்தகங்களோடு சதா உரையாட வாய்ப்புப் பெற்ற நூலகர் பணி, ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையின் நியதி என்பதை உணர்த்தியபடி இருக்கும் மின் பளூதூக்கி(லிப்ட்) இயக்குனர் பணி, குழந்தைகளோடு குழந்தையாகவும், அவர்களால் என்றுமே மறக்க முடியாத ஆளுமையாகவும் இருக்கும் ஆசிரியர் பணி, கண்ணீரில் நனைந்த நன்றியோடு தினமும் இல்லம் திரும்ப முடிகிற செவிலியர் பணி, ஒவ்வொரு தினமும் புதுப் புது முகங்களை தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற இரயில் நிலைய தேநீர் விற்பனைப் பையன் பணி... இப்படியான பட்டியல் உங்களிடமும் இருக்கலாம்.

 புகைவண்டி நிலையம் என்பது ஒரு அறிவிக்கப்படாத முகங்களின் நூலகம் தானே..! மொழிபெயர்க்கப் படாத புத்தகங்கள் போல் எத்தனையோ முகங்கள் அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன்.
 வழியனுப்புவது போன்ற வலியேற்படுத்தும் அனுபவம் வேறு ஒன்றுமில்லை. நீண்டு கிடக்கும் நடைமேடைகளில், பிரிவின் துயர் படிந்த முகங்களை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். அனேகமாக நீங்கள் கூட அப்படியான ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சூழ்நிலையின் ஏளனங்களைப் பொருட்படுத்தாமல் கண்ணீர் வழியப் புகைவண்டியின் கூடவே நடந்திருக்கவும் கூடும்.
 
 நரகம் என்ற ஒன்று இருந்தால் எப்படியிருக்கும் என்று யாராலும் உணர்த்த முடியாது. அவரவர் கற்பனையின் விபரீதம் எத்தனை குரூரமானது என்பதனை நிரூபணமாக்கத் தான் ‘நரகம்' என்ற சொல் பயன்படுகிறது. நரகம் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்ற வைத்த தருணங்களில் ஒன்று பிரியமானவர்களைப் பிரியும் தருணம்தான்.
 வலி மிகுந்த ஒரு வழியனுப்புதலில் துவங்கி, கொடூரமான மற்றொரு வழியனுப்புதலில் முடியும் படம் லூயி மாலின் Good Bye Children. படத்தின் ஆரம்பக் காட்சியில், விடுமுறை நாட்கள் முடிந்து திரும்பவும் பள்ளி இருக்கும் ஊருக்கு பயணிக்க ஆயத்தமாகும் ஜீலியஸ் குவாண்டின் புகைவண்டி நிலையத்தில் பிரிய மனமில்லாமல் தவிக்கிறா ஒரு அம்மா, பிள்ளை, திரும்பத் திரும்ப ஓடி வந்து அம்மாவைக் கட்டிக்கொள்கிற போது தேசம், மொழி, நாகரீகம் என எது மாறுபட்டாலும் குழந்தைகள், குழந்தைகள்தான் எங்கும் எனத் தோன்றுகிறது. அப்படியொரு பிரியமான பிள்ளையை, ஏம்மா இப்படி வலுக்கட்டாயமா அனுப்புற என்று நீங்கள் தாங்கமாட்டாமல் கேட்க நினைக்கிற சமயத்தில் இரயில் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறது.

 ஹிட்லரின் ஆளுமைக்குக் கீழ் ஜெர்மன் இருந்த காலகட்டத்தில் நாசிப்படைகள் (1940) ப்ரான்ஸை ஆக்கிரமித்தது. அப்பொழுது பிரான்ஸ் அதிகாரிகள் ஹிட்லரிடம் ஒரு சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி ப்ரான்ஸின் சில பகுதிகள் ஜெர்மனின் முழுக்கட்டுப்பாட்டிலும், பிற பகுதிகளில் ப்ரான்ஸின் அதிகாரிகள் ஜெர்மனின் வழிகாட்டுதலின்படி நடப்பார்கள் என்றும், ஹிட்லரின் தலையாய கொள்கையான யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்காக ‘கெஸ்டபோ' என்ற படையை நிறுவி யூதர்களை வேட்டையாடிக் காட்டிக் கொடுப்பது என்றும் இருந்த ஒப்பந்த ஆணைகளை ஏற்று அடிபணிந்த ப்ரான்ஸ் ஹிட்லரின் நீண்ட நாளைய பழிவாங்கும் வெறியாக, ஹிட்லரின் இளம் வயதில் ஜெர்மன், ப்ரான்ஸிடம் தோற்று எந்த இடத்தில் ப்ரான்சுக்கு அடிபணிந்ததோ அதே இடத்தில் வைத்து ப்ரான்ஸ் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்கினார்.

 ‘கெஸ்ட்போ' என்பது அரசின் அதிகாரப் படையல்ல. கிட்டதட்ட கூலிப்படை போல கட்டற்ற சுதந்திரத்தோடும், இரக்கமற்ற கொலைவெறியோடும் யூதர்களை வேட்டையாடிய அந்தப் படையில் நகரின் ரவுடிகள், கொலைக்காரர்கள், திருடர்கள் என்று சமூக விரோதிகளே நிரம்பி வழிந்தனர். அவர்களது நடவடிக்கைகள் எந்த சட்ட விதிகளுக்குள்ளும் உட்படாதவை.

 இப்படிப் பட்ட சூழலில், ப்ரான்ஸின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் யூதக் குழந்தைகள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப் பட்டனர். ஒரு பள்ளியில் 10 அல்லது 15 இடங்கள் மட்டுமே யூதக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பொதுவாக யூதர்கள் புத்திகூர்மை மிக்கவர்கள். உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் என்று கணக்கிட்டால் பெரும்பாலும் யூதர்களே அதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். எனவே கல்வி ரீதியாக அவர்களை ஒடுக்குவது ஹிட்லரின் முதன்மைத் திட்டமாக இருந்தது.
 இந்தச் சூழலில் ஜீலிய குவாண்டின் என்ற சிறுவன் ஜெர்மனி ஆக்ரமித்த ப்ரான்சில் உள்ள பள்ளிக்குத் திரும்பும் ப்ரெஞ்சு இனத்தவன். அவனது விடுதி அறையில் நுழையும் பாதிரியாரும் பள்ளியின்

 தலைமையாசிரியருமான ழீன் பியர்ரே மூன்று சிறுவர்களை ஜீலியனிடம் அறிமுகப்படுத்துகிறார். அதில் ஜீலியன் மட்டும் பென்னட்டுடன் தங்கி விடுகிறான். இருவருக்கும் ஆரம்பத்தில் சிறு பூசல் ஏற்படுகிறது. படிப்பிலும், பியானோ இசையிலும் தேர்ச்சி பெற்ற ரீன் பென்னட்டுடன் போட்டி போட முடியாமல் இருக்கும் ஜீலியன் பின்னர் வேறொரு விளையாட்டின் போது நட்பாகி விடுகிறான். இருவருக்குள்ளும் அன்னியோன்னியமான நட்பு உருவாகிறது. இரவு நேரத்தில் திடீரென விழிக்கும் ஜீலியன் பக்கத்தில் படுத்திருந்த ரீன் பென்னட் கிப்பா(kippaih) அணிந்திருப்பதோடு, ஹீப்ரு மொழியில் ஒரு புத்தகத்தைப் பிரார்த்தனை செய்வது போல் வாசிப்பதையும் பார்த்து விடுகிறான். வாசித்து முடித்ததும் ‘கிப்பா'வையும் அந்தப் புத்தகத்தையும் யாருக்கும் தெரியாமல் தன் பெட்டியில் மறைத்து வைப்பதையும் பார்க்கிறான். அறையில் யாருமில்லாத சமயம் ஜீலியன், ரீன் பென்னட்டின் பெட்டியை ஆராய்கிறான். அப்பொழுதுதான் பென்னட்டின் உண்மையான பெயர் ரீன் கிப்பல்ஸ்டின் என்று புரிகிறது. அவன் யூதக் குழந்தையென்பதையும், கெஸ்ட்போ படைகளுக்குப் பயந்து, பெயரை மாற்றிப் ப்ரெஞ்சுக் குழந்தை போல் படிக்கிறான் என்பதையும் உணர்ந்து கொள்கிறான்.

 கிப்பல்ஸ்டினுடனான நட்பு இன்னும் பலமாக இறுகுகிறது. ஜீலியனின் தாய், அவனைப் பார்ப்பதற்காகப் பள்ளிக்கு வரும்போது, தன்னுடைய நண்பன் என கிப்பல்ஸ்டினை தாயிடம் அறிமுகப்படுத்துகிறான். எல்லோருமாக் உணவருந்த ஒரு விடுதிக்குள் நுழைகிறார்கள். அங்கு திடீரென வரும் கெஸ்ட்போ படைகசில யூதர்களை எந்தக் காரணமுமின்றிப் பிடித்துச் செல்கிறது. அதைப் பார்த்துக் குழந்தைகள் மிரண்டு போகின்றனர். தங்கியிருக்கும் பள்ளி விடுதிக்குத் திரும்புகின்றனர்.
 பள்ளி விடுதியில் சமையல் செய்யும் ஜோசப் என்பவன் அடிக்கடி அங்கு மளிகைப் பொருட்களைத் திருடி விற்பதைப் பார்த்து விடுகிறான் கிப்பல்ஸ்டின். ஜோசப்புக்கு அதன் பிறகு கிப்பல்ஸ்டினைப் பார்த்தாலே பிடிக்காமல் போய் விடுகிறது. ஒரு கட்டத்தில் ஜோசப் தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில், கெஸ்ட்போ படைகளிடம் கிப்பல்ஸ்டின் உட்பட மூன்று குழந்தைகள் பெயர் மாற்றிப் படித்து வருகிற விஷயத்தைக் காட்டிக் கொடுக்கிறான். கெஸ்ட்போ படைகளின் வேட்டையாடலில் மூன்று குழந்தைகளும் பிடிபடுகின்றனர். Gas chamber எனப்படும் விஷ வாயுக் கூடத்தில் அவர்கள் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளி விடுதியை விட்டு அவர்கள் பிரெஞ்ச் குழந்தைகளிடம் விடைபெறும் கண்ணில் இரத்தம் கசியச் செய்யும் அந்தக் காட்சியோடு படம் முடிகிறது. யூதர்களாகப் பிறந்ததைத் தவிர வேறொரு பாவமும் அறியாத அந்தக் குழந்தைகளுக்குத் தரப்படும் அந்தத் தண்டனை உலக வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக ஜெர்மனி மீது படிந்தே இருக்கிறது. அவர்களுக்கு அடைக்கலம் தந்து பெயர் மாற்றிக் காப்பாற்றியதற்காகப் பாதிரியாரும் கைது செய்யப் படுகிறார். ஆனால் அவர் பிரெஞ்சு இனத்தவர் என்பதால் கொலை செய்யப்படவில்லை.

 இயக்குநர் லூயி மால் சிறு வயதில் படித்த பள்ளி விடுதியில் நிகழ்ந்த சம்பவத்தை அப்படியே படமாகப் பதிவு செய்துள்ளார்.
 குழந்தைகளின் உருக்கமான விடைபெறல் காட்சி பார்க்கின்ற எவரையும் நிலை குலையச் செய்துவிடும்.

 இன்றைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது கவனித்தால் ஏதேனும் ஒரு யூதர் அதைப் பெற்றிருப்பதையறியலாம். அறிவியல், பொறியியல், மருத்துவம் என்று அனைத்து நுண்ணறிவுத் துறையிலும் யூதர்களின் அறிவுத் திறனும், உழைப்பும் அபாரமானது. சிறு குழந்தைப் பருவத்தில் எவரேனும் மரணமடைய நேரிட்டால் நினைத்துக் கொள்வதுண்டு. ஒருவேளை மரணத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருந்தால் ஒரு விஞ்ஞானியாக, மகத்தான மருத்துவராக, தலை சிறந்த கலைஞனாக உருவாகியிருக்க வேண்டிய குழந்தையென்று. அப்படிப் பார்த்தால் யூத இனத்தில் பிறந்த ஒரே ஒரு குற்றத்திற்காக(!) மரணத்தைத் தழுவிய குழந்தைகளில் எத்தனை மேதைகள், ஞானிகள், கலைஞர்கள் இருந்திருக்கக் கூடும்? அவர்கள் உயிரோடிருக்கும் பட்சத்தில் ஒருவேளை எத்தனையோ கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்? அறிவியலின் பாய்ச்சல் இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கலாம்.

  இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடுத்தவர்களை அழித்தொழிப்பு செய்பவர்கள், உண்மையில் மற்றவர்களை அழிக்கவில்லை... தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
 இப்படி நாம் இழந்த கவிதைகளை பூமியின் மண் துகளும், சாம்பல் கரைக்கப்பட்ட நதி நீரும், வாசித்துக்கொண்டிருக்கும் நாமோ எல்லாவற்றையும் படித்துவிட்டதாகப் பெருமை பேசிக் கொள்கிறோம்.

குறிப்புகள்: 
Kippah Hat
 1. கிப்பா(kippah) என்பது யூதர்கள் பிரார்த்தனையின் போது அணிவது.
 2. ஹிட்லரின் தளபதி ஹிட்லரின் மூளையில் உதித்த கொடூரமான உயிர்ப்பலிக் கூடம் Gas chamber. யூதர்களைக் கூட்டம் கூட்டமாக ஒரு அறையில் அடைத்து விஷ வாயுவை செலுத்திக் கொல்கிற இடம் தான் அது.

இயக்குநர் லூயிமால்: 
 
Louis Malle
    1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி பிரான்சில் பிறந்த லூயிமால், தனது 19-ம் வயதில் திரைப்படக் கல்லூரியில் பயின்று முடித்தபின், பிரெஞ்சுக் கடற்படைக் கமாண்டண்ட் ழாக் கூங்கோஷியுடன் துணிகரமான கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டார். கூங்கோ ஆழ்கடலில் மூழ்கி இயற்கையின் அற்புதங்களைப் படம் பிடித்து “நீர் மூழ்கியின் நாட்குறிப்புகள்” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கினார். ஆழ்கடலில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் அதுதான். அவரோடு பயணித்த அனுபவங்களின் உதவியோடு லூயிமால் அமைதி உலகம் (Silent world)என்ற ஆவணப் படத்தை எடுத்தார். அப்போது அவருக்கு வயது 21. அந்தப் படம், கான் பட விழாவில் விருது பெற்றது.
 இதன் பிறகு Life the Galliks என்கிற திரைப்படத்தை இவர் இயக்கும் போது இவருக்கு வயது 25 தான். முதல் படமே இவருக்கு பிரெஞ்சின் உயரிய விருதான தெல்யுக் விருதை பெற்றுத் தந்தது. Lovers, Fire within, Black moon, God's country, Damase உட்பட சுமார் 20 படங்களை இயக்கினார். பல்வேறு விருதுகளையும், விமர்சனங்களையும் சமமாகப் பெற்ற லூயிமால், சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தபோது India, Calcutta என்ற இரண்டு ஆவணப் படங்களையெடுத்தார்.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...